ஆங்கிலத்தைப்படிப்பதால் என்ன கேடு வந்துவிடப் போகிறது?
இது பெரியாரின் கேள்வி. பெரியார் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் ஒன்று - அவர் ஆங்கிலத்திற்கு அதிகம் இடம் அளித்தார். தமிழை விட்டு விட்டு ஆங்கிலத்தைப் படியுங்கள் அதிலேயே பேசுங்கள் என்று கூறினார் என்பதாகும். இதிலும் பெரியார் தன்னுடைய காலத்திற்கு ஏற்ற வகையில் தமிழனின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டே கூறினார்.
ஆங்கிலத்தை கற்று தமிழன் நல்ல தொழிலுக்கு சென்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும்; அதுவே அவனுடைய இழிவினைப் போக்கும் வலிமை படைத்து என்று கருதினார். அவருக்கு தமிழன் வாழ்க்கை தான் முக்கியம். தமிழன் வாழ்ந்தால்தான் தமிழ் வாழமுடியும் என்று கருதியவர் பெரியார். மொழியை விடவும் மனிதன் முதன்மையானவன் என்பது மனித நேயம் உள்ள அனைவரும் ஒப்புக்கொள்ளக்கூடிய கருத்தே ஆகும். அரசியலுக்காக அதை அப்படியே திருப்பிப்போட்டு தமிழ் இருந்தால்தான், வாழ்ந்தால்தான் தமிழன் வாழமுடியும் என்று எழுதுகிற, கருதுகிற கூட்டத்தில் இன்று பல முற்போக்குவாதிகளூம் கரைந்து விட்டது மிக்க வருத்தம் அளிக்கிறது. ஈழத்தில் இன்று தமிழனே இல்லை. தமிழ் அங்கு வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்று எண்ணுகிறீர்களா? புலம் பெயர்ந்த தமிழர்கள் எல்லாம் தங்களுடைய வாழ்க்கைக்கு ஆங்கிலத்தையே பயன்படுத்துகிறார்கள். இணையத்தில் எழுதுவதற்கு மட்டும் தமிழை பயன்படுத்துகிறார்கள். அதுவும் ஒருங்குறியில் UNICODE மட்டும் தான். ஆங்கிலம் அறியாமல் இருந்தால் ஒருங்குறியில் UNICODE பயன்படுத்த இயலுமா?
இன்றைக்கும் அறிவியல் தொழில் நுட்பம் ஆகியவற்றில் வளர்ச்சி அடைந்த மொழி ஆங்கிலமே என்பதில் ஐயமில்லை. கால்செண்டர் முதல் மென்பொருள் தொழில் வரை அடித்தட்டு வர்க்கத்தை சேர்ந்த மாணவர்கள் மாதம் மூவாயிரம், நாலாயிரம், ஐந்தாயிரம் வரை பொருள் ஈட்டுவதற்கு உதவுவது ஆங்கிலமே. அதற்கு சாளரம் அமைக்காமல் பாதை திறக்காமல் லத்தின், ஹீபுரூ, சீனம்,மலாய், செர்மன், ஜப்பான் போன்ற மொழிகளுக்கா சாளரம் அமைப்பார்கள்? இதில் திராவிட இயக்கம் செய்த தவறு என்ன? பெரியார் செய்த தவறு தான் என்ன? தமிழ்த் தேசியர்கள் மண்ணுக்கு ஏற்ற மார்க்சியர்கள் என்றெல்லாம் மார்த்தட்டிக்கொண்டு திரியும் கூட்டம் தங்களுடைய வயிற்றுப் பிழைப்பிற்கு என்ன செய்கிறது.? மார்க்சையும், லெனினையும் தமிழ் படித்தால் போதாது மொழி பெயர்ப்பில் குளறுபடி செய்து கருத்தை திருத்தியிருப்பார்கள். எனவே ஆங்கிலத்தில் அந்த நூல்களை படிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்களே! அது எப்படி? ஆங்கிலத்திற்கு வழியே வைக்காவிட்டால் அந்த நூல்களை படிப்பது எவ்விதம்?. மார்க்சும் மூலதனம் நூல் முழுவதையும் ஒரு தமிழ் தேசியர் தமிழில் மொழிபெயர்த்து உள்ளார். ஆங்கில அறிவு இல்லாமல் அவரால் எப்படி இதை செய்ய முடியும்?.
இதைவிட வேடிக்கை இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் மார்க்சின் தாய் மொழியான ஜெர்மனி மொழியில் தான் அவருடைய நூல்கள் எழுதப்பட்டன. எனவே அந்த மொழியை கற்று அதன் பிறகு அந்த நூல்களை படிப்பது சாலச்சிறந்தது. சே குவராவின், காஸ்ட்ரோவின் எழுத்துக்களை எல்லாம் அவை எழுதப்பட்ட ஸ்பானிஸ் மொழியில் தான் படிக்க வேண்டும் என்பதற்காக சிலர் ஸ்பானிஸ் மொழி இந்தியாவில் எங்கு பயிற்றுவிக்கப்படுகிறது என்று தேடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆகவே தாங்கள் ஒரு சிறப்பான செயலை செய்ய வேண்டும், புதியவற்றை தெரிந்துகொள்ள வேண்டும் என்ற தேவை ஏற்படும்போதெல்லாம் ஆங்கில மொழியை நாடுவதில் தமிழ்த் தேசியர்களும் பெரியார்வாதிகளும் மற்ற யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. ஆனால் இதையே மற்றவர்கள் செய்தால் மொழிப் பற்று இல்லாதவன் ஆங்கில அடிவருடி என்று இழித்தும் பழித்தும் உரைப்பார்கள். இது என்ன நீதி?
எல்லா தகவல்களும் தொழில் நுட்பமும் அறிவியல் செய்திகளும் தமிழுக்கு வந்து சேர்ந்த பிறகு மற்றவர்கள் படித்துக்கொள்ளட்டும். நாம் ஆங்கிலம் கற்று அவற்றை முதலில் தெரிந்து கொள்வோம் என்ற புதிய வகை பார்ப்பனியம் தானே இது. எல்லாம் தமிழுக்கு வரும் வரை மற்றவர்கள் கையை கட்டிக்கொண்டும் இருக்க வேண்டும். இவர்கள் சட்டாம்ப்பிள்ளையாக மாறி ஆங்கிலம், ஸ்பானிஸ் மொழியில் இருந்து எடுத்துக்கொடுப்பார்கள். அதை மற்றவர்கள் படிக்க வேண்டும்.! ஏன்? நானே ஆங்கிலம் கற்று அதை நேரடியாக கற்றுக்கொள்கிறேன். நடுவில் நீ என்ன தரகு வேலை செய்வதற்கு என்று கேட்டால் இனத் துரோகி, மொழித்துரோகி என்ற பட்டம் தான்!. இதைத்தான் பெரியார் உடைத்தார். சூத்திர தமிழன் முன்னேற வேண்டுமானால் ஆங்கிலம் கற்க வேண்டும். அதில் உள்ள அறிவியல் செய்திகளை மனதில் வாங்கிப் படி. அதில் வாழ்க்கைக்கு உரிய செய்திகள் பல அடங்கி உள்ளன என்று தமிழனுக்கு அறிவுரை கூறினார். இதில் என்ன பிழை? அதையும் அவர் வற்புறுத்தவில்லையே!. இது என்னுடைய கருத்து. சரியென்று பட்டால் ஏற்றுக்கொள். இல்லை என்றால் தள்ளிவிடு என்று தானே கூறினார். இதை விட எளிதாக சுதந்திரமாக ஒரு கருத்தை ஒரு மனிதர் எவ்விதம் சொல்ல இயலும்?
இந்த கருத்தை மட்டும் தனியே எடுத்துக்கொண்டு தமிழ்த் தேசியர்கள் ஆடுகின்ற ஆட்டம் ஆப்பசைத்த குரங்கின் ஆட்டம் தோற்றுவிடும். அவர்களுடைய ஆங்கிலம் வேண்டாம் தமிழ் மட்டும் போதும் என்ற கூச்சலானது உள் நோக்கம் உடையது. கீழ்த்தட்டு மக்களும், தலித்களும் மற்ற தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களும் ஆங்கிலம் படித்து விடுவார்களே, விட்டார்களே. இனி நமது கருத்து நாட்டாமை செல்லுபடி ஆகாதே என்ற மன உளைச்சலில், வயிற்றுக்கடுப்பில் இருந்து எழுந்ததுதான். மற்றபடி இந்த கூச்சலுக்கும் தாய்மொழிப் பற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அயல் மொழியை கற்றுக்கொள்வதனால் மட்டும் ஒருவன் தாய்மொழிப் பற்று அற்றவன் ஆகி விடுவானா? அப்படி என்றால் பன்மொழிப்புலவர் என்று பெயர் பெற்றுள்ள பல அறிஞர்களும் (எ.கா. பரிதிமாற்கலைஞர், கா. அப்பாதுரையார், மொழி ஞாயிறு, தேவநேயப் பாவாணர்) போன்றவர்கள் மொழிப்பற்று அற்றவர்களா? தனித்தமிழ் என்று முழங்கிய தேவநேயப் பாவாணர் B.O.L, M.O.L, என்ற பட்டங்களுக்கு உரிய தேர்வை எந்த மொழியில் எழுதினார்?
யாருக்கும் எளிதில் விளங்கா வண்ணம் எழுதுவதே சிறந்த தமிழ்த் தொண்டு என்ற கருத்தையே தன் வாழ்நாள் கொள்கையாக கடைபிடித்த மறைமலை அடிகள் என்ற வேதாசலனார் தம்முடைய எல்லா தமிழ் நூல்களுக்கும் ஆங்கிலத்தில் முன்னுரை எழுதுவதை ஒரு பெருமையாகக் கருதினாரே. அது ஏன்? "செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்று கவி பாடிய சுப்ரமணிய பாரதி இந்து பத்திரிக்கைக்கு கடிதங்களையும், கட்டுரைகளையும் ஆங்கிலத்தில் எழுதியது ஏன்? எனவே தனித்தமிழ் தூய தமிழர், செந்தமிழே இனியது என்று கூறிய பெருமகனார் யாரும் தமிழோடு தங்களுடைய வாழ்க்கையை முடித்துக்கொள்ளவில்லை. ஆங்கிலத்தையும் துணைக்கொண்டே தங்களுடைய ஆளுமையை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். வளப்படுத்தி இருக்கிறார்கள். அதை சில நேரங்களில் ஒளிவு மறைவாகவும் சில நேரங்களில் வெளிப்படையாகவும் செய்திருக்கின்றனர். ஆனால் பெரியார் இதை வெளிப்படையாக சொன்னார்; உரக்கச்சொன்னார். அப்படி சொன்னதற்காக பெரியார் மீது செருப்பைத் தூக்கி வீசியவர்களும், சேறுவாரி பூசியவர்களும் அவர் காலத்திலேயே இருந்திருக்கிறார்கள். இது ஒன்றும் புதுமை இல்லையே.
தமிழனுக்கு தேவையானது என்று தான் கருதியதைத்தான் அவர் சொன்னார். அந்த ஒன்றையே பிடித்து தொங்கிக் கொண்டு பெரியார் தமிழன் இல்லை. தமிழ் பற்று கொண்டவன் இல்லை என்று கிளிப்பிள்ளை பாடம் சொல்வது போல் திரும்பத்திரும்ப சொல்வது; அதையே ஒரு காரணமாகச் சொல்லி பெரியார் தமிழுக்கும் தமிழ் இசைக்கும் அதைவிட சிறப்பாக தமிழனுக்கும் செய்த தொண்டுகளை மறைப்பது இந்த நோக்கிலே தமிழ்த் தேசியர்கள் செயல்படுவதும் பெரியாரை முதுகில் குத்துவதும், அதை பெரியார் பெயர் சொல்லியே கட்சியை நடத்தும் பெரியார்வாதிகள் கைகட்டி வேடிக்கை பார்ப்பதும்!!! பெரியார் அவர்கள் தமிழ் தமிழ் என்று கூறுகின்ற தமிழ்ப்புலவர்களைப் பற்றி மிகச்சரியாக கணித்து வைத்திருக்கிறார். வயிற்றுப் பிழைப்புக்கு என்று தமிழைப் படித்து புலவர் பட்டம் பெற்று (தற்போது முனைவர், முது முனைவர்) பெற்றிருக்கும் ஒரே காரணத்தினால் தங்களுக்கு உலகம் முழுவதுமே தெரியும் என்று வெற்று கூச்சலிடும் கிணற்று தவளைகளைப் பார்த்து பெரியார் கைக்கொட்டி சிரிக்கிறார்.
அவர் புலவர் என்று சொல்லுகின்றபோது சங்ககாலப் புலவன் முதல் இந்த காலப் புலவன் வரை எல்லோரையும் உள்ளடக்கியதுதான். சங்கப்பாடல்களில் பெரும்பான்மையானவற்றில் என்ன கருத்து இருக்கிறது? நாலு வரி தமிழில் பாடி அதில் இரண்டு வரி அரசனைப் புகழ்ந்து மீதமுள்ள இரண்டு வரியில் தன்னுடைய ஏழ்மை நிலைமையை எடுத்துச்சொல்லி எனக்கு காசு கொடு, சோறு போடு என்று கேட்டவை தானே!! பெரும்பாணாற்றுப்படையும், சிறுபாணாற்றுப்படையும் நமக்கு கூறுகின்ற செய்தி இதுதானே.! ஒரு அரசனிடமிருந்து பொருளை இரந்து பெற்றுச்செல்லும் புலவன் எதிரில் வருகின்ற மற்றொரு புலவனைப் பார்த்து "நீ இந்த அரசனிடம் செல். அங்கு உனக்கு பொருள் கிடைக்கும் பசிப்பிணி மருத்துவன் இந்த இடத்தில் உள்ளான். அவனிடம் சென்றால் சோறு கிடைக்கும் என்று சோற்றுக்கு வழிகாட்டிய இலக்கியங்கள் தானே அவை. அவற்றைப் படிக்கும் ஒரு இளைஞனுக்கு என்ன பெரிய பொது அறிவு கிடைத்துவிடும். அதே போல் தானும் இரந்துண்டு வாழலாமே என்ற வழிமுறைதானே மனதில் உறைக்கும். இத்தகைய இலக்கியங்கள் மிகுதியாக இருக்கும் தமிழ்மொழி இலக்கியத்தை பெரியார் போன்ற தன்மானம் உள்ளவர்கள் சாடியதில் என்ன தவறு?
மனிதனை வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டிய இலக்கியங்கள் தமிழ் மொழியில் இல்லை. திருக்குறள் ஒன்றைத்தவிர வேறு எதுவும் இல்லவே இல்லை. எனவே திருக்குறளை மட்டும் படித்தால் போதுமானது என்று பெரியார் சொன்னதும் அவை பரப்புவதற்காக பெரியார் செய்ததும் பகுத்தறிவு உள்ள எந்த மனிதனும் ஒத்துக்கொள்ளாக்கூடிய செய்திகள் தானே. மூவாயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த தமிழ் மொழியை விட்டு விட்டு தோன்றி நானூறு ஆண்டுகளே ஆன ஆங்கில மொழியைப் போய் ஆதரிக்கிறீர்களே நீயெல்லாம் தமிழனா என்று பெரியாரை நோக்கி எள்ளி நகையாடினர். பெரியார் திருப்பிக்கேட்டார். நானூறு ஆண்டுகளே ஆன ஆங்கில மொழியை வைத்துக்கொண்டு அவன் உலகம் முழுவதும் ஆண்டான். அறிவியல் புதுமைகள் பல செய்தான். மூவாயிரம் ஆண்டுகள் ஆன தமிழ் மொழியை வைத்துக்கொண்டு நீ என்ன செய்தாய்? பெரியாரின் இந்தக்கேள்வி உண்மையானது தானே! இதற்கு யாராவது பதில் கூற முடியுமா?
மாளிகையில் குடியிருப்போருக்கும் அரண்மனையில் வசிக்கும் மேட்டுக்குடியினருக்கும் ஒரு வீட்டிற்கு பல சாளரம் பல ஜன்னல்கள் பல காலதர் வைத்துக்கொள்ள இயலும். அவற்றை வேண்டும் போது திறக்கவும் அவற்றை தேவையில்லாவிட்டால் மூடிக்கொள்ளவும் இயலும். ஆனால் இப்பொழுது தான் நிமிர்ந்து நின்று குடிசை வீட்டிற்குள் புகுந்து வாழ ஆரம்பித்திருக்கும் ஏழைத்தமிழனுக்கு அது பொருந்தாது. அவனுடைய ஒரு அறை வீட்டிற்கு/ குடிசைக்கு ஒரு சாளரமே போதும். வாசலாக தாய்மொழியையும் சாளரமாக அறிவியல் மொழியாம் ஆங்கிலத்தையும் அவன் முதலில் கற்றுத்தெளியட்டும். அதன் பின்னர் மாடி வீடு கட்டி பல ஜன்னல்கள், சாளரங்கள் வைத்துக்கொள்ளட்டும். மாளிகைவாசிகள் பல சாளரங்கள் வைத்துக் அனுபவித்துக் கொள்வதை யாரும் தடுக்கவில்லையே.
- துரை இளமுருகு