திருப்பித் தர வலிமையற்ற
ஒருவனின் -
கடன் கேட்கும் தொனி..
தனக்குத் தானே பாடும்
இரங்கற்பா போன்றது..!

தன் வறுமையைக் கூற..
வார்த்தையின்றி அவன்
கூனிக் குறுகி..
”குறுந்தகவல்” அனுப்பக் கூடும்..!

பார்த்து விட்டு..
பார்க்காதது போல
பாவனை செய்யும்..
உறவுகள் -
முறிந்த கிளையின்
ஒடியும் சப்தம்..
வேர் வரையும் உலுக்கக் கூடும்..!

வளர்த்தவனின் சூதை..
அறுக்கும்போது மட்டுமே
அறிய நேர்ந்த
ஆட்டுக்குட்டியின்
துயரை
குரல்வளையில் இருந்து கொப்பளிக்கும்
குருதிகள் பேசக் கூடும்..!

வாயில்லா ஜீவன்களைப் போல
வறியவர்கள்...!

இருப்பவனின் செல்வத்தில்
இல்லாதவனின் இரத்தமும்
வியர்வையும்
காய்ந்து கிடப்பதை
கண்ணீர்த் துளிகள் மட்டுமே
காணக் கூடும்..!

- அமீர் அப்பாஸ் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It