2011 அக்டோபர் 29, குளிர் காய்ச்சலால் அவதியுற்று நான் தொடர் சிகிச்சையில் இருந்த நேரம். தமிழகமெங்கும் ஒரு வாரத்திற்கும் மேலான மழை தொடர்ந்து கொண்டிருந்த நாள். சென்னை தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த அந்த மாலைப் பொழுதில், அண்ணன் ஆவடி மனோகரன் அவர்களின் தொலைப்பேசி அழைப்பு. அவரிடமிருந்து அழைப்பு வரும்போதெல்லாம் என்னிடம் இயல்பாகவே மகிழ்ச்சியும் உற்சாகமும் வந்துவிடும். வாரந்தோறும் அரை மணிக்கு குறையாமல் அந்தந்த வார நிகழ்வுகளை அலசித் தீர்ப்போம். ஒரு புதிய செய்தியை தொலைக்காட்சியில் கண்டாலோ, பத்திரிக்கையில் படித்தாலோ நாள் நேரம் எதுவும் நாங்கள் பார்ப்பதில்லை. உடனுக்குடன் தொலைப்பேசியில் பகிர்ந்து கொள்வோம்.

“வணக்கம்! அண்ணன் அவர்களே!” என்றேன். குதூகலத்துடன் குலுங்க குலுங்க சிரித்துக் கொண்டே ‘வணக்கம்’ என்று சொல்லும் குரல் அன்று எதிர் முனையில் இல்லை. “அண்ணன் இல்லை. நான் அந்திரிதாஸ்” என்றது மறுமுனை. ம.தி.மு.க. வழக்கறிஞர் ஆவடி அந்திரிதாஸ் அவர் என்பதை புரிந்து கொண்டேன். “சொல்லுங்கள் தோழர் அண்ணன் இல்லையா?” என்றேன்.

“அண்ணனுக்கு கொஞ்சம் உடம்பு முடியாம ஜி.எச்.ல சேர்த்திருக்கோம்” என்றார் வழக்கறிஞர். அவர் குரலில் வருத்தம் தோய்ந்திருந்தது. அடைமழையும் இடைவிடாமல் நீடித்த குளிர் காய்ச்சலும் என்னை அன்றிரவு மருத்துவமனை செல்லவிடவில்லை.

avadi_manokaranஅக்டோபர் 30 ஞாயிறு. விடியற்காலை 5 மணிக்கு என் அலைப்பேசி அலறியது. வழக்கமாக இரவுகளில் அலைப்பேசியை மௌனச் செயல்பாட்டில் வைப்பவன். நேற்று இரவு 2 மணி உறக்கம் வராமல் படுத்துக் கொண்டேயிருந்தேன். ஜலதோஷம் - காய்ச்சலூடே அண்ணன் உடல்நிலை பற்றிய எண்ணங்களும் வந்து கொண்டேயிருந்ததால் விடியலுக்குச் சற்று முன்புதான் உறக்கம் வந்தது.

உறக்க கலக்கமும் மாத்திரைகளும் சேர்ந்து, அலைப்பேசியை இருக்குமிடமறிந்து எடுக்கவே இரண்டு - மூன்று நிமிடம் ஆகியது. ஆயினும் அலைப்பேசி விடாமல் ஒலித்தது. யாராக இருக்கும் இந்த நேரத்தில்...? அதுவும் விடுமுறை தினத்தில்..? எடுத்தேன். மறுமுனையில் அண்ணியார் “பவா, அண்ணன் உடல் நிலை ரொம்ப மோசமா” முடிக்கவில்லை. அழுகையுடனே தேய்ந்து மறைந்தது அண்ணியின் குரல். அண்ணனின் உடல்நிலை பேராபத்தில் இருக்கிறது எனப் புரிந்து கொண்டேன்.

அன்றைய மழை மூட்டத்தை விடவும் மனம் கலங்கி கசந்தது. உடல் நிலையைப் பொருட்படுத்தாமல் ஒருவாறு மருத்துவமனைக்குக் கிளம்பிச் செல்கையில், 'ஸ்நேகா' சீனிவாசன் அண்ணனின் அலைபேசி அழைத்து, “ஆவடி மனோகரன் அண்ணன் இறந்து விட்டார் என்று செய்தி வருகிறது. உண்மையா.. உனக்கு ஏதாவது தெரியுமா...!" ஒராயிரம் இடி மின்னல்கள் ஒன்று சேர்ந்து தாக்குவதுபோல் இருந்தது. அடுத்தடுத்து வருகிறது நண்பர்களின் அழைப்புகள். அதே தகவல். அதே விசாரிப்புகள். வானத்து அடைமழை இப்போது என் அடி மனதிலிருந்து பெய்யத் தொடங்கியது.

இயக்கங்களில் கருத்தொருமித்த நண்பர்கள் ஒராயிரம் பேர் கிடைப்பார்கள். எனக்கும் அண்ணன் ஆவடி மனோகரனுக்குமான நட்பு தோழமை உணர்வோடு மட்டுமில்லாமல் ஒரு சகோதரப் பாசத்துடன் நிலவியது. முப்பது ஆண்டுகள் அவருடன் எத்தனை எத்தனை நிகழ்வுகள்! என் காப்பாளனாகவும் என் படைப்புகளின் பரப்புரைஞராகவும் அவர் இருந்திருக்கிறார்.

ஈழத்தில் நடந்த இறுதிப்போருக்குப் பின்னால், இனப்படுகொலைகள் தொடர்பாக நான் எழுதிய நூல்களைளெல்லாம் இரண்டு கரங்களிலும் ஏந்திக் கொண்டு, மாவட்டம் மாவட்டமாக  தமிழகம் மட்டுமல்லாமல், இந்தியாவின் பிற நகரங்களிலும், ஏன் மலேசியா - சிங்கப்பூர், கனடா, ஜெர்மனி எனக் கடல் கடந்த நாடுகளில் உள்ள தமிழர் இல்லங்களிலும் கொண்டு போய்ச் சேர்த்தவர் அவர். தமிழின விடுதலையில் அவர் கொண்டிருந்த தீராத வேட்கையே என்னை ஓயாமல் எழுதத் தூண்டியது எனலாம். தமிழகத்தில் இராஜபாளையத்திலும், மும்பை தராவியிலும் என் நூல்களை அறிமுகம் செய்து அவர் ஆற்றிய உரைகள் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்றால் அது மிகையாகாது.

எந்த இடரிலும், இக்கட்டுகளிலும் நின்று ஒளிரும் சுயமரியாதைச் சுடராக கடைசிவரை விளங்கியவர் அண்ணன் ஆவடி மனோகரன். தனி மனித வாழ்க்கைத் துன்பங்கள் அவரைவிட அதிகம் பாதித்த நபர்களை நான் பார்த்ததில்லை. ஆனாலும் எந்நிலையிலும்  சாயாத ஆலமரத்தைப் போல தம் குடும்ப உறவுகளைக் காத்து வந்தது ஒரு சிலருக்கே தெரியும். தன் வாழ்வின் வெம்மை வெளியில் தெரியாமல், எந்த நேரத்திலும் எவருடனும், குலுங்கி குலுங்கி சிரித்துப் பேசும் குணம் அவருக்கு மட்டுமே சாத்தியம். தமிழழ விடுதலைப் போராட்டத்தில் அவருக்குத் தனிப் பெரும் இடமுண்டு. களத்தில் நின்று போராடிய புலித் தோழர்கள் ஆவடி மனோகரன் அவர்களைத் தங்களது தமிழகத்துத் தளபதியாகவே கருதினார்கள்.

தமிழீழ விடுதலைக்கான அனைத்து இடங்களிலும், அதன் தலைவர்கள் மட்டுமல்லாமல், கடைசி கட்டத் தொண்டர் வரை அன்புடன் ஆராதிக்கப்பட்டவர் ஆவடி மனோகரன்.

இளவயதிலேயே விரைவாக தன் வாழ்க்கையை முடித்துக் கொண்ட அண்ணாவைப் போலவே, அவரது இறுதிச் சடங்குக்கும் ஏதோ விரைவாக நடத்தி முடிக்கப்பட்டது. ஏடுகளில் அறிவிப்புக் கொடுத்து அடுத்த நாளில் அவரது இறுதிச் சடங்குகள் நடைபெற்றிருக்குமானால் ஆவடியே அதிர்ந்து போயிருக்கும். தமிழகம் முழுக்க ஆயிரக்கணக்கான தொண்டர்கள் அண்ணனுக்கு உண்டு.

“பொருளாதாரப் பிரச்சினைதான் மனோகரனைக் கொன்றது” என்னும் உண்மையை இரங்கல் கூட்டத்தில் போட்டுடைத்தார் கவிஞர் சிகாமணி. உண்மைதான். இல்லையென்றால் சென்னை பொது மருத்துவமனையில் விடியற்காலை மூன்று மணிக்கு உள் நோயாளியாக சேர்க்கப்பட்ட அண்ணனை ஆறு மணி நேரம் பரிசோதிக்க ஆளில்லை. தீவிர சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாளிக்கு அதுவும் தங்க நிமிடங்கள் (Golden minutes) என்று மருத்துவ உலகில் சொல்வர்கள். தனியார் மருத்துவமனைக்குச் செல்லாமல் அவரைத் தடுத்தது எது? பொருளாதாரம்தான். அதனால்தான் தமிழ்நாடு அவரின் இன்னும் கால் நூற்றாண்டுப் பணியை இழந்திருக்கிறது. “பொருளாதார சிக்கல்களால் ஆவடி மனோகரன் அவர்கள் தன் உடல்நிலையையும் புறக்கணித்திருக்கிறார். இதே பிரச்சினைகளால் அம் மாவீரனின் குடும்பம் நலிவடையக்  கூடாது! அதற்கென என் ஓய்வூதியத்திலிருந்து மாதம் ரூ.2000/- அளிக்கிறேன்” எனக் கூறி கூடியிருந்தோரை நெகிழ்வடையச் செய்தார் முதுபெரும் தமிழறிஞர் கி.த.பச்சையப்பன்.

வேற்றுமை இன்றி பல அமைப்புகளும் இயக்கங்களும் குடும்பநல நிதியை வரிசையாக அறிவித்தது மனோகரன் தொண்டறத்திற்கு கிடைத்த வெற்றி என்றுதான் சொல்லவேண்டும்.

“மாற்று இடங்களிலும் மாற்றுக் கருத்துகளை அஞ்சாமல் சொல்வதற்கு நாங்கள் தயங்கியதில்லை. காரணம் எங்கள் அருகில் ஆவடி மனோகரன் இருந்தார். அவர் இருந்தால் ஆயிரம் படை வீரர்கள் எங்களுக்குப் பாதுகாப்பிற்கு இருக்கிறார்கள் என்று அர்த்தம். இனி அந்த வீரத்தை துணிச்சலை எங்கு காண்பேன்” என கண் கலங்கினார் வழக்கறிஞர் அருள் மொழி. எனக்குள்ளும் அதே கேள்விதான். “கால நூற்றாண்டிற்கும் மேலாக எனக்கு ஒரு பாதுகாப்பு அரணாக விளங்கிய எனது அண்ணன் இனி எங்கு காண்பேன்?” திருமுல்லைவாயிலில் மின் தகனம் முடிந்து ஆவடி பேருந்து நிலையம் வருகிறபோது, கருஞ்சட்டை அணிந்த களிறு நடந்து வருவதுபோல அவர் நடந்து வருவதாய் பிரமை ஏற்படுகிறது. கண்ணெதிரே களிறு போல இருந்தவர் காணாமல் போன மாயத்தை நம்ப முடியவில்லை. விரக்தியும் ஏமாற்றமும் சோகமும் சோர்வும் மனதை ஆட்கொள்ளும் வேளையில், தமிழீழ தேசியத் தலைவரின் வார்த்தைகள்தான் மனதுக்கு ஆறுதல் அளிக்கின்றன. அவை:

“நாள் உயிருக்கு உயிராக நேசித்த தோழர்கள் என்னோடு தோளோடு தோள் நின்று போராடிய தளபதிகள் நான் பல்லாண்டு காலமாக வளர்த்தெடுத்த போராளிகள் களத்தில் விழும் போதெல்லாம் என் இதயம் வெடிக்கும். ஆயினும் நான், சோகத்தால் சோர்ந்து போவதில்லை. இந்த இழப்புகள் தான் என் இலட்சிய உறுதிக்கு மேலும் உரமூட்டியிருக்கின்றன.”

ஆம்! அண்ணின் மறைவு இழப்பன்று. நாம் இயங்குவதற்கான உந்துதல்.

Pin It