வரலாற்று ரீதியாக ஊழலைப் பற்றிய செய்திகளைக் காண்போம். அரசர்கள் ஆண்ட காலத்தில் அவர்கள் ஊழல் செய்ததாக சரித்திரச் சான்றுகள் எதுவும் இல்லை. ஏன் செய்ய வேண்டும்? அவர்கள் ஆட்சியில் உள்ள அனைத்தும் மன்னருக்கே உரியது என்று ஆகி விட்ட பிறகு மன்னன் ஊழல் என்று தனியாக செய்ய வேண்டிய தேவை என்ன? கடவுளின் நேரடிப் பிரதிநிதியாக இந்த உலகை மன்னன் பராமரித்து வருகிறான். எனவே ஊழல் புரிந்தான் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஆனால் மன்னனின் கீழ் பணி புரிந்த அதிகாரிகள் ஊழல் செய்திருக்கின்றனர். இதற்கான சரித்திரச் சான்றுகள், கல்வெட்டுகள் நிறைய உள்ளன.

அது போன்றே கோவிலில் பணிபுரியும் பார்ப்பனர்களும் கடவுள் சொத்தையும் நகைகளையும் திருடி விற்று இருக்கின்றனர். (திருட்டு என்பது ஊழலின் வகையில் சேருமா என்பது சரியாகத் தெரியவில்லை. உடமையாவது களவு என்று மார்க்சீயக் கருத்தின்படி திருட்டும் ஊழலும் ஒன்றுதான் என்பது எமது கருத்து) இதிலும் மனுநீதிபடியே தீர்ப்புகளும் தண்டனைகளும் வழங்கப்பட்டு இருக்கின்றன. அரசனுக்கு சேர வேண்டிய வரிப்பணத்தை வசூல் செய்து விட்டு ஓடி போய்விட்ட அரசு அதிகாரியான விழுப்பரையன் என்பவனை கைது செய்யுமாறு மாறவர்மன் சுந்தரபாண்டியன் ஆணையிட அவரைக் கைது செய்து கல்லில் கட்டி வைத்து இருக்கின்றனர். ஆனால் அவன் தளையை முறித்துக் கொண்டு ஓடிவிட அவனுடைய சொத்துக்களை விற்று அரசனுக்கு சேர வேண்டிய வரிகள் செலுத்தப்பட்டன என்று உய்யக்கொண்டான் மலைக் கல்வெட்டு ஒன்று கூறுகிறது.

ஆனால் கோவிலில் கடவுள் நகைகளை திருடி விற்றுவிட்ட பார்ப்பனர்களுக்கு இத்தகைய தண்டனை வழங்கப்படவில்லை. கோவிலுக்கு விளக்குப் போடுவது, இரண்டு நாள் கோவில் பணிகளுக்கு வராது நீக்கி வைப்பது என்ற அளவில் தான் தீர்ப்புகளும் தண்டனைகளும் இருந்திருக்கின்றன.

முதலாளித்துவம் தோன்றி அரசனுடைய கடவுள் தன்மையை அகற்றிய பிறகுதான் அரசர்களும் மனிதர்களே என்ற கருத்து பரவலாயிற்று. அவர்களுடைய செய்கைகளை மக்கள் கேள்வி கேட்கலாம் என்ற நிலை உருவாயிற்று. ஆயினும் அது பெரிய அளவில் மாற்றத்தைக் கொண்டு வந்து விடவில்லை. ஊழலும் லஞ்சமும் வளர்ந்து கொண்டுதான் இருந்தன. கிழக்கு இந்தியக் கம்பெனி என்ற பெயரில் இந்தியாவிற்கு வந்த ஆங்கிலேய வணிகர்கள் இங்குள்ள மன்னர்களுக்கு பெரிய அளவில் லஞ்சம் கொடுத்து வணிக உரிமைகளை தமதாக்கிக் கொண்டனர். பின்னர் தங்களுடைய நிறுவனத்தின் பாதுகாப்பிற்கு என்று ஒரு படையை உருவாக்கிக் கொண்டனர். அதை மன்னர்களுக்கு ஆதரவாக/எதிராக பயன்படுத்தி தங்களுடைய வணிகத்தை பெருக்கிக் கொண்டனர். வணிகம் பெருகி செல்வம் சேர்ந்த பிறகு மெதுவாக அரசு அதிகாரத்தையும் கைப்பற்றிக்கொண்டனர். எ.கா. தஞ்சையை ஆண்டு கொண்டிருந்த சரபோஜி மன்னனிடம் இருந்து ஆட்சி உரிமையை சில லட்சம் ரூபாய்கள் கொடுத்து சட்டபடி ஆளும் உரிமையை ஆங்கிலேயர் எழுதி வாங்கிக் கொண்டனர்.

இந்தியாவில் கிழக்கு இந்தியக் கம்பெனியின் ஆட்சியை நிறுவிய வரலாற்று நாயகன் எனப் புகழப்படும் ராபர்ட் கிளைவ் ஒரு மகா ஊழல் பேர்வழி. தன்னுடைய திறமையால் அவன் ஆங்கில ஆட்சியை மட்டும் நிலைப்படுத்தவில்லை. தேன் எடுப்பவன் = புறங்கை நக்குபவன் என்ற புதுமொழிக்கு ஏற்ப ஒரு பகுதி செல்வத்தை தன்னுடைய சொந்த பயன்பாட்டிற்கு என்று ஒதுக்கிக் கொண்டான். அவன் ஆட்சியில் இருக்கும் வரை அதைப் பற்றி பெரிதாய் கண்டு கொள்ளாத ஆங்கில அரசு அவன் பதவிக் காலத்திற்குப் பிறகு அவன் மீது ஊழல் வழக்கு தொடர்ந்தது. ஆனால் தண்டனை எதுவும் வழங்கவில்லை. ஆங்கில ஆட்சியை இந்தியாவில் நிலை பெறச் செய்தவன் என்ற காரணத்திற்காக அவன் மன்னித்து விடப்பட்டான்.

ஆயினும் ஆங்கில மேட்டுமைக் குடியினர் அவனை ஊழல்வாதி என்றே கருதினர். இதற்கு வேறு ஒரு காரணமும் உண்டு.ராபர்ட் கிளைவ் ஆங்கிலேய‌ சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருந்து வந்தவன். ஒரு எழுத்தராக (கிளர்க்) ஆக தன்னுடைய பொது வாழ்க்கையை ஆரம்பித்த கிளைவ் பெரிய அளவில் வளர்ச்சி அடைந்த‌து ஆங்கில சமுகத்தின் மேட்டுக் குடியினருக்கு எரிச்சலை கிளப்பி விட்டிருந்தது என்பதும் ஒரு உண்மையாகும்.

சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் வழக்கு என்று கருதப்படுவது முந்திரா என்ற வழக்காகும். அப்பொழுது நிதி அமைச்சராக இருந்த டி.டி.கிருஷ்ணமாச்சாரி என்ற தமிழகப் பார்ப்பனர் படைகளுக்கு ஜீப்கள் வழங்குகின்ற பேரத்தில் லஞ்சம் வாங்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதைப்பற்றி விசாரணை நடந்தது. ஆனால் புத்திசாலி பார்ப்பனர் உடனே தன்னுடைய நடுவண் அமைச்சர் பதவியை விட்டு விலகி விட்டார். அத்துடன் அந்த வழக்கும் முடிந்துவிட்டது. ஊழல் செய்தாரா தண்டனை பெற்றாரா? ஒன்றும் இல்லை. பதவி விலகிய பிறகு அவருடைய குற்றங்கள் மன்னிக்கப்பட்டது. இப்படியாக சுதந்திர இந்தியாவில் ஊழலை ஆரம்பித்து வைத்த பெருமையும் பார்ப்பனர்களுக்கே உரியது. அதையும் தெளிவாகவும் மாட்டிக் கொள்ளாமலும் செய்கின்ற திறமையும் அவர்களுக்கே உரியது ஆகும்.

இன்று 2ஜி அலைக்கற்றை ஊழலில் உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக நடந்து கொள்வது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கிறது. ஆனால் 10 ஆண்டுகட்கு முன்னர் செயலலிதா மாமி ஊழல் வழக்கில் ஒரு தண்டனை பெற்றார். விசித்திரமான அந்த தண்டனையை வழங்கியதும் உச்ச நீதிமன்றமே. அரசுக்கு சொந்தமான டான்சி என்ற நிறுவனத்தின் பல கோடி பெறுமான நிலத்தை அப்போதைய முதல்வர் செயலலிதா அடிமாட்டு விலைக்கு வாங்கினார். அது மட்டும் இன்றி முதலமைச்சர் அரசு நிலத்தை வாங்கக்கூடாது என்ற சட்டம் எதுவும் இல்லை என்று துணிந்து பேசவும் செய்தார். இதற்காக கைது செய்யப்பட்டு பிணையில் உடனே வெளிவந்து விட்டார். (தற்போது ராசா முதல் கனிமொழி வரை குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் உச்ச நீதிமன்றம் பிணை வழங்க மறுத்து வருகிறது)

வழக்கின் தீர்ப்பில் செயலலிதாவிற்கு வழங்கப்பட்ட தண்டனை என்ன தெரியுமா? அவர் முறைகேடாக வாங்கிய நிலத்தை அரசிற்கு திருப்பித் தந்து விட வேண்டும். அவ்வளவுதான். மற்றபடி சிறைத் தண்டனையோ அபராதமோ விதிக்கப்படவில்லை. அதாவது திருடியவருக்கு தண்டனை, திருடிய பொருளை திருப்பிக் கொடுத்து விட வேண்டும். இத்தகைய மனுநீதித் தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம் அமைப்பு இன்று ஊழலை ஒழிக்கப் புறப்பட்டிருக்கிறது.

Pin It