விளையாட்டு வீரர்களுக்கு வசதியின்மை, விளையாட்டு மைதானங்களில் சில முழுமை பெறாமை, முதற்கட்ட விசாரணையில் 8000 கோடி அளவுக்கு காமன்வெல்த் ஊழல் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினாலும், அக்டோபர் 3 முதல் 14 வரை தலைநகர் டில்லியில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில்  74 தங்கம் உட்பட 177 பதக்கங்கள் பெற்று ஆஸ்திரேலியா முதலிடத்தையும், 38 தங்கம் உட்பட 101 பதக்கங்களைப் பெற்று இந்தியா இரண்டாம்  இடத்தையும் பெற்று உலக அரங்கில் பலம் பெற்றுள்ளதை பாராட்டலாம்.

            போட்டியின் துவக்கவிழா மற்றும் நிறைவு விழாவில் இசை, நடனம், பாடல், வீரம் உள்ளிட்ட கண்கவர் கலைநிகழ்ச்சிகள் மூலம் இந்தியாவின் சுவைமிகுந்த பாரம்பரியத்தை உலகிற்கு பறைசாற்றியுள்ளோம்.

            இந்திய கிரிக்கெட் வாரியம், ஹாக்கி கூட்டமைப்பு, விளையாட்டு ஆணையம் என இந்தியாவில் ஊழலற்ற துறை என்ற ஒன்றைக்கூட ஐக்கிய முற்போக்குக் கூட்டணியால் காட்டமுடியாது. இளைஞர் நலனில் அக்கறையற்று ஆட்சி செய்யும் இப்படிப்பட்டச் சூழ்நிலையில் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற  ஷாமினி, அபிஷேக், அச்சந்தாசரத் கமல், சாய்னாநேவால், அபினவ்பிந்த்ரே உள்ளிட்ட இந்திய வீரர்கள் உண்மையில் போற்றுதலுக்குரியவர்களே. தற்போது வெற்றிபெற்றுள்ள வீரர்கள் தங்களின் சொந்த முயற்சியினால் தனித்திறன் வளர்த்துக் கொண்டவர்களே தவிர அரசிற்கும் இவ்வீரர்களின் வெற்றிக்கும்  துளியளவும் சம்பந்தமில்லை.

            எந்த ஒருநாடு இளைஞர்களின் ஆற்றலையும் திறனையும் முழுமையாக பயன்படுத்துகிறதோ அந்த நாடு விளையாட்டு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் முன்னிலை வகிக்கும். வெறும் இரண்டேகால் கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஆஸ்திரேலியா 177 பதக்கங்கள் பெற்று முதலிடத்தைப் பெறும்போது, சுமார் 110 கோடி மக்கள் தொகையைத் தாண்டி, சரிபாதி இளைஞர்களைக் கொண்ட இந்தியா எவ்வளவு பதக்கங்களைப் பெற்றிருக்க முடியும் என்பதை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். இதிலிருந்து இந்திய இளைஞர்களின் நலனில் மத்திய மாநில ஆட்சியாளர்கள் அக்கறை காட்டுவதில்லை என்பது தெளிவாகிறது. மக்கள் தொகையை ஒரு பூதாகரமான சுமையாக ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.  யானையைக் காட்டி பிச்சை எடுக்கும் செயலைப் போல மத்திய மாநில அரசுகள் மக்களின் தேவையைக் காரணமாக காட்டி உலகவங்கியிடம் கடன் வாங்கிக்கொண்டிருக்கிறது.

            ஒருநாள் பொழுதை பசியின்றி கழிப்பதற்கே அல்லாடும் நிலையில் 77 சதம் மக்கள்  இருக்கின்ற ஒருநாட்டில் இளைஞர்கள் விளையாட்டுகளில் எவ்வாறு ஆர்வம் காட்ட இயலும். பணம் படைத்த, அரசியல் பலம் படைத்த மேல்தட்டு வர்க்கத்திற்கு மட்டுமே விளையாட்டுக்கான பயிற்சியைப் பெறுவதற்கும் போட்டிகளில் பங்கேற்பதற்கும் வாய்ப்புகள் கிடைக்கிறது.  ஏழையெளிய சாதாரண மற்றும் நடுத்தர குடும்பத்து இளைஞர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டு தொலைக்காட்சிகளில் மட்டுமே போட்டிகளைக் கண்டுகளிக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும், பன்னாட்டு நிறுவனங்களில் அடிமைக் கூலிகளாக 12 மணிநேரம் 15 மணி நேரம் வேலை செய்யும் இளைஞர்களால்  விளையாட்டுத் திறனை வளர்த்துக்கொள்வதற்கான நேரமுமில்லை.

            திறமையான விளையாட்டு வீரர்களை உருவாக்க இளைஞர் நலனுக்கான நிதி ஒதுக்குவதில், அவர்களுக்கான மைதானம் அமைத்துக் கொடுப்பதில், விளையாட்டிற்கான நேரம் ஒதுக்குவதில், அதற்கான பயிற்சியாளர்களை அமர்த்துவதில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் ஆர்வம் காட்டவில்லையென்றால் இளைஞர்களின் தனித்திறன், கூட்டுத்திறனை எப்படி வளர்க்கமுடியும்? புதிய தலைமுறை விளையாட்டு வீரர்களை எப்படி உருவாக்கமுடியும்?

            விளையாட்டையும் கல்வித்துறையின் ஒரு பகுதி என்பதைக் கருதி பள்ளிகளில் முதலாம் வகுப்பு துவங்கும்போதே விளையாட்டுத்துறையில் ஆர்வத்தை ஏற்படுத்தவேண்டும். ஆனால், தனியார் பள்ளிகளில் விளையாட்டுக்கென தனியாக நிதி வசூல் செய்யப்பட்டு கொள்ளையடிக்கப் படுகிறது. குழந்தைகளுக்குத் தனித்திறன்களை வளர்க்கிறோம் என்ற பெயரில் தனித்தனி கோச்சிங்குகள் ஏற்படுத்தி அதன் மூலமும் தனது கொள்ளையை நடத்திவருகின்றன. படிப்பு மட்டுமே வருமானத்தை ஈட்டித்தரும் என்ற மாயையை பெற்றோர்களுக்கு உருவாக்கி, விளையாட்டு என்பது இரண்டாம் பட்சமாக நினைவில் நிறுத்தப்படுகிறது.  தனியார் பள்ளிகளில் இருக்கின்ற சிறு இடத்தைக்கூட கட்டடமாக கட்டி அதிக அளவில் மாணவர்களை சேர்த்து கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை இன்றுவரை நமது அரசு வேடிக்கைப் பார்த்துகொண்டுதான் இருக்கிறது.

            கால்பந்து விளையாட்டில் உலக தகுதிச்சுற்றுக்குகூட நம்மால் இன்னும் போக முடியவில்லையென்றால் நாம் விளையாட்டுத்துறையில் எப்படிப்பட்ட அவலநிலையில் இருக்கிறோம்.              அளவுக்கு அதிகமான கருப்பு/வெள்ளைப் பணமாக தரும் கிரிக்கெட்டுக்கு காட்டும் ஆர்வத்தை மற்ற விளையாட்டுகளில் ஆட்சியாளர்கள் காட்டுவதில்லை. ஐ.பி.எல்  கிரிக்கெட் போட்டியையும் அதன் இடையிடையே நடைபெறும் குத்தாட்டம் குதியாட்டத்தையும் நேரில் சென்று கண்டு மகிழும் மத்திய அமைச்சர்களும் முதல்வர்களும் ஹாக்கி,கைப்பந்து, கால்பந்து மற்றும் தடகளப் போட்டிகளைக் கண்டு அவர்களை ஊக்குவிப்பதில்லை.

            விளையாட்டில் ஆர்வமுள்ள சாதாரண ஏழையெளிய நடுத்தர வர்க்கத்து இளைஞர்களுக்கு போதுமான நிதியை ஒதுக்கி, அவர்களுக்கான மைதானம் ஏற்படுத்தி, பயிற்சியாளர்களை வைத்து முறையான பயிற்சி அளித்து, ஊழல் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷ்கல்மாடி, லலித்மோடி போன்ற விளையாட்டுத்துறையில் உள்ள ஊழல் பெருச்சாளிகளை விரட்டினால்தான் இந்திய இளைஞர்கள் உலகின் முன்னணி நட்சத்திரங்களாக மின்னுவார்கள்.

            காமன்வெல்த் போட்டிகளில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணை முற்றுபெறுமா? மக்களின் வரிப்பணத்தில் ஊழல் செய்த கொள்ளைக்கூட்டத்தைக் கண்டுபிடித்து தண்டனை வழங்குவார்களா? அல்லது 20, 30 ஆண்டுகள் வரை அலைகழித்து மக்களை மறக்கச் செய்துவிடுவார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.     

- இரா.சரவணன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It