நமது நாட்டில் தெரு வணிகம் நினைவுக்கெட்டாத காலந்தொட்டு பல லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. கிராமப்புறத்திலும் நகர்ப்புறத்திலும் ஒவ்வொரு குடியிருப்பிலும், அது சிறிதானாலும் பெரியதானாலும், ஆண்களும் பெண்களும் பலநேரங்களில் குழந்தைகளும் கூட, அசாதாரண வகைப் பொருள்களை கூடைகளில், கைவண்டிகளில் அல்லது சக்கர வண்டிகளில் எடுத்துச் செல்கின்றனர். நடந்து செல்லும்போதோ அல்லது சககரவண்டிகளில் செல்லும்போதோ வீடு வீடாக விற்றுக் கொண்டே செல்கின்றனர். அடிக்கடி அவர்கள் நடைபாதைகளிலோ பூங்காக்களிலோ அமர்ந்து அல்லது வண்டியை நிறுத்தி தங்கள் பண்டங்களை விற்கிறார்கள்.

அவர்களிடமிருந்து தான் பெரும்பாலான நடுதரவர்க்கங்கள் காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள், துணிகள், அலங்காரப் பொருட்கள், பத்திரிக்கைகள், பழைய புத்தகங்கள், மேலும் பெரும்பாலான தங்கள் அன்றாடத் தேவைகளைக் கட்டுபடியாகக் கூடிய விலைகளில் வாங்குகிறார்கள். உழைப்பு, தொழில்முனைவு மற்றும் வேறு சந்தை வெளிகள் இல்லாத பல லட்சக்கணக்கான அமைப்புசாராத் தொழிலகங்கள் ஆகியவற்றின் உற்பத்திப் பொருட்களை தெரு வணிகர்கள் நமது கரங்களில் கொண்டுவந்து சேர்க்கிறார்கள். ஏழைமக்களுக்கு வாழ்வாதாரமாகவும் திறமையான செலவு குறைந்த சில்லறை வணிகமாகவும் பொருளாதாரத்திற்கு அவர்கள் பெரும் பங்களிப்புச் செய்தாலும், தெரு வணிகர்கள் பெரும்பாலான நகரங்களிலும் பெருநகரங்களிலும் சட்டவிரோதிகளைப் போல கருதப்பட்டு, குடிமை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினரால் தொடர்ச்சியாகத் துன்புறுத்தப்படுகின்றனர். அதிகரித்து வரும் நகர்ப்புற நிலமதிப்பால் தூண்டப்பட்டு, ஆக்கிரமிப்பை அகற்றுவது மற்றும் போக்குவரத்தை இலகுவாக்குவது என்ற பெயரில் அவர்களைத் துரத்தியடிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அண்மைக்காலங்களில், தெரு வணிகர்களின் எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்துள்ளது. சிறிய நகரத்திலிருந்து மாநகரம் வரை அனைத்து நகர்புறப் பகுதிகளிலும் அவர்கள் நீக்கமற நிறைந்திருகிறார்கள். ஏறத்தாழ மக்கள் தொகையின் இரண்டு விழுக்காடு தெரு வணிகத்தை சார்ந்திருப்பதாக மதிப்பிடப்படுகிறது. நாட்டில் தெரு வணிகர்களின் மொத்த எண்ணிக்கை இப்போது குறைந்தது 60 லட்சம் இருக்கும், அதன் பொருள் 3 கோடி மக்கள் தங்கள் உயிர் வாழ்க்கைக்காக தெரு வணிகத்தைச் சார்ந்திருக்கிறார்கள் என்பதாகும். இந்த எண்ணிக்கையின் பலமடங்கு மக்கள், நகர்ப்புறத் தெருவணிகத்தின் மூலம் மலிவான சில்லரை வணிகத்தால் பயனடைகின்றனர்.

நடைமுறைப்படுத்துவதற்கான தேவை

தெரு வணிகம் இன்று வணிக வளாகங்களாலும் பேரங்காடிகளாலும் மேலும் அச்சுறுத்தப்பட்டுக் கொண்டிருகிறது. இந்தத் தொழிலைச் சார்ந்திருக்கும் பல லட்சக்கணக்கான மக்களின் உரிமைகளை தாமதமாகப் புரிந்து கொண்டு இந்திய அரசாங்கம் 2004லும் மீண்டும் 2009லும் தெரு வணிகர்கள் குறித்த தேசியக் கொள்கையை அறிவித்தது. இந்தக் கொள்கைகள் முற்போக்கானவை, ஆனால் அவை நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. ஏனென்றால் அவற்றிற்கு சட்ட நிர்ப்பந்தம் இல்லை. சட்டரீதியாக நடைமுறைப்படுத்தக் கூடிய உரிமைகள் மட்டுமே இந்த பாதிக்கப்படும் நகர்ப்புற ஆக்கப் பிரிவுக்கு நீதி வழங்க முடியும்.

இப்போது அரசாங்கம் ஒரு “முன்மாதிரி” சட்டத்தை வரைவு செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் முன்மொழியப்படும் சட்டமுன்வரைவில் மோசமான குறைபாடுகள் இருப்பதாகவும் அது தெரு வணிகர்களின் வாழ்வாதார உரிமைகளைப் போதுமான அளவுக்குப் பாதுகாக்கத் தவறுவதாகவும் தெரு வணிகர்கள் தேசிய சங்கம் மற்றும் சேவா போன்ற அமைப்புக்கள் நம்புகின்றன.

முதலாவது, இந்திய அரசாங்கம் அதன் சொந்த மத்திய சட்டத்தை இயற்றவில்லை, ஆனால் அதற்குப் பதிலாக மாநில அரசாங்கம் பின்பற்றுவதற்கான அதன் மாதிரி சட்டத்தை முன்மொழிந்துள்ளது. தெரு வணிகத்தைப் பாதுகாப்பது மாநிலங்களின் நல்லெண்ணத்திற்கு விடப்படுமானால், பல மாநிலங்கள் அதை நிறைவேற்றாமல் போகலாம். தேசியக் கொள்கையின் கீழ், அமைப்பு வடிவம், சட்ட வரையறை, அதை நடைமுறைப்படுத்துவது ஆகியவை மாநிலங்களின் பொறுப்பாகும். துரதிர்ஷ்டவசமாக, சக்திவாய்ந்த நகர்ப்புற நலன்கள் அத்தகைய சட்டங்களையும் மற்றும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதையும் தடுத்து நிறுத்தி வருகின்றன. தெருவணிகர்கள் குறித்த முதலாவது கொள்கை அறிவிக்கப்பட்டு ஏழு ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் அனைத்து பெரிய, சிறிய நகர்ப்புறப் பகுதிகளிலும் தெருவணிகர்கள் துன்புறுத்தப்படுவதும் இரக்கமற்ற முறையில் அப்புறப்படுத்துவதும் தொடர்கிறது. தெருவணிகர்களுக்கான சட்டத்துடன் ஒத்துப்போகாத அனைத்து மாநில நகராட்சி சட்டங்களுக்கும் தேசிய சட்டம் மேலோங்கியிருக்க வேண்டும்.

தெரு வணிகர்களில், அலைந்து திரிந்து விற்பனை செய்பவர்கள் மற்றும் ஒரு சந்தையில் அல்லது சாலையோரங்கள் அல்லது ஒரு குறிப்பிட்ட இடத்தில் விற்பனை செய்பவர்கள் ஆகிய மிகவும் பொதுவான இரண்டு வகையினர் இருகின்றனர். நிலையான இடங்களில் இருப்பவர்களை விட அலைந்து விற்பனை செய்பவர்கள் மிகவும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர், மேலும் அவர்கள் அவர்களுக்கென்று ஒரு இடத்தைப் பெற விரும்புகின்றனர். அலைந்து திரியும் வணிகர்கள் துன்புறுத்தப்படுவதோடு காவல்துறையினருக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் கையூட்டுத் தர வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில், நிலையான வணிகர்கள் காவல் துறையாலும் நகராட்சி அதிகாரிகளாலும் மிகக் கொடூரமாக அப்புறப்படுத்தப்படுவதை எதிர்நோக்குகின்றனர். அலையும் வணிகர்கள் மற்றும் நிலையான வணிகர்கள் இருவருக்குமே ஒரு வெளிப்படையான தாராளமான பதிவு முறையும், நிலையான வணிகர்களுக்கு இடம் ஒதுக்குவதும் தேவைப்படுகிறது.

ஒரு தெரு வணிகரின் வாழ்க்கைக்கு மூன்று விடயங்கள் முக்கியம், அவை, இடம், இடம், இடம்! என்று தெருவணிகர்களின் பிரதிநிதி ஒருவர் என்னிடம் கூறினார். எனவே தான் தெருவணிகர்களின் பாதுகாப்புக்கான எந்த ஒரு சட்டத்திற்கும் ‘இயற்கை சந்தைகள்' மையமாக இருக்கவேண்டும். 'இயற்கை சந்தை' என்பது 'உள்ளாட்சி அதிகாரிகளால் மதிப்பிடப்பட்ட, குறிப்பிட்ட வகையான பொருட்கள் அல்லது சேவைகளை பாரம்பரியமாக குறிப்பிட்ட காலத்திற்கும் மேலாக வாங்குபவர்களும் விற்பவர்களும் கூடிய சந்தை இடம்' ஆகும். அது 'சந்தைக் கோரிக்கை' என்ற கோட்பாட்டின் அடிப்படையில் நிறுவப்பட்டதாகும். மிக அதிகமான வாடிக்கையாளர் கோரிக்கை இருக்குமிடத்தில் தெரு வணிகர்கள் கூடுகிறார்கள் எனபதையும் நிகழ்தகவுக்குரிய தெரு வணிகத்துக்கான மையமான இடத்தையும் அங்கீகரிப்பதாகும். உலகமெங்கும் வணிகர்கள் தங்கள் பொருள்களுக்குத் தேவை மிகுதியாக இருக்கும் பேருந்து நிலையங்கள், தொடர்வண்டி நிலையங்கள், குடியிருப்புப் பகுதிகள், அலுவலகங்கள், பூங்காக்கள், திரை அரங்குகள், வழிபாட்டு இடங்கள் போன்ற இடங்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

தெரு வணிகர்களை இயற்கைச் சந்தைகளிலிருந்து வெளியேற நிர்ப்பந்திப்பது திறன்வாய்ந்த பொருளாதாரப் பரிமாற்றங்களை தடுத்து பொருளாதார வீணடிப்புக்கு இட்டுச் செல்கிறது. இயற்கைச் சந்தைகளைப் புறக்கணிக்கும் ஒழுங்குபடுத்தும் அதிகார அமைப்புகள் வணிகர்களை சட்ட விரோதிகளாக்கிவிட்டு, நுகர்வோரை அலைய விடுகின்றன. வணிகமண்டலங்களுக்கான இடங்களை வரையறை செய்யும்போது இயற்கைச் சந்தைகளின் அடிப்படையில் செய்யவேண்டும். மேலும் வணிக மண்டலங்களாக வரையறுக்கப்படும் மொத்தப் பரப்பு இருக்கும் அனைத்து தெரு வணிகர்களுக்கும் போதுமான இடமளிப்பதாகவும் நகர்ப்புற வளர்ச்சிக்கு ஏற்ப அவர்களுடைய இயற்கையான வளர்ச்சி விகிதத்திற்கு இடமளிக்கும் வகையிலும் இருக்கவேண்டும்.

சக்தியற்றவர்கள்

நவீன நகர்ப்புற பொருளாதாரங்களிலிருந்தும் தெருவணிகர்கள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் நகர்ப்புற நிலத்தின் மதிப்பு அதிகரித்து வருகிறது. பொது இடத்தைப் பலவற்றுக்கும் பயன்படுத்துவதில் போட்டி ஏற்படுகிறது. தெருவணிகர்களின் பேரம்பேசும் திறன் குறைவாக இருக்கிறது. தெருவணிகர்களிடம் பலம் இல்லாதநிலை பல மாநகராட்சிகள் தெரு வணிகர்களுக்கு வழங்கும் உரிமங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு இட்டுச் செல்கிறது. அகமதாபாத் மாநகராட்சியை எடுத்துக் கொண்டால், அது அண்மையில் அகமதாபாத்துக்கு ஒரு திட்டத்தை இறுதி செய்துள்ளது. அகமதாபாத்தில் ஏறத்தாழ 1.5 லட்சம் தெருவணிகர்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய திட்டத்தில் இவர்களில் 22,500 உறுதியாக வெளியேற்றபடுவர், 7000 பேர் வெளியேற்றப்படமாட்டார்கள், மேலும் அவர்களுக்கு ஒரு வகையான சட்டப்பதிவு அல்லது உரிமம் வழங்கப்படும் என்று யூகிக்கப்படுகிறது. எஞ்சியவர்களின் தலைவிதி நிச்சயமற்றதாக இருக்கிறது.

தெரு வணிகத்தின் மூலம் இப்போதுள்ள வேலை வாய்ப்பையும் வாழ்வாதாரங்களையும் பாதுக்காப்பதும் வளரும் மாநகரங்களில் வேலைவாய்ப்பின் எதிர்காலத்திற்கு வாய்ப்புக்களை வழங்குவதும், அதேநேரத்தில் நுகர்வோர், நடைபாதை, போக்குவரத்து ஆகியவற்றின் நலன்களைப் பாதுகாப்பதும் இந்தச் சட்டத்தின் நோக்கமாக இருக்க வேண்டும். குறைந்தபட்ச அளவிலான நெறிமுறைகளுடன் கூடிய இயற்கைச் சந்தைகளின் கோட்பாடு இதற்கான வழியை எடுத்துக் காட்டுகிறது. ஆய்வுகளின் மூலம் இப்போதுள்ள தெருவணிகர்களை புகைப்படம் எடுப்பது, தாமாக முன்வந்து பதிவு செய்வோர் ஆகிய முறைகளில் அடையாளம் காண்பது நகராட்சி மற்றும் மாநில அதிகாரிகளின் பணியாகும். நிலவும் பெரிய, சிறிய இயற்கைச் சந்தைகளை அடையாளம் காண்பது, இருக்கும் சந்தைகளை திட்டமிட்ட முறையில் முடிந்தவரை ஒழுங்குபடுத்துவது, அனைத்து நகர்ப்புற எதிர்காலத் திட்டங்களிலும் இரண்டு விழுக்காடு இடங்களை தெரு வணிகர்களுக்காக ஒதுக்குவது, இயற்கைச் சந்தைக் கோட்பாட்டுக்கு ஒத்திசைந்த வகையில் இந்த இடங்களைத் திட்டமிடுவது ஆகியவை செய்யப்பட வேண்டும்.

எந்த ஒரு நகரத்திலும் பகுதியிலும் தெருவணிகர்களை வைத்துக்கொள்வதற்கான அளவீட்டைத் தீர்மானிப்பதிலும் வணிகம் செய்யும் மற்றும் வணிகம் தேவையற்ற இடங்களையும் இயற்கைச் சந்தைகளை அடையாளம் காண்பதிலும் அவற்றை வரையறை செய்வதிலும் விளக்கமான நடைமுறை உறுதியாகவும் வெளிப்படையாகவும் இருக்கவேண்டும்.

இப்போது தெரு வணிகர்களுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையில் பதிவு செய்வது, உரிமம் வழங்குவது உள்ளிட்டவற்றில் உள்ள தகராறுகள் முதன்மையாக நகராட்சி அமைப்பு மூலமாகவே சமரசம் செய்யப்படுகின்றன. தகராறில் அந்த அமைப்பே ஒரு தரப்பு ஆகும். தெரு வணிகர்களின் பிரதிநிதிகளையும் நகராட்சி அமைப்பையும் உள்ளடக்கிய ஒரு சுதந்திரமான, பகுதியளவுக்கு நீதித்துறை சார்ந்த அமைப்பின் மூலமாகவே அவர்களது குறைகள் நியாயமாகவும் சரியாகவும் தீர்க்கப்படும், மேலும் அந்த அமைப்பு அதிகாரங்கள் கொண்டதாகவும் இருக்கவேண்டும் என்பது அவர்களுடைய அனுபவமாகும்.

அனுமதி பெறாத தெருவணிகர்களை அப்புறப்படுத்துவதற்கும் அவர்களிடமிருந்து பொருட்களைப் பறிமுதல் செய்வதற்கும் ஏற்கனவே உள்ள பெரும்பாலான நகராட்சி சட்டங்கள் அதிகாரமளிக்கின்றன. ஆனால் எவையுமே அவற்றுக்கான நடைமுறைகளை வகுத்துத் தரவில்லை. அதன் விளைவாக, தெரு வணிகர்கள் காவல்துறையிடமும் உள்ளாட்சி அதிகாரிகளிடமும் பெரும் இர‌க்கமற்ற கொடுமைகளையும், வழிப்பறியையும் கூட எதிர்கொள்கின்றனர். கடைகளும் சந்தைகளும் எந்த அறிவிப்பும் அளிக்கப்படாமல் இடித்துத் தள்ளப்படுகின்றன. மிகவும் உடனடியான பொதுத்தேவை தெளிவாக உறுதி செய்யப்படாத வரை, அதுவும் உரிய அறிவிப்பும் மனிதாபமான நடைமுறையும் போதுமான மறுவாழ்வு இல்லாமல், எந்த ஒரு தெரு வணிகரும் கட்டாயப்படுத்தி வெளியேற்றபடக் கூடாது என்பதை சட்டம் உறுதிப்படுத்த வேண்டும்.

பெரும் தொழில்துறை 'உரிமம்' மற்றும் 'அனுமதி' முறையிலிருந்து 'விடுதலை' பெற்றதைக் கொண்டாடுகிறது. ஆனால் சிறிய வணிகர்களும் கைவண்டி இழுப்போர் போன்ற சேவை வழங்குனர்களும் இன்னும் மிருகத்தனமாக நடைமுறைப்படுத்தப்படும் இரக்கமற்ற ஒடுக்குமுறை விதிகளால் பொறியில் சிக்கவைக்கப் படுகின்றனர். அவர்கள் பேரங்காடிகள் மற்றும் குளிரூட்டப்பட்ட வளாகங்கள் ஆகியவற்றிடமிருந்து மிகவும் சமனற்ற போட்டியால் அச்சுறுத்தப்படுகின்றனர். அவர்களைப் பாதுகாக்க அரசாங்கம் உடனடியாக மனிதாபிமான சட்டங்களை இயற்றாவிட்டால் - நகரமும் அதன் நடைபாதை ஓரங்களும் பூங்காக்களும் நம் அனைவரையும் விடக் கூடுதலாக‌ அவர்களுக்குச் சொந்தமாக இருந்த போதிலும்- பல லட்சக்கணக்கான தெரு வணிகர்கள் வேலையிழந்து கண்ணியமான வாழ்க்கையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள்.    

நன்றி: ஹர்ஷ்மந்தர், தி இந்து. ஜூலை 16, 2011.

தமிழில்: வெண்மணி அரிநரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It