திருமதி சோனியா காந்தி அவர்கள் பிறந்த ஊரான (இத்தாலியின்) லூசியானா நகருக்கு வட கிழக்கே 78 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள லாங்கேரோன் (Longarone) கிராமத்தில் 1959 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட வஜோண்ட் அணைக்கட்டின் (Vajont Dam) வரலாற்றை நினைவு கூற வேண்டிய கட்டாயத்திற்கு இன்று நாம் தள்ளப்பட்டு உள்ளோம். வஜோண்ட் அணைக்கட்டு நிர்வாகமானது அணைக்கட்டு அமைவிடத்தின் நிலவியல் மற்றும் பொறியியல் உண்மைகளை உதாசீனப்படுத்தியது. அதன் அசிரத்தைப் போக்கை இத்தாலி அரசு கண்டிக்கவில்லை; மாறாக ஊக்குவித்தது. இந்த கூட்டு நடவடிக்கைகளால் ஏற்பட்ட பேரழிவின் நினைவுச் சின்னமே வஜோண்ட் அணைத் திட்டம். கூடங்குளம் அணு மின் நிலையத்தின் பணிகள் இன்று வஜோண்ட் அணையின் வரலாற்றை நினைவுபடுத்துவதாக உள்ளன. 

மன்னார் வளைகுடாவின் கடல் தரையில் 70 கிலோமீட்டர் மற்றும் 35 கிலோமீட்டர் நீளம் கொண்ட இரண்டு  உடைந்து சரியும் தன்மையைக் கொண்ட வண்டல் குவியல்கள் (slumps) உள்ளன. கிழக்குக் குமரி மற்றும் கொழும்பு வண்டல் குவியல்கள் என்று அவற்றிற்கு நிலவியல் அறிஞர்கள் பெயரிட்டுள்ளார்கள். 1982 ஆம் ஆண்டில் வில்லியம் வெஸ்டால் மற்றும் லௌரீ என்ற இரு ஆய்வாளர்கள் அவற்றை முதன் முதலில் கண்டறிந்தார்கள். அவற்றின் கட்டமைப்பை விரிவான ஆய்வுக்குட்படுத்தி அறிவியல் உலகத்திடம் பகிர்ந்துகொண்டார்கள். 1994 ஆம் ஆண்டில் இந்த வண்டல் குவியல்களின் அடிப்பகுதியில் எரிமலை முகவாய்கள் உள்ளன என்பது கண்டுபிடிக்கப்பட்டது. நில அதிர்வுகளின்போதும், புயல் போன்ற நிகழ்வுகளின் போதும் வண்டல் குவியல்கள் நிலைகுலைந்து போகும் தன்மை பெற்றவை. நிலைகுலைந்த வண்டல் குவியல்களால் கடலுக்கடியில் ஏற்படும் நிலச்சரிவுகள் மெகா சுனாமிகளை (100 மீட்டருக்கும் கூடுதலான உயரம் கொண்ட சுனாமி அலைகளை) உருவாக்க வல்லவை என்பது அறிவியல் உலகம் அறிந்த உண்மை. இந்த வண்டல் குவியல்கள் கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து வெறும் 90 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளன.

vajont_dam_620

வாஜோண்ட் அணைக்கட்டின் அமைவிடத்தின்  நிலவியல் உண்மைகளை உதாசீனம் செய்த SADE நிறுவனத்தைப் போலவே இந்திய அணுசக்திக் கழகமும் இந்த வண்டல் குவியல்களினால் ஏற்பட வாய்ப்புள்ள பேரிழிவு நிகழ்வுக்கான சாத்தியப்பாட்டை ஆய்வுக்குட்படுத்த இன்றளவும் மறுத்து வருகிறது.  இந்த சூழ்நிலையில், வஜோண்ட் அணைக்கட்டின் வரலாற்றைப் படிக்கும்போது எப்படிப்பட்ட நிலவியல் பேரிடரையும், சமூக விளைவுகளையும் நாம் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கிறோம் என்பதைத் தெளிவாக உணர்ந்து கொள்ள முடியும்.
................

வஜோண்ட் அணைக்கட்டானது உலகத்தின் மிக உயர்ந்த அணைக்கட்டுகளில் ஒன்றாகும். அதன் உயரம் 262 மீட்டர். வடக்கு இத்தாலியில் உள்ள மாண்டெ டாக் (Monte Toc) மலை அடிவாரத்தில் இந்த அணை எழுப்பப்பட்டது.

1925-28 ஆம் ஆண்டுகளில் முசோலினி அரசின் நிதி அமைச்சராக இருந்த குயுசெப் வால்ப்பி (Gueseppe Volpi)-க்கு சொந்தமான ஆட்ரியாடிக் மின்சாரக் குழுமத்தினால் (Societa Adriatica di Elettricita – SADE) கட்டப்பட்டதே இந்த அணை. நாட்டின் முன்னேற்றத்திற்காக என்ற பெயரில் கட்டப்பட்ட்ட இந்த அணையை அந்தப்பகுதியின் அனைத்து கிராம-நகர மக்கள் கடுமையாக எதிர்த்தனர். இருப்பினும் இராணுவம் மற்றும் காவல்துறையினரால் மக்கள் போராட்டங்கள் ஒடுக்கப்பட்டன. 1957 ஆம் ஆண்டு அணையின் கட்டுமானப் பணிகள் தொடங்கியபோது, அணையின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அனைத்து நிலவியல் ஆய்வுகளையும் முழுமையாக செய்தாகிவிட்டதாக SADE அறிவித்தது. எதிர்பாராத விதமாக, 1959 ஆம் ஆண்டில் மாண்டெ டாக் மலையை ஒட்டி சாலைகளை அமைத்தபோது நிலமானது பல இடங்களில் பிளந்திருப்பது கண்டறியப்பட்டது. இதனை ஒட்டி எழுந்த மக்கள் போராட்டங்களின் விளைவாக புதிய நிலவியல் ஆய்வுகளை மேற்கொள்ள SADE நிர்ப்பந்திக்கப்பட்டது. புதிய ஆய்வுகள் பல அதிர்ச்சிமிக்க முடிவுகளை முன்வைத்தன.

vajont_dam_tragedyஅணையின் தென்புற நீர்ப்பிடிப்புப் பகுதியை ஒட்டியிருக்கும் மாண்டெ டாக் மலைப்பகுதியானது உறுதியற்ற நிலவியல் தன்மையைக் கொண்டிருக்கிறது என்றும், அணையில் நீரை நிரப்பினால் இந்த மலைப்பகுதி முழுவதுமே நிலச்சரிவுக்குள்ளாகும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்தனர். அவர்களது எச்சரிக்கையை SADE நிறுவனம் கண்டு கொள்ளவில்லை. 1959 ஆம் ஆண்டு அணையின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்தன. 1960 ஆம் ஆண்டில் அணையை நிரப்புவதற்கான அனுமதியை இத்தாலி அரசு வழங்கியது. அணை நிரப்பப்பட்ட சில மாதங்களிலேயே சிறிய அளவிலான நில அதிர்வுகளும், நிலச்சரிவுகளும் உருவாகத் தொடங்கின. இந்த செய்திகளை வெளியிட்ட பத்திரிகையாளர்களின் மீது “சமூக ஒழுங்கை சீர்குலைக்க சதி செய்வதாக” இத்தாலி அரசு குற்றம் சாட்டியது; அவர்கள் மீது வழக்கும் தொடர்ந்தது.

அந்த ஆண்டு இறுதியில் மிகப்பெரிய நிலச்சரிவு ஒன்று ஏற்பட்டு, நிலச்சரிவின் இடிபாடுகள் அணைக்குள் வீழ்ந்தன. இதன் பிறகு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க முடிவு செய்த SADE, கூடுதலாக நிலச்சரிவில் இருந்து அணையைக் காப்பாற்ற மலையை ஒட்டி தடுப்புச்சுவர் ஒன்றைக் கட்ட முடிவு செய்தது. 1961 ஆம் ஆண்டின் இறுதியில் தடுப்புச்சுவர் கட்டி முடிக்கப்பட்டது. இதன் பிறகு அணையில் மீண்டும் நீர் நிரப்பப்பட்டது. 1962 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அணையின் முக்கால் பாகம் நிரப்பப்பட்டபோது ஐந்து பூகம்பங்கள் ஏற்பட்டன. மக்கள் மீண்டும் போராடத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களது எதிர்ப்பை SADE கண்டுகொள்ளவில்லை. மக்களின் எதிர்ப்பையும் மீறி அணையை முழுஅளவில் நிரப்பிக்கொள்ள இத்தாலி அரசின் அனுமதியைப் பெற்றது.

தண்ணீரை முழு அளவில் தேக்கினால் ஏற்பட வாய்ப்புள்ள நிலச்சரிவு குறித்து SADE நிறுவனத்தின் பொறியியலாளர்கள் புதிய ஆய்வுகளை மேற்கொண்டனர். மிக‌ப்பெரிய நிலச்சரிவுக்கான சாத்தியம் இருப்பதாக அவர்களது ஆய்வுகள் கூறின. நிர்வாகத்தைப் பொறியியலாளர்கள் எச்சரித்தனர். அவர்களது எச்சரிக்கையையும் நிர்வாகம் உதாசீனப்படுத்தியது.

அணைக்கு எதிரான போராட்டம் வலுப்படுவதை உணர்ந்துகொண்ட நிர்வாகம் வஞ்சக நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டது. SADE நிறுவனத்தை இத்தாலி அரசே ஏற்று நடத்துமாறு அரசிடம் கோரிக்கை வைத்தது. நிறுவனத்தை அரசு ஏற்றுக்கொண்ட பின்னரும் கூட, அதன் தலைமை நிர்வாகிகளாக SADE -இன் பழைய முதலாளிகளே இருக்க வேண்டும் என்று இத்தாலி அரசை SADE கேட்டுக் கொண்டது. அந்த விருப்பத்தை இத்தாலி அரசு நிறைவேற்றவும் செய்தது.

1963 ஆம் ஆண்டில் பொதுத் துறை நிறுவனமாக மாறிப்போன SADE, அணையை மீண்டும் முழுமையாக நிரப்ப முடிவு செய்தது. ஜூலை மாதம் அணையில் நீர் முழுமையாக நிரப்பப்பட்டது. அப்போது கடந்த காலத்தைப் போலவே நில அதிர்வுகளும், நிலச்சரிவுகளும் மீண்டும் உருவாகத் தொடங்கின. செப்டம்பர் 13 ஆம் தேதியன்று மாண்டெ டாக் மலையின் ஒரு பகுதி முழுவதும் மெல்லச் சரியத் தொடங்கியது. செப்டம்பர் 26 ஆம் தேதி அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க நிர்வாகம் முடிவு செய்தது. நீர்மட்டத்தைக் குறைத்துக் கொண்டிருக்கும்போதே மலைப்பகுதி மேலும் அதிகமாக சரியத் தொடங்கியிருந்தது. நிகழப்போகும் பேரிடர் குறித்து பகுதி மக்களிடம் எச்சரிக்க எவ்வித முயற்சியையும் அணைக்கட்டு நிர்வாகம் எடுக்கவில்லை.

1963 அக்டோபர் 9 ஆம் தேதி மாலை நேரம் அந்தப்பகுதியில் கடுமையான மழை பெய்யத் தொடங்கியிருந்தது. இரவு 10.39 மணிக்கு மாண்டெ டாக் மலையின் ஒரு பகுதி முழுவதுமே அணைக்குள் சரிந்து விழுந்தது!

பேரிடர்க்குள்ளான பகுதியில் பாதிக்கப்பட்ட பெண்மலையின் இடிபாடுகள் அணையின் நீருக்குள் விழுந்ததால் அணையில் இருந்த சுமார் 5000 கோடி லிட்டர் தண்ணீரானது 250 மீட்டருக்கும் அதிகமான உயரத்திற்கு மேலெழும்பியது. 262 மீட்டர் அணை உயரத்தையும் தாண்டி அது சுற்றியிருந்த பகுதிக்குள் பாய்ந்தது.

லாங்கரோன், பிராகோ, ரிவால்டா, வில்லனோவா, பே ஆகிய கிராமங்களை அது தரைமட்டமாக்கியது. சுமார் 2000 பேர் கொல்லப்பட்டனர். இதற்குப் பிறகே வஜோண்ட் அணைக்கட்டுத் திட்டம் ஒருவழியாகக் கைவிடப்பட்டது.

எவராலும் எதிர்பார்க்க முடியாத இயற்கை செயல்பாடுதான் இந்த நிகழ்வுக்கான காரணம் என்று இத்தாலி அரசு அறிவித்தது. ஊடகங்களில் இது குறித்து வாதி-பிரதிவாதி சண்டைகள் நடந்தன. இது கடவுளின் செயல் என்று பல பத்திரிகைகள் எழுதின. இது எதிர்பாராத இயற்கை நிகழ்வுதான் என்று பிரதம மந்திரி ஜியோவான்னி லியோன் சத்தியம் செய்தார். ஆனால் அடுத்து வந்த தேர்தலில் அவர் தோற்றுப் போனார். தோல்வி அடைந்த மறுநாளே அவர் மக்களின் படுகொலைக்குக் காரணகர்த்தா என்று குற்றம் சாட்டப்பட்ட SADE நிறுவனத்தின் மூத்த வக்கீலாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

SADE -க்கு எதிரான நீதிமன்ற விசாரணைகள் மக்களால் நெருங்கமுடியாத மலை நகரமான L'Aquila – வில் நடத்தி முடிக்கப்பட்டது. SADE நிறுவனத்தின் அதிகாரிகள் வெகு சிலருக்கே தண்டனை அளிக்கப்பட்டது. மிகவும் குறைவான தண்டனையை அவர்களுக்கு வழங்கி விசாரணையை நீதிமன்றம் முடித்துக் கொண்டது. SADE நிறுவனத்திற்கு எதிராக எவ்வித நவடிக்கையையும் எடுக்க முடியாது என்று இத்தாலி அரசாங்கம் திட்டவட்டமாகக் அறிவித்தது. ஆனால், மனசாட்சியின் உறுத்தலால் பாதிக்கப்பட்ட SADE நிறுவனத்தின் பொறியியாளரான மரியோ பேன்சினி ஐந்தாண்டுகள் கழித்து 1968 ஆம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டார்.

பொறியியல் மற்றும் நிலவியல் அசிரத்தையால் மனிதகுல வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட உலகின் மிகப் பெரிய ஐந்து பேரிடர் நிகழ்வுகளில் ஒன்றாக 2008 ஆம் ஆண்டில் வஜோண்ட் பேரழிவை யுனெஸ்கோ அறிவித்தது.

இந்திய அணுசக்திக் கழகமானது கூடங்குளம் அமைவிடத்தின் நிலவியல் மற்றும் கடலியல் உண்மைகளை அறிந்துகொள்ளத் தேவைப்படும் எவ்வித முயற்சியையும் இன்றளவும் எடுக்க மறுத்து வருகிறது. அதன் போக்கைக் கண்டிக்க வேண்டிய அணு சக்திக் கட்டுப்பாட்டுக் கழகத்தை அது விலங்கிட்டு சிறையில் அடைத்து வைத்துள்ளது. மத்திய அரசும் இந்த செயல்பாட்டை ஊக்குவித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஒரு வஜோண்ட் பேரழிவு உருவாவதற்கான அனைத்து வாய்ப்பும் உருவாகியுள்ளது. 

இதைத் தடுக்க என்ன செய்யப் போகிறோம்?

- ரா.ரமேஷ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It