உழைக்கும் மக்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் வழக்கறிஞர்கள்

pugalenthi_278சாதாரண உழைக்கும் மக்கள் பாதிக்கப்படும் போதும், இலங்கைத் தமிழர்கள் கொடூரமாக பேரினவாத சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட போதும், அது காவிரி நீர்ப் பிரச்சனையாக இருந்தாலும், சாதாரண மக்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டம் இயற்றப்பட்டாலும், காவல் துறை அராஜகமாக செயல்பட்ட போதும், ஜனநாயகத்தை பாதுகாக்க எழும்பும் கண்டனக்குரல் வழக்கறிஞர்களின் குரலாகத்தான் இருக்கும். வழக்கறிஞர்களுக்கு காப்பு நிதி ரூ. 2 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தபட வேண்டும் என்பது வழக்கறிஞர்களின் நீண்ட காலக்கோரிக்கை. அதற்காக திரைத்துறையினரை போலவோ, மற்ற அரசு துறைகளைப் போலவோ முதல்வருக்கு பாராட்டு விழா நடத்தியோ, கோரிக்கை மனு கொடுத்தோ தங்கள் காரியத்தை வழக்கறிஞர்கள் ஒரு போதும் சாதித்து கொண்டதில்லை, அந்த தார்மீக முதுகெலும்பு தான் இன்றும் கொஞ்சமாவது ஏழைகள் நீதிமன்றம் சென்று நீதி பெற முடிகிறது என்றால் அதற்குக் காரணமாக இருக்கிறது.

இன்று தீங்கியல் சட்டம் மிகவும் வலுப்பெற்ற சட்டமாக உருவாவதற்கும், அது போல பல மக்கள் நலச்சட்டங்கள் உருவாக காரணமாகவும், மனித உரிமை எங்கு மீறப்பட்டாலும் அதற்கு ஆதரவாகவும், ஒடுக்கப்பட்ட விளிம்பு நிலை மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதிலும், சமூகம் சீர்திருத்தப்படவேண்டும் என்பதில் அக்கறையும், பொது நல வழக்குகள் மூலம் அரசின் தவறான போக்குகளை நீதிமன்றங்களில் அம்பலப்படுத்தவும், பல ஊழல்களை வெளிக்கொணரவும், அரசின் தவறான கொள்கை முடிவை கொஞ்சமாவது தட்டிக்கேட்கவும் முடிகிறது என்றால் உழைக்கும் மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க கூடிய சில வழக்கறிஞர்கள் உள்ளதால் தான். இன்று பணம் இல்லாதவர்களும் கூட தைரியமாக நீதிமன்ற படிக்கட்டுகளை நீதி கேட்டு மிதிக்க முடிகிறது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை. அதை போல தான் எல்காட் ஊழல், கல்குவாரி ஊழல், கப்பல் கம்பனி ஊழல், சுமங்கலி கேபிள் விசன் மூலம் அரசு கேபிளுக்கு 300 கோடி நஷ்டம் போன்றவற்றை வெளிக்கொணர்ந்ததற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்ட நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கருக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் போராட்டத்தில் இறங்கி உள்ளனர்.

கண்டன ஆர்ப்பாட்டம்

advocates_370மனித உரிமை பாதுகாப்பு மையம் சென்னை கிளையைச் சேர்ந்த வழக்கறிஞர்களால் 27.08.2010 அன்று மாலை 4 மணிக்கு மெமோரியல் ஹாலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் திரளான வழக்கறிஞர்களும், வர்க்க உணர்வு பெற்ற தோழர்களும், பல்வேறு அமைப்பைச் சார்ந்தவர்களும் கலந்து கொண்டனர். வழக்கறிஞர்கள் சுரேஷ், சங்கரசுப்பு, புகழேந்தி, பார்த்தசாரதி, மீனாட்சி, மக்கள் கலை இலக்கியக் கலகத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மற்றும் புதிய ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த முகிலன் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் சிதையாமல் உமாசங்கரை பணி இடைநீக்கம் செய்த கருணாநிதியைக் கண்டித்து கண்டன உரை நிகழ்த்தினர். ஒரு வர்க்க உணர்வு பெற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டம் எவ்வாறு நேர்த்தியாகவும், உணர்ச்சி மேலோங்கவும் இருக்குமோ அதை போல இந்தக் கண்டன ஆர்ப்பாட்டமும் அங்கு பாதுகாப்புக்கு வந்திருந்த காவல் துறை நண்பர்களைக் கூட கூர்ந்து உண்மையை கேட்க வைக்கும்படி இருந்தது என்று சொன்னால் அது மிகை அல்ல.

நேர்மையும் நெஞ்சுரமும் நிரம்பிய அதிகாரி உமாசங்கர்

உமாசங்கர் தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து தனது அயராத உழைப்பின் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்ச்சி பெற்று பல இளைஞர்களின் வழிகாட்டியாக உள்ளவர். மதுரை மாவட்டத்தில் பணி புரிந்த போது சுடுகாட்டு கூரை ஊழலை அம்பலப்படுத்தியதோடு அதற்கு காரணமான ஜெயலலிதா மற்றும் இப்போது தி.மு.காவில் ஐக்கியம் ஆகியுள்ள பல முன்னாள் அதி.மு.க. அமைச்சர்கள் மேல் ஊழல் வழக்குகள் போடக் காரணமாக இருந்தவர். அதைத் தொடர்ந்து பல துறைகளிலும், அப்போது நடந்த ஊழல்கள் வரிசையாக அம்பலமாகியது. அதன் காரணமாக ஜெயலலிதாவிற்கு எதிராக மக்கள் அலை ஏற்பட்டது. அந்த வெறுப்பை எதிர்க்கட்சியாக இருந்த தி.மு.க. நன்கு பயன்படுத்திக் கொண்டு அப்போது நடைபெற்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அறுவடை செய்தது.

இவர் திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்தபோது இந்தியாவில் முதன்முதலாக மின்னனு நிர்வாகத்தை புகுத்தியவர். அப்போது கொள்ளை அடித்து கொண்டிருந்த மைக்ரோ சாப்ட்வேருக்கு பதிலாக இலவசமாக கிடைக்கும் மென்பொருளான லீனக்ஸ் என்ற இலவச மென்பொருளை தமிழக அரசு மற்றும் கல்வி நிறுவனங்களில் புகுத்தியதன் மூலம் அரசுக்கு விரயமாகி வந்த ரூ.500 கோடியை மிச்சப்படுத்தியவர். மேலும் திருவாரூர் கடற்கரை பகுதியில் விவசாயத்தை நாசமாக்கி வந்த மிகப்பெரிய பணமுதலைகளின் இறால் பண்ணை குட்டைகளை நேரடியாக வெட்டி அப்புறப்படுத்தியவர்.

எல்காட் சேர்மனாக இருந்தபொழுது முதல்வரின் துணைவியார் பரிந்துரை செய்த நபருக்கு டெண்டரை வழங்க மறுத்தவர். அவர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையின் கூடுதல் இயக்குனராக இருந்தபோது கல்குவாரி ஊழல், சவுத் இந்தியா சிப்பிங் கார்பரேசன் தனியார் மயமாக்கல் ஊழல், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய ஊழல் போன்ற பல பெரிய ஊழல் திமிங்கலங்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார். ஆனால் அவை அனைத்துமே ஊழல்வாதிகளை ஆதரிக்கும் கருணாநிதியால் கிடப்பில் போடப்பட்டு, பல ஊழல் குற்றசாட்டுகள் உள்ள மாலதி, ஊழல் தடுப்புத்துறையின் இயக்குனராக நியமிக்கப்பட்ட அவலம் இங்கு அரங்கேறியது. மேலும் எல்காட் மூலம் உருவான ரூ.700 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மாயமானது. அந்த முறைகேடு செய்த ஆவணங்களை அவர் தேடிக்கொண்டிருந்தபோதே பணி மாற்றம் செய்யப்பட்டார்.

karunanidhi_500_copy

ஜெயலலிதாவின் ஆட்சிக் காலத்தில் அரசு கேபிள் டிவி கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்ட போது எந்த கருணாநிதி அதை தடுப்பதற்காகப் போராடினாரோ, அதே கருணாநிதி தனது குடும்பத்திற்குள் ஏற்பட்ட பங்காளி சண்டையில் மாறன் சகோதரர்களை பலி வாங்க திரும்பவும் அரசு கேபிளைக் கொண்டு வந்தார். ஆனால் மிகப்பெரிய அளவில் தமிழகத்தில் கோலோச்சி வரும் சுமங்கலி கேபிள் விசனோ அரசு கேபிள் டிவியை ஒழித்துக் கட்டும் நோக்கத்தோடு அதன் செயல்பாடுகளுக்கு பல முட்டுக்கட்டைகளைப் போட்டது. அரசு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் மிரட்டப்பட்டார்கள். ரவுடிகளை வைத்து கேபிள் வொயர்களை அறுத்து எறிந்து நாசம் செய்தது. இது போன்ற பல குற்றவியல் செயல்களை அரசு கேபிள் டிவிக்கு எதிராக செய்து வரும் எஸ்.கே.வியை நாட்டுமை ஆக்க வேண்டும், அந்த நிறுவனத்தின் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல பரிந்துரைகளைச் செய்தார் நிர்வாக இயக்குனராக இருந்த உமாசங்கர். ஆனால் கருணாநிதி குடும்பம் திடீரென ஒன்று சேர்ந்ததைத் தொடர்ந்து நடவடிக்கை மாறன் சகோதரர்கள் மீது பாயாமல் அதற்குப் பரிந்துரை செய்த உமாசங்கர் மீது பாய்கிறது. உமாசங்கர் சிறுசேமிப்புத் துறைக்கு தூக்கி அடிக்கப்படுகிறார்.

உமாசங்கர் எப்போதும் ஊழலுக்கு எதிராகவே இருந்திருக்கிறார்

உமாசங்கரைப் போலவே கருணாநிதி ஆட்சிக் காலத்திலும், ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலும் பல ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்.அதிகாரிகள் பந்தாடப்பட்டுள்ளனர். ஆனால் அவர்கள் ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டனர், அதன் மூலம் பல கோடி சொத்துகளுக்கு அதிபதிகளாக இருக்கின்றனர், அவர்கள் தங்கள் சொந்த சுயலாபத்திற்க்காகவே அவ்வாறு ஒரு கட்சிக்கு ஆதரவாக செயல் பட்டனர் என்பது வெளிப்படையான உண்மை. அது அனைவருக்கும் தெரிந்த ஓன்று. ஆனால் ஒரு நேர்மையான அதிகாரி தனது பணியை நேர்மையாக செய்ததோடு, ஆளும் கட்சியின் குடும்ப சிபாரிசுகளை புறக்கணித்தார் என்பதும், அத்தோடு அமைச்சர்கள், அதிகாரிகள், கருணாநிதியின் குடும்ப உறுபினர்களின் ஊழல்களை அம்பலப்படுதினார் என்பதாலும் அவர் மீதே ஊழல் குற்றச்சாட்டை வைத்து பணி இடைநீக்கம் செய்யப் பார்த்தது தமிழக அரசு. ஆனால் அது செல்லுபடியாகாமல் போகவே அவர் சாதிச்சன்றிதலை போலியாகத் தந்தார் என்ற ஒரு சொத்தைக் காரணத்தை வைத்து அவரை பணி இடை நீக்கம் செய்து தனது வெஞ்சினத்தை தணித்து கொண்டு இருக்கிறார் கருணாநிதி.

அவர் கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக இதே தமிழகத்தில் தான் பணி புரிந்து வருகிறார். அப்போது எல்லாம் அவர் மீது இது போன்ற எந்த குற்றச்சாட்டும் வைக்கப்படவில்லை, எந்த காரணமும் கிடைக்காததால் கடைசி அஸ்திரமாக போலியாக அரசு இதை எடுத்துள்ளது. இதன் மூலம் அவர் உணர்த்த நினைப்பது என்னவென்றால் தன்னையோ, தனது குடும்ப உறுப்பினர்களையோ, தனது ஊழல் செய்யும் அமைச்சர்களையோ, தனக்கு ஊழலில் உதவி புரியும் அதிகாரிகளையோ எதுவும் செய்ய முடியாது, அவ்வாறு அநியாயத்தை தட்டி கேட்பவர்களுக்கு, அவ்வாறு தட்டி கேட்பவர் மிகப்பெரிய பொறுப்புகளில் உள்ள ஐ.ஏ.எஸ்.அதிகாரியாக இருந்தாலும் கூட அவர்கள் மேல் ஒரு பொய்யான குற்றச்சாட்டை வைத்து அவர்களை ஒரே நிமிடத்தில் பதவி நீக்கம் செய்ய தன்னால் முடியும் என்று நினைத்தார் கருணாநிதி. ஆனால் குழவி கூட்டுக்குள் கைவிட்டதைப் போல இப்போது தமிழகமெங்கும் “ஊழலுக்கு எதிராக செயல்பட்டவரை இப்படி அநியாயமாக பதவி நீக்கம் செய்து விட்டாயே” என்று மனித உரிமை அமைப்புகளும், மாணவர்களும், வழக்கறிஞர்களும், தினம்தோறும் நடத்தும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முலம் தனது ஆட்சிக்கு சாவு மணி அடிக்கப்பட்டு விடுமோ என்று அஞ்சும் நிலை இன்று தமிழகத்தில் உருவாகி உள்ளது.

கருணாநிதி இதை எல்லாம் முன் கூட்டியே சிந்திக்க கூடியவர் தான். அவர் போட்ட கணக்கு என்னவென்றால் உமாசங்கர் கருணாநிதியின் ஆட்சியில் நடந்த ஊழலை மட்டுமல்ல ஜெயலலிதாவின் ஆட்சியில் நடந்த ஊழலையும் தான் அம்பலப்படுத்தினார். மதுரை மாவட்டதில் அவர் பணிபுரிந்த போது சுடுகாட்டு கூரை வாங்கியதில் நடந்த முறைகேடுகளை அம்பலப்படுத்தினார். அதைத் தொடர்ந்து, ஊழல் குற்றசாட்டுகள் வரிசையாக பல துறைகளிலும் வெளிவந்தது. அதனால் ஜெயலலிதாவிற்கு உமாசங்கர் மீது வெறுப்பு உண்டு, இப்போது அதி.மு.க. கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்டுகள், மற்றும் வை.கோ. போன்றோர் உமாசங்கருக்கு ஆதரவாக களம் இறங்க மாட்டார்கள் என்ற காரணத்தால் தைரியமாக தன்னை எதிர்த்து கேட்க யாரும் இல்லை என்று ஒரு உளுத்துப் போன குற்றச்சாட்டை உமாசங்கர் மீது வைத்தது ஆளும் தமிழக அரசு. உமாசங்கருக்கு ஆதரவாக ஜெயலலிதா குரல் கொடுத்தது இதில் யாரும் எதிர்பாராத திருப்பம் ஆகும். அத்தோடு உமாசங்கருக்கு ஆதரவாக பல பொதுநல அமைப்புகளும், உண்மையான ஜனநாயகத்திற்காகப் போராடும் பல பொதுவுடமை அமைப்புகளும் தமிழகத்தில் பல பகுதிகளிலும் பல கட்டமாக கண்டன ஆர்ப்பாட்டங்களையும், கருத்தரங்குகளையும், தெருமுனைப் போராட்டங்களையும், தொடர்ந்து செய்து வருகின்றனர்.

uma_shankar_229சில பெரிய எதிர்க் கட்சிகளும் தாங்கள் போகும் இடங்களில் எல்லாம் - இதை தங்கள் அரசியல் ஆதாயத்திற்காகவே இருந்தாலும் கூட - தொடர்ந்து கண்டித்து குரல் எழுப்பி வருகின்றனர். தமிழகமெங்கும் ஏதாவது ஒரு அமைப்பு இதைக் கண்டித்து சுவரொட்டி ஒட்டியுள்ளதை நாம் சாதாரணமாக எங்கும் காணலாம். தினசரி பத்திரிகைகளில் ஒரு செய்தியாவது ஏதாவது ஒரு அமைப்பு கருணாநிதியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் என்று வருகிறது என்றால் மிகை அல்ல. உமாசங்கர் தனிப்பட்ட முறையில் கருணாநிதிக்கோ, ஜெயலலிதாவுக்கோ எதிரானவர் அல்ல, மொத்தத்தில் அவர் ஊழலுக்கு எதிரானவராக தான் இருந்துள்ளார். யார் தவறு செய்தாலும் ஒரு கடமை தவறாத அதிகாரி என்ன செய்ய வேண்டுமோ அதை தான் அவர் செய்துள்ளார்.

வரலாற்றுக்கடமை

சாதாரண மக்களின் ஆதரவு யாருக்கும் அவ்வளவு எளிதில் கிடைக்காது. ஆனால் ஒரு நேர்மையான அதிகாரி அவர் அதிகாரவர்க்கத்தில் உள்ளவர்களின் ஊழலை அம்பலப்படுத்தினார் என்ற காரணத்திற்க்காக, மக்கள் அவரை ஊழலுக்கு எதிரானவராக வராது வந்த மாமணியாக பார்கின்றனர். இது ஒரு தனி நபர் சம்பந்தப்பட்ட விவகாரம் கிடையாது. யாருமே எதுவும் தட்டி கேட்க முடியாது என்று, தான்தோன்றித்தனமாக செயல்பட்டு கொண்டிருக்க கூடிய சகல அதிகாரங்களையும் கைகளில் வைத்துள்ளவர்களுக்கு எதிராக ஒற்றை ஆளாகக் குரல் கொடுத்துள்ளார். இங்கு உண்மையான ஜனநாயகம் உயிர் பெற உழைத்து கொண்டிருக்கும் நாம் அனைவரும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டியது நமது வரலாற்றுக்கடமையாகும். அவ்வாறு எழும் கண்டன குரல்கள் அனைத்துமே ஊழலுக்கு எதிரான குரல்கள். எந்த உயர்ந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்காகவும் இப்படி அனைத்து தரப்பட்ட மக்களிடம் இருந்தும் ஒரு சேர கண்டனக் குரல் எழுந்தது இல்லை.

ஊழல் தான் இன்று பல மக்கள் ஒரு வேளை உணவு மட்டும் உண்டு, வானமே கூரையாகவும், எந்த விதமான சுகாதார வசதியும் இன்றி வாழக்காரணமாக உள்ளது. ஒருவன் ஆடம்பரமாகவும், சொகுசாகவும் வளமான வாழ்க்கை வாழவும், பலர் வறுமையில் வாடவுமான அவல வாழ்க்கை வாழத்தள்ளப்படுவதுமான வேறுபாடுகளுக்கு வழிவகுக்கிறது. ஒரு லிட்டர் பெட்ரோலில் மட்டும் ரூ.30 க்கும் மேலே விற்பனை வரியாக வசூல் செய்யப்படுகிறது. மக்களின் அத்தியாவசிய தேவைக்குரிய பொருள்கள் மேல் அதிகமாக வரி விதிக்கப்படுவதும், ஆடம்பரமான பொருள்களுக்கு வரி சலுகை காட்டப்படுவதும், செலவு அதிகமாகும் என்பதால் கல்வியை தனியாரிடம் தள்ளிவிட்டு விட்டு, டாஸ்மாக் சரக்கின் மூலம் இன்று பல இளைஞர்களை குடிபோதைக்கு அடிமையாக்கி, இலக்கு வைத்து வியாபாரம் செய்தும் மக்களிடமிருந்து அநியாயமாக பிடுங்கப்படும் வரிப்பணத்தில் தான் இந்த அரசு நடைபெறுகிறது. அப்படிப்பட்ட வரிப்பணத்தை எடுத்து பங்காளி சண்டையில் தனது எதிரியை பலி வாங்க ரூ.300 கோடியில் ஒரு நிறுவனம் தொடங்குவதும், சமாதானம் ஏற்பட்டவுடன் அந்த நிறுவனத்தை இழுத்து மூடி விட்டு அந்த நிறுவனம் “அடக்கமாக செயல்படுகிறது” என்று சொல்வதுமாக, உலகத்தில் எங்குமே காண முடியாத அளவிற்கு ஒரு ஊழல் சாம்ராட்சியத்தின் அதிபதியாக இந்த அரசு செயல் பட்டுக்கொண்டிருக்கிறது.

இன்று அனைத்துப் பகுதிகளிலும் ஊழல் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. இன்று ஒரு பாலம் போடுவது, சாலை போடுவது என்றால் அரசுக்கு சக்கரையாக இனிக்கிறது. ஏன் என்றால் அதில் தான் கமிசன் பார்க்க முடியும் என்பதால் தான். பொதுவிநியோக முறை, ஆவின் கூட்டுறவு சங்கம், அரசு பள்ளிகளில் நடக்கும் ஊழல், குடிநீர் வாரியம், மின்சார வாரியம், வீட்டு வசதி வாரியம், தொழிலாளர் துறை என்று அனைத்துத் துறைகளிலும் இன்று ஊழல் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. 100 சத விகித நிதியில் 40 சதவிகிதம் கூட மக்களுக்கு சென்று சேர்வதில்லை என்ற கொதிப்பு சாதாரண மக்களிடம் அதிகாரிகள் மீதும், அரசியல் வாதிகள் மீதும் நெருப்பாக கனன்று கொண்டு உள்ளது.

ஐ.ஏ.எஸ். போன்ற உயர் பதவிகள் கடினமான போட்டித்தேர்வுகளை கொண்டது. அதில் தேர்ச்சி பெறுவதே குதிரைக் கொம்பு என்ற சூழ்நிலையில் அதில் தேறி வருகின்ற பலரும் ஆரம்ப காலக்கட்டத்தில் நேர்மையாகத்தான் இருப்பார்கள். போகப்போக தங்களுக்கு கிடைக்கும் சொகுசான வாழ்க்கை, கவுரவம், பதவி, அந்தஸ்து போன்றவற்றிக்கு அடிமையாகி நிரந்தரமாக எந்த ஊழலையும், சட்ட முறைகேடுகளையும் தட்டிக் கேட்கும் தைரியமற்று ஊழல் செய்த காசில் பங்கு வாங்கிக் கொண்டும் முறைகேடுகளுக்கு துணைபோகியும் ஒரு சொகுசான வாழ்க்கையை வாழ்பவர்களாகவே மாறி போய் விடுகின்றனர். இதில் விதிவிலக்காக சிலர் இருக்கிறார்கள் என்ற ஒன்றே நாம் அவர்களுக்கு ஆதரவு கரம் கொடுக்கப் போதுமானதாகும்.

ஊழலுக்கு எதிரான போராட்டமாக மலர வேண்டும்

அத்தி பூத்தாற்போல், குறிஞ்சி மலரைப் போலத்தான் சிலர் தங்களுக்கு கீழே நடக்கும் தவறுகளை தட்டிக் கேட்கவும், ஊழல்களை அம்பலப்படுத்தவும், தங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை நேர்மையாகவும், துணிச்சலாகவும் செய்யும் திறன் கொண்டவர்களாக இருக்கின்றனர். அவர்களில் ஒருவராக இருப்பவர் திரு.உமாசங்கர் ஐ.ஏ.எஸ்.ஆவார். அவருக்கு ஆதரவாக நாம் குரல் கொடுப்பதோடு நமது பணி முடிந்து விடப்போவதில்லை. நம்மை சிறுக, சிறுக அழிக்கும் கரையான்களாக உள்ள, பலரின் பட்டினிச் சாவுக்கு காரணமான இந்த ஊழலை வேரோடும், வேரடி மண்ணோடும் அழித்து ஒழிக்கும் வரை நமது போராட்டங்கள் ஓயப்போவதில்லை. உமாசங்கருக்கு ஆதரவாக எழுந்த ஜனநாயக குரல்கள் நமது சமூகத்தின் அனைத்து குளறுபடிகளுக்கும் காரணமான ஊழலை, லஞ்சத்தை, அதிகார முறைகேடுகளை, மூலதனம் சிலரின் பிடியில் சிக்கி கிடப்பது என்ற அனைத்து சமூக சீர்கேடுகளுக்கும் எதிராக ஓன்றுபட்டு குரல் கொடுப்போம்.

- கு.கதிரேசன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

கைப்பேசி: 9843464246

Pin It