நூறு ஆண்டுகளுக்கும் மேலாக, மகளிர் தினத்தைக் கொண்டாடிவருகிறோம். உலகில் மிக அதிகமானோர் பங்குபெறும் தேர்தல் நடைபெறும் நாடு என்ற இலக்கைத் தாண்டியதோடு, பதினைந்து மக்களவைத் தேர்தல்களையும் எதிர்கொண்டுவிட்டோம். நாட்டில் மொத்தமுள்ள நூற்று பத்து கோடி மக்களில், சரிபாதியான அளவில் மகளிர் வசித்து வருகின்றனர். இப்படியாக, சிறப்புகளைப் பெற்றுத்திகழும் இந்த நாட்டில், தெய்வங்களும், பூமியும், ஆறுகளும் தொன்று தொட்டு மகளிரை முன்னிறுத்தியே வந்தாலும், மனித குலத்தின் அடிப்படையான “பாலின சமத்துவம்” எனும் உயரிய நோக்கை, இன்றளவும் எட்டிப்பிடிக்காத நிலையே நீடித்து வருகிறது என்பதற்கு, நூற்றுக்கும் அதிகமான சட்டங்கள் மகளிர் உரிமைக்காக இயற்றப்பட்டுள்ள போதிலும், இன்றளவும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்ந்தபடியே உள்ளன என்பதற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பாக இயற்றப்பட்ட, “குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம்” மிகப் பெரிய சான்றாகத் திகழ்கிறது.

இட ஒதுக்கீடும் அதன் நோக்கமும்:

இந்திய சமூகம் அடிப்படையில் ஏற்றத்தாழ்வு மிகுந்த சமூகமாகும். சாதி, மதம், இனம், பாலினம், கலாச்சாரம், மொழி, சமயம், பிறப்பிடம் போன்ற பல்வேறு வழிகளிலான பாகுபாடு நம் சமூகத்தில் தொடர்ந்து அரங்கேற்றப்பட்டு வருகிறது. நாகரீக சமூகத்திலும் பாகுபாட்டின் அளவானது அனைத்து தளங்களிலும், தொடர்ந்து நவீன படுத்தப்பட்டு முன்னிலும் வேகமாய் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே, ஏற்றத்தாழ்வு ஏதுமின்றி சமூக, பண்பாட்டு, கலாச்சார தளத்திலான பாகுபாட்டைக் கடந்து குடிமக்கள் அனைவரும் சமமற்ற நிலையிலிருந்து, சமதளத்தை நோக்கி பயணித்திட வேண்டி நம் முன்னோர்களில், மாமேதைகள் கூடி விவாதித்து முன்வைத்த மாற்றுத்திட்டங்களில் பிரதானமானதே, இட ஒதுக்கீடு திட்டமாகும்.

நாட்டில் பல்வேறு நிலைகளில் சாதி, மதம், மொழி, பாலினம் போன்ற நிலைகளில் இட ஒதுக்கீடு அமலில் உள்ளது. இட ஒதுக்கீடு என்பது, குடிமக்கள் அனைவருக்கும் அரசியலமைப்புச் சட்டத்தில் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும். சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும், அவர்களது சமூக வாழ்நிலைக்கேற்ப நமது அரசுகளால் வரையறை செய்யபட்டுள்ளது. ஆனால், இட ஒதுக்கீடு என்பது ஏதோ குறிப்பிட்ட சாதிக்கு மட்டுமானது, மகளிருக்கு மட்டுமானது என்ற மாசுபடிந்த கருத்து சமூகத்தில் பரவலாக உள்ளது.

மகளிர் இட ஒதுக்கீட்டின் தோற்றம்:

கடந்த 1929ம் ஆண்டில் தந்தை பெரியார் அவர்களால், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு பகுதியில் “சுயமரியாதை மாநாடு” நடத்தப்பட்டது. அதில் இயற்றப்ட்ட பல்வேறு தீர்மானங்களில் தமிழக வரலாற்றில் முதல் முறையாக, மகளிருக்கென மூன்று தீர்மானங்கள் இயற்றப்பட்டன. அதில் முக்கியமானதொரு தீர்மானம், “கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் தளத்தில் மகளிருக்கென தனியாக ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்” என்பதாகும்.

ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்திற்குப் பிறகு, நாட்டில் நிகழ்ந்த சீர்த்திருத்தங்கள், கல்வி முறைகள போன்றவற்றின் பலனாக, மகளிர் உரிமைகள் குறித்த சிந்தனைகள் முன்னிலும் வேகமாய் வலுப்பெற்று, மகளிரும் அரசியலில் பங்கேற்பு செய்யலாம் என்ற மாபெரும் மாற்றம் உருவானது. இதன் தொடர்ச்சியாக, நாடு குடியரசு அடைந்தபிறகு 1952ம் ஆண்டில் நடந்த முதல் பொதுத்தேர்தலின் போது மகளிருக்கும் வாக்குரிமை அளிக்கப்பட்டது. எனினும், சமூக தளத்தைப் போலவே அரசியல் தளத்திலும் மகளிர் பங்கேற்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏதும் நிகலாமலேயே போனது.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு குறித்து பேசப்பட்டாலும் மகளிருக்கான இட ஒதுக்கீடு குறித்து பேசவில்லை. மகளிர் இடஒதுக்கீடு குறித்த விவாதத்தின்போது, “சனநாயக நாட்டில் அனைவருக்குமான சமவாய்ப்பு இருப்பதால், மகளிருக்கான சிறப்பு ஒதுக்கீடு தேவையற்றது” என சில மகளிர் பிரதிநிதிகளே வலுவாக வாதம் செய்ததைத் தொடர்ந்து அந்த விவாதத்துக்கு, அத்தோடு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இரு ஆண்டுகளுக்குப் பிறகு, 1974ம் ஆண்டில் “இந்தியாவில் பெண்களின் நிலை” குறித்த ஆய்வு செய்யவேண்டி நிலைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது. அக்குழுவானது கிராமப்புறத்துப் பெண்களுக்கான வளர்ச்சி மற்றும் மேம்பாடுக்கான வழிமுறையாக உள்ளாட்சி தேர்தலில் மகளிருக்கான இட ஒதுக்கீடை பரிந்துரைத்த அதே வேளையில், “சட்ட மன்றம், பாராளுமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு தேவையில்லாதது” என அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபையில் எடுக்கப்பட்ட முடிவையே முன்வைத்தது.

1988-1990 ஆண்டுகளுக்கான, “தேசிய தொலைநோக்குத் திட்ட” விவாதத்தின் போது, மாவட்ட ஊராட்சிகளில் மகளிருக்கு 30 விழுக்காடு இடஒதுக்கீடு வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நாட்டில் முதல் முறையாக கர்நாடகம் மற்றும் குஜராத் மாநிலங்களில் ஊராட்சி தேர்தலில் மகளிருக்கான இடஒதுக்கீடு அமலுக்கு வந்தது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா:

இந்தியாவில் 1993ம் ஆண்டில், 72 மற்றும் 73வது அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின் வாயிலாக, உள்ளாட்சித் தேர்தலில் பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினரைத் தொடர்ந்து முதல் முறையாக, மகளிருக்கும் தேர்தலில் போட்டியிட இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் பட்டியல் பழங்குடியின மகளிர் 274 பேரும், பட்டியலின மகளிர் 7,808 பேரும், பொதுப்பிரிவு மகளிர் 30,458 பெரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு பெற்றதுடன், உறுப்பினர்களாக, தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். உள்ளாட்சித் தேர்தல் அளவில் மகளிருக்கான இடஒதுக்கீடு உறுதி செய்யபட்டுவிட்டது. எனினும் அதிகாரங்கள் குவிந்து கிடக்கும் சட்டமன்றம், பாராளுமன்றத்தில் மகளிருக்கான இட ஒதுக்கீடு உத்தரவாதம் செய்யப்படவில்லை.

அய்க்கிய முன்னணி அரசின் குறைந்த பட்ச பொதுத்திட்டத்தில், “சமூக நீதி” என்ற தலைப்பிற்குள், “நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் மூன்றில் ஒரு பங்கு, பெண்களுக்கு ஒதுக்கப்படும்” மேலும் இதற்காக அரசியல் அமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 12.09.1996ல் “அரசியலமைப்புச் சட்டத்தின் 81வது திருத்தத்தின் வாயிலாக, “நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில்  மகளிர் இடஒதுக்கீடு மசோதா” பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

உலக அளவில் அரசியலில் மகளிர் பங்கேற்பு :

• ஸ்காண்டிநேவிய நாடுகளில் - 50 விழுக்காடு
• இருண்ட கண்டமான ஆப்பிரிக்காவிலுள்ள ருவாண்டாவில் - 48 விழுக்காடு
• ஸ்வீடனில் - 45.3 விழுக்காடு
• பெல்ஜியத்தில் - 33.6 விழுக்காடு;
• கியூபாவில் - 33 விழுக்காடு
• பழமைவாத கருத்துகளும், பெண்ணடிமைக் கருத்துகளும் நிரம்பி வழியும் பாகிஸ்தானில் - 21.3 விழுக்காடு

உலகில் மிகப்பெரும் சனநாயக நாடு மக்களாட்சியில் ஏனைய உலக நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாகத் திகழ்வதாகக் கூறிவரும் இந்தியாவில், குடியரசு அடைந்து அறுபது ஆண்டுகளைக் கடந்துவிட்ட பிறகும் இதுகாறும் ஒரே நேரத்தில் 10 விழுக்காடு கூட மகளிர் பங்கேற்பு சட்டமன்ற, பாராளுமன்றங்களில் ஒலித்ததே இல்லை என்பதுதான் வேதனையான உண்மை. அதிலும் பெரும்பான்மை இடத்தை தக்கவைத்துக் கொண்டிருப்பது உயர்சாதியைச் சேர்ந்த பெண்கள்தான் என்பதே எதார்த்தமான உண்மை.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் :

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் தொடர்ந்து வருகிறது. இந்த மசோதா அமலுக்கு வந்தால், நாட்டில் மகளிரின் அரசியல் பங்கேற்பில் சிறப்பானதொரு மாற்றம் ஏற்படும் என்று ஆதரவாளர்களும், இந்த மசோதா தற்போதைய நிலையில் அப்படியே அமலாக்கப்பட்டால், சமூகத்தில் உயர்ந்த நிலையில் உள்ள சாதி பெண்களும், பணக்கார பெண்களும் மட்டுமே தேர்தலில் பங்கெடுக்க இயலும் எனவே, இம்மசோதாவில், பட்டியல் வகுப்பினர், பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மகளிருக்கென உள் ஒதுக்கீடு உத்தரவாதப் படுத்தப்பட வேண்டும் என்று மற்றொரு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மகளிர் இட ஒதுக்கீட்டிற்கான மாற்று யோசனைகள் :

ஆளும் தரப்பினரும், இதர அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும், மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை சட்டமாக்காமல், தொடர்ந்து வேறு, வேறு மாற்று யோசனைகளைத் தெரிவித்துக்கொண்டு காலம் தாழ்த்திய வண்ணம் உள்ளனர்.

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களால் பட்டியல் வகுப்பினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்காக முன் வைக்கப்பட்டு முதல் பொதுத்தேர்தலில் அமலில் இருந்த “இரட்டை வாக்குரிமை” திட்டத்தைக் கொண்டுவரலாம் என்பது முதலாவது திட்டமாகும். இதன்படி மொத்த பாராளுமன்ற தொகுதிகளில் 1/3 பங்கு தொகுதிகளில் பொது வேட்பாளருடன், மகளிர் வேட்பாளரையும் தனியே நிறுத்தி இருவரையும் தேர்ந்தெடுப்பது. இதன்படி மொத்தமுள்ள 543 பாராளுமன்ற ஆண் உறுப்பினர்களுடன் கூடுதலாக 181 பெண் உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

“ஒவ்வொரு அரசியல் கட்சியும் தேர்தலின் போது, தனது வேட்பாளர்களில் 33 விழுக்காடு மகளிர் வேட்பாளர்கள் இருக்கும் வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று தேசிய தேர்தல் ஆணையத்தின் முன்னாள் தலைமை ஆணையர் கே.பி.எஸ்.கில் அறிவுரை வழங்கியுள்ளார். இது இரண்டாவது திட்டமாகும்.  இது நடைமுறைக்கு சாத்தியமில்லாத ஒரு திட்டமாகும். சான்றாக, தற்போது தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 21 பேரும், 30 அமைச்சர்களில் 3 பேரும் மட்டுமே மகளிர் உறுப்பினர்களாவார்கள்.

பொதுவாக அரசியல் கட்சிகளின் தலைமையே, வேட்பாளர்களைத் தீர்மானிக்கின்றது. கட்சிக்குக் கட்டுப்பட்டே பெண்களும், செயல்பட வேண்டிய நிர்பந்தம் உள்ளது. ஆதலால் பெண்கள் தங்களுக்குள் ஓர் இயக்கமாக இருக்க முடிவதில்லை. மேலும் பெண்களுக்கான குரலாக ஒலிக்க இயலாமல், கட்சிகளின் குரலாக இருக்க வேண்டிய நிர்பந்தம் நிலவுகிறது.

அரசியல் கட்சிகளிலும் ஆணாதிக்கமே நிலை கொண்டுள்ளது. பெண் தலைவராக இருக்கும் கட்சிகளிலும் இதுதான் நிலைப்பாடாக இருக்கிறது. நம் நாட்டில் அரசியல் கட்சிகளில் பெண்களின் தலைமை என்பதே பெரும்பாலும், ஆண் தலைவரோடு அவருக்குள்ள மனைவி, மகள், சகோதரி என்பது போன்ற உறவுகளாலும், அறிமுகத்தாலும் கிடைக்கும் பதவிகளாகவே உள்ளது. மாறாக, கட்சித் தொண்டராக இருந்த தன் செயல்திறனால் தியாகத்தால் அடையும் பதவியாக அது பெரும்பாலும் இருப்பதில்லை.

பெண் தலைமையும், ஆண் தலைமையின் எதிரொலியாகவே செயல்பட நிர்பந்திக்கப்படுகிறது. மகளிரை வேட்பாளராக நிறுத்தும் தொகுதிகளிலுள்ள செல்வாக்கு மிகுந்த ஆண் தலைவர்களை கட்சித் தலைமை சமாதானப்படுத்துவது வாடிக்கையாகிவிட்டது. தமிழ்நாட்டில் நிலவும் இதே நிலைதான் நாடு முழுவதும் எவ்வித மாற்றமுமின்றி நிலவுகிறது. நிலைமை இப்படி இருக்கையில், அரசியல் கட்சிகள் தானாகவே 33 விழுக்காடு இட ஒதுக்கீடை அமல்படுத்தும் என்பது சந்தேகத்திற்குரியதே.

மூன்றாவது திட்டம் மிகவும் நயவஞ்சகமானது, பெண்ணினத்திற்கு மாத்திரமின்றி இட ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்திற்கே நேர் எதிரானது. மொத்தமுள்ள 534 நாடாளுமன்ற தொகுதிகளுடன் அதன் மூன்றில் ஒரு பகுதியான 181 தொகுதிகளை கூடுதலாக உருவாக்கி மொத்தமுள்ள 715ல் 181 தொகுதிகளை மகளிருக்கென ஒதுக்கீடு செய்வது என்பதே அத்திட்டமாகும்.

அரசியல் கட்சிகளில் ஆணாதிக்க மற்றும் சமூக நீதிக்கு எதிரான செயல்பாட்டுக்கு இதைவிட வேறு சிறந்ததொரு சான்று வேறு எங்கிருந்தும் கிட்டப்போவதில்லை. மனதளவில் நமது சிந்தனை மிகவும் பின் தங்கியுள்ளது என்பதே மீண்டும் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது.

சமூக மாற்றத்திற்கான அதிகாரம் மிக்கத்தொரு திட்டமான மகளிர் இடஒதுக்கீடு நமது அரசியல் தலைவர்களால் இப்படியாக தொடர்ந்து பல்வேறு செயல்பாடுகளின் மூலமாகக் கேலிக்குரியதாக்கப்பட்டு வருகிறது.

முதலில், மகளிருக்கு இட ஒதுக்கீடு வேண்டாம் என்றார்கள். பிறகு 20 விழுக்காடு தரலாம் என்றார்கள். இறுதியாக 1/3 பங்குக்கும் குறைவான 33 விழுக்காடு ஒதுக்கீடு என்கிறார்கள். கணிப்பொறி யுகத்தில் எங்கே சென்று கொண்டிருக்கிறோம் நாம்.

முதன்முறையாக நாட்டின் குடியரசுத்தலைவரும், பாராளுமன்ற சபாநாயகரும், மத்தியில் ஆட்சி செய்யும் கட்சியின் தலைவராகவும் பெண்களே உள்ளனர். பெண்கள் அதிகாரமிக்க முக்கிய பதவிகளில் ஒரு சேர ஒரே நேரத்தில் உள்ள அரிய தருணம் இது.

“பெண்களுக்கு அரசியல் பிடிக்காது, அவர்களுக்கு அரசியல் தெரியாது” என்று கூறப்படும் இதே நாட்டிலதான், நாடு முழுவதும் அனைத்து அரசியல் கட்சியினரையும் தோலுரித்துக் காட்டும் வகையில் கட்சி, மொழி, இனம், சாதி, கலாச்சாரம் கடந்து 1 மில்லியன் பெண்கள் ஊராட்சித் தலைவர்களாகச் செயல்பட்டு வருகின்றனர். தொடக்க காலத்தில், ஊராட்சியில் வெற்றியடைந்த மகளிர் பெரும்பாலானோர்கள் ஆண்களின் பிரதிபலிப்பாகவே செயல்பட்டாலும், தற்போது அவர்களுக்குள்ளிருந்து ஆங்காங்கே உரிமை சார்ந்த அதிர்வுகளும், மீறல்களும் வெளிப்பட்டு வருகிறது. பெண் தலைவர்கள் சுயமாக இயங்க ஆரம்பித்துள்ளார்கள்.

கட்சி வேறுபாடின்றி அனைவறும்; ஆதரிக்கிறார்கள், இருந்தும் இன்னமும் சட்டமாக்கப்படாத விந்தை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் வெளிப்படுகிறது. நாட்டில், மொத்த மக்கள் தொகையிலும், வாக்காளார்களிலும், வாக்களிப்பவர்களிலும் சரிபாதியாக பெண்கள் இருப்பதால் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தலில் 50 விழுக்காடு ஒதுக்கீடும், அதில் அனைத்து பிரிவு மக்களும் பங்கெடுப்பு செய்யும் வகையில் உள் ஒதுக்கீடும் அதற்கான அரசியல் அமைப்பு சாசன திருத்தமும் விரைவாகக் கொண்டுவரப்பட வேண்டும். சுழற்சி முறையில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை என நாட்டிலுள்ள அனைத்து தொகுதிகளிலும் பெண் தலைவர்கள் உருவாக்கப்பட வேண்டும். இது நனவாக்கப்பட அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அனைவரும் அவரவர் தளங்களில் பணிபுரிதல் அவசியம்.

- இ.இ.இராபர்ட் சந்திரகுமார், வழக்கறிஞர், உயர்நீதிமன்றம்

Pin It