'எங்கே போகிறது நாம் தமிழர் கட்சி? (நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணத்தின் மீதான விமர்சனங்கள்)' - புத்தகத்தின் முன்னுரை:

எந்தப் பற்றும் அற்றவனாக தன்னை அறிவித்துவிட்டு, மானிட சமத்துவம் ஒன்றையே லட்சியமாகக் கொண்டு, அந்த இலட்சியத்துக்கு எதிராக எவை வரினும் அவற்றையெல்லாம் அழிப்பதையே தனது செயல்திட்டமாக வரித்து, இந்த மண்ணில் வாழ்ந்தவர் தந்தை பெரியார். சாதி ஒழிப்பு, பெண்ணடிமைத்தனம் ஒழிப்பு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு இவையெல்லாம் இச்சமுதாயம் மானமும் அறிவும் பெற்று வாழ்வதற்காக அவர் மேற்கொண்ட செயல்திட்டங்களே. இச்செயல் திட்டங்கள் எல்லாம் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. சாதியை ஒழிக்க விரும்பினால், மதம் குறுக்கே வரும்; மதத்தைத் தொட்டால் மூடநம்பிக்கையும், கடவுளும் குறுக்கே வரும்; இவை எல்லாவற்றையும் அழிக்க முற்பட்டால் பார்ப்பன இந்தியத் தேசியம் குறுக்கே வந்து நிற்கும்.

seeman_book_450படிநிலை ஏற்றத்தாழ்வு மிக்க இந்திய சமூகத்தில் மாற்றத்தைக் கொண்டு வர விரும்புவர்கள், இவற்றில் ஒன்றை விட்டு ஒன்றை மட்டும் கைக் கொள்ள முடியாது. அதனால்தான் பெரியார் தன் இறுதி மூச்சுவரை இச்செயல் திட்டங்களை விடாது செயல்படுத்தி வந்தார். பார்ப்பன பனியாக்களின் சுரண்டலிலிருந்து தமிழ் மக்களைக் காப்பதற்காகவே 1937 ஆம் ஆண்டு அவர் தனித் தமிழ்நாடு கோரிக்கைக்கு வர வேண்டியதாயிற்றே அன்றி, மொழி அல்லது இனத்தின் மீது கொண்டு பற்றினாலோ அல்லது பிற இனத்தினரின் மீது கொண்டு வெறுப்பினாலோ அல்ல. அவர் முன்வைத்த தனித்தமிழ்நாடு கோரிக்கை மிகவும் முற்போக்கானது. அதில் முஸ்லிம்கள், கிறித்துவர்கள், பவுத்தர்கள், சமணர்கள் எல்லோருக்கும் சமத்துவமான இடம் இருந்தது. மேலும், ‘தமிழ்நாட்டிலேயே பிறந்து வளர்ந்த பார்ப்பனர்களும் இங்கேயே வாழலாம். ஆனால், அவர்கள் இங்கு மனிதர்களாக வாழ முடியுமே தவிர, தேவர்களாக வாழமுடியாது’ என்பதையும் கூறினார். வர்ணாசிரம அடிப்படையில் நம்மைச் சுரண்டும் பார்ப்பனர்களிடமிருந்தும், பொருளாதார ரீதியாக நம்மைச் சுரண்டும் பனியாக்களிடமிருந்தும் தமிழ்ச் சமுதாயம் விடுபட ஒரே வழி, இந்தியா என்ற கட்டமைப்பில் இருந்து விடுதலை பெற்று தமிழ்நாடு தனி நாடாவதே என்பதை தனது வாழ்நாளின் இறுதிவரை முழங்கி வந்தவர் பெரியார். மொழிவாரியாக மாநிலங்கள் பிரிந்த பின்பு, பெரியார் பேசிய திராவிடம் உள்ளடக்கத்தில் தமிழ்நாட்டு மக்களை மையப்படுத்தியே இருந்தது. பார்ப்பன அடிமைகளாக இருக்கும் பிற திராவிட இன மக்கள் நம்மை விட்டுப் பிரிந்தது ஒரு வகையில் நல்லதே என்றும் கூறினார். தமிழ்த் தேசியக் கருத்தியலின் அஸ்திவாரமாக பெரியாரின் திராவிடம் இருந்தது. திராவிடத்தின் பரிணாம வளர்ச்சியாகத்தான் தமிழ்த் தேசியம் பரிமளித்திருக்கிறது.

ஆனால், முதல் மொழி, மூத்த இனம் என்ற வெற்றுப் பெருமிதங்களின் அடிப்படையில் தமிழ்த் தேசியத்தை சீமான் போன்ற சிலர் இன்று கட்டமைக்கிறார்கள். 'நான் பிறப்பால் உயர்ந்தவன்; எனது அக்ரகாரத்தில் மற்றவர்களுக்கு இடமில்லை' என்று பார்ப்பனர்கள் சொல்வதற்கும், 'நான் உலகின் மூத்த குடியைச் சர்ந்தவன்; எனது நாட்டில் மற்றவர்களுக்கு இடமில்லை' என்று இவர்கள் சொல்வதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இருவருமே, பிறப்பின் அடிப்படையில், தங்களைத் தவிர்த்த மற்றவர்கள் மீது வெறுப்பைக் கக்குகிறார்கள்.

சாதி ஒழிப்பு, இந்துமதம் மறுப்பு, மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பை முன்னிறுத்தி 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழங்கிய பெரியாரிடம் இருந்து, 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற முழக்கத்தை மட்டுமே உருவி எடுத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சியினர் தமிழ்த் தேசியம் பேசுகிறார்கள். இந்தியா என்ற சிறைக்கூடத்தில் இருந்து விடுதலை பெறுவதே தமிழ்த் தேசியம். ஆனால், அந்த சிறைக்கூடத்தின் கான்விக்ட் வார்டன் பதவியை அடைந்தால் போதும் என்று செயல்படுபவர்கள் நாம் தமிழர் கட்சியினர். கைதிகளுக்கான கங்காணி வேலைதான் கான்விக்ட் வார்டன் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இந்த கங்காணி வேலையைத்தான், பெயரில் மட்டுமே 'திராவிட' என்ற சொல்லை வைத்திருக்கும் அரசியல் கட்சிகள் இதுநாள் வரை செய்து கொண்டிருந்தன. அவைகளின் தொடர்ச்சியாக நாம் தமிழர் கட்சி இன்று உருவெடுத்துள்ளது.

பிறகு ஏன் நாம் தமிழர் கட்சியை மட்டும் இவ்வளவு கடுமையாக எதிர்க்க வேண்டியிருக்கிறது என்றால், தமிழகத்தில் முதன் முறையாக இனத்தூய்மைவாத அரசியல் பேசி, தமிழ்ச் சமூகத்தின் அங்கமாக இருக்கும் ஒரு பிரிவினரை சாதி அடிப்படையில் ‘தமிழரல்லதார்’ என்று வேறுபடுத்தி, மிக மோசமான வெறுப்பு அரசியலை வளர்க்கும் வெகுஜன அரசியல் கட்சியாக தனது ஆவணத்தின் மூலம் அது வெளிப்பட்டிருக்கிறது. 2000 ஆண்டுகளுக்கு முன்பே நாகரிகத்தின் உச்சத்தைத் தொட்ட தமிழ்ச் சமுதாயத்தில் பாசிசக் கருத்துக்களை அக்கட்சி விதைத்திருக்கிறது; மதச் சிறுபான்மையினர் மீது நஞ்சைக் கக்குகிறது. இது முளையிலே கிள்ளப்பட வேண்டியது.

நேற்று வரை பெரியாரின் பேரன் என்று மேடைகளில் திராவிட இயக்கக் கருத்துக்களை பேசிக் கொண்டிருந்த சீமான், இன்று 'திராவிடத்தால்தான் வீழ்ந்தோம்' என்று தடாலடியாக பல்டி அடிக்கக் காரணம் என்ன?

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பின்பாக தமிழக மக்கள் இடையே ஒரு கொந்தளிப்பு நிலவி வருகிறது. ஏற்கனவே காவிரி நதிநீர்ப் பிரச்சினை, தமிழக மீனவர்கள் படுகொலை, முல்லைப் பெரியாறு சிக்கல் ஆகியவற்றில் இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்டு வரும் நிலையில், ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டது தமிழக இளைஞர்களிடையே தமிழ்த் தேசிய உணர்ச்சியை மிக வேகமாக பற்ற வைத்திருக்கிறது. இந்த தமிழ்த் தேசிய உணர்வலையை ஓட்டுகளாக அறுவடை செய்யும் வேலையில்தான் சீமானின் நாம் தமிழர் கட்சி இறங்கியுள்ளது. அதற்குத் தடையாக இருப்பவர்கள் யார் யார்? ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், வைகோ, விஜயகாந்த். இவர்களை முதல்வர் பதவிப் போட்டியிலிருந்து விலக்குவது எப்படி? நாம் தமிழர் கட்சிக்குக் கிடைத்த குறுக்கு வழிதான் 'வந்தேறிகள்' என்பது.

முதலமைச்சர் நாற்காலியை நோக்கிய பயணத்தில் நாம் தமிழர் கட்சியினர் கொடுக்க விரும்பும் பலிகள்தான் திராவிடம், இடஒதுக்கீடு, மொழி மற்றும் மதச் சிறுபான்மையினரின் பாதுகாப்பு. இந்தப் பாசிச வேலைகளை மூடி மறைக்க அவர்கள் பயன்படுத்தும் போர்வைதான் தமிழ்த் தேசியம் மற்றும் பிரபாகரனின் படங்கள். நாற்காலி ஆசைதான் சீமானை பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை போடவும் வைக்கிறது; இம்மானுவேல் சேகரனுக்கு வீரவணக்கம் செலுத்தவும் செய்கிறது.

ஆனால் நாம் தமிழர் கட்சியினர் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்றுபட்ட இலங்கைக்குள் முதலமைச்சர் பதவி தருவதாக விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு வாக்குறுதி தரப்பட்டது. அதை மறுத்து, விடுதலைக்காகப் போராடியதால்தான் பிரபாகரன் தேசியத் தலைவர் ஆனார். இன்ப வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, ஒடுக்குமுறை அரசை நக்கிப் பிழைத்து, பதவியை அடைந்த தமிழர்களும் உண்டு. பிள்ளையான், கருணா, வரதராஜப் பெருமாள், டக்ளஸ் தேவானந்தா என நீளும் அந்த வரிசையில் நிற்பதற்கு சீமானும் தயாராகி விட்டார். ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக்கு டக்ளஸ் தேவானந்தாக்களால் எப்படி ஒரு சிறுதுரும்பையும் அசைக்க முடியாதோ, அதேபோல்தான், இந்திய அரசின் கங்காணி பதவியான முதலமைச்சர் பதவியை அடையத் துடிக்கும் சீமானால் ஒரு தூசியைக் கூட தமிழக மக்களின் உரிமைகளுக்காக அசைக்க முடியாது. பதவி அரசியல் எந்த விடுதலையையும் பெற்றுத் தந்ததாக வரலாறு இல்லை.

நாம் தமிழர் கட்சியின் ஆவணம் முன்வைக்கும் வரலாற்றுப் புரட்டுகளுக்கும், பாசிச அரசியலுக்கும் எதிராக இத்தொகுப்பில் காத்திரமாக பல கட்டுரைகள் வெளியாகியுள்ளன. அவற்றோடு, நாம் தமிழர் ஆவணம் வெளிப்படுத்தும் எதிர்மறை செய்திகளாக இரண்டை நான் பதிவு செய்ய விரும்புகிறேன்.

யார் தமிழர்கள், யார் வந்தேறிகள் என்பது பிறப்பின் அடிப்படையில் – இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் சாதியின் அடிப்படையில் தான் நாம் தமிழர் கட்சியினர் தீர்மானிக்கின்றனர். தெலுங்கு அல்லது கன்னடம் பேசும் ரெட்டியார்கள், அருந்ததியர்கள், நாயுடுகள், செட்டியார்கள் உள்ளிட்ட சாதியினர்தான் வந்தேறிகளாக இங்கு நாம் தமிழர் கட்சியினரால் அடையாளம் காணப்படுகிறார்கள். இவற்றில் அருந்ததியர்களைத் தவிர, மற்ற சாதியினர், தலித் மக்களை ஒடுக்குவதில் தேவர்களுக்கோ, வன்னியர்களுக்கோ அல்லது கவுண்டர்களுக்கோ சற்றும் சளைத்தவர்கள் அல்லர். ஆறுதலான விஷயம் என்னவென்றால், இதர ஆதிக்க சாதியினரைப் போல ரெட்டியார்கள், நாயுடுகள் மற்றும் செட்டியார்கள் சாதிரீதியாக பெரிய அளவில் திரட்சி அடையவில்லை. வந்தேறிகள் என்று சாதிரீதியாக இவர்களை ஒதுக்கினால், தங்களது பாதுகாப்புக்காக இவர்கள் அதே சாதி ரீதியாக அணிதிரளவே செய்வார்கள். அது தலித் மக்களின் நலனுக்கு எதிரானதாகவே இருக்கும்.

நாம் தமிழர் போன்ற ஒரு பாசிசக் கட்சி தன்னை தமிழ்த் தேசியக் கட்சி என்று கூறிக் கொள்வது, வளர்ந்து வரும் தமிழ்த் தேசியக் கருத்தியலின் மீது பாசிசக் கறை படிவதற்கு வாய்ப்பாகும். தமிழ்த் தேசிய கருத்தியலை சாய்க்க விரும்பும் பார்ப்பன இந்திய ஆளும் வர்க்கம், நாளை நாம் தமிழர் கட்சியைக் காட்டி, ஒட்டுமொத்த தமிழ்த் தேசிய இயக்கங்கள் மீதும் பாசிச முத்திரை குத்த முனையும். இது தமிழ்த் தேசியத்திற்குப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். இந்த ஆபத்தை தமிழ்த் தேசிய இயக்கங்கள் உணர வேண்டியது அவசியம்.

***

இந்த விவாதங்கள் முழுவதிலும் ஒன்றை கவனிக்க முடிந்தது. தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகளின் செயல்பாடுகள், கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, ஒரு சித்தாந்தத்தினை விமர்சிக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது. மாயாவதியின் செயல்பாடுகளை முன்வைத்து தலித் அரசியல் தோற்றுவிட்டது என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதேபோன்ற அபத்தம்தான் திமுக, அதிமுகவை முன்வைத்து திராவிடம் தோற்றுவிட்டது என்று சொல்வதும், நாம் தமிழர் கட்சியினரை முன்வைத்து தமிழ்த் தேசியக் கருத்தியல் மிகவும் பிற்போக்கானது என்று சொல்வதும். ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகள் பதவி அரசியலுக்காக எந்தக் கொள்கையையும் இழப்பதற்குத் தயாராக இருப்பார்கள்; எந்த கீழ்த்தரமான செயலைச் செய்வதற்கும் யோசிக்க மாட்டார்கள். அண்ணா காலத்திலிருந்து நாம் இதைக் கண்டு வருகிறோம். அவர்களது நோக்கம் எல்லாம் பதவி சுகம், அதிகார போதை மட்டுமே. இவர்களிடம் கொள்கையைத் தேடுவதும், அவர்களை முன்வைத்து ஒரு சித்தாந்தத்தை அளக்க முற்படுவதும் போன்ற மடமை வேறு எதுவும் இல்லை.

தத்துவங்களின் வெற்றி எந்த ஒரு தனிமனிதரின் அல்லது ஒரு இயக்கத்தின் வெற்றி, தோல்வியைப் பொருத்ததல்ல. இந்தியாவில் இருக்கும் இடதுசாரி இயக்கங்களின் தோல்வி என்பது அந்த இயக்கங்களின் செயல்பாடுகள், புரிதலில் இருக்கும் போதாமைதானே தவிர அது கம்யூனிசத்தின் தோல்வியல்ல. எல்லா இயக்கங்களையும் தாண்டி தத்துவம் பரந்த அளவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதை உள்வாங்கும் மக்களில் இருந்து ஒரு லெனின், ஒரு சே குவேரா உருவாகிக் கொண்டேதான் இருப்பார்கள். அதேபோல் திமுக, அதிமுக, மதிமுகவைத் தாண்டி திராவிட அரசியல் இருக்கிறது. பெரியாரின் கொள்கைகள் ஒவ்வொரு தலைமுறையிலும் கொளத்தூர் மணிகளை, கோவை இராமகிருட்டிணன்களை, விடுதலை இராசேந்திரன்களை, ஓவியாக்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும். இது தமிழ்த் தேசியத்திற்கும் பொருந்தும். தமிழ்த் தேசியத்திற்கான ஆக்கப்பூர்வமான விளக்கத்தை சுப.உதயகுமார் தந்திருக்கிறார்.

சீமான் ஒன்றும் தமிழ்த் தேசியத்திற்கான ஒட்டுமொத்த குத்தகைதாரர் அல்ல. அவர் முதல்வர் பதவிக்காக எதையும் தூக்கி எறியத் தயாராக இருக்கும் ஒரு தேர்தல் அரசியல்வாதி. இன்னொரு கருணாநிதி. அவ்வளவுதான். கருணாநிதி, ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த், இராமதாஸ், சீமான் ஆகியோருக்கிடையேயான முதல்வர் நாற்காலி சண்டையில் திராவிடமும், தமிழ்த் தேசியமும் பந்தாடப்படுகின்றன. திராவிடம், தலித்தியம், தமிழ்த் தேசியம், கம்யூனிசம் போன்ற கருத்தியல்களை இந்த ஓட்டுப் பொறுக்கி அரசியல்வாதிகளை முன்வைத்து காயப்படுத்துவது சரியல்ல. கருத்தியல்களின் வெற்றிகளை, தவறுகளை, போதாமைகளை விவாதிக்க வேண்டுமானால், தனியே விவாதிக்கலாம்.

***

காரல் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் வழிப்பட்ட கருத்துக்களை தமிழ் மக்களிடம் பரப்புவதற்காக உருவாக்கப்பட்டது கீற்று இணையதளம். கொள்கைகளின் அடிப்படையில்தான் தனிமனிதர்களையும், இயக்கங்களையும் கீற்று ஆதரிக்கிறது அல்லது எதிர்க்கிறது. கீற்றினை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு இது புரியும். பெரியாரின் கருத்துக்களைப் பேசி வருபவர், ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பவர் என்ற நோக்கில்தான் சீமானை கீற்று பேட்டி கண்டது; அவரது காணொளிகளை வெளியிட்டு வந்தது. ஆனால், அரசியல் கட்சி ஆரம்பித்து, பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு சீமான் மாலை போட்டபோது, அதைக் கண்டித்து கீற்றில் கட்டுரை வெளியானது. இத்தகைய செயல்பாடுகள் சரிதானா என்று கேட்பதற்காகவே இரண்டாவது முறையாக அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அந்தப் பேட்டியில் தனது செயல்பாடுகளை நியாயப்படுத்தி ஒரு தேர்ந்த அரசியல்வாதி போல் சீமான் பேசினார். இருப்பினும், ஈழ மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் என்ற அடிப்படையில் நாம் தமிழர் கட்சித் தோழர்கள் எழுதிய கட்டுரைகள் கீற்றில் அவ்வப்போது வெளிவந்தன.

நாம் தமிழர் கட்சியின் ஆவணம் வெளியான பின்பு, அதில் வெளிப்பட்டிருந்த பாசிசக் கருத்துக்கள் பலரைப் போலவே என்னையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. நச்சுக் கருத்துக்களை இதற்கு முன்னர் எப்படி கீற்று எதிர்த்ததோ, அதேபோன்றுதான் நாம் தமிழர் ஆவணத்தையும் கீற்று எதிர்த்தது. நாம் தமிழர் கட்சியினர் எதிர்வினை ஆற்றவும் வாய்ப்பளிக்கப்பட்டது. நாம் தமிழர் கட்சியினர் எழுதிய சில தரந்தாழ்ந்த விமர்சனங்கள் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ நீக்கப்பட்டது.

நாம் தமிழர் ஆவணத்தை விமர்சித்து பெரியாரியவாதிகள், தமிழ்த் தேசியவாதிகள், ஈழத் தமிழர்கள், புலம்பெயர்ந்த தமிழர்கள் எழுதிய கட்டுரைகளுக்கு நாம் தமிழர் தரப்பிலிருந்து எந்தவொரு பொறுப்பான பதிலும் வரவில்லை. மாறாக,  சீமான் தனது கட்சி ஆவணத்திற்கு எதிராக பேட்டி கொடுத்தார். விமர்சிப்பவர்களை எல்லாம் கொச்சைப்படுத்தி சீமானின் தம்பிகள் இணைய தள‌ங்களில் எழுதினார்கள். கடைசியில், தமிழ்த் தேசியம் மலர்வதற்கும், சீமான் முதல்வராவதற்கும் ஒரே வழி கீற்று நந்தனை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்றிவிடுவதுதான் என்று எழுதுமளவிற்கு அவர்களின் அசட்டுத்தனங்கள் அரங்கேறின.

நாம் தமிழர் கட்சி மட்டுமல்ல, இப்போது தோழமையுடன் இருக்கும் வேறெந்த இயக்கமோ இத்தகைய ஆவணத்தை வெளியிட்டிருந்தாலும், அவர்களையும் கீற்று முழுமூச்சுடன் விமர்சிக்கவே செய்யும். அதற்கான கருத்தியல் பலத்தையும், செயல்நெறிகளையும் பெரியார் எமக்கு அளித்திருக்கிறார். தீர்க்கமான கொள்கைகளின் அடிப்படையில் எந்த சமரசத்திற்கும் இடம்கொடுக்காமல், யார் என்றும் பாராமல், தவறு என்று பட்டதை விமர்சித்து, தனது எதிரிகளின் பட்டியலை வாழ்நாள் முழுக்க நீட்டித்துக் கொண்டிருந்த அந்த ஈரோட்டுக் கிழவனின் வாழ்க்கை வழிகாட்டியாக கீற்றிற்கு இருக்கிறது. இன்னும் நூறு பேர், இன்னும் நூறு இயக்கங்களின் பகைமையைச் சந்திக்கும் துணிவு இருக்கிறது.

கீற்று மீது அவரவர்க்குப் பிடித்தமான வண்ணத்தை அவரவர் பூசிக் கொண்டிருந்தனர். தொடக்கத்தில் சிபிஎம் தளம் என்றார்கள். பின்னர் புலி ஆதரவு தளம் என்றார்கள். குறுந்தமிழ்த் தேசியவாதிகளின் கூடாரம் என்றார்கள். இப்போது நாம் தமிழர் கட்சியினர் 'இது தமிழ்த் தேசியத்திற்கு எதிரானது' என்கிறார்கள். அந்த வகையில் கீற்று மீது படிந்திருந்த குறுகிய தமிழ்த் தேசியவாதப் போர்வை விலகியிருக்கிறது. அதற்காக அவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். 

மற்றபடி, அச்சுறுத்தல்கள் ஒன்றும் கீற்றிற்குப் புதிதல்ல. திராவிடம் குறித்த கருத்துகளுக்கு எதிர்ப்பு வந்தவுடன், ‘பெரியார்தான் எனக்கு வழிகாட்டி’ என்று பல்டி அடித்து சீமான் பின்வாங்கியதுபோல் நான் பின்வாங்க எந்த அவசியமும் இல்லை. யாருக்கும் பயந்து கைகட்டி நிற்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. பதவி, அதிகாரத்திற்காக யாருக்கும் கூழைக்கும்பிடு போட வேண்டிய இழிநிலையும் இல்லை. மானத்துடனும் அறிவுடனும் வாழ பெரியார் கற்றுக் கொடுத்திருக்கிறார். அதே துணிச்சலில், தமிழ் மக்களின் விடியலுக்காகப் பாடுபடும் தோழமை இயக்கங்களுடன் இணைந்து கீற்று தொடர்ந்து பணியாற்றும்.

***

நாம் தமிழர் ஆவணத்தின் பாசிசத் தன்மையை உணர்ந்து உடனடியாக எதிர்வினையாற்றிய தோழர்கள் அனைவருக்கும் நன்றி. நாம் தமிழர் ஆவணம் குறித்த விமர்சனமாக இல்லாதிருப்பனும், திராவிடம் குறித்து பண்ணையூரான் எழுதிய கட்டுரையும், தமிழ்த் தேசியம் குறித்து சுப.உதயகுமார் எழுதிய கட்டுரையும், அவற்றின் முக்கியத்துவம் கருதி இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்களுக்கும் எனது நன்றிகள். இக்கட்டுரைகளை ஒரு தொகுப்பாக கொண்டுவருவது அவசியம் என்று கூறி, உடனடியாக அதை செயல்படுத்தியும் காட்டியிருக்கும் தோழர் செந்தில்நாதனுக்கும், ஆழி பதிப்பகத் தோழர்களுக்கும் மிகுந்த நன்றிகள்!!

இணையதளங்களில் நாம் தமிழர் கட்சியினர் என் மீது வைத்த தரந்தாழ்ந்த தனிநபர் விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றிய தோழர்களுக்கும், கீற்று வாசகர்களுக்கும் – தொடர்ச்சியாக கீற்றினை நடத்துவதன் மூலமே எனது நன்றியைத் தெரிவிக்க முடியும்.

- கீற்று நந்தன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

***

எங்கே போகிறது நாம் தமிழர் கட்சி?
நாம் தமிழர் கட்சியின் கொள்கை ஆவணத்தின் மீதான விமர்சனங்கள்
தொகுப்பு: கீற்று நந்தன்

நூலினைப் பெற:

ஆழி பப்ளிஷர்ஸ்,
1A, திலகர் தெரு,
பாலாஜி நகர், துண்டலம்,
அய்யப்பன்தாங்கல்,
சென்னை - 600077
தொலைபேசி - 044-26791474
விலை ரூ.120

Pin It