ஏறத்தாழ 120 பக்கங்களைக் கொண்ட தங்கள் கொள்கை, செயல்திட்டம், விதிமுறைகளை உள்ளடக்கிய ஆவணம் ஒன்றை, நாம் தமிழர் கட்சி அண்மையில் வெளியிட்டுள்ளது.

“நாங்கள் அரசியல்வாதிகளல்லர், புரட்சியாளர்கள்” என்ற அட்டைப்பட அறிவிப்பும், “பல அமர்வுகள், ஆன்றோர் அவையினரோடு கலந்தாய்வு செய்ததன் விளைவே இந்த ஆவணம்” என்னும் முன்னுரைக் குறிப்பும், நம்மை ஒருவிதமான அச்சத்தோடுதான் நூலுக்குள் நுழைய வைக்கின்றன; ‘அடேயப்பா, விரைவில் புரட்சி வரப்போகிறது’ என எண்ணத் தூண்டுகின்றன.

jayalalitha_seeman_620

அக்கட்சியின் கொள்கை ஆவணம், என் போன்ற திராவிட இயக்க உணர்வாளர்களுக்கு உடன்பாடற்றதாக உள்ளது என்பதை நான் குறையாகக் கூற முடியாது. எல்லோரும் ஒரே கருத்தில் ஒன்றுபட வேண்டும் என்ற கட்டாயம் ஏதும் இல்லை. கருத்து வேறுபடவும், வேறுபடும் இடங்களை ஓங்கி ஒலிக்கவும் எல்லோருக்கும் உரிமை உண்டு.

ஆனால், ஆவணம் என்பது ஒரு பொதுக்கட்டுரை போல் அமைந்துவிடக் கூடாது. கட்டுரையின் தன்மை வேறு, ஆவணத்தின் அமைப்பு வேறு. செய்திப் பிழைகள் இல்லாமலும், சொல்லப்படும் செய்திகளுக்கு உரிய சான்றுகளை அடிக்குறிப்புகளாகக் காட்டியும் ஆவணம் தயாரிக்கப்பட வேண்டும் என்பது அடிப்படைத் தேவை. ஆனால் அவ்விரு தேவைகளும் இந்த ஆவணத்தில் அறவே பின்பற்றப்படவில்லை.

இரண்டாவதாக ஆன்றோர் அவையினரோடு பலமுறை அமர்ந்து கலந்தாய்வு செய்து எழுதப்பட்ட ஆவணத்தில் இத்தனை மொழிப் பிழைகள் (ஒற்றுப் பிழை, தொடர்ப் பிழை, ஒருமை பன்மைப் பிழை) இருத்தல் கூடாது. அவற்றைக் கூட அச்சுப் பிழைகள் எனக் கூறி விட்டுவிடலாம். ‘முழுமையான தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க விரும்பும் கட்சி’ என்பதால், மொழிநடை பற்றியும் கூற வேண்டியதாயிற்று.

மூன்றாவதாக, ஆவணத்தின் பல இடங்கள் தன்முரண் (சுயமுரண்) என்னும் நிலையைக் கொண்டுள்ளன.

இவை பற்றிய என் பார்வையை வெளியிடுவதற்கு முன், ஆவணத்தின் உயிர்நாடி எங்குள்ளது என்று பார்த்திட வேண்டும்.

சமூக, அரசியல் தளங்களில் தீர்க்கப்பட வேண்டிய முரண்கள் குறித்து ஆவணம் பேசுகின்றது. முதலில் தீர்க்கப்பட வேண்டிய முரண், இரு பகுதிகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி, தமிழ்த் தேசிய இனத்திற்கும், இந்திய தேசிய இனத்திற்குமான முரணையும், இரண்டாவது பகுதி தமிழ்த் தேசிய இனத்திற்கும், திராவிட தேசிய இனத்திற்குமான முரணையும் சுட்டி நிற்கின்றன.

இவ்விரு முரண்களே, முதலில் வேரரறுக்கப்பட வேண்டியவை என்று நாம் தமிழர் கட்சி கருதுகின்றது.

ஏழாவது முரண்பாடாக, தீண்டாமை உள்ளிட்ட சாதிய முரண்பாட்டையும், எட்டாவது முரண்பாடாக ஆண் ஆளுமை, பெண்ணடிமை முரண்பாட்டையும் ஆவணம் சுட்டுகிறது. ஆனால், 7, 8 ஆம் முரண்பாடுகளை ஆவணம் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. “7, 8 ஆம் முரண்பாடுகள் மேற்கட்டுமானம் பற்றியதாகக் கருதப்படும் முரண்பாடுகள்” என்று எளிமையாக வரையறுத்து விடுகிறது.

வர்க்க வேறுபாடே அடித்தள முரண்பாடு என்றும், சாதி ஏற்றத்தாழ்வுகள் மேற்கட்டுமானத்தைச் சேர்ந்தவை என்றும் முன்பு உறுதிபடக் கூறிய பொதுவுடைமைக் கட்சிகளே, இன்று தங்கள் கோட்பாட்டினை மறுஆய்வு செய்து வருகின்றன. ஆனால் நாம் தமிழர் கட்சியோ, அதனை மிக எளிதாக மேற்கட்டுமானச் சிக்கல் என்று கூறிவிட்டது.

அதுமட்டுமில்லாமல், தங்கள் உரிமைகளுக்காக ஒடுக்கப்பட்ட சாதியினர் வெகுண்டு எழுந்து போராடி, அதனால் தமிழ்ச் சாதிகள் (அதாவது ஒடுக்கும் சாதியும், ஒடுக்கப்படும் சாதியும்) பிளவுபடும் நிலை ஏற்படுவதையும் நாம் தமிழர் கட்சி விரும்பவில்லையாம். “தமிழினம் பிளவுபடும் எந்தப் போக்கையும் கட்சி ஏற்காது” என்று ஆவணம் திட்டவட்டமாகக் கூறுகின்றது.

ஆக, சாதியின் பெயரால் தமிழனே தமிழனை ஒடுக்கினால், அதைப் பெரிதுபடுத்தாமல், அதற்காகத் தமிழினம் பிளவுபடாமல், ‘நாம் தமிழர்’ என்று ஆண்டான் – அடிமை நிலையிலேயே ஒற்றுமையாக இருந்துவிட வேண்டும் என்பதே ஆவணம் மறைமுகமாக எடுத்துரைக்கும் தத்துவம்.

ஊர், சேரி என வாழ்விடங்கள் இரண்டு இருக்கலாம். இறந்தால் புதைக்கச் சுடுகாடுகள் இரண்டு இருக்கலாம். தாகம் எடுத்தால் தண்ணீர் குடிக்கக் குவளைகள் இரண்டு இருக்கலாம். இருந்துவிட்டுப் போகட்டும். அவையெல்லாம் மேற்கட்டுமான முரண்பாடுகள்தாம். தமிழரா, திராவிடரா எது சரி என்பதே முதன்மையான அடித்தள முரண்பாடு. அதைத்தான் முதலில் தீர்க்க வேண்டும் என்கிறது, முழுமையான தமிழ்த் தேசியம் பேசும் கட்சி.

இதிலே இன்னொரு வேடிக்கையும் உள்ளது. “திராவிடம் என்பது கலப்புக் கூட்டு இனத்தை அடையாளப்படுத்துமேயன்றி, தனிப்பட்ட ஒரு தேசிய இனத்தைக் குறிக்காது” என்னும் வரி, ஆவணத்தின் 9வது பக்கத்தில் காணப்படுகின்றது.

9ஆம் பக்கம் – திராவிடம் தனித் தேசிய இனமே இல்லை என்கிறது. 37வது பக்கமோ, தமிழ்த் தேசிய இனத்திற்கும், திராவிட தேசிய இனத்திற்குமிடையில் முரண்பாடு உள்ளதாகக் கூறுகின்றது. இல்லாத தேசிய இனத்தோடு எப்படி முரண்பாடு கொள்ள முடியும் என்னும் ரகசியத்தை ஆவணம் எங்கும் தேடியும் காண முடியவில்லை.

இன்னொரு முதன்மையான முரண்பாடு, இந்தியத் தேசியத்துடனான முரண்பாடு என்கிறது. தமிழ்த் தேசிய இனத்தை அடிமை இனமாக ஆக்கி இந்திய தேசியம் வைத்துள்ளதாகக் கூறுகிறது. அடிமை விலங்கை அறுக்க, நாம் தமிழர் கட்சி தரும் செயல்திட்டம் 101ஆம் பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

“இந்திய அரசியல் சட்டத்திற்கு உண்மையாக இருப்பதுடன், சமனியம் (சோசலிசம்), மதச்சார்பின்மை, குடிநாயகம் ஆகியனவற்றில் உண்மையான நம்பிக்கை கொண்டு, நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியவற்றை நிலைநிறுத்தி வலிமைப்படுத்தக் கட்சி உறுதி ஏற்கிறது” – இதுதான் அடிமைத்தளை அறுக்கும் திட்டம். முழுமையான தமிழ்த் தேசியம் என்றால் என்ன என்பதை, இதைவிடக் ‘கூச்ச நாச்சமில்லாமல், இனி எந்தக் கட்சியாலும் வெளியிட்டுவிட முடியாது.

அடுத்து எந்தச் சான்றும் இல்லாமல், பல செய்திகளை ஆவணம் அள்ளித் தெளிக்கிறது.

“அண்ணல் தங்கோ முயற்சியினால் முகிழ்த்த தமிழர் கழகத்தை முறியடித்துத் திராவிடர் கழகத்தை நிறுவினர்” (ப.13)

“இந்து மதத்திற்கு மாற்றாகத் தமிழியத்தை முன்னிறுத்தாமல், திராவிடம் இந்துமதச் சீர்திருத்தம் பேசும்” (பக்.26)

“முழு இறையாண்மையுள்ள நிகர்மைத் தமிழ்த் தேசக் குடியரசைக் குறிக்கோளாகக் கொண்டு, தமிழரசுக் கழகத்தை (ம.பொ.சி.) நிறுவினார்” (பக்.14)

- இப்படி ஏராளமான உண்மைத் திரிபுகள்.

தமிழ்நாடு கோருவதாகத் தொடங்கி, சமஷ்டி ஆட்சிதான் கேட்கிறோம் என்று மாறி, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்புதான் சமஷ்டி கேட்டோம், இப்போது நிலைமை மாறிவிட்டது, பிரிந்து வாழும் உரிமையை வற்புறுத்தவில்லை என்ற நிலைக்குத் தமிழரசுக் கழகம் வந்து சேர்ந்தது. (சான்று – ‘ம.பொ.சி. – எனது போராட்டம்’ – இரண்டாம் பாகம்- பக்.414)

மேலும், “சுதந்திரத் தமிழ்க் குடியரசு தேவையென்று என் ஆயுளில் எங்குமே நான் பேசியது கிடையாது” என்று ‘இந்து’ ஏட்டிற்கு ம.பொ.சி. அளித்த பேட்டியையும் எஸ்.வி.ஆர். தன் நூலில் (‘சுயமரியாதை சமதர்மம்’ – பக்.727) பதிவு செய்துள்ளார்.

இத்தனை உண்மைகளும் ஆவணத்தில் மறைக்கப்பட்டுள்ளன. ம.பொ.சி. தனித் தமிழ்நாடு கேட்டது போலவும், திராவிட இயக்கம் இரண்டகம் செய்துவிட்டது போலவும் புனைந்து எழுதப்பட்டுள்ளது.

உண்மை அல்லாதனவற்றைப் பேசுவது, நாம் தமிழர் மேடைகளிலும் நடந்துள்ளதை நாடு அறியும்.

25.12.2010 அன்று, சென்னை, எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் (http://www.youtube.com/watch?v=BVot5rzq810&feature=youtu.be&t=5m55s) சீமான் ஒரு நிகழ்ச்சியைக் கூறினார். “எம்.ஜி.ஆர். முதலமைச்சராகி விடுகிறார். தந்தை பெரியார் அவர்களுக்குப் பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம். பெரியாரை சக்கர நாற்காலியில் அழைத்து வருகிறார்களாம். தந்தை பெரியார் மேடையிலேயே இருக்கும்போதே, தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., எனக்குத் தலைவர்கள் இருவர் – ஒருவர் கலைவாணர், இன்னொருவர் அறிஞர் அண்ணா என்று கூறினாராம். பெரியாரைப் பற்றிச் சொல்லவில்லையே என்று கூட்டம் கொந்தளிக்க, அந்த இரு தலைவர்களையும் உருவாக்கிய தலைவரே அய்யா பெரியார்தான்’ என்றாராம். கூட்டம் ஆர்ப்பரித்துக் கைதட்டியதாம்.”

seeman_2011977 ஆம் ஆண்டு முதலமைச்சரான எம்.ஜி.ஆர். 73 ஆம் ஆண்டின் இறுதியிலேயே இறந்துபோய் விட்ட அய்யா பெரியாரை எப்படிச் சக்கர நாற்காலியில் வைத்து அழைத்து வந்திருக்க முடியும்? எவ்வளவு பெரிய வரலாற்றுப் புரட்டு!

இப்படித்தான் ஆவணமும், வரலாற்றைப் பல இடங்களில் புரட்டுகிறது.

பிறகு, மிகப் புத்திசாலித்தனமாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு, மனுவியம், மனுவாளர்கள் போன்ற சொற்களை எல்லாம் பயன்படுத்தி உள்ளனர். கடைசியில் ‘கலைச்சொல் விளக்கம்’ என்னும் உச்சகட்ட நகைச்சுவையும் இடம்பெற்றுள்ளது.

ஆவணத்தின் 8 ஆம் பக்கத்தில், மனுவாளர்கள் என்னும் சொல்லுக்கு அருகில் அடைப்புக்குறிக்குள் ‘ஆரியப் பார்ப்பனர்’ என எழுதப்பட்டுள்ளது. ஆவணம் முழுவதும், மனுவியம் எதிர்க்கப்பட வேண்டும், மனுவாளர்கள் ஆதிக்கம் கூடாது என்றெல்லாம் குறிப்புகள் உள்ளன.

117 ஆம் பக்கம் தொடங்கும் ‘கலைச்சொல் விளக்க’த்திற்குப் போனால், ஆரியன் என்றால் சீரியன், உயர்ந்தவன் என்றும், பார்ப்பான் என்றால் ஆய்வாளன், இளைஞன் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இங்குதான் நமக்குத் தலை சுற்றுகிறது.

மனுவாளர் என்றால் ஆரியப் பார்ப்பனர். ஆரியப் பார்ப்பனர் என்றால் சீரிய ஆய்வாளர் அல்லது உயர்ந்த இளைஞர். சீரிய ஆய்வாளரையும், உயர்ந்த இளைஞரையும் எதிர்க்க வேண்டும் என்று ஆவணம் சொல்கிறது, ஏன்?

இன்னொரு கலைச்சொல் விளக்கம், பிராமணன் என்றால் பேரமணன் என்கிறது.

‘பல அமர்வுகள், ஆன்றோர் அவையினரோடு கலந்தாய்வு செய்து’ இதனைக் கண்டுபிடித்திருப்பார்கள் போலும்! நாம் அறிந்தவரை, அமணர்கள் என்போர் சமணத்தின் ஒரு பிரிவினரே ஆவர். அவர்கள் பேரமணர்கள் ஆகி, பிராமணர்கள் ஆகி விடுவார்கள் போலிருக்கிறது.

சரி போகட்டும், திராவிடக் கட்சிகளைப் பற்றி இன்னொரு கடுமையான விமர்சனம் ஆவணத்தில் உள்ளது. இலவய அரிசி, மின் விசிறி, மின்கலக்கி, மாவாட்டி எனப் பல இலவயங்களை வழங்கி, தமிழர்களிடம் ஒருவிதமான மனநோயை உண்டாக்கித் தமிழர்களைத் ‘துய்ப்புப் பண்புள்ள வெறும் விலங்குகளாகவே’ திராவிடக் கட்சிகள் வைத்துள்ளனவாம். (பக். 26-27)

இல்லாத ஏழை, எளிய மக்களைத் ‘துய்ப்புப் பண்புள்ள வெறும் விலங்குகள்’ என விமர்சிக்கும் நாம் தமிழர் கட்சி, சென்ற தேர்தலில், அ.தி.மு.க. தன் தேர்தல் அறிக்கையில் இத்தனை இலவயங்களையும் தருவதாக அறிவித்த பின்னர்தானே, அக்கட்சிக்கு ஆதரவாக வாக்குக் கேட்டது? என்ன காரணம்? தமிழர்கள் வெறும் விலங்குகளாகவே என்றும் வாழவேண்டும் என்பதற்காகவா?

சரி, தேர்தலில் நிற்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் நிலைப்பாடு என்ன? ஆவணத்தைப் புரட்டுவோம்:

“ஆட்சி இன்பக் காட்சிகளைக் கனவிலும் கருதாது...” (பக்.20)

“கட்சி பதிவு செய்த நாளிலிருந்து, 5 ஆண்டுகளுக்குள் தேர்தல் ஆணையம் நடத்தும் தேர்தல்களில் கட்சி போட்டியிடும்” (பக்.102)

இவ்வளவு ‘தெளிவான’ குறிக்கோள்களையும், செயல்திட்டங்களையும் கொண்டுள்ள நாம் தமிழர் கட்சியில் இணைவதும் அவ்வளவு எளிதானதாக இல்லை. அதற்குப் பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

‘ஆண், பெண், திருநங்கையர் ஆகிய முப்பாலினத்தவரை மட்டும்’ சேர்த்துக் கொள்வார்களாம். (நான்காவது பாலினம் வேறு உள்ளதா?)

இன்சொல் பேசவேண்டுமாம். எந்நேரமும் மக்கள் தொண்டில் ஈடுபட வேண்டுமாம். சுவருக்கு வெள்ளையடிக்க வரக் கூடாதாம். வீட்டையே இடித்து மறுபடியும் கட்டத் துணிய வேண்டுமாம்.

எல்லாம் சரி, உறுப்பினர் நடத்தை விதிகளில் நான்காவதாக ஒன்று இடம்பெற்றுள்ளது. அதைப் படித்தபோது உண்மையிலேயே நெஞ்சம் ஆனந்தக் கூத்தாடியது. கட்சி என்றால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் என்று தோன்றியது. இதோ, அந்த நான்காவது விதி,

“(உறுப்பினர்கள் எவரும்) மதுவகைகளையும், வெறியூட்டுப் (போதை) பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது” (பக்.106)

பழைய நட்பு உரிமையில், ‘செந்தமிழன்’ சீமானைப் பார்த்து இப்படிச் சொல்ல வேண்டும் போல் இருக்கிறது,

“அடடா, உடம்பு சிலிர்க்குதடா, தம்பி!”

Pin It