அய்யா.. உங்களின் தலித்துகளுக்கு ஆதரவான போராட்டத்தை நினைத்தால் இன்றும் மெய்சிலிர்க்கத்தான் செய்கிறது. ஆம் அய்யா அது அம்பேத்கரின் சிலை திறப்பாக இருந்தாலும் சரி, குடிதாங்கி புரட்சியானாலும் சரி, சரிந்து போய்க்கிடந்த இந்த அரசியலில் ஒரு புதிய பரிணாமத்தை நான் உங்களிடம் கண்டேன். நீங்கள் பேசிய மார்க்சியமும் லெனினியமும் அம்பேத்கரியமும் பெரியாரியமும் என்னை அதிகமாய்க் கவர்ந்தது. தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவனாக இருந்தாலும் உங்கள் மீது எனக்கு ஈடு இணையில்லாத மதிப்பும் இருந்தது

ramadoss_330ஆனால் இப்போது ஏனய்யா நீங்களே அந்த சமுதாயத்தை ஒடுக்க நினைக்கிறீர்கள்? அதன் அர்த்தம் என்ன? இத்தனை நாள் நீங்கள் நடத்தியது அரசியல் நாடகமா அல்லது யாருக்கேனும் அடிமைப்பட்டு போனீர்களா? சொல்லுங்கள் அய்யா! உங்களோடு கடந்த சட்டமன்றத் தேர்தலிலே சிறுத்தைகள் கூட்டணி வைத்து போட்டியிட்ட போதும் எத்தனையோ இழப்புகளையும் தாண்டி ஓடி ஓடி உழைத்தார்களே சிறுத்தைகள், அதை எப்படி மறந்தீர்கள் அய்யா! ஜெயங்கொண்டம் தொகுதி சிறுத்தைகளுக்கு ஒதுக்கப்பட்ட பிறகும் நீங்கள் கேட்ட ஒரே காரணத்திற்க்காக காடுவெட்டி குருவிற்காக விட்டுக் கொடுத்தார்களே சிறுத்தைகள், அதையும் எப்படி மறந்தீர்கள்?

குரு மீது எத்தனையோ கசப்புகள் இருந்த போதிலும் உங்கள் முகத்திற்காக ஓடி, ஓடி, வாக்கு சேகரித்து வெற்றி பெறச் செய்தார்களே, உங்களால் எப்படி மறக்க முடிந்தது? காடுவெட்டி தான் நன்றி மறந்து பேசுகிறார்.. நீங்கள் எப்படி அவரின் வன்முறைக்குள் அடைபட்டுக் கிடக்கிறீர்கள்?

உங்களை காயப்படுத்தவோ, உங்களை விமர்சிப்பதாய் நினைத்தோ இதை எழுதவில்லை. உங்களிடம் இதையெழுப்ப எனக்கு உரிமை இருக்கிறது. ஆம் எம் விடியலில் உங்களுக்கான பங்கும் இருக்கிறது. அந்த உரிமையில் இதை உங்கள் முன் எழுப்புகிறேன். மற்றபடி இதில் எந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை.

தமிழ்த் தேசியத்தை தூக்கிப் பிடித்த உங்களால் இன்று எப்படி சாதியத்தை தூக்கிச் சுமக்க முடிகிறது? திவ்யா - இளவரசன் காதல் திருமணத்தால் தான் தருமபுரி கலவரம் நிகழ்ந்ததாய்ச் சொல்கிறீர்கள். ஆனால் உங்களுக்கே தெரியும், அந்த காதலுக்கும் கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, இது முற்றிலும் திட்டம் தீட்டி நடத்தப்பட்ட வன்முறை என்று. உன்மையைச் சொல்லுங்கள் அய்யா, திவ்யாவின் தந்தை தற்கொலைதான் செய்து கொண்டாரா என்று? மையப் புலனாய்வில் தெரிந்து விடும் அய்யா. அந்த நத்தம் கிராமத்திலே ஏற்கனவே 6 குடும்பங்களில் வன்னிய சகோதரிகள் சாதி மறுப்புத் திருமணம் புரிந்து வாழ்கிறார்கள். வன்னியர்களும் தலித்துகளும் எவ்வளவு ஒற்றுமையாய் அங்கு வாழ்ந்து வந்தார்கள்.. அங்கு இயங்கிய நக்சல்பாரிகளின் இயக்கம் சொல்லித்தந்த பாடம் அது. அதற்குச் சான்று தான் அப்பு, பாலன் தோழர்கள். அப்படிப்பட்ட புரட்சி மண்ணில் சாதியத்தைத் தூண்ட எப்படி மனம் வந்தது? அதற்காக எத்தனை நாள் திட்டம் தீட்டி செயல்படுத்தியிருப்பார்கள்? உண்மையைச் சொல்லுங்கள் அய்யா, உண்மையாகவே அது உங்களுக்குத் தெரியாதா?

ஜீன்ஸ் பேண்டும், கூலிங் கிளாசும் போட்டு வந்து வன்னியப் பெண்களை மயக்கி விடுகிறார்கள் என்று சொல்கிறீர்களே, அப்படி மயங்கிப் போகிறவர்களா பெண்கள்? எப்படி அய்யா என் வன்னிய சகோதரிகளை உங்களால் காயப்படுத்த முடிந்தது? அங்கு தானய்யா உங்களின் பெண்ணியம் தோற்று விட்டது.

இந்த வன்முறையை தூண்டியவர்கள் வெளியே நிம்மதியாயிருக்க என் அப்பாவி வன்னிய சகோதரர்களை சிறைக்கு அனுப்ப எப்படி அய்யா உங்களுக்கு மனம் வந்தது? உங்களுக்கு வேண்டுமானால் அப்பாவி வன்னிய தோழர்களின் எதிர்காலத்தைப் பற்றிய கவலை இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்களுக்கு இருக்கிறது. திவ்யாவின் குடும்பத்தின் மீதும் வன்னிய சகோதரிகளின் மீதும் எங்களுக்கு அக்கறை இருக்கிறது. நீங்கள் சொல்லும் அதே புள்ளி விவரத்தை உண்மையாய் சொல்ல வேண்டுமாயின், தலித் பெண்கள் தான் அதிகமாய் பாலியல் தொல்லைகளுக்கு பலியாகி இருக்கிறார்கள்.

உங்களின் மீது இருந்த பற்று, உங்களின் வார்த்தைகளாலே வெறுக்கப்பட்டது... ஆம் அய்யா! 1989களில் சொன்னீர்கள், இந்த கட்சி முழுக்க முழுக்க பாட்டாளி வர்க்கத்திற்க்காக தொடங்கப்பட்டது; நானோ என் குடும்பத்தாரோ பொறுப்புகளிலோ அல்லது பதவிகளிலோ வந்தால் மின் கம்பத்திலே கட்டி வைத்து அடியுங்கள் என்றீர்கள்.. என்ன நடந்தது? அண்ணன் அன்புமணியை மைய அரசின் அமைச்சராக்கி அழகு பார்த்தீர்கள்? இதையும் விட்டு விடலாம், பதவிதானே பரவாயில்லை என்று.

அடுத்து வந்த தேர்தலிலே என் செய்தியாளர் சொந்தங்கள் உங்களிடம் அதிமுகவோடு கூட்டனி வைப்பீர்களா என்று கேட்டார்கள் அதற்கு நீங்கள் சொன்னீர்கள், நான் அந்த அம்மாவோடு கூட்டணி வைத்தால் என் அம்மாவோடு படுப்பதற்குச் சமம் என்று மானத்தோடு சொன்னீர்கள். ஆனாலும் எப்படி அய்யா, அந்த அம்மாவோடு கூட்டணி வைத்து உங்கள் தாயின் புனிதத்தைக் கொச்சைப்படுத்தினீர்கள்.

இப்போது திராவிட கட்சிகளோடு கூட்டணியில்லை என்று அறிவித்துள்ளீர்கள். அதுவும் நிலையானது இல்லை என்று எல்லோருக்கும் தெரியும் அய்யா!

நேற்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொன்னீர்கள், ஆம் நான் சாதி வெறியன் தான், வன்னிய சாதி வெறியன் தான் என்று. இதை நம்முடைய மக்கள் தொலைக்காட்சியே பதிவு செய்தது. இருக்கட்டும் அய்யா, நாங்கள் உங்களை தமிழுக்கான தலைவனாய்ப் பார்த்தோம். ஆனால் நீங்களோ, இல்லை இல்லை நான் வன்னிய தலைவன் மட்டும் தான் என்று எங்கள் தவறை உணர வைத்தீர்கள். நன்றி அய்யா.

அப்படியே இருந்து விட்டுப் போகட்டும். அய்யா குறைந்தது அந்த வன்னிய சொந்தங்களுக்காவது உண்மையாய் இருங்கள். உங்களின் அரசியலுக்கு அந்தத் தோழர்களை பலியாக்கி விடாதிர்கள். வளர்ந்து வரும் இந்த இளைய தலைமுறைகளின் நெஞ்சுக்குள் நஞ்சினை விதைத்து விடாதீர்கள்! ஆம் அய்யா அதை நீங்கள் அறுவடை செய்யப் போவதில்லை. நாளைய தலைமுறைகள்தான் அறுவடை செய்யப்போகிறது. அந்த சமூகப்பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது அய்யா!

ஒன்றை சிந்தித்தீர்களா அய்யா! ஒரு காலத்தில் உங்களோடு கூட்டணி வைக்க கலைஞரும், ஜெயலலிதாவும், சோனியாவும், அத்வானியும், வைகோவும் போட்டி போட்டார்கள். ஆனால் இன்றைய நிலையைப் பார்த்தீர்களா அய்யா! லெட்டர் பேட் அமைப்புகளான சாதிச் சங்கங்களோடு போக வேண்டிய சூழலுக்கு வந்து விட்டீர்களே! 'எங்களோடு 81 சதவிகித சாதி அமைப்புகள் இருக்கின்றன. 19 சதவிகித தலித் அமைப்புகள் எங்களை என்ன செய்ய முடியும்' என்றீர்கள். இதுவே போதுமைய்யா நீங்கள் தரங்கெட்டுப்போனதற்கு.

போதும் அய்யா, காடு வெட்டிக்காகவும் சாதி வெறியர்களுக்காகவும் நீங்கள் அடிமைப்பட்டது போதும். வெளியே வாருங்கள்! உங்களுக்காக இங்கே எத்தனையோ சொந்தங்கள் காத்துக் கொண்டிருக்கிறது. சாதிய அரசியல் போதும்! சமூக நல்லிணக்கத்திற்க்காக வாருங்கள்! ஆம் பொது நீரோட்டத்திற்கும் தமிழுக்கும் உங்களின் தேவை இன்னும் இருக்கிறது. இன்னும் நம்பிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் அடிமை விலங்கை உடைத்தெறிந்து வெளியே வருவீர்கள் என்று.

- கீழ்.கா.அன்புச்செல்வன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It