1969 ஜனவரி 20 ஆம் நாள்...

உடல் நலிவுற்று சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் அண்ணா. உற்சாகம் ததும்ப புன்னகை பூத்த முகத்துடன் மருத்துவமனையில் வந்து இறங்கிய அண்ணா, ஏராளமான புத்தகங்களுடன் உள்ளே நுழைந்தார்.

Annaduraiஅங்கு அவர் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வகையில் ஏ.சி அறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவரை அங்கும் இங்கும் அழைத்துச் செல்ல சக்கர நாற்காலி தயாராக இருந்தது. அமெரிக்காவிலிருந்தும் பம்பாயிலிருந்தும் புற்றுநோய் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அண்ணாவுக்கு என்ன ஆகுமோ, ஏதாகுமோ என்ற பதைபதைப்பில் தமிழக மக்கள் ஆழ்ந்தனர். மருத்துவமனையின் ஒவ்வொரு அசைவுகளையும் ஊடகங்கள் செய்தியாக்கிக் கொண்டிருந்தன.

திமுக பொருளாளர் சாதிக் பாட்சா தமது அறிக்கைகளின் மூலம் அண்ணாவின் நிலை பற்றிய அறிவிப்புகளை செய்து கொண்டிருந்தார். இத்தனை பரபரப்பும் பதற்றமும் சூழ்ந்து நிற்க அண்ணா மட்டும் அமைதியாக, தாம் கொண்டுவந்த புத்தகங்களை படித்துக் கொண்டிருந்தார்.

உயிர் போகும் வேளையில் கூட வாசிப்பை நிறுத்தாத அன்றைய முதல்வர் எங்கே..? உலகத் தரத்துடன் கூடிய ஒரு வாசிப்புச் சாலையை உருக்குலைக்க நினைக்கும் இன்றைய முதல்வர் எங்கே..?

புற்றுநோய் முற்றிய நிலையிலும் புத்தகங்களோடு வந்திறங்கி, மருத்துவமனையைக் கூட நூலகமாக மாற்றினார் அன்று அண்ணா! என்ன நோய் முற்றியதோ தெரியவில்லை, அந்த அண்ணாவின் பெயரால் அமைந்த அழகிய நூலகத்தை மருத்துவமனையாக மாற்றத் துடிக்கிறார் இன்று அம்மா!

"ஜெயலலிதா முதல் முறை ஆண்டபோது 'தடா' அரசு நடத்தினார்; அவர் இரண்டாவது முறை ஆண்டபோது 'பொடா' அரசு நடத்தினார்; இப்போது மூன்றாம் முறை ஆளும்போது 'தடாலடி' அரசு நடத்துகிறார்" என அண்ணா நூலக மீட்புப் போராட்டத்தின்போது சொன்னார் மக்கள் கவிஞர் இன்குலாப்.

ஜெயலலிதாவின் தடா அரசு, ஒடுக்கப்பட்ட முஸ்லிம்களையும், அரச பயங்கரவாத எதிர்ப்பு சக்திகளையும் சூறையாடித் தீர்த்த‌து. ஜெயலலிதாவின் பொடா அரசு, மதவெறி எதிர்ப்புப் போராளிகளையும், தமிழீழ ஆர்வலர்களையும் சிறையில் பூட்டி ரசித்தது.
இப்போது ஜெயலலிதாவின் தடாலடி அரசு, விளிம்பு நிலை மக்களின் அறிவு வளங்களை சிதைத்தும் அழித்தும் வருகிறது. ஆக மொத்தத்தில் எப்போதுமே ஜெயா அரசு, ஒடுக்கப்பட்ட சிறுபான்மை மற்றும் விளிம்பு நிலை மக்களுக்கு எதிராகவே இயங்குகிறது.

கடந்த மே மாதம் ஜெயலலிதா ஆட்சிப் பொறுப்பேற்ற உடன், கோட்டையில் இயங்கி வந்த செம்மொழி தமிழாய்வு நூலகத்தைச் சீர்குலைத்தார்; சமச்சீர் கல்விக்குத் தடை விதித்தார்; தைத் திங்கள் முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்ற நிலையை மாற்றினார்; அரசு இடத்தில் இயங்கி வரும் முத்தமிழ்ப் பேரவையை காலி செய்ய உத்தரவிட்டார்; அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவமனையாக்குவேன் என அறிவிப்பு செய்தார். ஜெயலலிதாவின் இத்தகைய ஒவ்வொரு அறிவிப்புகளின் பின்னாலும் ஒரு பார்ப்பனீயச் சார்பும், இந்துத்துவ சாயலும் இருப்பதைக் காண முடிகிறது.

கல்வியும், கல்வியினால் கைகூடும் அதிகாரமும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மைச் சமூகங்களுக்கு எட்டாக் கனியாய் இருக்கின்றன. அடிப்படையிலேயே தரமான கல்வியைப் பெற்று, கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் ஐஐடி, ஐஐஎம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களிலும் உயர்சாதியினரே கோலோச்சிக் கொண்டிருக்கின்றனர். இத்தகைய சமூக அநீதியைப் போக்கி, அனைத்துத் தரப்பினருக்கும் சமமான தரமான பள்ளிக் கல்வியை வழங்க வழிசெய்கிறது சமச்சீர்க் கல்வி.

காலங்காலமாக கல்வியிலும், அரசு மற்றும் தனியார்த்துறை வேலை வாய்ப்புகளிலும் மேலாண்மை செலுத்தி வரும் உயர்சாதியினரின் பொருளாதார வளமையினால் அவர்களின் குழந்தைகளுக்கு அனைத்து வாய்ப்புகளும் எளிதில் கிடைக்கின்றன. ஆனால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளின் வாசனையைக் கூட நுகர முடியாமல் கூலி வேலை செய்து பிழைத்து வரும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் குழந்தைகளுக்கு அறிவுசார் தளத்தில் எந்த வாய்ப்பும் எளிதில் கிடைப்பதில்லை. இத்தகைய ஏற்றத்தாழ்வு மிக்க நிலையை மாற்றி, நவீன வசதிகளுடன் கூடிய ஒரு பிரம்மாண்ட கட்டிடத்தில், குளிரூட்டப்பட்ட அறையில், மின்விளக்குகள் வெளிச்சத்தில், உலகின் அரிய நூல்களை எல்லாம் கைகளில் ஏந்திய நிலையில், அமைதியாக அமர்ந்து படிப்பதற்கும் அறிவை வளர்ப்பதற்கும் விளிம்புநிலை மக்களுக்கு வரமாக வாய்த்திருக்கிறது அண்ணா நூற்றாண்டு நூலகம்.

jayalalitha_cho_500

உயர்சாதிக் கலைஞர்களின் இசை அரங்கேற்றத்திற்கு ஒரு மியூசிக் அகாடமி இருக்கிறது. நாடகம் நடத்துவதற்கு ஒரு நாரதகாண சபா இருக்கிறது. நடனம் பயில்வதற்கு ஒரு கலாஷேத்ரா இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கலைகளைப் பயிலவும், அரங்கேற்றவும் என்ன இருக்கிறது என்ற கேள்விக்கு விடையாக அமைந்ததுதான் முத்தமிழ்ப் பேரவை. இயல் இசை நாடகத் துறையில் தமிழ் மொழி மற்றும் பண்பாடு சார்ந்த கலைகளையும் கலைஞர்களையும் வார்த்தெடுக்கும் அரும்பணியை அப்பேரவை செய்து வருகிறது.

ஆக, சமச்சீர் கல்வி, அண்ணா நூற்றாண்டு நூலகம், முத்தமிழ்ப் பேரவை ஆகிய எளிய மக்களின் அறிவு வளங்களின் மீதுதான் ஜெயலலிதா தொடர்ச்சியாக கைவைத்துக் கொண்டிருக்கிறார். அவரது இத்தகைய அடாவடிகளை 'ஏதோ கருணாநிதி எதிர்ப்பு' என்ற வகையில் சுருக்கி விடுவதற்கு இங்கே எதிர்க்கட்சிகளும் ஊடகங்களும் முயலுகின்றன. ஆனால், கருணாநிதி எதிர்ப்பு எனும் நிலையைத் தாண்டி ஒரு பார்ப்பனீய அஜெண்டாவை செயல்படுத்துவதற்கு அவர் முனைந்து கொண்டிருக்கிறார் என்பது பற்றி எவரும் இங்கே பேசுவதில்லை.

கருணாநிதி தொடங்கியதை எல்லாம் ஜெயலலிதா முடக்கி விடுவார் என்றால், மதுக்கடைகளை ஏன் முடக்கவில்லை? அண்ணா மேம்பாலம் முதல் அனைத்துப் பாலங்களையும் ஏன் உடைக்கவில்லை? அரசு பொது மருத்துவமனைக்கு கருணாநிதி சூட்டிய ராஜீவ் காந்தியின் பெயரை ஏன் மாற்றவில்லை? எனவே ஜெயலலிதாவின் அதிரடிகளுக்கு 'கருணாநிதி எதிர்ப்பு' மட்டுமே காரணமாக இருக்க முடியாது. அவரது ஒவ்வொரு அசைவிலும் பார்ப்பனீயம் மேலோங்கியிருக்கிறது.

'நான் படிக்கும் கல்வியை நீயும் படிப்பதா?' எனும் பார்ப்பனீய மனோபாவம்தான் சமச்சீர் கல்வியைச் சிதைக்கிறது. 'எனக்குச் சமமாக நீயும் வளர்வதா?' எனும் வெறுப்புணர்வுதான் முத்தமிழ்ப் பேரவையை சூறையாடுகிறது. 'எனக்குக் கிடைத்ததெல்லாம் உனக்கும் கிடைப்பதா?' எனும் ஆத்திரம்தான் அண்ணா நூலகத்தை நிர்மூலமாக்குகிறது.

இந்தக் காட்சிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும்போதே மறுபுறம் கிராமம்தோறும் சேரிகள்தோறும் ஆடு மாடுகளை இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா. ஒடுக்கப்பட்டோரின் அறிவு வளங்களை அழித்து, அவர்களை மீண்டும் ஆடு மாடு மேய்க்கும் நிலைக்குத் தள்ளிக்கொண்டிருக்கிறார். இராஜாஜி கண்ட குலக்கல்வித் திட்டத்தின் நவீன வடிவம் தான், ஜெயலலிதாவின் இன்றைய நடவடிக்கைகள் என்பதில் சந்தேகமேயில்லை.

ஐஐடி வளாகத்தில் அமைந்திருக்கும் உயர்தர நூலகத்திற்குள் நுழைவதை, ஒரு சேரிச் சிறுவனால் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது. ஜெயலலிதா படித்த சர்ச் பார்க் கான்வென்டின் வாசலைக் கூட, ஒரு ஏழை முஸ்லிம் மாணவனால் நெருங்க முடியாது. ஆனால், அண்ணா நூலகத்தில் சேரிச் சிறுவனால் நுழைய முடியும்; அங்கிருக்கும் அறிவுக் கருவூலங்களை அறிய முடியும்; உலக இலக்கியங்களோடு உறவாட முடியும். சர்ச் பார்க் கான்வென்டில் தரப்படும் உயர்தரக் கல்வியை, ஏழை முஸ்லிம் மாணவனால் சமச்சீர்க் கல்வியின் மூலம் பெற முடியும்.

இத்தகைய சமூகநீதிக்கு வேட்டு வைத்து, மீண்டும் மனுதர்ம ஆதிக்கத்தை நிலைநாட்ட ஜெயலலிதா முனைகிறார். அதனாலேயே சோவின், குருமூர்த்தியின், இராமகோபாலனின், தினமலரின் ஆதரவு மழையில் அவர் நனைகிறார்.

- ஆளூர் ஷாநவாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It