பொதுவுடைமை இயக்கத்தின் களப்பணியில் மட்டுமின்றி, இலக்கியப் பணியிலும் முன்னோடித் தோழர்கள் சிங்காரவேலர், ஜீவானந்தம் ஆகியோரின் வழித்தடத்தில் பயணித்து வரும் தோழர் தா.பாண்டியன், சேகுவேராவின் வாழ்க்கை வரலாற்றை ஏன் எழுத வேண்டும்?

“சேகுவேராவின் வாழ்க்கை தனிமனிதனின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம் அல்ல; அது 1960களில் பல நாடுகளில் நடந்த சுதந்திரப் போராட்டத்தின் பதிப்பு. அது பல நாடுகளின் வரலாறு, இயக்கங்களின் வரலாற்றோடு இணைந்தது, பிரித்துப் பார்க்க முடியாதது” என்ற தா.பாண்டியனின் முகவுரையே மேற்கண்ட வினாவுக்கு விடையளிக்கிறது.

che_guevera_400ஆம், தா.பாண்டியன் எழுதியுள்ள ‘சேகுவேரா’ என்னும் நூல் அமெரிக்காவில் மக்கள் குடியேற்றம், அது குடியரசாக உருவெடுத்தது, சோவியத் அமைப்பின் தோற்றம், வளர்ச்சி, வியத்னாம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் போராட்டம் எனப் பலதரப்பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வளர்ச்சி நிலைகளைத் தொட்டுச் செல்கிறது.

இந்திய மண்ணில் வாணிகம் செய்ய வந்து, இங்குள்ள செல்வத்தைச் சுருட்டி மனிதவளத்தைச் சுரண்டியே வங்கிகளை நிரப்பிக்கொண்ட இங்கிலாந்து வெள்ளைக்காரர்கள் அதற்கு முன்பே, அமெரிக்க மண்ணில், பூர்வீகப் பழங்குடி மக்களை வேட்டை யாடிப் பயிற்சி பெற்றவர்கள். இவர்களுடன், மற்ற ஐரோப்பிய நாட்டினரும் புலம்பெயர்ந்து அமெரிக்க மண்ணில் இடம்பிடிக்க, பொலிவியா, கியூபா, அர்ஜெண்டினா போன்ற நாடுகள் அமெரிக்கர்களின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தது.

இரு உலகப் போர்கள் நடைபெற்றபோது, பெருமளவு இலாபத்தையும், ஓரளவு இழப்பையும் சந்தித்த ஐக்கிய அமெரிக்கக் குடியரசு பேராசையும், வக்ர எண்ணமும் கொண்டு, நாகசாகி, ஹிரோசிமா நகரங்கள் மீது அணுகுண்டு வீசி, ‘முதல் அணுகுண்டு வன்ம’த்தைத் துவங்கி தொடர்ந்து, உலகின் நாடுகளில் படை தொடுத்து வருகிறது.

இத்தகைய சூழலில்தான், அர்ஜெண்டினாவில் உள்ள ரோசாரியா என்னும் நகரில் குவேரா லிஞ்ச் - செலியா இணையருக்கு மகனாக 1928-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் நாள் சேகுவேரா பிறந்தார். மானுடக் குறையை நீக்க உருவெடுத்த சே குறை மாதக் குழந்தையாக ஒன்பதாம் மாதத்திலேயே பிறந்துள்ளார். அந்த வேகம் அவரது வாழ்நாள் முழுவதும் காணப்பட்டது; ஆனால் சூழலுக்கேற்ற விவேகம் அதனுடன் இணைந்ததால், இந்த உலக விடுதலைக்காகத் தன்னை முறையே பயன்படுத்தினார்.

சே வின் இரண்டாவது வயதிலேயே அவருக்கு ஆஸ்துமா வந்து ஒட்டிக்கொண்டது. அது அவ்வப் போது அவருக்கு இடையூறு செய்தாலும் அதனைச் சமாளித்து, மிகப் பெரும் வீரனாகவே செயலாற்றி வந்தார் சே.

மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாசேதுங், குரோபாட்கின், லியோ - சோ - சி, டால்ஸ்டாய், கேக்லண்டன், உமர்கய்யாம் போன்ற பெருந்தகைகளின் நூல்களை இளம் வயதிலேயே கற்றுத் தேர்ந்தார்.

இந்நிலையில் 1943-இல் அர்ஜெண்டினாவில் ராணுவப் புரட்சி நடந்து 1945-இல் பெரான் ஆட்சிக்கு வந்த வேளையில்தான் குவேரா தனது தந்தையின் தாக்கத்தால் பாசிச எதிர்ப்பு உணர்வு பெறுகிறார்.

இவ்வாறு, காத்திரமாகச் செல்லும் இந்நூலில், அவரது இளமைக் காலத்துக் காதலைப் பற்றிய ஒரு சில விவரங்களை எடுத்துரைக்கும் நூலாசிரியர் தா.பா.வின் வரிகளைப் பார்ப்போம்.

சின்சினா என்னும் உயர்நிலைப் பள்ளி மாணவி ஒருத்தி குவேரா மேல் காதலுற்றாள். மையல் கொண்ட அந்தத் தையல், குவேரா ஒரு நாள் மாடிப் படியில் இறங்கி வரும்போது அவரைப் பார்த்து வியந்து ரசித்திருக்கிறாள்.

“ ‘படிகளில் ஒரு சிங்கக்குட்டி இறங்கி வருவது போலத் தெரிந்தது. வாரி விடப்படாத தலைமுடி, அலங்கோலமாகத் தொங்கிக் கொண்டிருந்தது. சட்டையில் பொத்தான்களை மாட்டவே இல்லை. காலணியிலும் கயிற்றைக் கட்டவில்லை. இந்தக் கோலத்தில் தோன்றிய அந்த இளைஞனின் எடுப்பான கூரிய மூக்கும், ஒளிவீசும் கண்களும், இப்பொழுது தான் முளைத்து அரும்பிக் கொண்டிருந்த தாடியும், மீசையும், அதுவும்கூட, அங்குமிங்குமாகத் தொங்கிக் கொண்டு... என்னவோ போலத் தோன்றினாலும், அவனையே பார்த்துக்கொண்டிருக்க வேண்டும் போல இருந்தது. ஓர் ஆண் மகனின் கம்பீரம் தெரிந்தது. ஈர்க்கப்பட்டேன்; அவர் வயப்பட்டேன்’ எனக் கண்டதும் காதல் கொண்ட அவரது முதல் சந்திப்பை வருணித்துள்ளார் சின்சினா.”

தா.பா.வின் வரிகள் அந்த ஒருதலைக் காதலின் பார்வையென்பதன் வாயிலாக, குவேராவின் தோற்றத்தை, ஆளுமையை மறைமுகமாக வாசகர் களுக்கு எடுத்துவைக்கிற முனைவு.

1952-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், மருத்துவக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்ற வேளையில், தனது நண்பர் ஆல்பர்ட்டோ கிரானடோ துணை யுடன் தனது முதல் வெளிநாட்டுப் பயணத்தைத் துவங்கினார் சேகுவேரா. ஆந்திய மலைகளின் தெற்குப் பகுதி வழியாகப் புறப்பட்டு, சாண்டியாகோ, சிலியிலுள்ள சூட்சிகாமாட்டா, மச்சுபிக்கு நகரம், யூலியாகா, புனா, லீமா, சான்பாப்கோ, லொட்டிசியா, மியாமி எனப் பல பகுதிகளுக்குச் சென்று, அங்கு வாழ்க்கை என்ற பெயரில் வாடிக் கொண்டிருந்த ஏழை எளிய உழைப்பாளி மக்களின் நிலைமை களை நேரில் கண்டறிந்து, நாடு திரும்பினார்.

பின்னர் எம்.டி. பட்டத்தை முடித்த நிலையில் அடுத்து என்ன என்ன செய்வது என்று சிந்திக்கத் தொடங்கினார் குவேரா. அவ்வேளையில் பொலி வியாவில் சீர்திருத்தப் புரட்சிக் கட்சி வெற்றி பெற்றிருந்தது. இதனால், உற்சாகமடைந்த குவேரா, அங்கே லாபாசுக்கு அருகிலுள்ள கனிமச் சுரங்கத்தில் தொழிலாளராகப் பணியில் சேர்ந்தார். இதுதான் அவரது முதல் களப்பணி. பிறகு, குவாதமாலா சென்று, அங்கு அவரது தனது அரசியல் பணியைத் தீவிரப்படுத்துகிறார். பின்னர் மெக்ஸிகோவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, பல கசப்பான சம்பவங்களுடன் நாட்களைச் செலவழித்து பின்னர் 1955-இல் புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோவைச் சந்திக்கிறார். இருவரும், ஒருவரையொருவர் மேலும் கூர்மை தீட்டிக்கொண்டு, கியூபப் புரட்சியில் களமிறங்குகின்றனர்.

பிறகு, அவர்களது திட்டமிடல், கிராண்மாவி லிருந்து ஆபத்து நிறைந்த படகுப் பயணம், கரும்புச் சோலைகளிலும் சியாரா மிஸ்ட்ரா மலைத்தொடரிலும் உயிரைப் பணயமாக வைத்து நடத்திய புரட்சிப் போர், இப்போர் வேளையில், குவேரா பட்ட ஆஸ்துமா அவதி உள்ளிட்ட ஏராளமான விவரங் களையும், கியூபாவின் தொழில் அமைச்சர் கியூப அரசு வங்கியின் தலைவர் என்ற பொறுப்புகளை ஏற்றுக் கொண்டு பணியாற்றுகிற வரையிலான பல தகவல்களையும் நூலின் சில இயல்கள் வரை விரிவாக எழுதியுள்ளார் நூலாசிரியர். இத்தகவல் களை மிகக் கோவையாகக் கட்டியுள்ள தா.பா.வின் நடை வாசகர்களின் நெஞ்சைத் தொடும்.

கியூபாவில் பதவியில் இருந்த வேளையில், சோவியத் யூனியன், கெய்ரோ, ஜப்பான், யுகோஸ் லோவியா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, பாகிஸ்தான், சூடான், மொராக்கோ போன்ற நாடுகளுக்குச் சென்று திரும்பினார். மூன்று மாத காலம் பிடித்த இந்தப் பயணமும் சேவின் உள்ளத்தில் பல சிந்தனை விதைகளை விதைத்தது. அந்தச் சிந்தனை களை அப்படியே செயல்வடிவுக்குக் கொண்டு வந்தார் அவர்.

பின்னர் காங்கோவில் விடுதலைப் போரில் தாம் பங்குபெற முடிவெடுக்கிறார். தனது பதவி களையும், அவை சார்ந்த சலுகைகளையும் மட்டு மின்றி, கியூபக் குடியுரிமையையும் தயங்காமல் உதறித் தள்ளுகிறார். பல பெண்களின் கவர்ச்சி விதையாக இருந்த தனது தலைமுடியை ஒட்ட வெட்டி தாடி, மீசையையும் மழித்து, செயற்கைப் பற்களைப் பொருத்திக்கொண்டு, காங்கோவுக்குப் புறப்படுகிறார். அங்குள்ள உழைப்பாள வர்க்கத்துக்கு ஆதரவு கொடுத்து, புரட்சியை முன்னோக்கி எடுத்துச் செல்கிறார். சூழ்நிலையின் தாக்கத்தால் உடல்நலம் குன்றி காங்கோவை விட்டு, தான் சானியா செல்கிறார். அங்கு தீவிர சிகிச்சை பெற்ற பிறகு செக் நாட்டின் தலைநகரான பிராக்கிற்குச் சென்றார். இறுதியில் கியூபாவிற்கு வந்து சேர்ந்தார். அவரது மனம் அமைதியுறவில்லை. பொலிவியா பிரச்சினை அவர் மனத்தில் ஓர் உந்துதலைத் தோற்று விக்கிறது. அதன் பிறகு சே தீட்டிய திட்டங்கள், பொலிவியாவில் நடத்திய தொடர் கெரில்லாப் போரின் உச்சகட்ட நிகழ்ச்சிகள் யாவும், நூலில் நிறைவாக விவரிக்கப்பட்டுள்ளன.

இறுதியாக, 1960-ஆண்டில் பொலிவியப் புரட்சிப் போரின்போது, அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஒரு நாள். யூரோ கணவாய் அருகே, பொலிவிய ஏகாதிபத்திய இராணுவத்தின் நான்கு புறங்களிலுமாக வந்து குவேராவைச் சூழ்ந்து கைது செய்து, அருகிலுள்ள ஹிகுயேரா கிராமப் பள்ளியொன்றில் அடைத்து வைத்து... பின்னர் அவரது பூதவுடல் ஹெலிகாப்டர் மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. இக்காட்சிகளைப் படிக்கையில் வாசகர்களின் மனம் பதைபதைக்கும். இப்பதை பதைப்பு அடங்கி, படித்தவரின் மனம் இயல்பு நிலையை அடைய பல நாட்கள் பிடிக்கும்.

மாநிலம், நாடு, கண்டம் என்றெல்லாம் அரசியல், புவியியல் எல்லை பாராது, உலகில் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் அனைவரையும் நேசித்த சேகுவேரா, ஏகாதிபத்தியக் கொடுங் கோன்மையை அடியோடு வெறுத்தவர்; இந்த உணர்வை வெறும் எண்ண அளவில் நிறுத்திக் கொள்ளாது, செயல் அளவில் களப்பணியாற்றியவர்; புரட்சிக்கான பாடக்குறிப்புகளை நமக்கு விட்டுச் சென்றவர்.

எவ்வேளையும் மக்களின் விடுதலையையே எண்ணத்தில் தோய்த்துக் கொண்டிருந்த சேவின் ஆளுமையைக் கண்டு மயங்கிய பெண்கள் பலர்; நெருங்கியவர்கள் சிலர். விடுதலை வீரம் நிறைந்த அவரது நெஞ்சத்திலும் காதல் ஈரம் இருந்தது. அவர் வெளிப்படையாகவே இரண்டு திருமணங் களைச் செய்துகொண்டார்.

வீரம், நெகிழ்வு, நகைச்சுவையுணர்வு எனப் பல்வேறு குணங்களைக்கொண்ட அந்தத் தஞ்சாவூர்க் கதம்பத்தைப் பற்றி நிலவி வரும் ஐயங்களைத் தெளிவிக்கும் வண்ணம், இந்நூலின் இறுதியில் பத்து வினாக்களை எழுப்பி, அவற்றுக்குத் தக்க விடைகளை அளித்திருக்கிறார் நூலாசிரியர் தா.பா.

எழுத்தில் நவரசம் சொட்டச் சொட்ட தா.பாண்டியன் இயற்றியுள்ள இந்நூல், வாழ்க்கை வரலாறு அன்று; வரலாற்றின் வாழ்க்கை!

சேகுவேரா

ஆசிரியர் : தா.பாண்டியன்

வெளியீடு : குமரன் பதிப்பகம்

விலை : ரூ.100.00