பெண்ணியம் பேசும் பெண்களும், அதை எதிர்க்கும் குடும்பத்துக்கு ‘ஒடுங்கிய’ பெண்களும் பங்கேற்ற விவாதம் ஒன்றை விஜய் தொலைக்காட்சி ‘நீயா? நானா?’ (டிசம்.19) நிகழ்ச்சியில் ஒளிபரப்பியது.
மத்திய நடுத்தர வர்க்க ‘பொது புத்தியில்’ படியச் செய்யப்பட்டுள்ள பெண்ணடிமைக் கருத்துகளை மறுக்கும் ஆரோக்கியமான விவாதங்கள் நிகழ்ச்சிக்கு பெருமை சேர்த்தன. பெண்ணியம் பேசும் குழுவில் இடம் பெற்ற தோழியர்கள் ஓவியா, சல்மா, கவின்மலர், லூசி, ரஜினி உள்ளிட்ட அனைவருமே கருத்துகளை ஆழமாகவும் தெளிவாகவும் முன் வைத்தனர். பெண்ணியவாதிகள் என்றாலே அவர்கள் “ஒழுங்கு” மீறி நடப்பவர்கள் என்று தனி மனித பழக்கங்களை ‘ஒழுக்கங்களாக்கி’ பெண்ணுரிமையின் நியாயங்களையே புறந்தள்ளி விடும் பார்ப்பனிய கருத்துக்களை தோழர்கள் சரியாகவே அம்பலப்படுத்தினர்.
பெண்ணியம் என்பதற்கான வரையறை - பெண், ஆண், திருநங்கை என்ற மூன்று பாலினத்தவரும் சம உரிமை கிடைத்திட வேண்டும். ஆண்களுக்கு உள்ள உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பெண்ணியவாதிகள் விளக்கமளித்தனர். பெண்களுக்கான உரிமைகளாக அவர்களுக்கான கல்வி, திருமணம் செய்து கொள்வதா வேண்டாமா என்று முடிவு எடுக்கும் உரிமை, வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் உரிமை, குழந்தை பேற்றில் இறுதி முடிவு எடுக்கும் உரிமை,பொருளாதார உரிமை போன்ற உரிமைகள் அடங்கும் என்று பெண்ணியவாதிகள் முன் வைத்த கருத்தை சீரணிக்க முடியாத எதிர் அணிப் பெண்கள், இத்தகைய உரிமைகளோடு குடும்பம் நடத்தவே முடியாது என்று கூறினார்.
“எங்கள் குடும்பத்தில் தங்களுக்கு உரிய மரியாதையும், கவுரவமும் தரப்படுகிறது. விட்டுக் கொடுத்து வாழும் வாழ்க்கையில் நிறைவு ஏற்படுகிறது. அன்பு என்ற பிணைப்புதான் குடும்பத்தில் முக்கியம். பெண்ணியம் என்று பேசிக் கொண்டு, குடும்ப உறவுகளை சீர்குலைத்து விட்டால், குழந்தைகளின் எதிர்காலம் பாதித்து விடும். கணவன், சில நேரங்களில் கோபத்தில் அடிப்பது வழக்கம் தான். அதற்காக அந்த நேரத்தில் நாமும் ஆத்திரப்படக் கூடாது. கோபம் தணிந்த பிறகு, பக்குவமாக கணவருக்கு எடுத்துக் கூறினால், அவர்களின் தவற்றை உணர்த்த முடியும். நாங்கள் எல்லாம் அத்தகைய நடைமுறைகளையே பின்பற்றுகிறோம். திருமணம் செய்து கொண்ட பிறகு, குழந்தை பெற்றுத் தருவது பெண்ணின் கடமையாகி விடுகிறது. வரதட்சணைக் கொடுமைகள் எல்லாம் இப்போது அவ்வளவாகக் கிடையாது. பெற்றோர்களே, தங்கள் பெண்களுக்கு விரும்பி வழங்குகிறார்கள்” என்பது போன்ற வாதங்களையே பெண்ணியத்தை எதிர்க்கும் அணியினர் முன் வைத்தனர்.
பெண்ணியவாதிகள் இதற்கு விரிவான தங்கள் விளக்கங்களை முன் வைத்தனர். “உங்கள் குடும்பங்களில் உங்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் தரப்படுவதாக நீங்கள் கருதிக் கொண்டிருப்பது, ஒரு கற்பிதம் தான். நீங்கள் குடும்பத்தைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்று நாள் முழுதும் உழைத்தால்கூட அந்த உழைப்புக்கு உரிய ‘மதிப்பு’ கிடைப்பதில்லை. மனைவி ‘சும்மா’தான் இருக்கிறார் என்றுதான் கணவர்கள் கூறுகிறார்கள். ஒரு காலத்தில் பண்ணையார்களிடம் கூலிகளாக வேலை பார்த்தவர்களை, பண்ணை யார்கள் அடித்தால்கூட, அதற்காக, அந்தத் தொழிலாளர்கள், பண்ணையாரை திருப்பி அடிக்க மாட்டார்கள், மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வார்கள். அதே மன நிலைக்குத்தான் பெண்கள் உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.
இந்த உலகத்தில் ஆண்கள் மட்டுமே பிறக்கிறார்கள். பெண்கள் உருவாக்கப்படு கிறார்கள் என்று பிரஞ்சு நாட்டின் பெண்ணியவாதி கூறினார். பொருளாதார சுதந்திரத்தை ஒரு பெண் பெற்றிருந்தாலும்கூட, சமுதாய, கலாச்சார சுதந்திரம் கிடைக்கும்போதுதான் உண்மையான பொரளாதார சுதந்திரத்தைப் பெற முடியும். இன்றைய சமூகத்தில் பொருளாதார சுதந்திரம் சார்ந்த பெண், தனக்கான பொருளாதார முதலீடுகளை தானே முடிவெடுக்கக்கூடிய உரிமை வழங்கப்பட்டிருக்கிறதா? படித்த, ஆங்கிலம் பேசும் வசதி வாய்ப்புகள் உள்ள பெண்கள் தங்களுக்கு குடும்பத்தில் உரிய மரியாதை கிடைப்பதாகக் கூறுகிறார்கள். இந்த நிலையை பெறுவதற்கேகூட நீண்டகாலமாக பெண்ணியவாதிகள் குரல் கொடுத்ததுதான், காரணம் என்பதை மறந்து விடக் கூடாது.
வதட்சணைக் கொடுமைகளும் அதற்காக கொல்லப்படும் பெண்களும் பற்றிய செய்திகள், ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கின்றன. ஒரு கோடி பெண் சிசுக்கள் வயிற்றிலேயே அழிக்கப்பட்டிருக்கிறார்கள். இங்கே, தங்களுக்கு, குடும்பத்தில் ‘உரிமைகள்’ கிடைத்து விட்டதாகக் கூறும் பெண்கள், தங்களின் குடும்பத்தை மட்டுமே பார்க்கிறார்கள். குடும்பத்தோடு எல்லாமே முடிந்து விட்டதாகக் கருதுகிறார்கள். ஆனால், சமுதாயத்தை அவர்கள் பார்க்க மறுக்கிறார்களே! அத்தகைய சமூக சிந்தனை அவர்களுக்கு தடைபடுத்தப்பட்டுள்ளதே. பெண்களுக்கான கருத்துகளை ஆண்களே ஊடகங்கள் வழியாக உருவாக்குகிறார்கள். பெண்கள் உரிமைகளுக்கான கருத்துகள், பெண்களே முன் வைக்கும் சிந்தனைகள், அவர்களுக்கு எட்டுவதில்லை. வணிக ஊடகங்களில் மூழ்கிக் கிடக்கும் பெண்கள், தங்கள் உரிமைகளுக்கான எழுத்துகளைப் படிக்கிறார்களா? தங்களுக்கான அரசியல் பார்வைகளை ஆண்களைப் போல் உருவாக்கிக் கொள்கிறார்களா? ‘அறிவு’ அதிகாரத்தை உருவாக்கும் காலத்தில் ‘அறிவு ‘ ஆணாதிக்க உடமையாகவே நீடிக்கிறது; அதை ஆண்கள் தங்களிடம் மட்டுமே வைத்துக் கொண்டுள்ளார்கள்.
இங்கே விவாதங்களுக்காக நீங்கள் பேசாமல், உங்கள் உள்ளத்தைத் திறந்து, நீங்களே, ஒரு கேள்வியை கேட்டுக் கொள்ளுங்கள். உண்மையிலேயே பெண்களுக்கு சம உரிமை கிடைத்து விட்டதா? கொடுத்துப் பெறுவது அல்ல உரிமை; அதை நாமே எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கும் கிராமங்களில் பெண்கள் ஆண்களின் கொடுங்கரங்களில் சிக்கி சந்திக்கும் அவலங்கள் நீடிக்கின்றனவே!
பெண்ணியம் பேசும் பெண்கள் என்றாலே, அவர்கள், புகைபிடிப்பவாகள், குடிப் பழக்கம் உள்ளவர்கள் என்ற தவறான கருத்து உருவாக்கப்படுகிறது. வேண்டுமானால் பெண்ணியம் பேசும் பெண்களில் சிலர் அப்படி இருக்கலாம்; ஆனால் பெண்ணியம் என்றாலே பெண்கள் குடிப்பது, புகைப்பது என்று அர்த்தமல்ல. குடிப்பதும், புகைப்பதும் ஆண்களுக்கும் கேடு; பெண்களுக்கும் கேடுதான். இருபாலாருக்கும் அதை முன் வைக்காமல், பெண்கள் குடிப்பது, புகைப்பது என்ற பார்வையில் மட்டுமே அணுகுவதே, சரியான அணுகுமுறையாக இருக்குமா?
ஆண்கள் கோபப்படும்போது உணர்ச்சிவயப்பட்டு சில நேரங்களில் மனைவியை அடிப்பது இயல்புதான் என்று கூறினால், அதேபோல் பெண்களும் கோபப்படும்போது, உணர்ச்சி வயப்பட்டு செயல்படும் வாய்ப்புகளை இந்த சமூகம் வழங்கியிருக்கிறதா? பெண்களுக்கான சொத்துரிமை தத்தெடுக்கும் உரிமை உள்ளிட்ட உரிமைகளை வழங்கும் - இந்து சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் கொண்டு வர முயன்றபோது, அந்த முயற்சி பிற்போக்குவாதிகளால் முறியடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தனது சட்ட அமைச்சர் பதவியையே அம்பேத்கர் தூக்கி எறிந்தார். அப்போது இந்த மசோதாவுக்கு ஆதரவாக இரண்டு பெண்களிடமிருந்து குரல் வந்திருந்தால்கூட என்னால் நிறைவேற்ற முடிந்திருக்கும். ஒரு குரல்கூட வரவில்லையே என்று உள்ளம் வருந்தினார், டாக்டர் அம்பேத்கர்.
இதுவே அன்றைக்கு பெண்களின் நிலை. இன்று இந்த அரங்கில் கருத்துகளை கூறுவதற்கு நீங்கள் முன் வந்திருப்பதுகூட எங்களுக்கு மகிழ்ச்சிதான். ஆனால், நீங்கள் வெளிப்படுத்துகிற கருத்து, ஆண் ஆதிக்க சமூகமும், ஊடகங்களும், பழமைவாதமும் உங்கள் மீது திணித்துள்ள கருத்துகள் என்பதை நீங்கள் சிந்திக்க வேண்டும்” என்ற வாதங்களை முன் வைத்தனர்.
நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்திய கோபிநாத், பெண்ணியம் பேசிய பெண்களின் வாதங்களில் உள்ள நியாயங்களை சுட்டிக்காட்டினார். இத்தகைய விவாதங்கள்கூட தமிழ்நாட்டில்தான் சாத்தியமே தவிர, பீகாரிலோ, உ.பி.யிலோ, ம.பி.யிலோ, ராஜஸ்தானிலோ பேசவே முடியாது. அதற்காக தமிழகத்தில் எத்தனையோ சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள், தங்கள் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டார்.
பெண்ணிய எதிர்ப்பு அணியில் பேசிய பெண்களில் பலர், பெண்களுக்கு பாகுபாடுகள் காட்டப்படுவதை தாங்கள் ஒப்புக் கொள்வதாகவே கூறினார்கள். நிகழ்ச்சியில் சிறப்பாக கருத்துகளை முன் வைத்ததற்கான பரிசு, தோழர் ஓவியாவுக்கு வழங்கப்பட்டது. - இரா.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
குடும்பத்தை மட்டுமே பார்க்காதீர்; சமூகத்தைப் பாருங்கள்
- விவரங்கள்
- விடுதலை இராசேந்திரன்
- பிரிவு: பெரியார் முழக்கம் - ஜனவரி 2011