"தோழர் இன்னைக்கு திருநெல்வேலி போறேன்; உங்க கேமராவை கொஞ்சம் கொடுக்கிறீங்களா.?"

"எங்கண்ணா டூர் போறீங்களா..?"

"இல்லை கூடங்குளம் பகுதிக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வழக்கறிஞர்கள் குழு ஒன்னு 'கூடங்குளத்தில் என்ன நடந்தது? இப்ப எப்படி இருக்கிறது நிலைமை?'னு பார்த்துவர உண்மை அறியும் குழு அமைத்துப் போகிறோம். அதுக்குத்தான் நானும் போகிறேன்."

"அப்படியா"னு கேட்டுக்கிட்டே கேமராவில் என்னை ஒரு போட்டோ எடுத்துக் கொண்டே "அண்ணா! நான் உங்களை எடுக்கும் கடைசி படமா இது?"னு கேட்டார் பாருங்க... எனக்கு தூக்கிவாரிப் போட்டது.

"சரி! சரி! உங்களிடம்தான் என்னுடைய புகைப்படம் நிறைய இருக்கே... நான் திரும்பிவந்தால் உங்களுக்கு கேமரா கிடைக்கும். இல்லை என்றால் கேமராவை தியாகம் செய்துவிடுங்கள்" என்று சிரித்துக்கொண்டே பழைய பேருந்து நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு பயணமானேன். முன்பே எனது இளம் வழக்கறிஞர் தோழர் சரவணன் முன்பதிவு செய்துவைத்திருந்தார்.

பஸ் புறப்பட்ட சிறிது நேரத்தில் என் அருகில் அமர்ந்திருந்த இளைஞர் கைபேசியில் பேசியபடி வந்தார். ஜன்னல் வழியே காற்றுவாங்கியபடி திருப்பூரை புதிதாகப் பார்ப்பது போல் வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன்.

“ஆமாம் மாப்ளே! சாயந்திரமே போன் வந்தது. ஒரே கலவரமாம்! பஸ்ஸெல்லாம் உடைச்சிட்டாங்களாம். என்ன பார்த்து வரச் சொன்னாங்க.. மாப்ள முன்னாடியும் உட்காராதே, பின்னாடியும் உட்காராதே.. நடுவுல உட்காரச் சொன்னாங்க மாப்ள.” என்னவென்று கவனிக்க ஆரம்பித்தேன்.

“என்ன பிரச்சனை?” அந்த இளைஞரிடம் கேட்டேன்.

“ஒன்னுமில்லை சார்! திருநெல்வேலியில முஸ்லீம்கள் போராட்டத்தில் கலவரமாம். ஊரே ஒரே பிரச்சனையாம். ஒரே பதட்டமா இருக்குது சார்.”

“நீங்க திருநெல்வேலியா..?”

“ஆமாம் சார்! நான் வேலை விசயமா திருப்பூர் வந்தேன். இன்னைக்கு ஊருக்குப் போகலாம்னு புறப்பட்டா ஒரே கலவரமுனு போன் வருது. ஏன் சார் இவங்களுக்கு வேலையே இல்லையா..?”

“சாதி, மதமுனு அடிச்சுக்குறாங்க.. என்ன சாதி போங்க... நான் லவ் பண்ணீட்டு இருக்குற புள்ள பார்ப்பார். நான் நாடார். நாங்க கல்யானம் பண்ணிக்கப் போறோம். என்ன சார் சாதி, பெரிய சாதி?” என்று கூறிவந்தவர் திருப்பூர் எல்லையில் போலீஸ் செக்போஸ்ட் அருகில் வரிசையாக நடப்பட்டிருந்த கொடிகளைக் காண்பித்து, “இது என்ன கொடி சார்..? நான் திருப்பூர் வந்ததில் இருந்து கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தேன்.”

“இந்து முன்னணி கொடி” என்றதும், “என்ன இந்துவோ? முன்னனியோ?” என்று சலித்துக்கொண்டு செல்போனில் “என்ன செல்லம் தூக்கம் வரலையா..?” என்று பேச ஆரம்பித்தவரிடமிருந்து, ‘இனி நமக்கு என்ன பேச்சு அவரின் அடுத்த உலகம் ஆரம்பித்து விட்டது’ என்று நான் ஜன்னல்வழியே இருண்ட இரவைப் பார்க்க ஆரம்பித்தேன்.

மனதிற்குள் லேசான படபடப்புதான். திருநெல்வேலியில் கலவரம் என்கிறார்கள். கூடங்குளம் வேறு போகிறோம். உருப்படியா வீடு வந்து சேர்வோமா..? யோசனையோடு தூங்க முயற்சித்தேன்.

விடியற்காலை 4 மணி திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தில் வண்டி நின்றது. ஒரே கூட்டம். நான் இறங்கி பேருந்து நிலையத்தில் இருக்கும் தேநீர்க் கடை நோக்கி சென்றேன். டீ சொல்லிவிட்டு காத்திருந்தேன். “ஏங்க ஜங்சனுக்கு பஸ் போகுமா? எப்ப போகும்?”னு ஒருவர் வந்து, டீ போட சொல்லிக்கிட்டே கேட்டார். “விடிஞ்சாதான் தெரியும்”னு டீ கொடுத்தவரிடம், “ஏன் என்ன ஆச்சு? ஜங்சனுக்கு பஸ் போகாதா? என்ன பிரச்சனை”னு விசாரித்தால், “இந்து சாமியார்களை தவறாக படம் எடுப்பது போல் முஸ்லீம் தலைவரைப் பற்றி மோசமா அமெரிக்ககாரனுங்க படம் எடுத்துட்டாங்களாம். ஜங்சனுல போராட்டம் செஞ்ச முஸ்லீம்களுக்கும் போலீஸ்க்கும் சண்டையாகி தடியடி பன்னிட்டாங்களாம். அதனால பஸ்ச உடைச்சுட்டாங்களாம். மேலப்பாளையத்திலும் பஸ்ச உடைச்சுட்டாங்களாம். நேத்து மத்தியானத்தில் இருந்து பஸ் ஓடல”னு சொன்னவரிடம் ஒரு தினத்தந்தி பேப்பரை வாங்கிப் படிக்க ஆரம்பித்தேன்.

“சார் ஜங்சன் போகணுமா?” குரல் கேட்டு நிமிர்ந்தால், “சார்.. நாங்க ரெண்டு பேர் இருக்கிறோம். நீங்களும் வந்தால் ஆட்டோ வாடகையை சேர் பண்ணிக்கலாம்.” என்றவரிடம் சரி என்று கூறி ஒரு ஆட்டோவை 100ரூபாய்க்கு வாடகை பேசி பயணம் செய்தோம்.

ஆட்டோ டிரைவரிடமும் என்னோடு வந்தவர் பேச்சு கொடுத்துக்கொண்டே வந்தார். “என்ன சார்.. பின்னே முஸ்லீம்களைப் பற்றி தப்பா படம் எடுத்தா விட்டுருவாங்களா? எதுக்கு சார் அமெரிக்ககாரனுக்கு வேண்டாத வேலை? ஆனா முஸ்லீம்களை அடி வெளுத்துட்டாங்க போலீஸ்காரனுங்க.” நான் எதுவும் பேசாமல் மௌனமாக அமர்ந்திருந்தேன். வழி முழுவதும் ஒரே போலீஸ் தலைகள். ஜங்சனில் ரூம் கேட்டால் ரூம் இல்லை என்று மறுக்க, நான் 5 மணி வரை காத்திருந்து மேலப்பாளையத்தில் இருக்கும் அருமைத் தோழர் மனித நேய மக்கள் கட்சி மாவட்டச் செயலர் ரசூல்மைதீனுக்குப் போன் செய்ய, அவர் சகோதரர் கனி எண் கொடுத்து பேசச் சொல்ல, அதற்குப் பிறகு ரூம் கொடுத்தார்கள். திருப்பூரில் ஆரம்பித்த பதட்டம் கொஞ்சம் கூட குறையாத நிலையில் விடியலை நோக்கிக் காத்திருந்தேன்.

நான் தங்கி இருந்த அறைக்கு மே பதினேழு இயக்கத் தோழர் திருமுருகன், ஹரி இருவரும் 9 மணிக்கு வந்தார்கள். நாங்கள் மூன்று பேரும் ரெடியாகி ஜங்சனுக்குப் போனோம். அங்கே வழக்கறிஞர் தோழர்கள் திரளாக வந்திருந்தார்கள். பத்திரிக்கையாளர்களும், தொலைகாட்சி ஊடகவியலாளர்களும் நிறைந்திருந்தார்கள். அங்கே பத்திரிக்கையாளர்களிடம் எங்களின் கூடங்குளம் பயணத்தின் நோக்கங்களைத் தெரிவித்து விட்டு தயாராக இருந்த இரண்டு வேன்களில் பயணமானோம். பத்திரிக்கையாளர்களிடம் எங்கள் கூடங்குளம் பயணத்தின் நோக்கங்களை விளக்கியதன் காரணம், ஒன்று கூடங்குளத்தில் என்ன நடக்கிறது என்று பார்க்க வழக்கறிஞர்கள் குழு செல்கிறது என்ற செய்தியை மக்களிடம் சொல்வதாகும் மற்றொன்று கூடங்குளம் செல்லும் எங்களுக்கே ஒரு பாதுகாப்பு தேவைப்பட்டது. ஏன் என்றால் கூடங்குளம், இடிந்தகரை, வைராவிகினறு போன்ற பகுதிகள் முழுவதுமாக காவல் துறை கட்டுப்பாட்டிலும், அவர்களின் வானளாவிய ஆட்சி அதிகாரத்திலும் இருக்கிறது என்பதையும் அறிந்துகொண்ட எங்களுக்கு மக்களிடம் அறிவித்துப் போவது என்பது கூடுதல் பலமாக எண்ணினேன்.

மனம் கொஞ்சம் படபடப்பான சூழலிலும் என்ன மாதிரியான தாக்குதல்களை எதிர்கொள்ளப்போகிறோம் என்ற சிந்தனையுடன் வேனில் அமர்ந்திருந்தேன். வேன் கொஞ்சம் தூரம் போனதும் மாமாவைப் பார்த்துவிட்டு போய் விடலாம் என்று தோழர் லேனா கூற, நான் சுவராசியம் அற்று தோழர் திருவுடன் வேனில் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தேன். என்னுடன் வந்திருந்த வழக்கறிஞர் தோழர்கள் அனைவரும் இறங்கிப் போய், அங்கு மாமாவுடன் உரையாடிக்கொண்டிருந்தார்கள். தோழர் லேனா வந்து “வாருங்கள். ஒரு டீ சாப்பிட்டுவிட்டுப் போய் விடலாம்” எனக் கூறினார். மாமா என்று அழைக்கப்பட்டவர் ம.தி.மு.க.வைச் சேர்ந்த இசுலாமியர். கூடங்குளம் மக்கள் போராட்டத்திற்கு ஆரம்பம் முதலே ஆதரவு கொடுத்து வருபவர். சிரித்த முகத்துடன் அனைவரையும் உபசரித்தவரிடமிருந்து விடை பெற்று இருண்ட நிலம் நோக்கி எங்கள் குழுவின் பயணம் தொடர்ந்தது.

வெறிச்சோடி இருக்கும் கூடங்குளம் தெருக்கள்

ராதாபுரம் பள்ளியில் காவல் துறையின் பஸ்கள் வரிசையாக நின்று கொண்டிருந்தது. பள்ளி முழுக்க படையினர் குவிக்கப்பட்டிருக்க வேண்டும். யுத்தத்திற்கான தயாரிப்புகளில் அடுத்த நகர்வுக்காக குவிக்கப்பட்ட படையினர் போலவே இருந்தது. ஆம் சொந்த நாட்டு மக்கள் மீதே ஒரு அநீதியான யுத்தத்தை இந்திய, தமிழக அரசுகள் தொடுத்துள்ளதை அடுத்த சில மணி நேரங்களில் நான் அறிந்து கொண்டேன்.

ராதாபுரத்தில் இருந்து கூடங்குளம் 15 கி.மீட்டர்தான். பரமேஸ்வரம் ஊராட்சி தாண்டி போகும் பாதை எங்கும் இருபுறமும் காற்று பலமாக வீசிக்கொண்டிருக்கிறது. காற்றாலைகள் மூன்று இறக்கை பறவை போல் வானத்தில் சுற்றிக்கொண்டிருந்தன. மின்சாரம் வேணுமுனா இப்படி பல மாற்றுவழிகள் இருக்க, அணு மின்சாரம்தான் வேண்டும் என சின்ன பிள்ளைபோல் அடம்பிடிக்கும் அறிவாளிகளை எதால் அடித்தால் அழுகையை நிறுத்துவார்கள்?

கூடங்குளம் சந்தியில் எங்கள் வாகனம் நின்றது. சந்தி முழுவதும் போலீஸ் தலைகள். திருதிருவென விழித்துக்கொண்டு “நம்முடைய அதிகார எல்லையில் இரண்டு வாகனங்கள் வந்து நிற்கிறது. வெள்ளை, கருப்பு உடை அணிந்து வாகனத்தில் இருந்து வந்திறங்கும் இவர்கள் யார்..?” என்ற கேள்வியோடு பார்த்தவர்கள், அதில் அதிகாரியொருவர் ‘யார்’ என்ற கேள்வியோடு பார்க்க, வழக்கறிஞர்கள் உண்மை அறியும் குழு வந்திருக்கிறோம் என்றவுடன் நத்தையாக சுருங்கியது அவர் முகம். பல மாதங்களாக 144 தடை உத்திரவு நடைமுறையில் இருக்கும் நிலையில் 4 பேருக்கு மேல் வீதிகளில் செல்லத் தடை விதிக்கப்பட்டு கூடங்குளம் சுற்றி உள்ள பகுதிகளில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட இடங்கள் போல் காட்சியளித்தது. சாலைகளில் எந்த நடமாட்டமும் இல்லை. ஆங்காங்கே தெரு நாய்களும், போலீஸ்காரர்களும் சுதந்திரமாகத் திரிந்தனர். மற்றபடி சாலைகளில் எவரும் இல்லை.

காவல்துறையின் அத்துமீறல்களையும், சமுக அவலங்களையும் எந்த நிலையிலும் வீரமாக முதலில் எதிர்கொள்வது சட்டக்கல்லூரி மாணவர்களும், வழக்கறிஞர்களும்தான். காவல்துறைக்கும், வழக்கறிஞர்களுக்கும் எப்பொழுதும் ஒரு பனிப்போர் நடந்துகொண்டே இருக்கும். ஒருவரை ஒருவர் வீழ்த்த சந்தர்ப்பங்களை எதிர்பார்த்துக்கொண்டே இருப்பார்கள். வழக்கறிஞர்கள் என்றதும் துணுக்குற்று வாலை சுருட்டிக்கொண்டவர்களாய் தங்களின் உயரதிகாரிகளிடம் தொடர்புகொள்ள ஆரம்பித்தார்கள். நாங்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. ஒரு சந்தில் இருந்து பனியனும், காற்சட்டையும் அணிந்த ஒருவர் ஓடிவந்தார்.

“வாங்க.. வாங்க..” என்றபடி அங்கும் இங்கும் பார்த்துக்கொண்டே அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் ஓடிஓடி பார்த்தார். தோழர் லேனா “என்ன ஆச்சு?” என அவரிடம் கேட்க, “ஒரு பையனை போலீஸ் தொரத்திக்கொண்டு போறானுவனு இப்ப போன் வந்துச்சு. அதான் வெளியல வந்து பார்த்தேன்” என்றவரை லேனா அறிமுகம் செய்துவைத்தார், வழக்கறிஞர் ஆல்வின் என்று. எங்கள் அனைவரையும் அவரின் வீட்டுக்கு அழைத்துச் சென்று தண்ணீர் கொடுத்து உபசரித்தார். தண்ணீர் என்பதே அவ்வளவு பெரிய விசயமானு நீங்க நினைப்பது புரிகிறது. கூடங்குளம், இடிந்தகரை, அதைச் சுற்றி உள்ள பகுதிகளில் தண்ணீர், மின்சாரம், பால் போன்றவற்றை அந்த மக்கள் பார்த்து பல நாட்கள் ஆகிய நிலையில் தண்ணீர் அளித்து உபசரிப்பது எம்மைப் பொருத்த அளவில் பெரியதுதான். தண்ணீரும், பிஸ்கட்டும் சாப்பிட்ட பின் அவர் வீட்டிலேயே குழு பிரித்து பிரிந்து சென்றோம். எங்கள் குழுவின் வழிகாட்டியாக வழக்கறிஞர் ஆல்வின் வந்தார்.

koodankulam_360_copy

கூடங்குளம் கீழே பஸ்நிலைய சந்தியில் இருந்த அனைத்து அரசியல் கட்சி கொடிக் கம்பங்களும் சாய்க்கப்பட்ட நிலையில் ரோடுகளில் ஆங்காங்கே தடைகளும் போடப்பட்டதற்கான அடையாளங்களுடன் இருந்தது. கூடங்குளம் ஊராட்சி மன்றக் கட்டிடம் தீக்கிரையாக்கப்பட்டு இருந்தது. அங்கிருந்த அனைத்து ஆவணங்களும் எரிக்கப்பட்டும், வெளியில் சிதறியும் காணப்பட்டன. நூறுநாள் வேலைத்திட்ட பயனாளிகளின் அடையாள அட்டைகள் பாதி எரிந்த நிலையிலும், ஊராட்சிமன்ற வளாகத்தில் சிதறியும் கிடந்தன. கணினி அறை முழுவதுமாக எரிக்கப்பட்டும், அங்கிருக்கும் பீரோக்கள் உடைக்கப்பட்டும் இருந்தன. நாங்கள் பார்வையிட்டுக் கொண்டிருக்கும் போதே வாகனத்தில் வந்து இறங்கியவர், தன்னை வி.ஏ.ஒ. என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். “பாருங்கள்.. எப்படி எரித்துள்ளார்கள்.. பசங்க பண்ணிய வேலையைப் பார்த்தீர்களா..? அநியாயம் பண்ணிட்டாங்க” என்று கூறியதையே திரும்பத் திரும்ப கூறிக்கொண்டிருந்தார்.

காவல்துறை சொல்லிக்கொடுத்தபடி கிளிப்பிள்ளை போல் எந்த மாற்றமும் இன்றி திரும்பத் திரும்ப கூறியவரின் பெயரை விசாரித்தோம். தன்னை சுரேஸ் என்று அறிமுகப்படுத்திக்கொண்டவரிடம், எப்படி இது நடந்தது என்று கேட்டோம். 10.9.2012 அன்றா அல்லது மறுநாளா என்ற குழப்பத்துடன் சரியாக என்று சம்பவம் நிகழ்ந்தது என்று கூற முடியாமல், குழப்பத்துடன் முன்னுக்குப் பின் முரணாக பேசியவரிடம் “அப்போது எங்கு இருந்தீர்கள்?” என்று கேட்டபோது, நான் இங்கு இல்லை என்றும், ஊரில் இருந்தேன் என்று தெளிவாக கூறியவரிடம் “சம்பவம் பற்றி உங்களுக்கு நேரடியாக தெரியாது என்ற நிலையில் மக்கள்தான் ஊராட்சி மன்றக் கட்டிடத்தை கொளுத்தினார்கள் என்று எப்படி சொல்றீங்க?” என்ற கேள்விக்கு “போலீஸ் சொன்னதை நான் சொல்கிறேன்” என்றார். காவல்துறை அவரை யார் விசாரித்தாலும் எப்படி பேசவேண்டும் என்று பயிற்றுவித்திருப்பதை நாங்கள் அறிந்து கொள்ள முடிந்தது.

அங்கிருந்த பள்ளி வாகனத்தின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட நிலையில் இருந்தன. அன்று என்ன நடந்தது என்று மக்களிடம் விசாரித்தால், ரோட்டில் அமைதியான முறையில் கூடிய மக்கள் மீது காவல்துறை ஸ்டீல் கம்பிகளால் அடித்துள்ளார்கள். பள்ளிக்குப் போய் வந்த சிறுவர்களையும் தாக்கியுள்ளார்கள். மக்களை கற்களைக் கொண்டும் தாக்கியுள்ளார்கள். கண்ணீர் புகைக்குண்டுகளை வெடிக்கச் செய்துகொண்டே ‘அடி! விடாதே, சுடு!” என சத்தமிட்டுக்கொண்டே கூடங்குளம் இந்து நடுநிலைபள்ளியில் நின்று இருந்த வேன் கண்ணாடிகளையும், பள்ளிப் பிள்ளைகளின் சைக்கிள்களையும் உடைத்து எறிந்தவர்கள், அங்கிருந்த சிறுவர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் நன்றாக அடித்திருக்கிறார்கள். பஞ்சாயத்து அலுவலகத்ததிற்கு காவல் துறையினர்தான் தீவைத்து எரித்திருக்கிறார்கள். பழியை மக்கள் மீது போட்டு, கலவரத்திற்குக் காரணம் பொதுமக்களும், மாணவர்களும்தான் என்று கூறி பள்ளி மாணவர்களையும், மக்களையும் கைது செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் காவல் துறையினர் செயல்பட்டார்கள் என அங்கிருக்கும் மக்கள் அனைவரும் ஒற்றைக் குரலில் கூறுவதை எவராலும் மறுக்க முடியாது.

எங்களை பத்திரிக்கையாளர்கள் என்று நினைத்துக்கொண்ட ஒரு நடுத்தர வயது தாய், “ஒரு தடவை டீவியில என் மகன் அணு உலை வேண்டாம் என பேட்டி கொடுத்ததால் போலீஸ் அவன் மேல் கேஸ் போட்டு தொந்தரவு செய்தது. BE படித்த எனது மகனுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைந்தது. கூடங்குளம் காவல் நிலையத்தில் எனது மகனுக்கு பாஸ்போட்டுக்கான தடையின்மை சான்றிதல் கொடுக்காததால் எனது மகன் பெங்களூரில் 4000 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்குப் போகிறான். சம்பளம் முக்கியமல்ல. எனது மகன் இந்த அரக்கர்களிடமிருந்து தப்பித்தானே அதுவே பெரிசு.” என்றார். கூடங்குளம் சுற்றியுள்ள அனைத்துப் பகுதி இளைஞர்களும் இன்றைக்கு வரை பாஸ்போர்ட் எடுக்க முடியாமல் காவல்துறை தனது வன்மத்தைக் காட்டி வருகிறது என்பதை அப்பகுதி மக்களிடமிருந்து தெரிந்து கொள்ள முடிந்தது.

koodankulam_363

“சரிங்கம்மா... இந்த போராட்டத்தில் கிறித்துவர்கள் மட்டும் போராடுகிறார்கள் என்று சொல்லப்படுகிறதே..” என்று கேட்டபோது, “யாருப்பா சொன்னா? நான் இந்து நாடார், அதோ எதிர்த்தெருவுல இருப்பது ஆசாரிகள். நாங்கள் எல்லோருமே அணு உலை வேண்டாம் என்கிறோம். எவனோ சொல்லிட்டுப் போறான். நாங்கள் தாயா புள்ளையா இருக்கோம். அணு உலை வேண்டவே வேண்டாம்” என்றார்.

“10ம்தேதி நான் வீட்டுக்குள் படுத்து இருந்தேன். பெண்கள் கூட்டமாக என் வீட்டிற்குள் வந்தார்கள். பின்னாடியே போலீசும் வந்தது. என்னுடைய வண்டியை உடைத்து விட்டு, என் மண்டையையும் உடைத்தார்கள். உடம்பு முழுவதும் அடி. நான் போராட்டத்தில் பங்கு கொள்ளவில்லை. நான் மெக்கானிக்காக இருக்கிறேன். வாழ்க்கை தினம் தினம் பயத்தோடு கழிகிறது. தினமும் செத்து செத்து பிழைக்கிறோம். எங்காவது போய் உயிரோடு பிழைத்துக்கொள்ளலாம் போல் இருக்கிறது” என்கிறார் வெட்டும்பெருமாள். இவர் இந்துதான். போராட்டத்தில் எவ்வகையிலும் பங்கு கொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருப்பவர் இத்தகைய பாதிப்புக்குப் பின்பும் அணு உலை வேண்டாம் என்றுதான் சொல்கிறார்.

55 வயது ஜெயபாலோ மண்டை உடைந்து 7 தையல்களுடன் சட்டை முழுவதும் ரத்தம் படிந்ததைக் காட்டுகிறார். “நான் வீட்டில் இருந்தேன். வெளியே பயங்கரமாக குண்டு சத்தம் கேட்டது. எனது பையன் வெளியே போய் இருந்தானே, என்ன ஆச்சோ என பதறி வெளியே போய் பார்த்தேன். என் பையனைத் தேடினேன். பின்புறமாக போலீஸ் வந்து அடித்து மண்டையை உடைத்து விட்டார்கள். என்ன நடந்தது என்றே தெரியவில்லை. 15 நாட்களாக கடைகள் திறக்கவில்லை. தண்ணீர், உணவுப் பொருட்கள் இல்லை. ரேசனில் இருந்து வாங்கிய அரிசியை பொங்கி சாப்பிடுகிறோம். அய்யா எங்களை வேலை வாய்ப்பு என்று ஏமாற்றிவிட்டார்கள். புகுஷிமா அணு உலை பாதிப்புக்குப் பிறகுதான் எங்களுக்கு அணு உலையின் பாதிப்புகள் புரிந்தது. நாங்கள் இன்று அனைவரும் போராடுகிறோம். +2 படிக்கும் எனது பையன் சாம் இன்றைக்கு காவல்துறையால் தாக்குதலுக்கு ஆட்பட்டு நாங்குநேரி சப்ஜெயிலில் இருக்கிறான். என்ன பிரச்சனை வந்தாலும் நாங்கள் அணு உலையை அணுமதிக்க மாட்டோம்” என்கிறார்.

கல்குளத்தில் படிக்கும் மாணவி சித்ரா இவர் பி.எஸ்.ஸி. படிக்கிறார். இவர்கள் வீட்டு சன்னல் கண்ணாடிகளை போலீஸ் உடைத்து விட்டது. கல்லூரிக்குப் போக பஸ் வருவதில்லை. அணு உலை வேண்டாம் எனவும் உறுதிபடக் கூறுகிறார்.

koodankulam_364

53 வயதான பெரியவர் கணேஷ் வெளியில் நின்று கொண்டிருந்திருக்கிறார். போலீஸ் வீட்டுக்குள் போகச் சொல்லி அடித்திருக்கிறது. வீட்டுக்குள் போ போ என்று மக்களை விரட்டி இருக்கிறார்கள். அவர்கள் செய்யும் அக்கிரமங்களை எதுவும் பார்த்து விட கூடாது என்பதே போலீசின் நோக்கமாக இருந்திருக்கிறது. கற்களாலும், கம்புகளாலும் அவரையும் தாக்கி உள்ளார்கள். தச்சு வேலை செய்யும் இவர் இன்னும் இப்பொழுதும் உறுதியாக அணு உலை வேண்டாம் என்கிறார்.

28 வயது மணிகண்டன் ஊனமுற்றவர். “வன்முறையற்ற போராட்டத்தை காவல்துறை வன்முறையால் அடக்குகிறது. கூடங்குளம் அணு உலையை எதிர்த்துக் கூடுவது சட்டவிரோதமாம். கீழ பஸ்டாண்ட் வரை மக்களை விரட்டி அடித்தார்கள். பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை அடித்து உடைத்து போலீஸ் தீவைத்தது” என்றும், “இலங்கைக்கு 60% மின்சாரம் கொடுக்கவே எங்களை நிலத்தை பாலைவனமாக பார்க்கிறார்கள். படிக்கிற பசங்களை போலீஸ் தொந்தரவு செய்கிறது. முதல்வரின் அறிக்கைக்கு மாற்றாக போலீஸ் செயல்படுகிறது” என்றார்.

தங்கம் என்ற பீடி சுற்றும் 40 வயது தொழிலாளி “எங்கள் வீட்டு கண்ணாடிகளை போலீஸ் உடைத்து விட்டது. கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசி போர்ப் பகுதி போல் இப்பவே ஆக்கிவிட்டார்கள். அணு உலை வந்தால் என்னவெல்லாம் நடக்குமோ அதை நாங்கள் இப்பவே உணர ஆரம்பித்துவிட்டோம்” என்றவர் “அணு உலையை எங்கள் உயிரைக் கொடுத்தேனும் தடுப்போம்” என்றார்.

பக்கத்து வீட்டு ராஜரத்தினம் 65 வயதாகிறது. அவரது மகள் அரசு ஊழியர் இரண்டு பேரன்களுடன் வசிக்கிறார். மகன் வெளியூரில் வேலையில் இருக்கிறார். 10ம் தேதி மதியம் போலீஸ் ஊளையிட்டுக் கொண்டும், கெட்ட வார்த்தைகளால் கத்திக்கொண்டும் கற்களை எடுத்து வீட்டின் கண்ணாடிகளை அடித்து உடைத்தார்கள் என்று வீட்டிற்குள் இருக்கும் கற்களை நம்மிடம் காட்டினார்கள். அவர்வீட்டில் நிறுத்தி வைத்திருந்த காரும் தாக்குதல்களுக்குத் தப்பவில்லை. “தம்பி நாங்கள் போலீஸ் மக்களை பாதுகாப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால் வேலியே பயிரை மேய்கிறது. என் வயதுக்கு எனது மகன் வயது பையன்கள் எல்லாம் காது கூசும் அளவிற்கு கெட்டவார்த்தைகளை பேசும்போது உயிரே போய்விடவேண்டும் என்றிருந்தது. மக்களுக்காகத்தான் அரசு. அரசுக்காக மக்கள் இல்லை” என்ற தெளிந்த வார்த்தைகளைக் கேட்கும்போது மனதை எனக்கு என்னமோ செய்தது.

பிரேமா என்ற ஆசிரியை “எங்கள் வீட்டு சன்னல்களையும், மீட்டர் பெட்டிகளையும் கல்வீசி போலீஸ் உடைத்து விட்டது. எங்கள் வளாகத்தில் குடியிருக்கும் இசாக்கிதாய் வீட்டுக்காரரை போலீஸ் புடுச்சுட்டு போய்டுச்சு. அந்த மனுசன் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர். எங்கள் ஊர் இசாக்கிதாயை திருமணம் செய்துகொண்ட ஒரே பாவத்தைத் தவிர வேறு எதுவும் அவர் செய்யவில்லை. போராட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. வீட்டில் இருந்தவரை வீட்டை உடைத்து போலீஸ் புடிச்சுட்டு போய் திருச்சி ஜெயிலில் அடைத்துவிட்டார்கள்.” என்றார். 27 வயதே ஆன இசாக்கிதாயை நான் பார்த்தேன். எந்தவிபரமும் அறியாத அந்தப் பெண் கைக்குழந்தையோடு தன் கணவரை “எப்போ விடுவாங்கண்ணா?” என்றபோது அவருக்கு ஆறுதல் சொல்லி வந்தேன்.

நாங்கள் சென்ற பிறகுதான் ஊரில் மக்கள் கொஞ்சம் பயமின்றி வீட்டை விட்டு வெளியில் வந்தார்கள். பெண்கள் எங்கள் குழுவைச் சுற்றி நின்று கொண்டு காவல்துறையின் அராஜகங்களை கொட்டித் தீர்த்தார்கள். “நீங்க எவன வெச்சு உறங்கறீங்கடி”னு போலீஸ் பச்சை பச்சையாக பேசினார்கள். 10ம் தேதி கூடங்குளம் முற்றுகை போராட்டத்தில் அமைதியாகப் போராடிய மக்கள் மீது போலீஸ்தான் கண்ணீர் புகைகுண்டை வீசியும், இரும்பு பைப்புகளைக் கொண்டு அடித்தும் அராஜகம் செய்தார்கள். கூடங்குளத்திற்குள் புகுந்து அனைத்து வீடுகளையும் அடித்து உடைத்து கையில் சிக்கியவர்களை எல்லாம் அடித்தார்கள். வீட்டில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சமாகவே இருக்கிறது” என்றார்கள்.

அங்கிருந்த சுதா என்பவரின் 7வயது சிறுவன் பிரதீப் “அம்மா, என்னையும் போலீஸ் புடுச்சுட்டு போய்விடுமா..?” என்று கேட்டபோது நான் திகைத்துப் போய்விட்டேன். பிஞ்சுகளிடம் கூட உளவியல் தாக்குதல் ஏற்படுத்தி இருக்கும் இந்த அரசுதான் தாய் உள்ளம் கொண்ட அரசா..?

வீரராஜமுத்து என்ற 65 வயது தாய். ஆம் அவரையும் விட்டுவைக்கவில்லை காவல்துறை. அடித்த அடியில் கையில் கடுமையான காயம். “டே அடிக்காதீங்கடா… சுட்டுருங்கடா. எங்கள் பினத்தின் மீதுதான் நீங்க அணு உலை கட்ட முடியும்.. நாங்கள் உயிருடன் இருக்கும் வரை அணு உலை கட்ட விடமாட்டோம்” என வீர முழக்கமிட்ட அந்த வீரத்தாயை அடித்து நொறுக்கி உள்ளார்கள் மக்கள் மீது ‘மனிதாபிமானம்’ கொண்ட மக்களின் நண்பனான தமிழக காவல் துறை.

கூடங்குளம், இடிந்தகரை, வைராவிகிணறு, அதைச் சுற்றி உள்ள மக்கள் இன்று உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை சரியாக புரிந்து வைத்துள்ளார்கள். அரசியல் கட்சிகளை, ஓட்டு அரசியலை சரியாகப் புரிந்து கொண்டார்கள்.

தமிழக முதல்வர் கூறியது போல் மாயவலையில் சிக்கிக்கொள்ள அவர்கள் ஒன்று எலிகள் அல்ல. இன்று அவர்கள் புலிகள். இந்திய அரசுக்கும், தேவைப்பட்டால் அணு உலையின் ஆபத்துக்கள் பற்றி தமிழக முதல்வருக்கும் வகுப்புகள் எடுக்கத் தயாராக இருக்கும் ஆசிரியர்கள். அந்த மக்களிடம் கற்றுக்கொள்ள ஏராளமான செய்திகள் இருக்கிறது. அந்த மக்களுடன் ஒரு நாள் வாழ்ந்து பாருங்கள் அன்பானவர்கள், வீரமானவர்கள் என்பது புரியும்.

கூடங்குளம் மக்கள் இரவி என்ற இளைஞரைப் பற்றி அதிகமாக பேசுகிறார்கள். போராட்டத்தின் முன்னனி வீரனாம். காவல்துறை அந்த இளைஞனை வெறி கொண்டு தேடுகிறதாம். அந்த இளைஞனை மக்கள் பாதுகாத்து வருகிறார்களாம். பல முறை போலீஸ் சுற்றிவளைத்தும் மக்கள் அந்த இளைஞரைப் பாதுகாத்துள்ளார்கள்.

அரசுக்கும், காவல்துறைக்கும் நன்றாக தெரிந்திருக்கிறது. கூடங்குளம், இடிந்தகரை, வைராவிக்கிணறு போன்ற பகுதிகளில் இருந்து மக்களை அப்புறப்படுத்தாமல் அணு உலையை இயக்க முடியாது என்று. அந்த பகுதிப் மக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அப்புறப்படுத்த அரச பயங்கரவாதத்தை ஏவி அவர்களின் வாழ்விடங்களில் இருந்து பெயரச் செய்வதே அரசின் நோக்கமாக இருக்கிறது. அந்தப் பகுதி மக்களில் கடைசி ஒரு மனிதன் இருக்கும்வரை கூடங்குளம் அணு உலை இயங்காது என்பது பற்றி அரசு புரிந்து வைத்திருக்கிறது.

ஒரிசா முதல் பீகார் வரை பழங்குடிகளை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து துரத்திவிட்டு காலங்காலமாக பழங்குடிகள் பாதுகாத்து வரும் கனிமங்களையும், இயற்கையையும் சூறையாட பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கி வரும் இந்திய அரசின் அதே தந்திரம்தான் கூடங்குளத்திலும் இந்திய, தமிழக அரசுகள் கையாளப்பட்டு வருகிறது.

கூடங்குளம் காவல் ஆய்வாளரைச் சந்தித்து அவர் கருத்தை அறியலாம் என்று கூடங்குளம் காவல் நிலையத்திற்குப் போனோம். காவல் நிலையத்தில் ஆய்வாளர் இல்லை. ஆய்வாளரை சந்திக்கவேண்டும் என்று நிலையத்தில் இருந்த பொறுப்பு அதிகாரியிடம் தகவல் சொல்லிவிட்டு நாங்கள் காத்திருக்க ஆரம்பித்தோம். காவல்நிலையத்தின் மதில்களுக்கு அருகில் கூடங்குளம் பகுதி மக்களிடம் இருந்து பறித்து வந்த இரண்டு சக்கர வாகனங்கள் நிறைந்து கிடந்தன. அரை மணி நேரத்திற்கு மேல் ஆகியும் ஆய்வாளர் வரவில்லை. அவர் இடிந்தகரையில் இருக்கிறார் என்று எங்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. இடிந்தகரையிலும் கூடங்குளம் காவல் ஆய்வாளரைப் பார்க்க முடியவில்லை. கடைசிவரை எங்கள் குழுவின் சந்திப்பை கூடங்குளம் காவல் ஆய்வாளர் தவிர்த்துக்கொண்டார்.

koodankulam_sakayam_640

இந்தியத்தின் போலி முகமுடி அங்கே அறுபட்டுக் கிடக்கிறது. தேசிய இனப்போராட்டத்தின், விடுதலையின் தேவைகளை அந்த மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள். அந்த வீரம் செறிந்த மக்களிடம் இருந்து விடைபெற்று இடிந்தகரை நோக்கி எங்கள் குழு பயணப்பட்டது.

மாலை 7 மணி நாங்கள் இடிந்தகரையை வந்தடைந்தோம். 1 ஆண்டுக்கு மேல் தொடர்ச்சியாக ஒரே இடத்தில் தங்களின் வாழ்வாதரங்களுக்காகப் போராடி வரும் போராட்டம் இடிந்தகரை மக்களின் அணு உலை எதிர்ப்பு போராட்டமாகத்தான் இருக்கும். போராட்டப் பந்தலில் மக்கள் ஆங்காங்கே குவிந்திருந்தார்கள். எங்களை போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான பாதர் மை.பா. அவர்கள் வரவேற்றார். மக்களிடம் எங்களை அறிமுகப்படுத்தியதும் ஆரவாரமாக வரவேற்றார்கள்.

“காலையில் இருந்து சாப்பிட்டீர்களோ என்னவோ! போய் முதலில் சாப்பிட்டு வாருங்கள். பிறகு பேசிக்கொள்வோம்” என தள்ளாத குறையாக எங்களை தள்ளிக்கொண்டு போனார்கள் மக்கள். எளிய ரேசன் அரிசியில் தயாரான சாப்பாடும், முள்ளைங்கி சாம்பாரும், நெத்திலி கருவாடும் பரிமாறினார் ஒரு பெண்மணி. அவர் பெயரைக் கேட்கவேண்டும் என்று இருந்தேன். ஆனால் கடைசிவரை கேட்கவில்லை. ஆம் அவரின் பெயரை விட தோழர் என்று அழைப்பதற்கே நான் பிரியப்படுகிறேன்.

சாப்பாடு போட்டதும் “நான் போதும்” என்றவுடன் “என்ன தோழர் இப்படி சாப்பிட்டால் கோர்ட்டில் போய் எப்படிப் பேசுவீங்க? எங்களுக்காக எப்படி போராடுவீங்க?” என்று கடிந்து கொண்டு சாப்பாட்டோடு அன்பையும் பரிமாறிய அந்தத் தோழர் எனது அம்மாவை நினைவுபடுத்தினார்.

வழக்கறிஞர் குழுவைச் சேர்ந்த தோழர்கள் அனைவரும் மேடைக்கு வந்ததும் எங்கள் சார்பாக சிலர் மட்டும் பேசுவது என்று முடிவு செய்யப்பட்டு தோழர்கள் சிலர் மட்டும் பேசினார்கள். நானும் பேசினேன். உங்களுடன், உங்கள் போராட்டங்களுடன் என்றும் இணைந்திருப்பேன் என உறுதியளித்தேன்.

அங்கு இருந்த மக்களிடம் பேசினேன். சுனாமி புதுகுடியிருப்பில் போலீஸ் அத்துமீறி நுழைந்து வீடுகளில் இருந்த பொருட்களை சூறையாடியும், நகைகளையும், கால்நடைகளையும் கொள்ளையிட்டுச் சென்றதையும், அக்குடியிருப்பிற்கு இன்னும் அந்த மக்கள் திரும்பிப் போக முடியாத அச்ச நிலையையும் விளக்கினார்கள். இரவு நேரங்களில் சுனாமி குடியிருப்புகளில் போலீஸ் தங்கள் வீடுகள் போல் பயன்படுத்துவதும், வீடுகளில் தூங்குவதும் குடியிருப்புகளை நாசம் செய்வதுமாக இருக்கிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டேன். இடிந்தகரையில் இருக்கும் சர்ச்சில் 10ம்தேதி காவல்துறை புகுந்து அங்கிருந்த மாதா சிலையை சேதப்படுத்தியும், வழிபாட்டு தளம் என்ற கண்ணியம் கூட இல்லாமல் சிறுநீர் கழித்துச் சென்றதையும் வருத்தத்துடனும், ஆத்திரமுடனும் மக்கள் கூறினார்கள்.

சர்ச் முழுவதும் மூத்திரவாடை தம்பி என்றபோது (எத்தனை பேருடா சேர்ந்து அடிச்சீங்க) வீதியில் போகும் நாய்கள் கூட ஒரு ஓரமாக கரண்டு கம்பங்களில் சிறுநீர் கழிக்கும் அறிவு கொண்டது. உங்களுக்கு வழிபாட்டு தளத்திற்குள், ஒரு பிரிவு மக்களின் நம்பிக்கையின் மீது எப்படியாடா இப்படி செய்தீர்கள்? இது மதச்சார்பின்மை நாடு என்று பீற்றிக்கொள்கிறீர்களே! சிங்கள ராணுவத்துடன் அடிக்கடி சேர்ந்து பயிற்சியில் கலந்துகொள்கிறீர்களே..! அவனுக்கு நீங்கள் பயிற்சி கொடுக்கிறீர்களே! நீங்கள்தான் அவனுக்கு கற்றுக்கொடுத்திருப்பீர்களோ என்று எண்ண வைக்கும் அளவிற்கு இடிந்தகரையில் கொடுமைகளை அரங்கேற்றியிருக்கிறீர்கள். என்ன தேசமடா இது தூ…..

இடிந்தகரையில் இருந்த வயதான மூதாட்டி பெத்தானியா கண்ணீர் புகைக்குண்டின் தாக்குதலுக்கு ஆட்பட்டு முகம் எல்லாம் கருகிய நிலையில் இருந்தவர் “திடீர் என்று குண்டுகளை வீசினார்கள். எங்கும் ஒரே புகை மண்டலம். மக்கள் சிதறி ஓடினார்கள். ஓடியவர்களை போலீஸ் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியது” என்று கண்ணீருடன் கூறினார். இன்னொரு மூதாட்டியான வசயத்தியான என்பவரும் கண்ணீர் புகைக்குண்டுத் தாக்குதலுக்கு ஆட்பட்டு வாய்ப் பகுதி முழுவதும் புண்ணான நிலையில் “இவர்களுக்கு என்னைப் போன்ற அம்மா இல்லையோ! இவர்கள் வானத்தில் இருந்து குதித்து வந்தவர்களோ தம்பி?” என்றபோது காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனத்தைப் புரிந்து கொள்ளமுடிந்தது. 10ம் தேதி காவல்துறையினரின் தாக்குதலுக்கு உள்ளான பலரை நாங்கள் சந்தித்தோம். கை, கால்களில் கட்டுடன் பல பேர் இன்னும் போராட்ட பந்தலில்தான் இருக்கிறார்கள். அவர்களின் மீதான தாக்குதல்கள் எந்தவகையிலும் அவர்களின் போராட்ட உணர்வை இந்த அரசுகளால் ஒரு ம…. புடுங்க முடியாது என்பதைக் காட்டியது.

10ம் தேதி நடந்த தாக்குதல்களை அந்த மக்கள் கூறும்போது எனக்கு ஈழ இறுதிகட்டப் போரே நினைவுக்கு வந்தது. சிங்கள இனவெறி ராணுவம் எப்படி முள்ளிவாய்க்கால் கடல்பகுதியில் மக்களைக் கொன்றொழித்ததோ அது போல் தமிழக காவல்துறையும், மத்தியப் படைகளும் இணைந்து இடிந்தகரை மக்களை அந்த கடல் பகுதியில் இல்லாது ஒழிக்கவேண்டும் என்ற திட்டத்துடன் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். குழந்தைகளும், பெண்களும், முதியவர்களும் தாக்குதலில் தப்பவில்லை.

கனத்த இதயத்துடன் நாங்கள் வந்த வேனில் அமர்ந்திருந்தேன். இடிந்தகரை முழுவதும் இருட்டில்…. நான் அமர்ந்திருந்த வேனைத் தாண்டி இரு சிறுவர்கள் போகும்போது கை காட்டிச் சென்றார்கள். ரெம்ப நன்றிணா என்றார்கள்.

“தம்பி இங்க கொஞ்சம் வா”

“என்னாங்கண்ணா”

“இரு நான் கீழே வரேன்..!”

“என்ன படிக்கிற?”

“9ம் வகுப்புண்ணா..”

“நீ..”

“நான் 8ம் வகுப்புண்ணா”

“காலாண்டுப் பரிட்சை எல்லாம் எப்படி எழுதின..?”

“நாங்கள் பரிட்சையே எழுதவில்லைணா.. பள்ளியே திறக்கவில்லைணா..!”

“அன்னைக்கு என்ன நடந்தது தம்பி?”

“நாங்க அமைதியா முற்றுகைப் போராட்டம் நடத்திட்டு இருந்தோம். எல்லோரும் உக்காந்துதான் இருந்தோம்ணா. திடீர்னு போலீஸ் கண்ணீர் புகைக்குண்டை வீசி எல்லோரையும் அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நாங்க ஓடி வந்துட்டோம்.”

“ஏன் அணு உலை வேண்டாமுனு சொல்றீங்க..”

“அணு உலையில் இருந்து கதிர்வீச்சு பரவும் அண்ணா.. கடலில் நாங்க வலை போட முடியாதுணா.. புகுஷிமாவில் அணு உலை வெடிச்சமாதிரி இங்கும் எதுவும் ஆகாதுனு என்ன நம்பிக்கை அண்ணா..!? இது ஏற்கானவே சுனாமி வந்த பகுதி..”

“உங்க போராட்டத்திற்கு வெளிநாட்டில் இருந்து பணம் வருதுங்கறாங்களே..”

கோபமாக “அண்ணா.. எங்க அப்பா மாதிரி நிறைய பேர் வலை போடறாங்கண்ணா.. நாங்க போராட்டத்திற்கு வரி கொடுக்கிறோம். சுனாமி பாதிச்சப்ப நிறைய பேர் உதவி செஞ்சாங்க. அதைதான் இப்பவும் வெளிநாட்டு பணமுன்னு சொல்றாங்கண்ணா... நாங்க எல்லோரும் அரிசி கொடுக்கிறோம். பொதுவாக சாப்பாடு செஞ்சு சாப்பிடறோம். பொய் சொல்றாங்கண்ணா” என்றவன் பக்கத்திலிருந்தவனைக் காட்டி, “இவன் அப்பா சென்னையில வேலை செய்றாரு. போராட்டத்திற்கு அவரும் வரி கொடுக்கிறாரு” என்று வெளிநாட்டு பணம் என்பதை கடுமையாக மறுத்தவன் “அண்ணா நீங்க எந்த ஊர்?” என்று கேட்டான்.

“நான் திருப்பூர் தம்பி”

“அண்ணா.. எங்க போராட்டத்திற்கு அவ்வளவு தூரம் இருந்து வந்து ஆதரிக்கிறீங்க... ரெம்ப நன்றிண்ணா” என்றவர்களைக் கட்டி அணைத்தேன். அந்த இருட்டிற்குள்ளும் அவர்களின் முகங்கள் பிரகாசமடைந்து போல் இருந்தது. “அண்ணா எங்கள் போராட்டம் வெற்றியடையும். நிச்சயம் நாங்கள் வெல்வோம்” என முஷ்டியை உயர்த்தி வணக்கம் சொல்லி விடை பெற்றார்கள்.

மக்கள் தலைவர்கள் மரணிப்பதில்லை… தம்பிகளின் போராட்டங்களும், உதயகுமார்களின் போராட்டங்களும் தோல்வியைத் தழுவவதில்லை.

இந்தத் தலைமுறையோடு போராட்டங்கள் முற்றுப் பெறுவவதில்லை. அடுத்த தலைமுறைகளின் கைகளிலும் போராட்ட வாள்கள்..

தம்பிகள் பிறந்துகொண்டேதான் இருப்பார்கள்….

- உமர்கயான்.சே, வழக்கறிஞர், முதன்மை ஒருங்கினைப்பாளர், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்.

Pin It