தர்மபுரி மாவட்டம் வெள்ளாளப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட நாய்க்கன் கொட்டாய் கிராமத்தில் ஆதிதிராவிடர் சாதி மக்கள் வசிக்கும் இடம் நத்தம் காலனி ஆகும். கடந்த 07.11.2012 மாலை சுமார் 4 மணியளவில் வன்னியர் சாதியினர், தற்கொலை செய்து இறந்து போனதாகக் கூறப்படும் நாகராஜ் என்பவரின் உடலை ஒரு கட்டிலில் கொண்டு வந்து, இளவரசன் என்ற தலித் இளைஞனின் வீட்டின் முன் வைத்து ஆதிதிராவிடர்களை இழிவாகப் பேசி, வன்முறையைத் தொடங்கியுள்ளனர். முதலில் அந்த வீட்டினைத் தாக்கி தீவைத்து விட்டு, பின் அங்கிருந்த எல்லா வீடுகளையும் பெட்ரோல் குண்டுகளை வீசி எரித்துள்ளனர். தீவைப்புக்கு முன் வீடுகளிலிருந்த பணம், நகை உள்ளிட்ட பொருள்கள் களவாடப்படுள்ளது. வாகனங்கள் தீவைக்கப்பட்டுள்ளது. பின் நத்தம் காலனி அருகில் உள்ள அண்ணா நகர் பகுதியிலுள்ள தலித் மக்களின் வீடுகளும் நத்தத்திலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தள்ளியுள்ள கொண்டப்பட்டி கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் வீடுகளும் தீவைக்கப்பட்டு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. தமிழகத்தில் நிகழ்ந்துள்ள மிக மோசமான சாதிய வன்முறையான இந் நிகழ்வினை ஒட்டி மக்கள் சிவில் உரிமைக்கழகம் சார்பில் உண்மையறியும் குழு அமைக்கப்பட்டு கடந்த 15.11.2012 அன்று பாதிக்கப்பட்ட கிராமங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

dharmapuri_427

உண்மையறியும் குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்வு குறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் 25க்கும் மேற்பட்டவர்களையும், பல்வேறு அரசியல் கட்சியினை சார்ந்தோர்களையும், வன்னியர் சாதியினைச் சார்ந்தோர், கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் நஞ்சப்பன், நக்சல்பாரி ஆதரவு இயக்கப் பிரதிநிதிகள், காவல் துறையினர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆகியவர்களையும் சந்தித்துப் பேசியது.

உண்மையறியும் கள ஆய்வுக் குழு உறுப்பினர்கள்

1. பேராசிரியர் சரஸ்வதி, மாநிலத் தலைவர், பியூசிஎல்
2. ச.பாலமுருகன், மாநிலச் செயலர், பியூசிஎல்
3. பொன்.சந்திரன், பியூசிஎல், கோவை
4. தனல‌ட்சுமி, பியூசிஎல், கோவை
5. அனந்த நாராயணன், பியூசிஎல், கோவை
6. விஸ்வநாதன், பியூசிஎல், கோவை
7. கோப்மா.கருப்புசாமி, பியூசிஎல், கோவை
8 நிக்கோலஸ், பியூசிஎல், கோவை
9. வெண்மணி, வழக்குரைஞர், கோவை
10. சந்திரசேகர், பியூசிஎல், கோவை
11. அசோக், பியூசிஎல், கோவை

கள ஆய்வு

நத்தம் காலனியினைச் சார்ந்த இளங்கோ என்பவரின் மகன் இளவரசு ஆதிதிராவிடர் சாதியினைச் சார்ந்தவர். செல்லங் கொட்டாய் என்ற பகுதியினைச் சார்ந்த நாகராஜ், கூட்டுறவு சங்கத்தில் காசாளராக இருந்தவர்; வன்னியர் சாதியினை சார்ந்தவர். அவரின் மகள் திவ்யா நர்சிங் படித்து வந்தார். இளவரசுவும், திவ்யாவும் கஇரண்டு வருடமாக காதலித்து வந்துள்ளனர். திவ்யாவின் காதல் அறிந்த அவரின் பெற்றோர் வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க, காதலர்கள் வீட்டினை விட்டு வெளியேறி சாதிமறுப்புத் திருமணத்தை அக்டோபர் 14 ஆம் தேதி சேலத்தில் பதிவு திருமணமாக செய்து கொண்டு தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி சேலம் டி.ஐ.ஜி சஞ்சீவ் குமார், மாவட்ட எஸ்.பி ஆஸ்ரா கர்க் ஆகியோரிடம் மனு செய்துள்ளனர்.

காவல் துறை மணமகளின் பெற்றோரை அழைத்து திருமணமானவர்களை இடையூறு செய்யக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. பாதுகாப்பு கருதி மணமக்களும் வெளியூர் போய் விடுகின்றனர். இதன் பின்பு தனது உறவினர்கள் மற்றும் தன் சாதி அரசியல் தலைவர்கள் வழி மணமக்களை பிரிக்க நாகராஜ் முயற்சி மேற்கொண்டிருக்கிறார். இந்த முயற்சிக்கு முன் நின்றவர் பாட்டாளி மக்கள் கட்சியினைச் சார்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவரான மதியழகன். அவர் அக்கம் பக்கமுள்ள தேர்வு செய்யப்பட்ட வன்னியர் சாதி பஞ்சாயத்துத் தலைவர்கள் மற்றும் ஊர் கவுண்டர்களை ஒன்று திரட்டியிருக்கின்றார். அவர்கள் இளவரசின் உறவினர்களிடம் திவ்யாவினை இளவரசிடமிருந்து பிரித்து பெற்றோரிடம் ஒப்படைக்க மிரட்டியுள்ளனர்.

இறுதியாக 5.11.2012 தேதி நாய்க்கன் கொட்டாய் கிராமத்தில் வன்னியர் சாதியினைச் சார்ந்தவர்கள் ஒன்று கூடுகின்றர். நத்தம் காலனியைச் சார்ந்தவர்களிடம் இரண்டு நாளில் திவ்யாவை ஒப்படைக்க வேண்டும் என சாதிப் பஞ்சாயத்து உத்திரவிடுகிறது. இப் பஞ்சாயத்தில் நாகராஜ் குடும்பத்திற்கு நேரிடையாக உறவினராக இல்லாதோரும் சாதிய அடிப்படையில் ஒன்று கூடுகின்றனர். திவ்யாவின் காதலை அனுமதித்தால் தங்கள் வீட்டிலும் வந்து தலித் இளைஞர்கள் பெண் கேட்பார்கள் என்பதே மையப் பொருளாக இருந்துள்ளது. பிரச்சனை நாகராஜ் மகள் காதல் திருமணம் என்பதைத் தாண்டி சுற்றுப்பகுதி பிரச்சனையாக மாறிவிடுகின்றது.

திவ்யா, இளவரசனை நத்தம் காலனியினைச் சார்ந்தோர் தொடர்பு கொண்டு அவர்களின் உறவினர்கள் சந்திக்க ஏற்பாடு செய்கின்றனர். மணமகள் வந்தால் அழைத்துச் செல்லுங்கள் எனவும் கூறியுள்ளனர். 07.11.2012 மதியம் வெள்ளக்கல் கட்டமேடு என்ற இடத்தில் திவ்யாவின் தாயார் தேன்மொழி, சித்தி, பெரியம்மா, பெரியாம்மாவின் மகள்கள், சித்தப்பா ஜெகந்நாதன் உள்ளிட்ட சிலர் திவ்யாவையும் இளவரசனையும் சந்தித்துள்ளனர். தங்களுடன் வந்துவிடும் படி அழைத்துள்ளனர். ஆனால் திவ்யா தான் வந்தால் தன்னைக் கொன்றுவிடுவார்கள் என அஞ்சுவதாகவும், இளவரசனுடன் வாழ்ந்துவிடப் போவதாகவும் கூறி இளவரசனின் பைக்கில் ஏறி சென்று விடுகின்றார். அச் சமயம் வீட்டிலிருந்த நாகராஜனுக்கு இந்தத் தகவலை தொலைபேசி வழியாக அவரது மனைவி தேன்மொழி தெரிவித்துள்ளார். பின் அவர் வீடு வந்து பார்க்கும் போது நாகராஜன் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிய வருகின்றது. இந்த நிகழ்விற்கு பின் ஒரு மணி நேரத்திற்கெல்லாம் 1000 பேருக்கு மேற்பட்ட வன்னியர் சாதியினர் நாகராஜனின் வீட்டில் கூடுகின்றனர். பின் அவர் உலை ஒரு கட்டிலில் வைத்துக் கொண்டு வந்து நத்தம் காலனி இளவரசன் வீட்டின் முன் வைத்து அங்கு இருந்த 17 வயது தலித் பெண்ணை தூக்கிக் கொண்டு "நமது பெண்ணை இவனுக ஆள் தூக்கி விட்டான். அதற்குப் பதிலாக இந்தப் பெண்ணை நாம தூக்குவோம்" என சப்தமிட்டுள்ளனர்.

dharmapuri_attack_428

பெண்ணின் தாயார் சரசு பா.ம க. தலைவரான மதியழகனின் காலில் விழுந்து அழுது தன் மகளை மீட்டு தப்பிச் சென்றுள்ளார். அதன் பின்பு வீடுகளிலுள்ள பீரோக்களை உடைத்து நகைகளையும் பணத்தையும் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட பொருள்களையும் களவாடிவிட்டு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டில்கள் மூலம் தீ வைக்கப்பட்டுள்ளது. வீட்டின் முன் இருந்த வாகனங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பின் உடலை நெடுஞ்சாலைக்கு எடுத்துச் சென்று மறியல் நடந்துள்ளது. அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட மரங்களை அறுத்து சாலைப் போக்குவரத்தை துண்டித்துள்ளனர். பின் அண்ணா நகர் காலனிக்குச் சென்ற கும்பல் அங்கிருந்த வீடுகளைத் தாக்கி, பீரோக்களை உடைத்து நகைகளையும், உடமைகளையும் களவாடியபின் தீவைத்துள்ளது. அண்ணா நகர் பகுதியிலிருந்த இளவரசனின் மைத்துனர் ஜோசப் என்பவரின் வீடு மிக மோசமான தாக்குதலுக்கு உள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பின் சுமார் 3 கிலோ மீட்டர் தள்ளியிருந்த கொண்டப்பட்டி என்ற கிராமத்திலிருந்த ஆதி திராவிடர் குடியிருப்புகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன‌. இதில் பாத்திர வியாபாரியான ராஜு என்பவரின் வீடு மிக மோசமான பாதிப்புக்குள்ளாகி உள்ளது. கடந்த வருடம் ராஜுவின் மகன் நேதாஜி தன்னுடன் கல்லூரியில் படித்த வன்னியர் பெண்ணான, கருவேலம்பட்டி கிராமத்தைச் சார்ந்த முத்துலட்சுமியை சாதி மறுப்புத் திருமணம் செய்திருந்தார். அச் சமயம் மணமக்களைப் பிரிக்க ராஜுவின் மனைவியை ஆதிக்க வன்னியர் சாதியினர் கடத்தி சித்திரவதை புரிந்துள்ளனர். ராஜு காவல்துறை கண்காணிப்பாளரின் உதவியுடன் தன் மனைவியை மீட்டுள்ளார். தற்சமயம் சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்ட இணையர் அமைதியாக வாழ்ந்த போதும், பெண்ணின் பெற்றோர்கள் அமைதியாக உள்ள நிலையில், சாதிய சக்திகள் அந் நிகழ்வுக்குப் பழிவாங்க ராஜுவின் வீட்டைத் தாக்கி பெருத்த சேதாரத்தினை ஏற்படுத்தி கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

குழு கண்டுணர்ந்தவை

1. இந்தத் தாக்குதல் நாகராஜனின் தற்கொலையை ஒட்டிய தன்னெழுச்சியான தாக்குதல் அல்ல. மிக திட்டமிட்ட ஒருங்கிணைந்த தாக்குதல் ஆகும். தலித் மக்களின் பொருளாதார வசதிகளையும் அதன் ஆதாரங்களையும் அழிக்க வேண்டி நடத்தப்பட்ட தாக்குதல். வெகு ஜாக்கிரதையாக உயிர் பாதிப்புகளின்றி அது நிகழ்த்தப்பட்டிருக்கிறது. காதல் திருமணப் பிரச்சனை வன்முறைக்கு ஒரு வாய்ப்பாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. உண்மையில் ஆதி திராவிட மக்களை தீண்டாமை வளையத்திற்குள் கொண்டு வர எடுக்கப்பட்டுள்ள ஒரு முயற்சியாகவே இத் தாக்குதலை கருத வேண்டியுள்ளது. அது ஒருங்கமைக்கப்பட்ட வெறியாட்டம். Though this be madness yet there is method in it'.

2. பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் மற்றும் வன்னியர் சங்கத்தின் உறுப்பினர்கள் நாகராஜனின் குடும்பப் பிரச்சனையினை ஒட்டு மொத்த வன்னியர் சாதிப் பிரச்சனையாக மாற்றியுள்ளனர். காடுவெட்டி குரு என்ற பா.ம.க. சட்டமன்ற உறுப்பினரின் மாமல்லபுரம் சித்திரை விழா வன்முறைப் பேச்சும், அதே போன்று தர்மபுரி மாவட்டம் அரியகுளம் என்ற இடத்தில் வன்னியர் சங்கக் கூட்டத்தில் சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக அவர் பேசிய பேச்சும், வன்னியர் சங்க வேலைத் திட்டமாக இதனை இப் பிரச்சனையில் மாற்றியுள்ளது. ஆனாலும் பிற அரசியல் கட்சியினைச் சார்ந்தோரும் வன்னியர் சாதி என்ற அடிப்படையில் இதில் பங்கெடுத்துள்ளனர். இனி பிற வன்னியர் வீட்டுப் பெண்களையும், தலித் இளைஞர்கள் பெண் கேட்பார்கள் என்ற கருத்தின் அடிப்படையில் இதனை வன்னிய சாதியினரின் பொதுப் பிரச்சனையாக மாற்றியுள்ளனர். நாகராஜன் தனிப்பட்ட முறையில் தன் மகளின் திருமணம் குறித்து முடிவு எடுக்க இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

dharmapuri_attack_429

3. கடந்த 30 வருடங்களுக்கு முன்பே நாய்க்கன் கொட்டாய் சுற்றுப்பகுதி கிராமங்களில் நக்சல்பாரி அரசியல் செயல்பாட்டால் தீண்டாமை ஒழிக்கப்பட்டதாக உள்ளது. சாதி மறுப்புத் திருமணங்களும், வன்னியர் சாதி பெண்கள் தலித் சாதியினரை திருமணம் செய்து வாழ்ந்து வருவதும் நத்தம் காலனியில் நிகழ்ந்துள்ளது.

4. காவல் துறை உள்ளிட்ட அதன் உளவுத்துறை இந்த நிகழ்வில் குற்றத்தினைத் தடுக்க உடனடியாக முடிவு எடுக்கவும், நடக்கப் போகும் வன்முறை குறித்து அனுமானிக்கவும் தவறி உள்ளது. பொதுவாக அரசியல் செயல்பாட்டாளர்களை முடக்க மட்டுமே அரசு பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. ஆனால் சாதிய பிற்போக்கு சக்திகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஒரு மென்மையான போக்கை அரசு கடைபிடித்ததாலேயே இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது. பாதிப்புகளுக்கு அரசு தார்மீக பொறுப்பு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
 
5. பாதிக்கப்பட்ட கிராமங்கள் முன்பே நக்சல்பாரி அரசியல் செயல்பாடுகள் வழி தீண்டாமை ஒழிப்பினை நடைமுறைபடுத்தியுள்ளன‌. அப்போது வன்னியர் மற்றும் தலித் மக்கள் ஒற்றுமை உணர்வுடன் நக்சல்பாரியாக பொது உடமை அரசியலை முன்னெடுத்தவர்கள். இறந்து போன நாகராஜனே கூட இளம் வயதில் அந்த இயக்கம் தொடர்பான சுவரொட்டி ஒட்டி கைதானவர் என்பதும், தலித் ஒற்றுமையை வலியுறுத்தி மாட்டுக்கறி உணவு சாப்பிடும் நிகழ்வில் பங்கெடுத்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நாகராஜன் எல்லோரிடமும் பழகக்கூடியவர் என்றும், சாதி வெறி பிடித்தவர் அல்ல என்பதுதான் பாதிக்கப்பட்டஆதி திராவிடர் மக்களின் கருத்தாகும்.

2000த்திற்குப் பின் இப் பகுதியில் ஏற்பட்ட நக்சல் ஒழிப்பு, காவல் துறை அடக்குமுறை, மேலும் மூத்த நக்சல்பாரி தலைவர்கள் சொந்த கிராமங்களில் வந்து அச் செயல்பாடுகளை விட்டு ஒதுங்கி வாழும் நிலை ஆகியவை இப் பகுதி மக்களை அந்த அரசியலிருந்து விலக்கியுள்ளது. இதுவே பிற்போக்கு சக்திகள் சாதியாக உழைக்கும் மக்களை பிரிப்பதற்கு வழிவகுத்துள்ளது. மேலும் இப்பகுதி ஆதி திராவிடர் மக்கள் விவசாயக் கூலி தொழிலிருந்து விலகி பெங்களூர், கோவை போன்ற பகுதிகளில் கட்டுமானப் பணி புரிந்தும், உள்ளூரிலேயே சிறு வணிகம் புரிந்தும் வறுமையற்ற முறையில் பொருளீட்டி சுயமரியாதையுடன் வாழும் நிலையில் உள்ளனர். ஆதிக்க சாதியினருக்கு இது எரிச்சலூட்டும் மனநிலையை உருவாக்கியுள்ளது.

1997 ஆம் ஆண்டு வன்னியர் சாதியினைச் சேர்ந்த பா.ம.க பொறுப்பாளர் ஜெயலட்சுமி பாலு என்பவரின் மகளுக்கும் இளவழகன் என்ற தலித் இளைஞருக்கும் பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி வரகூர் என்ற கிராமத்தில் சாதி மறுப்புத் திருமணத்தை மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் என்ற நக்சல்பாரி அரசியல் இயக்கம் வன்னிய ஜனநாயக சக்திகளின் துணையோடு நடத்தியுள்ளது. அது போன்ற ஒரு நிகழ்வு இப் பிரச்சனையில் நிகழாமல் போனது சமூக நல்லிணக்கத்திற்கும் சாதிவெறி சக்திகளுக்கு எதிரான நடவடிக்கைக்கும் பின்னடைவாக கருத முடிகிறது.

6. தலித் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட இந்த வன்கொடுமைகளை கண்டிக்கின்ற, அதற்காக வேதனைப்படுகின்ற வன்னியர் பெண்களையும் இக் குழுவால் காண முடிந்தது.

7. காதல் திருமணத்திற்கு எதிராக வன்முறையான பேச்சுக்களை சாதிய பிற்போக்கு சக்திகள் பேசத் துணிந்துள்ள நிலையில் அரசு எந்த பொறுப்பும் தனக்கு இல்லாதது போல ஒதுங்கி நிற்பதாலேயே இது போன்ற வன்முறைகள் ஏற்பட்டுள்ளன‌.

8. வன்முறையினால் நிகழ்ந்த சேதத்தின் மதிப்பு சுமர் 10 கோடிக்கு மேல் இருக்கும்

9. வன்முறையினை எதிர்கொண்ட மக்கள், குழந்தைகள் மனரீதியான ஆழமான பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளனர்.

10. இந்த சாதிய வன்முறையில் ஆதிக்க சாதியினர் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் ஆகியோரையும் ஈடுபடுத்தியுள்ளனர். எனினும் உண்மையறியும் குழு இந்த சாதிய வன்முறையினை கண்டிக்கின்ற வன்னிய சாதிப் பெண்களையும் சந்திக்க முடிந்தது.

dharmapuri_attack_641


 பரிந்துரைகள்

1. வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்வது மனித உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பல தீர்ப்புகளில் உச்ச நீதி மன்றம் இதனை உறுதி செய்துள்ளது. இந் நிலையில் சாதிய பிற்போக்கு சக்திகள் திருமண உறவுகளில் தலையீடு செய்து வன்முறைகளில் ஈடுபடுவதைத் தடுக்கவும், காதல் திருமணம் புரிந்தோருக்கு பாதுகாப்பு தரவும், தேசிய சட்ட கமிஷன் பரிந்துரைத்திருக்கின்ற சுதந்திரமான திருமண பந்தத்தினை தடுக்கும் வகையில் சட்ட விரோதமாக கூடுவதைத் தடுக்கும் சட்ட வடிவத்தின் prohibition of prohibition of unlawful assembly (interference with freedom of matrimonial alliance) bill பரிந்துரைகளின் வழி தமிழ்நாட்டில் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும்.

2. வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்க்கு தலா 5 லட்சம் உடனடியாக வழங்க வேண்டும். தீப்பிடிக்காத காங்கிரீட் வீடுகளை இலவசமாக கட்டித் தர வேண்டும்

3. வன்கொடுமையில் ஈடுபட்டோர், அவர்களைத் தூண்டி விடுவோர் மீண்டும் குற்றச்செயலில் ஈடுபடாமல் இருக்கவும், சாட்சிகளை கலைக்காமல் இருக்கவும், அவர்கள் பாதிக்கப்பட்ட சுற்று வட்டாரப் பகுதிகளுக்குள் நுழைவது தடுக்கப்பட வேண்டும். மேலும் கட்டப்பஞ்சாயத்து முறை முழுதாக ஒழிக்கப்பட வேண்டும்.

4. காதல் மணம் புரிவோரை ஆதரிப்பதும் பாதுகாப்பதும் மேலும் அதனை ஊக்ககுவிப்பதும் அரசின் கடமை. அரசு அதனை செய்ய முன் வர வேண்டும்.

5. வன்முறையில் களவாடப்பட்ட பொருள்களை முழுவதுமாக மீட்க கூடுதல் கவனத்தினை அரசு செலுத்த வேண்டும். அதற்காக கூடுதல் காவல்துறைக் குழுக்களை அமைக்க வேண்டும்.

6. பாதிக்கப்பட்ட மக்களுக்கு வட்டியில்லாத மானியத்துடன் கூடிய கடன் உதவிகளை வங்கிகள் வழியே வழங்க வேண்டும்

7. தமிழக அரசு தீண்டாமை ஒழிப்பினை வழியுறுத்தி தொடர் சனநாயக இயக்கம் மற்றும் ஊடக வழி பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

8. பள்ளி, கல்லூரி பாடங்களில் தீண்டாமை ஒழிப்பு மற்றும் மனித உரிமைகள், சாதிய நல்லிணக்கம் ஆகியனவற்றை வலியுறுத்தும் பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

9. தீண்டாமை ஒழிப்புக்காக கூடுதல் நிதியினை அரசு தனது பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டும்.

10. தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் வன்கொடுமை குற்ற வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும். அதற்கு அரசு வழக்குரைஞர்களாக கற்றறிந்த, அத்துறையில் அனுபவம் மிக்க வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட வேண்டும்.

11. பாதிக்கப்பட்ட மக்களின் அச்சத்தினை போக்கவும் பாதுகாப்புடன் அம் மக்கள் வாழவும் அரசு உத்திரவாதப்படுத்த வேண்டும்.

- ச.பாலமுருகன், மாநிலச் செயலர், மக்கள் சிவில் உரிமைக் கழகம்

Pin It