‘கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தின் மூலம் இந்தியாவின் தொழில்நுட்ப முன்னேற்றத்தைத் தடுக்கிறார்களே!’ என ஒரு ரசிய ஏகாதிபத்தியவாதி அண்மையில் மதுரையில் கூறியுள்ளார்.
அண்மையில் மதுரை காந்தி அருங்காட்சியகத்தில், கலாச்சார ஒத்துழைப்புக்கும் நட்புறவுக்குமான இந்தியச் சமூகம் என்னும் ஓர் அமைப்பு கூடங்குளம் அணுமின்நிலையத்திற்கு ஆதரவாக ஒரு பரப்புரைக் கூட்டம் நடத்தியது. அதில் மதுரை ஆதீனம் உட்படப் பல முக்கியமான பிரமுகர்களும் கலந்துகொண்டுள்ளனர். அக்கூட்டத்தில் கலந்துகொண்ட ரசியத் தொழில்நுட்ப அதிகாரிகளில் ஒருவரான எவ்ஜினி என்.டட்கின் என்பவர்தான் மேலே கண்டவாறு இந்தியாவின் முன்னேற்றம் தடைபடுகிறதே எனப் புலம்பி உள்ளார்.
அத்தோடு மட்டுமல்லாமல் ‘தம்மைத் தாமே தலைவர்களாக அறிவித்துக் கொண்ட சிலர் இந்திய மக்களின் உரிமைகளுக்காகத் தாம் பேசுவதாகப் பொய்யாகக் கூறிக்கொண்டு இருக்கிறார்கள்...எங்களுக்குத் தெரிந்த விவரங்களின் அடிப்படையில், அறுபது விழுக்காடு இந்திய மக்கள் அணுஉலைக்கு ஆதரவாக உள்ளனர் என என்னால் கூற முடியும்...இந்த முக்கியமான பிரச்சினையில் இந்திய அரசாங்கம் அமைதியாகவும், செயலற்றும் இருப்பது எங்களுக்கு வியப்பை அளிக்கிறது.’(The Hindu,நாள்:20.1.2012) என அவர் நஞ்சைக் கக்கி உள்ளார். இந்திய அரசாங்கம் கடுமையான முறையில் அணுஊலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஒடுக்கவேண்டும் என அரசைத் தூண்டி விடுகிறார்.
நமது நாட்டின் உண்மையான மக்கள் தலைவர்கள் யார்? அவர்களுக்கு உள்ள தகுதிகள் யாவை? என்பது பற்றிப் பேச ஒரு அந்நிய நாட்டவருக்கு என்ன உரிமை இருக்கிறது? இந்த உரிமையை அவருக்கு யார் அளித்தார்கள்? இந்தியாவின் இறையாண்மை என்னவாயிற்று? இந்தியா கேட்பாரற்றுத் திறந்து கிடக்கும் ஒரு வீடுதானோ? எந்த நாய் வேண்டுமானாலும் இங்கு நுழையலாமோ? இந்திய சுதந்திரத்தின் கதி இதுதானோ?
ரசியத் தொழில்நுட்ப அதிகாரிகளுக்கு இந்த நாட்டு முன்னேற்றத்தில் அவ்வளவு அக்கறை எதற்கு? அணுமின் நிலையத்தை நிறுவுவதில் அவர்களுக்குக் கிடைக்கும் கொள்ளை இலாபம்தான் அதற்குக் காரணம். ‘மாப்பிள்ளை செத்தா என்ன, பொண்ணு செத்தா என்ன, மாலைக்காரனுக்கு மாலைப் பணம் வந்தாச் சரி’ என்ற கதைதான்.
கீழை நாட்டு மக்களை நாகரிகப்படுத்தும் பெரும் சுமை எங்கள் தோளின் மீது உள்ளது எனக் கூறித் தங்களது காலனிய ஆதிக்கத்தை நியாயப்படுத்தியது அன்றைய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். இந்தியாவைத் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றுகிறோம் எனக் கூறிக்கொண்டு புதிய காலனியக் கொள்ளையை நியாயப்படுத்தி வருகிறது இன்றைய ஏகாதிபத்தியக் கூட்டம்.
அதற்காகப் பல்வேறு ஊடகங்களின் மூலமும், ஊடகங்களால் ஊதிப்பெருக்கி வைக்கப்பட்டு பெரும் பிம்பங்களைக் கொண்டுள்ள அப்துல் கலாம் போன்ற தொழில்நுட்ப அதிகாரிகள் மூலமும் நமது நாட்டின் முன்னேற்றத்திற்காகப் புதிய தொழில்நுட்பத்தின் அவசியம் பற்றி மக்களிடையே தீவிரமான பரப்புரையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது இந்திய ஆளும் வர்க்கம். இந்த அடிப்படையிலேயே மேலே குறிப்பிடப்பட்டுள்ள கூட்டமும் நடந்துள்ளது.
ஆனால் இவர்கள் எல்லோரும் ஒன்றை மறந்து விடுகிறார்கள். தங்களுடைய வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் ஏற்ற தொழில்நுட்பம் எது என்பதைத் தேர்ந்தேடுத்துக் கொள்ளும் உரிமையும், தங்களுடைய விருப்பத்திற்கு எதிராகத் திணிக்கப்படும் எதனையும் ஏற்றுக்கொள்ள மறுக்கும் உரிமையும் மக்களுக்கு உள்ளது என்பதை மறந்து விடுகிறார்கள்.
அறுபது விழுக்காடு மக்கள் விரும்புகிறார்கள் என்பதற்காக நாற்பது விழுக்காடு மக்களின் உயிரைப் பணையம் வைக்கலாம் என்பது காட்டுமிராண்டி காலச் சட்டமாக இருக்கலாம். ஆனால் இந்த இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அதை யாரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அதை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனக் கூறுபவர்கள் காட்டுமிராண்டிகளாகத்தான் இருக்க வேண்டும்.
மக்கள் தலைவர்கள் எனக் கூறிக் கொள்ளும் மக்கள் பிரதிநிதிகளின் உண்மையான கடமை மக்களின் விருப்பத்தை அறிந்து அதை நிறைவேற்றுவதுதான்.
‘சொர்க்கத்திற்கே அழைத்துச் செல்வதாக இருந்தாலும் மக்கள் அதை விரும்பாதபோது அவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் செல்லக்கூடாது.’ தங்களுடைய தலைவிதியைத் தீர்மானித்துக்கொள்ளும் உரிமை மக்களுக்கு உள்ளது என்பதை ஒப்புக்கொள்வதுதான் மக்கள் பிரதிநிதிகளின் தலையாய கடமை. அவர்கள்தான் உண்மையான மக்கள் தலைவர்கள்.
எனவே இந்த நாட்டு அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி மக்கள் பிரதிநிதிகளாக உள்ளவர்கள் அனைவரும் மக்கள் தலைவர்களாக ஆகிவிட முடியாது. தலைமை அமைச்சராக இருப்பதாலேயே ஒருவர் மக்கள் தலைவராகி விடமுடியாது. தேர்தலில் மக்களைச் சந்திக்காமலே மேலவை உறுப்பினராகி ஒரு நாட்டின் தலைமை அமைச்சராகும் கூத்து இந்த நாட்டைத் தவிர வேறு எந்த நாட்டிலும் நடக்க முடியாது. உறுதியாக அவர் உண்மையான மக்கள் தலைவராகி விட முடியாது. அவருக்கு நமது மக்கள் நலனில் அக்கறை கிடையாது. அவருடைய அக்கறை எல்லாம் பன்னாட்டு முதலாளிகள் மற்றும் இந்த நாட்டுப் பெரும் முதலாளிகளின் நலன்கள் மீதுதான். மக்களின் நலனில் அக்கறை கொள்ளாத இத்தகைய தலைமை அமைச்சரும் மக்கள் பிரதிநிதிகளும் பெயரளவில்தான் மக்கள் தலைவர்கள்.
மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் மீது அக்கறை கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்கு மக்களுடன் இணைந்து அவர்கள் போராடுவதில்லை. மக்கள் போராட்டத்தின்போது அவர்கள் காணாமல் போய்விடுகிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் மக்களுடைய போராட்டத்தை உடைப்பதற்காக அவதூறுகளைப் பரப்புவது, சாதி, மத, இனப் பிளவுகளை உருவாக்குவது, பொய் வழக்குகள் போடுவது, அடக்குமுறைகளை ஏவி விடுவது என அனைத்துச் சதி வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். ஆளும் வர்க்கம் வீசி எறியும் எலும்புத் துண்டுகளுக்காக மக்களுக்குத் துரோகம் செய்கிறார்கள்.
இந்த நிலையில் மக்களின் நலன்களுக்காக, மக்களுடன் இணைந்து களத்தில் நிற்பவர்கள்தான் உண்மையான மக்கள் தலைவர்களாக இருக்க முடியும். மக்களின் வாழ்வோடும் வளர்ச்சியோடும் தங்களது வாழ்வையும் வளர்ச்சியையும் இணைத்துக் கொண்டவர்கள்தான் மக்கள் தலைவர்களாக முடியும். வரலாறு அவர்களைத்தான் உண்மையான மக்கள் தலைவர்களாக ஏற்றுக் கொள்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் இந்த எளிய உண்மையை எப்பொழுதும் ஏற்றுக்கொள்வதில்லை. அதிகாரத்திலிருந்து மக்களால் வீழ்த்தப்படும்போதுதான் அவர்கள் அந்த உண்மையை ஏற்றுக் கொள்கிறார்கள்..
.இங்குள்ளவர்கள் அதற்கு விதிவிலக்கு அல்ல.