சிங்கள பௌத்த இனவெறி அரசு நடத்திய தமிழீழ இனப்படுகொலைக்கு நீதி கேட்டு தமிழகம் உள்ளிட்ட உலகின் பல்வேறு பகுதிகளிலும் தமிழின மக்கள் ஒன்றுபட்டு கொந்தளித்துக் கொண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தமிழீழக் கோரிக்கையை வலியுறுத்தியும், இனப்படுகொலைக் குற்றவாளிகளை தற்சார்பான பன்னாட்டு விசாரணை ஆணையத்தில் நிறுத்தி தண்டிக்க வேண்டுமெனவும் தமிழக மாணவர்கள் வரலாறு காணாத வகையில் எழுச்சிமிகு போராட்டங்களை நடத்திக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டு மக்கள் தமிழீழத் தமிழர்களுக்காக எழுச்சியுடன் போராடி வருகின்ற இத்தருணத்தில் தான், சிங்கள வீர்ர்களும் பங்கேற்கும் ஐ.பி.எல். எனப்படும் மட்டைப்பந்துப் போட்டிகள் சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்கும் 9 அணிகளில், 8 அணிகளில் சிங்கள வீரர்கள் 13 பேர் வரை உள்ளனர்.

தமிழீழத் தமிழர்களுக்காகப் பாடுபடுவதாகச் சொல்லிக் கொள்ளும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் அரசியல் வாரிசுகள் தமது பணபலத்தின் மூலம் வாங்கியுள்ள ஐ.பி.எல். அணியான ஹைதராபாத் அணிக்கு ஒரு சிங்களரையே தலைவராக (கேப்டன்) நியமித்துள்ளது. தில்லி அணிக்கு மஹேலா என்ற சிங்களர் தலைவராக உள்ளார். இவ்வணிகளுக்கிடையே நடக்கும், 10 போட்டிகள் சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிலும், உலகின் பல்வேறு பகுதிகளிலும் நடைபெறுகின்ற தமிழீழ விடுதலைக்கான போராட்டங்களின் போது வைக்கப்படும் கோரிக்கைகளில், இனப்படுகொலைக் குற்றவாளியான இலங்கையின் பொருட்களைப் புறக்கணித்து, அந்நாட்டுடனான அனைத்து உறவுகளையும் துண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முக்கியமானது என்பதை நாம் மறந்துவிடலாகாது.

இனவெறியை தனது முதன்மைக் கொள்கையாகக் கொண்டுள்ள நாட்டை தண்டிக்கும் வகையில் அந்நாட்டுடன் பொருளியல், சுற்றுலா, விளையாட்டு என அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்ளும் நடைமுறை உலகெங்கும் பல நாடுகளால் பல்வேறு சமயங்களில் கடைபிடிக்கப்பட்ட ஒன்றாகும்.

இன ஒதுக்கல் கொள்கையை தனது அரசியல் கொள்கையாகக் கடைபிடித்து, கருப்பின மக்களை நசுக்கிய வெள்ளை இனவெறி ஆட்சி நடந்த தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட சோசலிச நாடுகளும், இந்தியா உள்ளிட்ட அணிசாரா நாடுகளும் தூதரக உறவை நீக்கி அந்நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத் தடை, விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பக்தர்கள் உள்ளிட்ட யாரும் போகத் தடை, அதே போல் அங்கிருந்து மக்கள் தங்கள் நாடுகளுக்கு வரத்தடை என்ற தடைகளை விதித்து செயல்படுத்தி வந்தன.

இதே போன்றதொரு தடையை, இந்திய அரசு இலங்கை மீது விதிக்க வேண்டுமென்பது தமிழக மக்களின் கோரிக்கை என்பதை உணர்த்தும் வகையில் தான், 08.06.2011 அன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், தனது சொந்த நாட்டு தமிழக மீனவர்களை தினந்தோறும், அடித்தும், வலைகளை சேதப்படுத்தியும் அழித்துக் கொண்டிருக்கும் இலங்கைக்கு எதிராக சுட்டு விரலைக்கூட அசைக்காத இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் இலங்கைக்கு எதிராக எடுக்கவில்லை.

எனவே தான், தமிழக மக்களுக்காக அமைப்புகளை நடத்துகின்ற நாம் சிங்களப் பொருட்களைப் புறக்கணிப்பதையும், ‘சுற்றுலா’ என்ற பெயரில் அவர்கள் தமிழகத்தில் சுற்றித் திரிவதையும் ஓர் அரசின் பொறுப்புணர்வோடு எதிர்த்து வருகிறோம்.

இதே நோக்கில் தான், சிங்கள உதைப்பந்தாட்டக் குழுவினர் சென்னைக்கு வந்த போது, அவர்களை தமிழக அரசு திருப்பி அனுப்பியதையும், ஆசிய தடகளப் போட்டியில் இலங்கை நாட்டின் வீரர்களும் பங்கேற்பதால் அப்போட்டிகளை தமிழகத்தில் நடத்த முடியாதென தமிழக அரசு அறிவித்ததையும் நாம் வரவேற்கத்தக்க அரசியல் நடவடிக்கையாகப் பார்க்கிறோம்.

அதே போன்று, சென்னையில் நடைபெறவுள்ள சிங்கள அணி வீரர்கள் பங்கேற்கும் ஐ.பி.எல். மட்டைப்பந்துப் போட்டிகளை, சென்னையில் நடத்தக்கூடாதென தமிழக அரசு தடை விதிக்க வேண்டுமென தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுள்ள,
கோ.மாரிமுத்து - தலைவர், தமிழக இளைஞர் முன்னணி.
க.அருணபாரதி - பொதுச் செயலாளர், தமிழக இளைஞர் முன்னணி.

Pin It