பல்வேறு தேசிய இன மக்களையும், உலகின் மிகச் சிக்கலான சமூக அமைப்பையும் கொண்டு, கலாச்சாரம், மொழி, இனம், சாதி, மதம் என்று துண்டு துண்டாக கிடக்கும் மிகப்பெரிய துணைக் கண்டத்திற்கு, ஒரு நாட்டிக்கான அங்கீகாரம் கொடுத்தது அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசிலமைப்புச் சட்டம்தான். இவ்வளவு சவாலானதொரு அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க, வேறு யாருக்கேனும் ‘வக்கு’ இருந்திருந்தால், அம்பேத்கரால் அரசிலமைப்புச் சட்டம் எழுதப்பட்டிருக்காது என்பது, அம்பேத்கர் மீதான காழ்ப்புணர்ச்சியும் புறக்கணிப்பும் தன் இரத்தத்தோடு ஊறிப்போயிருக்கும், ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தெரியும். இதில் மாற்றுக் கருந்திருப்பவர்கள் நிச்சயம் அறிவுஜீவிகள்தான்(!).

இந்தியாவின் தேசத்தந்தை(?) காந்தி, நேரு, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, சஞ்சய் காந்தி, சரண் சிங், ஜெயில் சிங், லால் பகதூர், ஜெகஜீவன்ராம், தேவிலால், மவுலானா, அபுல் கலாம் ஆசாத், சந்திரசேகர், சங்கர் தயாள் சர்மா ஆகிய தலைவர்களுக்கு(?) மட்டுமே தேசத் தலைவர்களுக்கான நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, கடந்த ஆண்டு (2011) பிப்ரவரி மாதம், மும்பையைச் சேர்ந்த அம்பேத்கர் தொண்டர் சந்த்ரகாந்த் என்பவர் “அம்பேத்கர் தேசியத் தலைவரா இல்லையா” என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசைக் கேட்டுக்கொண்டபோது. “அப்படி ஒரு தகவல் இல்லை” என்று கொஞ்சமும் கூச்சமில்லாமல் மத்திய அமைச்சகம் பதிலளித்தது.

தற்பொழுது சச்சின் டெண்டுல்கருக்குப் பரிந்துரைக்கப்படும் “பாரத ரத்னா” விருதும், டாக்டர்.அம்பேத்கர் அவர்கள் இறந்து 34 வருடங்கள் கழித்து 1990-ல்தான் வழங்கப்பட்டது. அதாவது அம்பேத்கர் நூற்றாண்டில் அம்பேத்கருக்கு “பாரத ரத்னா” வழங்கப்பட்டது என்பதுதான் “இந்திய வரலாறு”.

ambedkar_cartoon_640

இப்படி அம்பேத்கர் மீதான அப்பட்டமான அவதூறுகளும், வெளிப்படையான புறக்கணிப்பும் நிகழ்ந்துகொண்டிருக்கும் வேளையில், நாடே பொத்திக்கொண்டுதான் இருக்கும். ஆனால், அம்பேத்கர் கேலிச் சித்திரம், பள்ளிப் பாடப் புத்தகத்தில் இடம்பெறச் செய்திருந்தது தொடர்பான விவகாரத்தில், "பாடப் புத்தகத்திலிருந்து சம்பந்தப்பட்ட கேலிச் சித்திரம் நீக்கப்படும்" என்று, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆறுதலானதொரு தீர்வை நாடாளுமன்றத்தில் அறிவித்ததும், பார்ப்பன ஊடகங்கள் ஞாநி பெருமக்களை அழைத்து, “டாக்டர்.அம்பேத்கர் அவர்கள் அகில+இந்திய+தேசியத் தலைவர்தான்” என்று அரசியலமைப்புச் சட்டத்தின் மீது சத்தியம் செய்துகொண்டிருக்கின்றன.

“அம்பேத்கர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமான தலைவர் என்பது தவறு....” என்று சத்தியமாக ஞாநிதான் சொல்கிறார்.

அம்பேத்கர் மீதான அவதூறுகளின் போதும், புறக்கணிப்பின் போதும் வாய்திறக்காத, ஞாநியின் உண்மையான மொழியும் பொருளும், “அம்பேத்கர் நேக்கும்தான் தலைவர்..., நாங்கள் சொல்கிறோம் கேலிச் சித்திரம் பேஷா இருக்கு, நீக்க வேண்டாம்” என்பதுதான்.

அம்பேத்கரைத் தங்களின் அடையாளமாகக் கருதும் ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இல்லையா? என்ற கேள்விக்கு “மக்களின் உணர்வு சம்பந்தப்பட்டது என்று சொல்லியே......” அலுத்துக்கொண்ட ஞாநி, (பாபர் மசூதி இடிப்பையும் ராமர் பாலப் புரட்டையும் பேசப்போகிறார் என்று நினைத்தால்) “இப்படியே சென்றால் கவுண்டர்கள் உணர்வு... தேவர்கள் உணர்வு.... எனச் சொல்வார்கள்” என்று ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்ட உணர்வை இழிவுபடுத்த, எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகவே இருந்தார் ஞாநி.

இப்படி, தொலைகாட்சி ஊடகத்தின் வாயிலாக, தாழ்த்தப்பட்ட மக்களின் மீது விஷத்தைக் கக்கும் வாய்ப்பு, ஞாநிக்கு வாய்த்ததுபோல் அ.மார்க்ஸ்க்கு வாய்க்கவில்லை போலும். அந்தக் கவலையை ஒரு நீளமான கட்டுரையின் வாயிலாக தீர்த்துக்கொண்டிருக்கிறார் அ.மார்க்ஸ்.

ஞாநியும், அ.மார்க்சும் பயன்படுத்திய ஊடகங்கள் வெவ்வேறாக இருந்தாலும், தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்ட உணர்வுகளின் மீது, “சேறடித்த விதம்” அறிவுஜீவிகள்(!) என்ற வகையில், ஒரே பாணியில்தான் இருந்தன.

அ.மார்க்ஸின் கட்டுரையில் முதல் பத்தியில் இருக்கும், “ஒடுக்கப்பட்ட மக்கள், இப்படியான பிரச்சனைகளை காலங்காலமாக எதிர்கொள்ளும் போது, அவர்களின் கோபத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்” என்ற கருத்து, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அறிவுத்தளத்தில் பணியாற்றியதன் விளைவு என்று நினைத்தேன். ஆனால் இரண்டாவது பத்தியிலேயே, அதே ஒடுக்கப்பட்ட மக்களின் தார்மீகமான கோபத்தை, “வெளிப்படுத்திய விதம் - எள்ளளவும் மன்னிக்க முடியாத வன்முறை”என்கிறார் அ.மார்க்ஸ். அறிவுஜீவிகளுக்கே உரித்தான ஒருவகையான சூத்திரம் இது.

பொதுவாக பெரியாரை விமர்சிக்கும் முற்போக்காளர்கள், குறிப்பாக பார்ப்பன முற்போக்காளர்கள்(!), (தன் சுயவிவரத்தின் பாதுகாப்பிற்காக) முதல் பத்தியில் சாதியையும் இந்து மதத்தையும் ஒரு போடு போட்டுவிட்டுத்தான், பெரியாரை விமர்ச்சனம் செய்யத் தொடங்குவார்கள். இந்தச் சூத்திரத்தைத்தான் அ.மார்க்ஸும் தன் கட்டுரையில் பயன்படுத்தியுள்ளார். மற்றபடி “ஒடுக்கப்பட்ட மக்களுக்காக அறிவுத்தளத்தில் பணியாற்றியதன் விளைவு” என்பதெல்லாம் எள்ளளவும் உண்மையில்லை என்பதை, அடுத்தடுத்த பத்திகளில் அ.மார்க்சே நிரூபிக்கிறார்.

சம்பந்தப்பட்ட படத்தில், “நேரு சாட்டையால் 'அம்பேத்கரை' அடிப்பது போன்று இல்லவே இல்லை, அவரை இழிவுபடுத்துவதாகவும் இல்லை” என்று ஞாநி-அ.மார்க்ஸ் இருவருமே கூறுகிறார்கள்.. தொடர்ந்து, “ஓவியர் சங்கர் பிள்ளை அம்பேத்கரைப் பற்றிய 'நல்ல' படங்களையும் வரைந்திருக்கிறார்” என்றும் கூறுகிறார்கள். ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை இருவரும் அறிவுஜீவிகள்தான்(!).

அ.மார்க்ஸ் மட்டும் ஒருபடி மேலே சென்று “கூர்ந்து கவனித்தால் நேரு, அம்பேத்கர் இருவருமே ஆமையை விரட்டுவதாகவும்கூட கார்டூனை வாசிக்க முடியும்” என்கிறார். தன் கட்டுரை முழுக்க "நத்தையை", "ஆமை" என்றே குறிப்பிடும் அ.மார்க்ஸ், அப்படி என்னதான் கூ....ர்ந்து கவனித்தாரோ தெரியவில்லை. நம் வசதிக்கு வாசிக்க வேண்டும் என்றால், அந்தப் படத்தில் இருப்பது அம்பேத்கரே இல்லை என்றும் விவாதிக்கலாம். ஏனென்றால் அது வெறும் கோட்டு ஓவியம்தானே.

சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரத்தை, திரு.தொல் திருமாவளவன் அவர்கள் நாடாளுமன்றத்தில் காண்பித்தபோது, நாட்டின் இருபெரும் மத்திய மந்திரிகள் “அந்தப் படம் அம்பேத்கரை தரக் குறைவாகச் சித்தரிக்கவில்லை” என்று வாதிடவில்லை, மாறாக தவறுக்காக வருந்தி மன்னிப்பும் கேட்டுக்கொண்டனர்.

தாழ்த்தப்பட்ட/பழங்குடி மக்கள், குறைந்த விலைக்கு/இலவசமாக அரசின் விண்ணப்பப் படிவங்களை வாங்குவதைக்கூட தாங்கிக்கொள்ள முடியாத மாணவச் செல்வங்கள், அம்பேத்கர் கேலிச் சித்திரத்தை, ஞாநியும் அ.மார்க்ஸும் புரிந்துகொண்டதைப் போலதான் புரிந்துகொள்வார்களாம்(!). இட ஒதுக்கீட்டின் மூலம் அரசே சாதியை ஊக்குவிக்கிறது என்று புரட்சிக்குத் தயாரான, நாட்டின் முதல்த்தர(!) (AIMS) மருத்துவ மாணவ மணிகளை அ.மார்க்ஸுக்கும் ஞாநிக்கும் தெரியாதா என்ன?

(பள்ளி) மாணவர்கள் அரசியல் கற்றுக்கொள்வதை திட்டமிட்டுத் தடுக்கும் நோக்கில்தான், இந்தப் பிரச்சினை கிளப்பப்பட்டதாக -ஞாநியும், மாணவர்களின் படைப்புத்திறனை ஊக்குவிக்கும் நோக்கில்தான் இதுபோன்ற சமகாலப் பத்திரிக்கைச் செய்திகள் பயன்படுத்தப்படுவதாக- அ.மார்க்சும் கூறுகிறார்கள்.

அறுவது ஆண்டுகளுக்கு மேலான சுதந்திர இந்தியாவில் மாணவர்களிடம் சாதிய மனநிலையை அகற்ற, பாடநூல்களில் என்ன முயற்சி எடுக்கப்பட்டுள்ளது? சுதந்திர இந்தியாவிலேயே பிறந்து, பயின்று பட்டதாரிகளாகியுள்ள, தாழ்த்தப்பட்டோர் அல்லாதோர் எத்தனை பேர் “சாதியொழிப்பு” என்ற வார்த்தையைத் தன் வாழ்நாளில் உச்சரித்திருப்பார்கள்? இப்படி சாதியொழிப்பிற்காக கல்வித்-தளத்தில் எதையும் கழட்டாமல், சாதியடிப்படையில் புறக்கணிக்கப்படும் ஒரு மாபெரும் தலைவரை, பாடப் புத்தகத்தில் கேலி செய்வது, சாதிய மனநிலையை ஊக்குவிப்பதாகும். இந்தப் பாடநூல்களையும், தயாரித்த கல்வியாளர்களையும் கண்டிக்காமல், ஞானியும் அ.மார்க்ஸும் எடுத்த எடுப்பில் “விமர்சனத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத மனநிலை” என்று தாழ்த்தப்பட்ட மக்கள் மீது பாய்வது, கடைந்தெடுத்த அறிவு(!)ஜீவித்தனம்.

ஊடகங்கள் அனைத்தும் பார்ப்பனர்கள் வசம் உள்ளதை, தன்னுடைய கட்டுரைகளில் அழுத்தமாகக் குறிப்பிடும் அ.மார்க்சே, “வரலாற்றைச் சமகாலப் பத்திரிக்கைச் செய்திகளோடு மாணவர்கள் பயில வேண்டும் என்ற (நல்ல) நவீன நோக்கத்தோடு....” என்கிறார். அம்பேத்கரை பார்ப்பன ஊடகங்களின் / பத்திரிக்கைச் செய்திகளோடு படித்தால் வெளங்கிவிடும்....(!)

அரசியலமைப்புச் சட்டம் கால தாமதம் ஆனதால் நேரு உள்ளிட்ட தலைவர்கள் கவலை கொண்டதைக் குறிக்கும் இடத்தில்தான், சம்பத்தப்பட்ட படம் பாடநூலில் பயன்படுத்தப்பட்டதாக அ.மார்க்ஸ் குறிப்பிடுகிறார். ஆனால், சம்பத்தப்பட்ட படம் சம்பந்தமில்லாத இடத்தில் பயன்படுத்தப்பட்டிருப்பது பற்றி, அ.மார்க்ஸின் பின்நவீனத்துவம் கேள்வி எழுப்பிக் கட்டுடைக்கத் தயாராக இல்லை.

இப்படி சத்தில்லாத சொத்தையான விமர்சனத்தையே தொடர்ந்து முன்வைக்க முடியாத அ.மார்க்ஸும் ஞாநியும், 'சங்கர் பிள்ளை ரொம்ப நல்லவரு.... நெறைய அவாடெல்லாம் வாங்கியிருக்காரு...' என்றும், 'ராஜினாமா செய்த சுபாஷ் பல்சிகரும் யோகிந்ர யாதவும் அம்பேத்கர் இயக்கங்களோடு நெருக்கமானவர்கள்' என்றும், தொடர்பில்லாத சிறுமையான விவாதத்திற்குள் சென்றுவிட்டனர். வழக்கம் போல் அ.மார்க்ஸ் ஒருபடி மேலே போய் “ஆமை என்பது (நத்தையைத்தான்....) தாமதத்தின் குறியீடு.... அம்பேத்கர் அரசிலமைப்புக் குறியீடு... நேரு அதிகாரத்தின் குறியீடு” என்று நீட்டி... பாடம் நடத்தவும் தொடங்கிவிட்டார்.

தன் கட்டுரை முழுக்க டஜன் கணக்கில் அறிவுஜீவிகள், வரலாற்று ஆசிரியர்கள், கல்வியாளர்கள் பெயர்களை நிரப்பி, தாழ்த்தப்பட்ட மக்களின் போராட்டத்தின் மீதான அவதூறுக்கு வலுச்சேர்க்க முயற்சித்திருக்கிறார் அ.மார்க்ஸ்.

பார்ப்பனக் கவி பாரதியைப் பற்றிய விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றும் “தீம்தரிகிட”, அம்பேத்கர் மீதான எந்த ஒரு அவதூறுக்கும் எதிர்வினையாற்றாத நிலையில், அம்பேத்கர் பற்றிப் பேச எந்தத் தகுதியும் இல்லாத ஞாநியை அழைத்து, அம்பேத்கரின் அடையாளத்தின் மீதான தாக்குதலை நியாப்படுத்துகின்றன பார்ப்பன ஊடகங்கள்.

முடிவாய் முத்தாய்ப்பாய் இருவருமே கூறிய குற்றச்சாட்டு,

“தாழ்த்தப்பட்ட மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனைகளையும் தாக்குதல்களையும் கண்டுகொள்ளாமல்” பாடப்புத்தகத்தில் கவனம் செலுத்துவது, அரசியல் ஆதாயத்திற்காகத்தான் –ஞாநி.

non-issue-வைப் பிடித்துத் தொங்கிக்கொண்டிருப்பது அதிக விரயம் –அ.மார்க்ஸ்.

தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சனைகளில் தாழ்த்தப்பட்டோர் அல்லாதோர் தலையிட மாட்டோம் என்னும் சராசரி பார்ப்பன - சாதி இந்து மனோபாவத்தையும் தாண்டி, “தாழ்த்தப்பட்ட மக்கள் எந்தப் பிரச்சனைகளில் தலையிட வேண்டும், எப்படித் தலையிட வேண்டும்” என்று ஞாநியும் அ.மார்க்ஸும் முடிவு செய்வது எதையும்விட ஆபத்தானது(!)

சரி, சங்கர் பிள்ளை வரைந்த, "சிறப்பான படம்.... சிறப்பான படம்...." என்கிறார்களே, அது உண்மையிலேயே அம்பேத்கரை சிறப்பாகத்தான் சித்தரிக்கிறதா?

பார்த்துவிடுவோம்,

அம்பேத்கரை சிறப்பாக காட்டியிருப்பதாக, முன்மொழியப்பட்ட படம்.

இந்தச் சிறப்பான(!) படத்தை விவரிக்கும் அ.மார்க்ஸ், வர்ணாஸ்ரம இந்துமதத்தை, எம்.கே.ஆச்சார்யா தார்ப்பூசி இழிவுபடுத்துவதாக விளக்குகிறார்.

இந்த ஆச்சார்யா யார் தெரியுமா?, திருமணமாகும் பெண் குழந்தைக்கு குறைந்தது 13 வயது இருக்க வேண்டும் என்று, குழந்தைத் திருமணச் சீர்திருத்த மசோதா கொண்டுவந்தபோது (1921), “பெண்கள் ஒழுக்கக் கேடானவர்கள், குழந்தையிலேயே திருமணம் செய்யாவிட்டால் கற்பு என்பதே இல்லாமல் போய்விடும்” என்று வாதிட்டு, சீர்திருத்த மசோதாவை கடுமையாக எதிர்த்தவர்தான் இந்த எம்.கே.ஆச்சார்யா. ஒரு தீவிரமான பார்ப்பனரான எம்.கே ஆச்சார்யா, வர்ணாஸ்ரம இந்துமதத்தை எதிர்த்ததாக சங்கரன் பிள்ளை வரைந்தது தவறா? அல்லது அ.மார்க்ஸின் புரிதல் தவறா?

தொலைகாட்சி ஊடகம் ஒன்றில் கலந்துகொண்டு, கருத்துத் தெரிவித்த கார்டூனிஸ்ட் பாலா, இந்தப் படத்தை விளக்கும்போது, தார் பூசிக்கொண்டிருப்பவர் “பெரியார்” என்றார்.

தார்ப் பூசுதல் அல்லது கரி பூசுதல் என்பது நேர்மையான குறியீடும் அல்ல. ‘சரியான’ ஒன்றைத் ‘தவறு’ என்று நிரூபிக்க முயலும் குறியீடுதான் கரிபூசுதல் என்பது.

அது ஒரு கருப்பு+வெள்ளைப் படம் என்பதால், எதை ஊற்றினாலும் பால் அல்லது தார்தான்(!).

சிறப்பான(!) படத்தை தொடர்ந்து விளக்கும் அ.மார்க்ஸ், “அம்பேத்கர் வர்ணாஸ்ரம இந்துமதத்தின் அடிக்கல்லையே உடைத்துத் தூள்த் தூளாக்க முயற்சிக்கிறார்” என்று உச்ச ஸ்தாயியில் ஒலிக்கிறார், மகிழ்ச்சி.

ஆனால், உண்மையில் “VARNASHRAM” என்று எழுதப்பட்ட மிகப் பிரமாண்டமான பீடத்தை, அம்பேத்கர் “தம்மாத்துண்டு” சுத்தியலை வைத்துக்கொண்டு உடைக்க முயற்சிப்பது, அம்பேத்கரைக் கேலி செய்வது போல்தான் உள்ளது. (சுத்தியல் சிறிதாகத்தான் இருக்கும் என்பவர்கள் கார்ட்டூன் போன்ற விமர்ச்சனப் படங்கள் பற்றிய அடிப்படை அறிவே இல்லாதவர்கள்) அம்பேத்கர் சுத்தியலால் அடிக்கும் இடத்திலும் எந்தவித பாதிப்பும் காட்டப்படவில்லை. அம்பேத்கரை சிறப்பாகச் சித்தரித்ததாகச் சொல்லப்படும் கார்ட்டூனும், “தீண்டாமைக்கு அடிப்படையான (அடிக்கல்) வர்ண-சாதி அமைப்பைத் தகர்க்க வேண்டும்” என்ற அம்பேத்கர் கூற்றை கேலி செய்வதாகத்தான் இருக்கிறது.

மேலும், VARNASHRAM, HINDUISM என்று எழுதியிருந்தாலும், மேலே அமர்ந்திருப்பது எந்த இந்துக் கடவுளும் அல்ல. மேலே வெள்ளைத்(!) தாமரையில் அமர்ந்திருப்பது, வர்ணாஸ்ரம சாதியமைப்பை எதிர்த்து மிகப்பெரிய சமூகப் புரட்சி செய்த புத்தர்(!).

புத்தரை களவானித்தனமாக இந்துமதத்தில் திணிக்கும் முயற்சியாக, வர்ணஸ்ராம மேடையில் அவரை அமர வைத்திருப்பதாகவும், இதை எதிர்க்கும் அம்பேத்கர், பீடத்தை உடைக்க “முயற்சி”ப்பதாகவும், புத்தர் ஒரு நாத்திகர் என்பதைச் சொல்ல, பெரியார் புத்தருக்கு “கருப்பு” அடையாளம் கொடுக்கிறார் என்றும், தீவிர இந்துமத வர்ணாஸ்ரம ஆதரவாளர் பனியா காந்தி புத்தர் மீது நிரப்பப்படும் கருப்பு நிறத்தை துடைப்பதாகவும் நான் புரிந்துகொள்கிறேன்.

அந்தப் படம் உண்மையில் என்ன சொல்கிறது என்பது, வரைந்து மறைந்த சங்கரன் பிள்ளைக்கு மட்டுமே வெளிச்சம்(?).

இப்படி, ஒரு கார்ட்டூனைப் புரிந்துகொள்வதில், தமிழகத்தின் மிகப்பெரும் அறிவுஜீவிகளுக்கும் அரசியல் விமர்சனக் கார்ட்டூனிஸ்ட்டுக்கும், (ஏன் எனக்கும்) இவ்வளவு வேறுபாடு இருக்கையில், அடிமை மக்களின் விலங்கொடிக்கும் மாபெரும் போராளி அம்பேத்கரை, நேருவின் அடிமைபோல் சித்தரிக்கும் கார்ட்டூனைப் "பள்ளிப் பாடப்புத்தகத்தில்" இடம்பெறச் செய்ததும், அதற்கெதிரான போராட்டத்தை இழிவுபடுத்துவதும் அயோக்கியத்தனமே. முன்னது வழக்கமானது, பின்னது கடைந்தெடுத்தது.....

- மதியவன்

Pin It