இஸ்லாமியச் சமூகத்திற்கும் பொதுச்சமூகத்திற்குமான உறவு சீராக இருக்கும் வரை, எந்த ஒரு மதவாதமும் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி விட முடியாது. இதனை உடைப்பதன் வழியாக மட்டுமே, இந்திய சமூகத்தில் இந்துத்துவம் அரியணை ஏறக்கூடும். பன்மைச் சமூகத்தில் இருந்து சிறுபான்மைச் சமூகம் தனிமைப்படுத்தப்பட வேண்டும். அதற்கு எதிரிகளின் செயல்திட்டத்தால், துரோகிகளால் வடிவமைக்கப் பட்டதே ஏகத்துவம் என்கிற தூய்மைவாதம். இதை ஒரு அரசியல் நீட்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது.

இஸ்லாமிய மார்க்கம் நபிகள் நாயகம் காலத்திலேயே கடல் மார்க்கமாக தமிழ் மண்ணிற்கு வந்து விட்டது. இறைக்கொள்கையை உலகெங்கும் பரப்பும் புனிதர்களின் கூட்டம் எல்லா திசைவெளிகளிலும் பயணித்தது தான் உண்மையான வரலாறு. இராமநாதபுரம் மாவட்டம் கடலோரக் கிராமமான கீழக்கரையில் ஆறாம் நூற்றாண்டு பள்ளிவாசல் இன்றும் இருப்பதும், அதை தொல்லியல் துறை ஆராய்ச்சி செய்திருப்பதுமே அதற்கு சான்றாகும். எனவே, நாடு பிடிக்க வந்த மொகலாயர்களால் இஸ்லாம் இந்தியாவிற்குள் வந்தது என்பது வரலாற்று மோசடி. உழைக்கிற சமூகத்தை ஒதுக்கி வைத்து, தீட்டாக பார்த்த பார்ப்பனீயத்திற்கு மாற்றாக உருவான பெளத்தம் இந்திய தேசத்தை விட்டு, அப்புறப்படுத்தப்பட்டது. ஆனால், மாற்றாக உருவான கலகக்குரலான இஸ்லாத்தை எதிரிகளால் வெளியேற்ற முடியவில்லை.

கற்சிலைகளை வைத்து வழிபட்டுக் கொண்டிருந்த இனக்குழுக்களுக்கு மத்தியில், உருவமற்ற வழிபாட்டை முன்வைத்ததன் வழியாக, இஸ்லாம் சுரண்டலுக்கு வழிவகையற்ற ஆன்மீகத்தைத் தந்தது. தமிழில் சித்தர்களின் ஆன்மீக மரபை ஒத்திருப்பதே இதன் பலம். கடவுள் மறுப்பை முன்வைக்காமல், ஆன்மீகத்திற்குள்ளே இருந்து கொண்டே கேள்விகளை முன்வைக்கும் புரட்சிகர மரபு. இத்தகையவர்களை பின்பற்றியே, பலரும் இஸ்லாத்தில் இணைந்தனர். இவர்களின் மறைவுக்குப் பின்னால், அவர்களின் நினைவிடங்கள் எல்லா சமயத்தவர்களும் கொண்டாடும் இடமாக மாற்றப்பட்டது. மரணத்தின் வழியாக வாழ்வைப் பார்க்கும் ஏற்பாடு. இவையே கால வளர்ச்சியில் சந்தனக்கூடு என்னும் திருவிழாவாக மாறியது.

குறிப்பாக, மாற்று சமயத்தைச் சேர்ந்தவர்களை பள்ளிவாசலில் அனுமதிக்கும் வழக்கம் எப்படி நடைமுறையில் இல்லையோ, அப்படியே பெண்களையும் அனுமதிக்கிற வழக்கம் நடைமுறையில் இல்லை. பெண்களை தொழுவதற்கு கருத்தியல் ரீதியாக இஸ்லாம் அனுமதிக்கிறது என்பது உண்மையென்றாலும் நடப்பியல் சார்ந்து அனுமதிப்பது இல்லை. இது போன்ற வாய்ப்பை தர்காக்கள், தன் இறுக்கமான சூழலைத் தளர்த்தி, பெண்களை மட்டுமின்றி, அனைவரையும் அனுமதிக்கிறது. வாழை மரம் கட்டும் மரபார்ந்த பண்பாட்டு நடவடிக்கைகளை தர்காக்கள் புறக்கணிப்பதில்லை. நம் மரபின் வேர்களை வெட்டி, வீழ்த்தி விடாமல், வழிபாட்டில் மட்டுமே வேறுபடச் செய்கிற நாகரீகத்தின் தொடர்ச்சியாக இதைக் கருதலாம்.

இதனால் தான், நாகூர் தர்கா போன்ற இடங்களில் லட்சக்கணக்கானவர்கள் கூடுகிறார்கள். தமிழர் வாழ்வின் கொண்டாட்ட தருணங்களை, இத்தகைய சந்தனக்கூடுகள் மறு மீட்டுருவாக்கம் செய்தன. இது இங்கு மட்டுமின்றி, வட மாநிலங்களிலும் உண்டு. அஜ்மீர் தர்கா போன்றவை மிகவும் பிரபலமானவை. இதை தகர்க்கவே, இந்துத்துவவாதிகள் அஜ்மீர் தர்காவில் குண்டு வைத்தனர். அதே செயலையே, கருத்தியல் ரீதியாக, ஏகத்துவம் பேசும் தவ்ஹீத்வாதிகள் தங்கள் கொள்கைத் திட்டமாக செய்து வருகிறார்கள். ஒரு சமயத்தின் அறநெறிகளை, பிற மதத்தினர் புரிந்து கொள்வதன் வழியாக, சமூக நல்லிணக்கத்தைப் பேணும் வாய்ப்பாகவே, முன்னோர்கள் தர்காக்களை நடைமுறைப்படுத்தினர்.

அங்கே புதைந்திருப்பது தனிமனிதர்கள் அல்ல. அது ஒரு வரலாற்றின் தொடர்ச்சி. அந்த வரலாற்றைப் புறக்கணித்து, வழிபாட்டை மட்டுமே முன்னிலைப்படுத்திய சூழல் பின்னாளில் உருவானது. கலை, இலக்கியம் சார்ந்த ஒரு பொதுவெளி இங்கே உருவானது. நாகூர் அனிபா, காயல் ஷேக் முகம்மது போன்ற இசைக்கலைஞர்கள் இது போன்ற சூழல்களால் வளர்த்தெடுக்கப்பட்டார்கள். ஆனால், ஏகத்துவம் பேசும் கூட்டம், இஸ்லாமியர்களின் மென் உணர்வுகளை, கலை ரசனைகளை முற்றிலுமாக புறக்கணித்தார்கள். இஸ்லாத்தை ஒரு வழிப்பாதையாக மாற்றினார்கள். இவர்களின் திட்டம் கல்வியறிவற்ற முரட்டுக்கூட்டத்திற்கு மோசமான முன்னுதாரணத்தை வழங்கினார்கள்.

இவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தின் வழியாக, சமூக நல்லிணக்கத்தை உடைத்தார்கள். சகோதர யுத்தத்தை வளர்த்தார்கள். அழிவின் விளிம்பில் இஸ்லாமிய சமூகத்தை நிறுத்தி, தனிமைப்படுத்தினார்கள். ஒற்றைக் கலாச்சாரத்தில், ஒற்றைப் பண்பாட்டில், ஒற்றைக் கருத்தில் இயங்க வேண்டும் என தங்களின் கருத்தை, இஸ்லாத்தின் கருத்தாக திணித்தார்கள். உண்மையில் இஸ்லாமிய மார்க்கம் ஒரு போதும் அப்படிப்பட்ட இறுக்கமான சூழலை வலியுறுத்தவில்லை. இதை வழிநடத்தும் பொறுப்பில் உள்ளவர்களே தீர்மானிக்கிறார்கள். பன்றிக்கறியை தடை செய்த மார்க்கம், உயிர்பிழைக்க வாய்ப்பற்ற சூழலில், பஞ்சம் நேர்கிற போது, அதையும் சாப்பிட அனுமதிக்கிறது.

ஷரியத் சட்டத்தைப் பயன்படுத்துவதைத் தவிர்த்த, இஸ்லாமிய ஆட்சியைக்கூட கலீபா உமர் அவர்களின் வரலாற்றில் பார்க்க முடிகிறது. நபிகள் நாயகம் மறைவுக்குப் பின்னால், வந்த ஆட்சியாளர்களில் ஒருவரான கலீபா உமர் அவர்களின் காலத்தில் ஒரு முறை கடும் பஞ்சம் ஏற்படுகிறது. அதனால் திருட்டு அதிகம் நிகழ்கிறது. ஒரு திருடன் கையும் களவுமாக பிடிபடுகிறான். ஆட்சியாளர் உமர் முன்பு, தண்டனைக்காக நிறுத்தப்படுகிறான். அன்றைய காலகட்டத்தில் ஷரியத் சட்டப்படி, திருடியவன் கையை வெட்ட வேண்டும். ஆனால், உமர் மன்னித்தார். நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு, தீர்க்கப்படாமல் இருப்பதற்கு, ஆட்சியாளராகிய நானும் காரணம். ஆகவே, திருடியவரை தண்டிக்க இயலாது என்கிறார்.

ரிஸானாவை படுகொலை செய்த முரட்டுப்பக்திக்கு சொந்தக்காரர்கள், இது போன்ற வரலாற்றைப் புரிந்து கொள்வதன் வழியாக, தங்களை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும். இஸ்லாம் கண்மூடித்தனமான பக்தியை வலியுறுத்தாமல், இது போன்ற பகுத்தறிவிற்கும் முக்கியத்துவம் தருகிறது என்பதைப் புரிந்து கொள்வது முஸ்லிம்களுக்கே மேலும் நன்மை பயக்கும்.

- அமீர் அப்பாஸ்

Pin It