கீர வாங்கலையோ..! கீர..! அகத்திக்கீரை; பொன்னாங்கன்னிக் கீரை; முருங்கைக் கீரை; கீர வாங்கலையோ கீர..!
விஷம் முறிக்கும் - நஞ்சு முண்டான் கீரை; ரத்தம் சுத்தி செய்யும், அஜீரணம் அகற்றும் - புதினாக் கீரை; சிரங்கும், சீதளமும் விலக்கும் - புண்ணக் கீரை; கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும் - முடக்கத்தான் கீரை; மூளைக்கு பலம் தரும் - வல்லாரை; நீரிழிவை நீக்கும். கண்கள் உடல் பலம் பெறும் - முருங்கைக் கீரை; ரத்த சோகையை நீக்கும் - வெள்ளை கரிசலைக்கீரை; ரத்த அழுத்தத்தை சீர் செய்யும் ,சிரங்கு மூலத்தை போக்கும் - சுக்கா கீரை; மேனி அழகையும், கண் ஒளியை அதிகரிக்கும் - பொன்னாங்கன்னிக் கீரை...
‘‘கீர வாங்கலையோ..! கீர..! அகத்திக்கீரை; பொன்னாங்கன்னிக் கீரை; முருங்கைக் கீரை; கீர வாங்கலையோ கீர..!’’
‘‘இயற்கையா கிடைக்கிற சத்தானக் கீரை; தேடி தேடி வாங்கினாலும் கிடைக்காத கீரை வகைகள் வாங்கம்மா வாங்க... கீர வாங்கலையோ..! கீர...’’
‘‘எங்களுக்கு தெரிஞ்சதுலா முருங்க கீர; பொன்னாங்கன்னிக் கீர; அகத்திக்கீர நீ என்னடானா இவ்வளோ கொண்டு வச்சிட்டு அத்தனையும் கீரங்கிர கிராமத்துல இருந்து வந்து பட்டணத்துல இருக்கவங்கல ஏமாத்த பாக்குறியா....’’
‘‘இந்தா மா நாங்க ஏமாத்தி பொழைக்க பொறந்தவங்க இல்ல ஒரு ரூபா நாளும் உழச்சி சாப்பிடுறவங்க என்ன கீரைய சாப்பிட்டா என்னா பன்னும்னு சொல்லிட்டே வரேன் கேளு...’’
‘‘பித்தம், கபம், நோய்களை விலக்கும் - பரட்டைக் கீரை; வெட்டையை, நீர் கடுப்பை நீக்கும் - பிண்ணாக்கு கீரை ; சோகையை விலக்கும். கண் நோய் சரியாக்கும் - புளியங்கீரை; ஆண்மை பெருக்கும் - அரைக்கீரை; பசியைத் தூண்டும் , வீக்கம் வத்தவைக்கும் - குப்பை கீரை; கல்லீரலை பலமாக்கும். காமாலையை விலக்கும் - மஞ்சள் கரிசலை; வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும் - கொடி பசலைக் கீரை; தசைகளைப் பலமடையச் செய்யும் - பசலைக் கீரை; சரும நோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயைக் குறைக்கும் - சிறு பசலைக் கீரை; சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தைத் தணிக்கும் - காசினிக் கீரை; ரத்தத்தைச் சுத்தமாக்கிப் பித்தத்தைத் தெளிய வைக்கும் -அகத்திக் கீரை...’’
‘‘கீர வாங்கலையோ..! கீர..! அகத்திக்கீரை; பொன்னாங்கன்னிக் கீரை; முருங்கைக் கீரை; கீர வாங்கலையோ கீர..!’’
‘‘என்னமா நீ இப்படி சொல்லிட்டே இருக்க இவ்வளோ கீர இருக்குனு இப்போ தா தெரிது... நீயோ நல்ல கீரையா 2 குடுமா ஒடம்புக்கு சத்தா...’’
‘‘இந்தாங்க ம்மா முளைக் கீரையும் மணத்தக்காளி கீரை எடுத்துட்டு போய் சமச்சி சாப்பிடுங்க...’’
‘‘யம்மா... கீரக்கார அம்மா... இந்த ரெண்டு கீரையும் உடம்புக்கு என்ன பன்னும்னு சொல்லவே இல்ல...’’
‘‘முளைக் கீரை - பசியை ஏற்படுத்தும். நரம்பு பலமடையும்; மணத்தக்காளி கீரை வாய், வயிற்றுப்புண் குணமாக்கும்; சமச்சி சாப்பிட்டு நா அடுத்த முற வரும்போது சொல்லுங்கமா எப்படி இருக்குனு....’’
‘‘கீர வாங்கலையோ..! கீர..! அகத்திக்கீரை; பொன்னாங்கன்னிக் கீரை; முருங்கைக் கீரை; கீர வாங்கலையோ கீர..!’’
‘‘அண்ணே, அண்ணே இந்த தள்ளுவண்டிய கொஞ்சம் மேலத் தூக்கி வையுங்க அண்ணே மாட்டிகிடுச்சி, வண்டி ரொப்ப கீர இருக்கு வெயிட் ஆ இருக்கு கொஞ்சம் உதவிப் பண்ணுங்க அண்ணே..!’’
‘‘சரி, ம்மா.. நா இந்தபக்கம் புடிக்குறேன் நீ ! அந்த பக்கமாபுடி...’’
‘‘தள்ளு; தள்ளு கொஞ்சமா தூக்கி புடிமா நா தள்ளுரேன் ம் அவ்வளவு தா மா வந்துடுச்சி; எதுக்கு மா இந்த வேகாத வெயில இப்படி கஷ்டப்படுர உங்க வீட்டுக்காரர் என்ன பன்னுறார்’’
‘‘அவன பத்தி ஏன்னே கேக்குற என்னையும் என் புள்ளைங்களையும் விட்டுட்டு இன்னொருத்தி கூட வாழ்ந்துனு இருக்கான் அவன வச்சிட்டு நா என்ன காலு மேல கால் போட்டுட்டா சாப்பிட முடியும்..! டெயிலி சம்பாதிக்குறத வச்சி வயித்த கழுவிட்டு புள்ளைங்கள ஆளாக்க தா இப்படி கஷ்டப்படுறேன்...’’
‘‘சரிம்மா சரிம்மா கவல படாத மேல இருக்கவ பாத்துட்டுதா இருக்கா எல்லா நல்லதுக்கே நடக்குதுனு அவன் மேலையே பாரத்த போட்டுட்டு பொழப்ப பாரு..!’’
‘‘ஓ மேல இருந்து இந்த கொடுமைய வேற பாத்து ரசிச்சிட்டு இருக்கானா அவ, அவ கடவுளா இல்ல என்ன..! கஷ்டப்படுற நேரத்துல உதவுற மனுசன் கடவுளா இல்ல கடவுள்னு கோவிலுக்குள்ள இருக்க கல் கடவுளா..?’’
‘‘என்னம்மா நீ இவ்வளவு விரக்தில பேசுற; என்ன இருந்தாலும் கடவுள போய் இப்படி பேச கூடாது மா..!’’
‘‘அஞ்சி வட்டிக்கு கடன் வாங்கி தள்ளுவண்டி போட்டு தெனம் தெனம் தூக்கம் இல்லாம மார்க்கெட் போய் புளுக்கத்துல கொசுக்கடில காத்துஇருந்து பேரம்பேசி 40 வக கீர வாங்கி அத பொதிமாடு மாறி; மாறி மாறி சுமந்து எடுத்து வந்து கூவி கூவி விக்கிறதுக்குள்ள பாதி கருகிபோயிடும் இருக்கறத காப்பாத்த தண்ணீய தெளிச்சி தெளிச்சி கீரைய காயவிடாம துணியப் போட்டு போத்தி, புள்ளைய பாத்துக்குற மாதிரி பொத்தி பொத்தி பாத்து விக்கிறதுக்குள்ள பொழுது சாஞ்சிடும்... காஞ்சத தூக்கி குப்பைல போட்டு அடுத்தநாள் மொதலுக்கு அடுத்தவன் கிட்ட கையேந்தி நிக்குறத பாக்க கடவுள் எனக்கு எதுக்கு..!
‘‘சரிம்மா தெரியாம உன்ட்ட பேச்சு குடுத்துட்டேன் , மணலிக்கீரை குடு...’’
‘‘இந்தாண்ட இந்தாங்க நா மணலிக்கீரை; நா பேசுனத தப்பா எடுத்துக்காதீங்க நா உண்மையை உணர்ந்த தா சொன்னேன் உங்க நம்பிக்கைய நோகடிக்க சொல்லல...’’
‘‘அவங்க அவங்க கஷ்டம் அவங்களுக்கு கீரை எவ்வளவு ஆச்சி 20 ரூ நா சரி இந்தா மா வச்சிக்கோ வரட்டுமா..! ’’
சரி நா நன்றி! வண்டியதூக்கிவிட்டதுக்கு...
கீர வாங்கலையோ..! கீர..! அகத்திக்கீரை; பொன்னாங்கன்னிக் கீரை; முருங்கைக் கீரை; கீர வாங்கலையோ கீர..!
சளி, இருமலை துளைத்தெறியும் - கல்யாண முருங்கைக் கீரை; அசதி, சோம்பல் நீக்கும் - தும்பை; நீரடைப்பு நீக்கும் - முள்ளங்கிக் கீரை; பித்தம் விலக்கும். உடல் சூட்டைத் தணிக்கும் - பருப்புக் கீரை; வாதத்தை விலக்கும். கபத்தைக் கரைக்கும் - மணலிக்கீரை; தாது விருத்தியாகும் - சக்கரவர்த்திக் கீரை; மலச்சிக்கலை நீக்கும். மண்ணீரல், கல்லீரலைப் பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும் வெந்தயக் கீரை; இருமலைப் போக்கும் - தவசிக் கீரை; ஆண்மை தரும் சரும நோய் விலக்கும். சளி நீக்கும் - தூதுவளை; தாய்ப்பாலைப் பெருக்கும் - வெள்ளைக் கீரை...
‘‘கீரக்கார ஆண்டி எங்க அம்மா பொரியல் செய்ய... கீர வாங்கிட்டு வர சொன்னாங்க எந்த கீரை நல்லா இருக்குமோ அத குடுங்க...’’
‘‘சரி டா தம்பி இந்தா இந்த மூனு கீரையும் கொண்டு போய் டெயிலி ஒன்னு செஞ்சி தரசொல்லி சாப்பிடு...’’
‘‘இந்த கீர பேரு லா என்ன ஆண்டி..?’’
‘‘இது விழுதிக் கீரை - பசி எடுக்க வைக்கும்; இது கொடி காசினி - பித்தத்தப் போக்கும்; இது துத்திக் கீரை - வாய், வயிற்றுப்புண்ன போக்கும் மா...’’
‘‘நீங்க ரெம்போ ஸ்வீட் ஆண்டி ஜ லவ்வூ !’’ இங்க வா மா... யா ஆண்டி..! உம்மா..! சரி ஆண்டி பாய் அம்மா தேடுவாங்க... டேய் டேய் பாத்து போ...’’
‘‘கீர வாங்கலையோ..! கீர..! அகத்திக்கீரை;பொன்னாங்கன்னிக் கீரை; முருங்கைக் கீரை; கீர வாங்கலையோ கீர..!’’
ஆண்மையைப் பெருக்கும். வாய்ப்புண் அகற்றும் - நருதாளி கீரை; சளியை அகற்றும் -மூக்கு தட்டைக் கீரை; மூலநோயைப் போக்கும். சீதபேதியை நிறுத்தும் - கார கொட்டிக்கீரை;
வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும் - துத்திக் கீரை , கீர வாங்கலையோ கீர..!
‘‘என்னமா பாதி கீர அப்படியே இருக்கு..! அப்படியே மூட்ட கட்டுற; நாளைக்கும் இதையே கொண்டுவந்து விக்க போறியா என்ன..?’’
இல்ல மா நாளைக்கு வர தாங்காது காஞ்சதுலா குப்பைல போடனும் கொஞ்சம் நல்லா இருக்கரத ஆட்டுக்கு மாட்டுக்கு போட வேண்டி தா என்னபன்றது எங்க பொழப்பு அப்படி சில நாள் அசலும் போய் மொதலும் போகும் சில நாள் அசல்மட்டும் போகும் ஏதோ ஒருநாள் நாளு காசு கையில நிக்கும்...
சரிம்மா நா வறேன் நாளைக்கு தேவையான கீரைய சந்தைக்குப் போய் வாங்கினு வறேன் நாளைக்கான பொழப்பப் பாக்கணும்.
(விரைவில் வெளிவர இருக்கும் "தினக்கூலி" புத்தகத்தில் இருந்து)