எந்த ஒரு பிரச்சினையையும் அதன் தொடக்கத்தில் தீர்க்காமல், அது புண்ணாகி, புரையோடி, பாதிக்கப்பட்ட உறுப்பையே எடுத்தால்தான் உயிரையே காப்பாற்ற முடியும் என்கிற அளவுக்குக் கொண்டு போய்விட்டு, அதன் பின் களிம்பு பூசுவதில் வல்லவர்கள் இந்திய அரசியலாளர்கள். அதன் பிறகு, அந்தக் களிம்பு தடவியதையே பெரிய சாதனையாகப் பேசி வாக்குக் கேட்டு வருவார்கள். உறுப்பையே எடுக்க வேண்டிய நேரத்தில் மருந்து பூசுவது உதவியில்லை, உயிர்க்கொலை என்பதைப் புரிந்து கொள்ளாத நம் மக்களும் இளித்துக் கொண்டே வாக்கை அள்ளித் தருவார்கள். எல்லாத் தேர்தல்களிலும் காலங்காலமாக நடக்கும் இந்த அரசியல் விரச நாடகத்தை இந்த முறை பன்னாட்டு அளவில் பிரம்மாண்டமாக அரங்கேற்ற இந்திய அரசு எடுத்து வைத்துள்ள முதல் படிதான் நேற்றைய ‘இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்த நாடாளுமன்ற கவன ஈர்ப்புத் தீர்மானம்’!

மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, அங்கே கண்ணெதிரே மக்கள் இலட்ச இலட்சமாகக் கொன்று குவிக்கப்பட்டபொழுது வராத இந்த அக்கறை இன்று பாலச்சந்திரன் என்ற ஒரே ஒரு சிறுவன் கொல்லப்பட்டவுடன் எங்கிருந்து பொத்துக் கொண்டு வந்தது? “அட! சிறுவனில்லையா? பால்மணம் மாறாப் பாலகனில்லையா? அதனால்தான் அதைப் பார்த்தவுடன் இந்திய அரசுக்கு உள்ளம் தாளவில்லை. என்ன இருந்தாலும் அவர்களும் மனிதர்கள்தானே” என்று சொல்லாதீர்கள்! ஏன், இதே தொலைக்காட்சிச் செய்திகளில் போர் விமானத்தின் (அதுவும் இந்தியப் போர்விமானம்தான் பெரும்பாலும்) பேயொலி கேட்டுச் சின்னஞ் சிறுவர்களெல்லாம் அலறிக் கொண்டு ஓடிய காட்சிகள் காட்டப்படவில்லையா? தாக்குதலின் கொடூரத்தைக் கண்டு அஞ்சி மறைவிடங்களில் ஒளிந்துகொண்டு சிறுவர் சிறுமியர் கதறி அழுது கொண்டிருந்த காட்சிகள் ஒளிபரப்பப்படவில்லையா? பிஞ்சுக் குழந்தைகளெல்லாம் கையிழந்தும், காலிழந்தும் குருதி வழியத் தெருக்களில் பிணமாகக் கிடந்தது காண்பிக்கப்படவில்லையா? அப்பொழுதெல்லாம் தோன்றாத இந்தக் கரிசனம், நாடாளுமன்றத்தில் இதற்காகக் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரும் எண்ணம், இப்பொழுது எழக் காரணம்?... ‘நாடாளுமன்றத் தேர்தல்’!

தமிழ் இனத்தையே அழித்துவிட்டு எந்த முகத்தை வைத்துக்கொண்டு தமிழ் மக்களிடம் வாக்குக் கேட்டு வருவது என மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கின்றன காங்கிரசும், தி.மு.க-வும். தானே குழி தோண்டிப் புதைத்த ‘டெசோ’வுக்கு மீண்டும் உயிர் கொடுப்பது, அது, இது என்று கருணாநிதியும் என்னென்னவோ மாய்மாலங்களெல்லாம்... சீ! மாய வித்தைகளெல்லாம் செய்து பார்த்தார். ஒன்றும் பலிக்கவில்லை.

இதே போல், ‘உலக மன்னிப்புக் கழகம்’ முதலான பன்னாட்டு அமைப்புகளின் அழுத்தம் தாங்காமல், ஈழத் தமிழர்களுக்கு ஏதாவது செய்ததாகக் காட்டியாவது ஆக வேண்டிய நிலைமையில் இருக்கிறது அமெரிக்காவும்.

இந்த இரு தரப்பும் சேர்ந்து ஜெனிவாவில் அரங்கேற்ற இருக்கும் பன்னாட்டு அரசியல் நாடகத்தின் முன்பாதிதான் நேற்று நாம் தொலைக்காட்சிகளில் பார்த்த, இந்திய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட ‘ஈழப் பிரச்சினைக்கான நாடாளுமன்ற கவன ஈர்ப்புத் தீர்மானம்’.

ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டுவரவிருக்கும் இந்தத் தீர்மானத்தில் உண்மையில் எந்தத் தீர்வும் இல்லையென்றும், வெறுமனே பேருக்கு இப்படி ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்குப் பதில் ‘தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு’ முதலான உண்மையான தீர்வுகள் அடங்கிய தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவர வேண்டுமென்றும், இந்தப் போலித் தீர்மானத்தைக் கைவிட வேண்டுமென்றும் ஏற்கெனவே உலகளவில் தமிழ் உணர்வாளர்களும், தலைவர்களும் கோரிக்கை விடுத்தனர். இந்தப் போலித் தீர்மானத்தை எதிர்த்துப் போராட்டங்களும் நடைபெற்றன. ஆனால் வழக்கம்போல், அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாகவே மதிக்காமல் அப்பொழுதே இந்திய அரசு இந்தத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாகத் தெரிவித்தது!

மக்களின் பிரச்சினைகளுக்கு உண்மையான தீர்வுகளை வழங்காமல் போலித் தீர்வுகளை முன்வைத்து, எப்பொழுதும் எந்தப் பிரச்சினையும் முடிவுபெறாமலே பார்த்துக் கொள்வதில் அசகாய சூரர்களான இந்திய ஆட்சியாளர்கள், அதையே இன்னொரு நாடு செய்யும்பொழுது, அதுவும் அது தனக்குச் சாதகமான ஒன்றாகவும் இருக்கும்பொழுது அதை ஆதரிக்காவிட்டால்தான் வியப்பே!

ஆனால் அமெரிக்காவின் இந்தத் தீர்மானத்தை ஏற்கெனவே தமிழர்கள் எதிர்க்கும் நிலையில், அதை இந்தியா ஆதரிக்கும் என மீண்டும் மீண்டும் சொல்வதால் தமிழ்நாட்டில் மறுபடியும் மறுபடியும் போராட்டங்கள் வெடிப்பதுதான் மிச்சம் என்பது இந்திய அரசுக்கு நன்றாகவே தெரியும். அதைவிட, அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதன் மூலம் தமிழர்கள் மீது இந்தியாவுக்கு அக்கறை இருக்கிறது எனத் தமிழர்களே சொல்லும்படி ஒரு நிலையை உருவாக்குவதற்காகத்தான் இந்திய அரசு இந்த இலங்கைப் பிரச்சினைக்கான கவன ஈர்ப்புத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து காங்கிரசு, தி.மு.க உட்பட எல்லாக் கட்சிகளையும் ஈழத் தமிழர் பிரச்சினை பற்றிப் பேச வைத்தது. இப்பொழுது அடுத்தது என்ன?... இத்தனை கட்சிகளும் கேட்டுக் கொண்டதன் பேரில், தமிழ்நாட்டுத் தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில், ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கையிலெடுப்பதாகக் கூறி தான் முன்பே திட்டமிட்டபடி அமெரிக்காவின் வஞ்சகத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறது இந்தியா. இதற்காகத்தான் இந்தத் திடீர்க் கரிசனம்!

இந்த ஒரே ஒரு நகர்த்தல் மூலம் இந்திய அரசு சாய்க்கத் திட்டமிட்டிருக்கும் காய்கள் பல!

  • இனப்படுகொலை ஒன்றுக்கு உதவியதனால் உலகளவில் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கும் அவப்பெயரை நீக்கிக் கொள்வது.
  • தமிழர்களிடம் வாக்குக் கேட்டு வருவதற்குத் தற்காலிகமாகவாவது ஒரு தகுதியைப் ஏற்படுத்திக் கொள்வது.
  • உதவாத ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருவதன் மூலம் தன் நட்பு நாடான இலங்கையையும் தன்னையும் பன்னாட்டு அரசியல் அழுத்தத்திலிருந்து தற்காலிகமாகவாவது தற்காத்துக் கொள்வது.
  • அந்தத் தீர்மானத்திலிருக்கும் உதவாத தீர்வுகளை அமல்படுத்துவதற்கென அவகாசம் கேட்டு, அதுவரை இடையூறில்லாமல் தமிழர்களை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது.
  • ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான பன்னாட்டுக் குரல்களைக் கொஞ்ச காலத்துக்கு, குறைந்தது நாடாளுமன்றத் தேர்தல் வரைக்குமாவது முடக்கி வைப்பது.

ஆக மாநில அரசியல், தேசிய அரசியல், பன்னாட்டு அரசியல் என மூன்று மட்டங்களிலும் பெரும் லாபம் ஈட்ட முறையே தி.மு.க, காங்கிரசு, அமெரிக்கா ஆகிய மூன்றும் சேர்ந்து நடத்தும் அபாயகரமான அரசியல் சூதாட்டம் இது! இதில் மீண்டும் பலியாகப் போவது ஈழத் தமிழர்கள்தான்! நடந்து முடிந்த இனப்படுகொலையில் தொடுக்கப்பட்ட இராணுவத் தாக்குதலை விடப் பயங்கரமான அரசியல் தாக்குதல் இது! இனப்படுகொலையின் பொழுதாவது அது மக்கள் மீதான வன்முறை என்பது வெளியில் தெரிந்து, உலகம் அதற்கெதிராகக் குரல் கொடுக்க முடிந்தது. படுகொலை ஒரு முடிவுக்கு வந்த பிறகான காலகட்டத்தில் கூட, தொடர்ந்து அங்கு நடக்கும் அட்டூழியங்கள் காரணமாக உலகம் தன் கண்டனத்தைத் தெரிவிக்க முடிந்தது. ஆனால், இப்படியொரு தீர்வில்லாத தீர்மானத்தை அமல்படுத்தினால் அது நிறைவேற்றப்படும் வரை யாரும் எதுவும் பெரிதாகக் கேட்க முடியாது. கேட்டால், “பொறுங்கள்! இப்பொழுதுதானே தீர்வு முன்வைக்கப்பட்டிருக்கிறது? அது நிறைவேற்றப்படுவதற்குள் ஏன் அவசரப்படுகிறீர்கள்” என்றுதான் உலக நாடுகளிடமிருந்து பதில் வரும். சில ஆண்டுகளுக்கு, இலங்கையை யாரும் எதுவும் கேட்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

எனவே உண்மையான தமிழ் உணர்வாளர்களும், போராட்டக்காரர்களும், தலைவர்களும் எழுச்சி கொள்ள வேண்டிய நேரம் இது! உண்மைத் தமிழ்த் தலைவர்கள் அனைவரும் ஓரணியில் நின்று அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் இந்தத் தீர்மானத்துக்கு எதிராக... இல்லை இல்லை, ஈழத் தமிழர்களுக்கு எதிராகத் தொடுகப்படவிருக்கும் இந்த அடுத்த பெரும் தாக்குதலுக்கு எதிராகப் போராட வேண்டும்! ஜெனீவா மனித உரிமைக் கூட்டம் நடைபெறவிருக்கும் கட்டடத்துக்கு முன் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட வேண்டும்! கூட்டத்தில் பங்கேற்று அந்தத் தீர்மானத்துக்கு எதிராகப் பேசி, இந்தத் தீர்மானம் தமிழர்களுக்குத் திருப்தியளிக்கவில்லை, தமிழர்கள் எதிர்பார்க்கும் தீர்வு இது இல்லை என்பதைப் பன்னாட்டு அரசியல் அரங்கில் பதிவு செய்ய முயல வேண்டும்!

இல்லாவிட்டால், நடந்த இனப்படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கருணாநிதி மீது விழவிருக்கும் வரலாற்றுப் பழி இவர்கள் மீதும் சேர்த்துச் சுமத்தப்படுவதிலிருந்து இவர்கள் தப்ப முடியாது!

- இ.பு.ஞானப்பிரகாசன்

Pin It