எதிர்பாராத விதமாகப் பேருந்துக் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதை எதிர்த்து அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் செய்கின்றன. பொது மக்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர். சமூக சேவகர்கள் என்று கூறிக் கொள்வோர் பொது நல வழக்குகளைத் தொடுத்துள்ளனர். அனைவரும் பிரச்சினைகள் தரும் உடனடி வலியைக் குறித்துத் தான் பேசுகின்றனரே தவிர நீண்ட காலமாக ஜடப் பொருள்களை விடக் கேவலமாக மக்கள் நடத்தப்படுவதைப் பற்றி மூச்சு கூட விடவில்லை.

ட்ராபிக் ராமசாமி என்று அழைக்கப்படும் திரு.கே.ஆர்.ராமசாமி என்பவரும் திரு.புகழேந்தி என்ற வழக்கறிஞரும் 18.11.2011 அன்று பேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளனர். இவ்வழக்கில் பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவதை எதிர்க்கவில்லை என்றும், அப்படி உயர்த்துவதற்குப் பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகள் பின்பற்றப்படாததை எதிர்ப்பதாகவும் கூறியுள்ளனர். எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டதால் மக்களால் அதற்கேற்பத் தகவமைத்துக் கொள்ள முடியவில்லை என்றும் தான் கூறியள்ளனரே தவிர, கடனுக்கு வட்டி என்ற பெயரில் கணிசமான தொகையை, போக்குவரத்து நிறுவனத்திடம் இருந்து அரசு மறைத்துக் கொண்டு நஷ்டக் கணக்கு காட்டுவதைத் தவிர்ப்பதன் மூலமும், நிர்வாகத் திறமையை அதிகரிப்பதன் மூலமும் பழைய கட்டணத்தை மேலும் குறைத்த பின்னும் பேருந்துகளை இலாபகரமாக நடத்த முடியும் என்று கூறவே இல்லை. இதற்குப் பதிலளிக்கும்படி உயர் நீதிமன்றம் 22.11.2011 அன்று தமிழ் நாடு அரசுக்குத் தாக்கீது (notice) அனுப்பி உள்ளது.

திரு. கே.ஆர்.ராமசாமி, சென்னை மாநகரப் பேருந்துகளில் 50 சதவிகிதமாவது சாதாரணப் பேருந்துகளாக ஓட்ட வேண்டும் என்று அரசின் மீது வழக்கு ஒன்றைத் தொடுப்பதற்கு உயர் நீதிமன்றத்திடம் அனுமதி கோர, உயர் நீதிமன்றமும் 21.11.2011 அன்று அனுமதித்து உள்ளது. இது முந்தைய வழக்கை விடச் சற்று முற்போக்கானது தான் என்றாலும் இவ்வழக்கில் முழுமையான வெற்றி கிடைத்தாலும், பேருந்துகளின் எண்ணிக்கையை வேண்டிய அளவு உயர்த்தாத வரையிலும் சென்னை மக்களின் பிரயாணப் பிரச்சினை எள் முனை அளவும் தீராது.

அரசு நிறுவனங்களின் புள்ளி விவரப்படியே சென்னைப் பெருநகருக்கு குறைந்த பட்சம் 8,000க்கும் அதிகமான பேருந்துகள் தேவை. இவ்வெண்ணிக்கை மக்கள் ஜடப் பொருள்கள்களை விடக் கேவலமாக அடுக்கி வைக்கப்பட்டுச் செல்லப்படாமல் இருப்பதற்கே ஒழிய சாதாரணமாக அமர்ந்து செல்லும் பிரயாணத்திற்காகவும் அல்ல. ஆனால் இங்கு 3,140 பேருந்துகள் தான் ஓடுகின்றன. பேருந்துகளின் எண்ணிக்கையை இரண்டரை மடங்கிற்கும் மேலாக அதிகரிக்க வேண்டும் என்று கூறும் ஆய்வின் முடிவு, யாருடைய கண்ணிலும் படாதபடி மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளப்பட்டு உள்ளது. இது இந்த ஆட்சியில் மட்டுமல்ல; இப்போதைய ஆட்சியாளர்களைப் பிறவி எதிரிகளாகக் கருதுபவர்களின் ஆட்சியிலும் இதே நிலைதான்.
ஒரு முறை பேருந்து எண்ணிக்கையை உயர்த்துவதைப் பற்றி அன்றைய ஆட்சியாளர்களிடம் நேர்முகமாகக் கேட்டபோது, அப்படிச் செய்தால் சாலைகள் முழுவதும் பேருந்துகளால் நிரப்பப்பட்டு விடும் என்றும் வாகனங்கள் ஓடுவதற்கு இடமே இல்லாமல் போய் விடும் என்றும் விடையளிக்கப்பட்டது. பேருந்துகளின் எண்ணிக்கையை, பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமான அளவில் ஓட்டினால் இரு சக்கர வாகனங்களையும் சிற்றுந்துகளையும் உபயோகிப்பவர்கள் பேருந்துகளை உபயோகிக்கத் தொடங்குவார்கள் என்றும் அதன் மூலம் சாலைகளில் வாகன எண்ணிக்கை மிகவும் குறைந்து, போக்குவரத்து நெரிசலே இல்லாமல் போய் விடும் என்று கூற வந்தவர்கள் தடுக்கப்பட்டு விட்டனர்.

மக்கள், மக்களாக நடத்தப்படுவதற்கல்ல; ஜடப் பொருள்களாக நடத்தப்படாமல் இருப்பதற்கு, குறைந்த பட்சம் 8,000 பேருந்துகள் தேவை. இதை விட இரண்டு மடங்கு பேருந்துகளை இயக்கினால் சாலைகளில் போக்குவரத்து நெரிசலை வெகுவாகக் குறைத்து விட  முடியும். ஆனால் சமூக ஆர்வலர்கள் என்று கூறிக் கொள்பவர்களும் சரி; ஆட்சியில் அமர வாய்ப்பில்லாத அரசியல் கட்சிகளும் சரி;  யாரும் இப்பிரச்சினையை முன்னெடுத்துப் போராடுவதாகத் தெரியவில்லை

பேருந்துகளை இயக்குவதில் நஷ்டம் வருவதாகச் சொல்கிறார்கள். முதலில் இது உண்மையா? அரசாங்கம் தான் நிறுவிய நிறுவனத்திற்குக் கடன் அளித்து, பேருந்து இயக்கும் தொழிலை நடத்துகிறது. வரும் வருமானத்தில் கடனுக்கு வட்டியை எடுத்துக் கொள்கிறது. மீந்த வருமானத்திலும் தவிர்க்கக் கூடிய வெவ்வேறு செலவினங்களைக் காட்டி, தொழிலில் நஷ்டம் என்று கூறுகிறது. அப்படிச் செய்யாமல் எல்லாமே நேரடியாகவும் நேர்மையாகவும் இருந்தால் நிச்சயம் இலாபம் இருக்கும். இவை போன்ற விவரங்களை, கூலி உயர்வு மற்றும் போனஸ் போராட்டங்களின்போது முன் வைக்கும் தொழிற்சங்கங்கள், கட்டண உயர்வை எதிர்க்கும் பொழுது மக்களின் பார்வைக்குக் கொண்டு சென்று அரசின் முகத்திரையை ஏன் கிழிப்பதில்லை?

சரி! வாதத்திற்காக  இலாபம் இல்லை என்று ஒப்புக் கொண்டாலும், உலகின் மற்ற பகுதிகளில், அதுவும் பணக்கார நாடுகளில், கூட்டு நுகர்வு (collective consumption) என்ற பெயரில் நடப்பதை முன்னோடியாகக் கொண்டு இங்கும் குறைந்த கட்டணத்தில் பேருந்துகளை இயக்கலாம். இவ்விவரங்கள் குறித்த விழிப்புணர்வையும் பொதுக் கருத்தையும் ஏற்படுத்த ஏன் யாரும் முன் வருவதில்லை?

பரிதாபகரமாக வாழும் ஏழை மக்கள் உபயோகிக்கும் பிரயாணத்தில் இவ்வளவு கண்டிப்புடன் இலாப நஷ்டக் கணக்கு பார்ப்பவர்கள், பெரும் பணக்கார முதலைகள் தங்களுடைய அதி நவீன, சொகுசின் உச்சமான, மிகுந்த செலவு பிடிக்கக் கூடிய பிரயாணத்தை இலவசமாக அனுபவிப்பதை ஏன் தட்டிக் கேட்கத் துணிவதில்லை? எந்த ஒரு தொழிலதிபரும் தானும் தன் குடும்பத்தினரும், அவருக்கு (சட்டப்பூர்வமாக / சட்டத்திற்குப் புறம்பாக) வேண்டியவர்களும் செய்யும் ஆடம்பர வகைப் பிரயாணங்கள், பொருட்களின் உற்பத்திச் செலவில் சேர்க்கப்படுகிறதே ஒழிய, அவருடைய வருமானத்தில் இருந்து செய்யப்படும் செலவாகக் கருதப்படுவதே இல்லை. இவ்வாறு கொடூரமான ஆடம்பரப் பயணங்களை எல்லாம் பெரும் பணக்காரர்கள் இலவசமாக அனுபவிக்கும் பொழுது, பாவம்! ஏழை மக்கள் இலவசமாக அல்ல; தாங்க முடியக் கூடிய குறைந்த கட்டணத்தில் பிரயாணம் செய்யக் கூடாதா? பண முதலைகளைப் போல ஆடம்பரமான வசதிகளுடன் அல்ல; ஜடப் பொருள்களாக நடத்தப்படாமல், மனிதர்களாக நடத்தப்படுவதற்கு, பேருந்துகளின் எண்ணிக்கையைக் குறைந்த பட்சம் ஐந்து மடங்காக உயர்த்த வேண்டாமா?

பிரச்சினைகளின் அடிப்படையைத் தொடாமல் அப்போதைக்கு அப்போது ஏற்படும் வலியைத் தீர்க்க அல்ல மறக்க வைக்கும் போராட்டங்களை மட்டும் ஏன் முன்னெடுக்கிறார்கள்? இதைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக ஆர்வலர்கள் ஏன் முன் வருவதில்லை?

- இராமியா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)
Pin It