இந்திய பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் சூலை 21 -இல் தொடங்கியது. அன்றிலிருந்து ஒவ்வொரு நாளும் அது தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. மக்களவையோ மாநிலங்களவையோ முழு நாள் நடப்பது கிடக்கட்டும், ஒரு நாள் கூட சில நிமிடங்களுக்கு மேல் நடக்கவில்லை. விவாதத்திற்காக ஒரு மசோதா கூட முன்வைக்கப்பட வில்லை. இடையூறு விளைவித்ததற்காக காங்கிரசு கட்சியைச் சேர்ந்த 25 உறுப்பினர்களை மக்களவைத் தலைவர் தாற்காலிகமாக அவையிலிருந்து நீக்கி வைத்துள்ளார்.

பாஜக ஆளுகின்ற மத்திய பிரதேசத்தில் அரசாங்க வேலைகளுக்கு ஆட்களை எடுப்பதிலும், பொறியியல் மருத்துவப் படிப்புகளுக்கு மாணவர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் நடைபெற்ற ஊழல்கள் வெட்ட வெளிச்சமாகியிருக்கின்றன. வியாபம் என்றழைக்கப்படும் இந்த ஊழல்களை காங்கிரசு கட்சி வெற்றிக் களிப்போடு சுட்டிக் காட்டி வருகிறது. பெரும் கிரிக்கெட் விளையாட்டு வியாபாரத்தில் இந்தியன் பிரிமியர் லீக் ஆட்டங்களில் சட்டத்திற்குப் புறம்பாக கோடிக்கணக்கான ரூபாய்களைக் கொள்ளையடித்துள்ளவன் லலித் மோடி ஆகும். இவரைப் போன்ற பொருளாதார குற்றவாளிகளுக்கு பாஜக-வின் ஒரு மூத்த அமைச்சரும், ஒரு பாஜக முதலமைச்சரும் உதவி செய்திருக்கிறார்கள். இது தனக்கு மிகவும் அதிர்ச்சியாக உள்ளதாக காங்கிரசு கட்சி கூறுகிறது.

ஊழலுக்காக ஆளும் கட்சியைக் குறிவைத்தும், கறைபடிந்த அமைச்சர்களை பதவியை விட்டு விலகுமாறு கேட்டும் காங்கிரசு கட்சி பரப்புரை செய்து வருகிறது. இதற்கு பதிலடியாக காங்கிரசு தலைவர்களுக்கும், முன்னாள் முதலமைச்சருக்கும் எதிராக உள்ள ஊழல் குற்றச் சாட்டுகளை பாஜக வெட்ட வெளிச்சமாக்கி வருகிறது.

இந்த ஊழல் வழக்குகளில் ஈடுபட்டிருப்பவர்கள் ஒரு தனிப்பட்ட நபரோ அல்லது ஒரு சிறு கூட்டமோ அல்ல. நாட்டில் நடைபெற்றுவரும் கிரிக்கெட் பந்தயங்களில் ஊழல் செய்திருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டிருப்பவர்களில் லலித் மோடி தனிநபர் மட்டுமே அல்ல. இந்த விளையாட்டு முழுவதிலும் பெரிய பண சக்திகள் ஆதிக்கம் செலுத்திவருகின்றன. விளையாட்டை வைத்து சூதாட்டங்களும், விளையாட்டை பணத்திற்காக விரும்பியவாறு மாற்றி விளையாடும் ஊழல்களும் பல்லாண்டுகளாக நடந்துவருகின்றன. ஐபிஎல், பிற கிரிக்கெட் விளையாட்டுகள் தொடர்பான ஊழல்களில் காங்கிரசு, பாஜக, என்சிபி போன்ற பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பல அரசியல்வாதிகளுடைய பெயர்கள் அடிபடுகின்றன.

கிரிக்கெட் போட்டிகளை இந்தியாவில் இலட்சக் கணக்கான மக்கள் தொலைக் காட்சிகளில் காண்கிறார்கள். முதலாளித்துவ பெரும் நிறுவனங்கள் அவர்களுடைய பொருட்களை விளம்பரம் செய்யவும், போட்டியில் மோதும் குழுக்களுக்கு ஆதரவு தருவதற்கும், நட்சத்திர விளையாட்டு வீரர்களை "வாங்குவதற்கும்", சட்டத்திற்குப் புறம்பாக பந்தயங்களில் ஈடுபடுவதற்கும் நூற்றுக் கணக்கான கோடி ரூபாய்கள் பெரும் நிறுவனங்களாலும், தனிப்பட்ட கோடீஸ்வரர்களாலும் முதலீடு செய்யப்படுகின்றன. இந்த வியாபாரத்தில், கணக்கில் வராத கோடிக்கணக்கான ரூபாய்கள் வழக்கமாகவே "இரகசியமாக" கைமாறுகின்றன.

வியாபம் ஊழல் முதன் முதலில் 2007-இல் வெளிச்சத்திற்கு வந்தது. மத்தியப் பிரதேச தேர்வு வாரியத்திலுள்ள எண்ணெற்ற உயர் அதிகாரிகளும், அரசாங்கத்திலுள்ள அரசியல்வாதிகளும் இதில் சம்பந்தப்பட்டிருந்தனர். இது, நமது நாட்டில் அரசு இயந்திரத்தில் ஊழல் எந்த அளவிற்கு ஆழமாக ஊடுறுவி இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. அரசாங்க வேலைக்கு தேர்ந்தெடுப்பதுங்கூட இலஞ்சம் வாங்குவதன் அடிப்படையில் தான் நடைபெறுகிறது என்பதை இது காட்டுகிறது. உரிமங்கள் பெறுவது, சான்றிதழ்களைப் பெறுவது, வேலை தேடுவது, விரும்பிய இடத்திற்கு மாற்றம் பெறுவது என மக்கள் தங்களுடைய உரிமைகளாகவும், அரசின் கடமையாகவும் கருதுகின்றவற்றிற்கும் இலஞ்சம் வாங்கப்படுகிறது. இது மத்திய பிரதேசத்திற்கு மட்டும் தனிப்பட்டதல்ல. நாடெங்கிலும் இதே தான் நடைபெற்றுவருகிறது.

ஊழலற்ற அரசாங்கத்தை கொடுப்போமென்ற வாக்குறுதியோடு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்த பாஜக இன்று முகத்திரை கிழிந்து நிற்கிறது. ஊழலுக்காக பாஜக-வை குற்றஞ்சாட்டுகின்ற காங்கிரசு கட்சி, கடந்த தேர்தல்களில் ஆட்சியை இழப்பதற்கு முன்னர் சில மிகப் பெரிய ஊழல்களால் வெட்ட வெளிச்சமாகியிருந்தது. நாம் இதை எழுதிக் கொண்டிருக்கையில், பல்வேறு மாநிலங்களில் உள்ள அமைச்சர்களும் முன்னாள் அமைச்சர்களும் ஊழல்களில் சிக்கியிருப்பது பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.

கோவாவின் முன்னாள் பொதுப் பணித்துறை அமைச்சர் ஒரு தண்ணீர் திட்டத்திற்காக ஒரு அமெரிக்க ஆலோசனை நிறுவனத்திடமிருந்து இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காக சென்ற வாரம் காவல் துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். கோவாவின் முன்னாள் முதலமைச்சரும் இதே வழக்கில் விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தமிழ் நாட்டில் முன்னாள் மத்திய தொலை தொடர்பு அமைச்சர் சட்டத்திற்குப் புறம்பாக தொலைபேசி வழக்கில் ஈடுபட்டிருந்ததற்காக கைது செய்யக் கூடிய நிலையில் இருக்கிறார். தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஊழலுக்காக சிறையிலடைக்கப்பட்டு பின்னர் உயர்நீதி மன்றத்தால் விடுவிக்கப்பட்டிருந்தாலும், உச்சி நீதி மன்றத்தில் மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

தமிழ் நாட்டில் அஇஅதிமுக, திமுக, மராட்டியத்தில் என்சிபி அல்லது சிவசேனா, ஆந்திரபிரதேசத்தில் தெலுங்கு தேசக் கட்சி, உத்திரபிரதேசத்தில் எஸ்பி அல்லது பிஎஸ்பி, பஞ்சாபில் அகாலி தளம், பீகாரில் ஆர்ஜேடி, ஒரிசாவில் பிஜேடி, மேற்கு வங்காளத்தில் டிஎம்சி என எல்லா முக்கிய கட்சிகளும் மத்தியிலோ அல்லது மாநிலத்திலோ ஆட்சி அதிகாரத்தில் ஏதாவதொரு நேரத்தில் இருந்திருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே ஊழல் குற்றச் சாட்டுகளில் வெட்ட வெளிச்சமாகியிருக்கிறார்கள்.

ஏகபோக முதலாளித்துவ பொருளாதார அமைப்பைப் போலவே, பல கட்சி பிரதிநிதித்துவ சனநாயக முழு அமைப்பும் அதனுடைய தேர்தல் வழிமுறையும் ஊழல் அடிப்படையில் தான் செயல்படுகிறது. பாராளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு இந்திய மற்றும் அயல்நாட்டு பெரும் முதலாளிகள் நிதி அளிக்கின்றனர். இந்தக் கட்சிகள் அதிகாரத்திற்கு வரும்போது, அரசு கருவூலத்தைக் கொள்ளையடிப்பதையும், அவர்களுக்கு நிதியளித்த பெரும் முதலாளிகளுக்கு வேலைகளையும் வெட்கமின்றி செய்கின்றனர். அவர்கள் பிரதிநிதித்துவப் படுத்துவதாகக் கூறும் மக்களுடைய நலன்களில் அவர்கள் கொஞ்சம் கூட அக்கறை கொள்வதில்லை. அவர்கள் சொல்வது ஒன்று, செய்வது வேறொன்றாக இருக்கிறது. அவர்கள் இந்த முழு சமுதாயத்தையும் அல்லது மிகவும் ஒடுக்கப்பட்டவர்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறுகின்றனர். ஆனால் பொருளாதார ரீதியில் மிகவும் சக்திவாய்ந்த வகுப்பினரின் சார்பிலும், அவர்களுடைய குறுகிய நலன்களுக்காகவும் செயல்படுகின்றனர்.

நிலைமை இவ்வாறு இருக்க, இந்த அல்லது அந்த அமைச்சரை வேலையிலிருந்து தூக்கியெறிவது ஊழல் பிரச்சனைக்குத் தீர்வாகாது என்பது வெட்ட வெளிச்சமாகும். தனிப்பட்ட தலைவர்களும், அரசியல் கட்சிகளுடைய உயர் மட்ட உறுப்பினர்களும் பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கங்கள் வீழ்ச்சியடைந்திருக்கின்றன. ஒரு கட்சி மாறி இன்னொரு கட்சி ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆனால் அப்படி வந்தவர்களும் ஊழலில் ஊறியிருப்பது பின்னர் வெட்ட வெளிச்சமாகிறது.

கொள்ளையடிப்பதற்காகக் கட்டப்பட்ட ஆங்கிலேய காலனிய அரசின் தொடர்ச்சியாக இருக்கும் இந்திய அரசின் உண்மையான குணத்தை மறைப்பதற்கான ஒரு முகமூடி தான் பலகட்சி பிரதிநிதித்துவ சனநாயகமாகும். இந்த அரசியல், பொருளாதார அமைப்பு முழுவதுமே மேலிருந்து கீழ்வரை ஊழலில் ஊறியிருக்கிறது என்பது அரசாங்கத்திற்கும், எதிர்ப்பாளர்களுக்கும், பாராளுமன்றத்திலுள்ள எல்லா கட்சிகளுக்கும் நன்கு தெரியும். தனிப்பட்ட அமைச்சர் அல்லது அதிகாரிகளை வேலையிலிருந்து நீக்குவதோ அல்லது சிறையில் அடைப்பதோ, ஊழலை எந்த வழியிலும் குறைக்காது. பாஜகவும், காங்கிரசு கட்சியும் பலமுறை முன்னர் செய்திருப்பது போலவே இப்போதும் ஒரு பெரிய நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

பாஜக-வும், காங்கிரசு கட்சியும் பாராளுமன்றத்தில், ஒருவருக்கு எதிராக ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை வீசிக் கொண்டிருந்தாலும், பெரும் ஏகபோக முதலாளிகளுடைய செயல்திட்டத்தை முன்னேற்றுவதில் அவர்கள் உண்மையில் ஒன்றுபட்டிருக்கிறார்கள். இது, இந்திய மற்றும் அன்னிய ஏகபோகங்கள் நாட்டைக் கொள்ளையடிப்பதற்கும் சூறையாடுவதற்கும் நாட்டைத் திறந்து விடுவதும், இந்திய முதலாளிகள் உலக அளவில் விரிவடைந்து, வல்லரசுகளுடைய குழுவில் சேர்ந்து கொள்ளவும் வழிவகுக்கும் திட்டமாகும். இவையெல்லாம் தொழிலாளர்கள், உழவர்கள் மற்றும் பிற உழைக்கும் பெரும்பான்மையான மக்களின் நலன்களை விலையாகக் கொடுத்து நடைபெறுகிறது.

கடந்த ஆண்டில் பல்வேறு தொழிலாளர் விரோத, மக்கள் விரோத சட்டங்களை பாராளுமன்றத்தில் கொண்டுவர இந்த இரு கட்சிகளும் கூட்டாக செயல்பட்டிருக்கின்றனர், தொழிலாளர்களுடைய உரிமைகளை வெட்டிக் குறைக்கவும், அவர்களுடைய சுரண்டலைத் தீவிரப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும் பல நிறைவேற்றக் காத்திருக்கின்றன. பாதுகாப்பு, காப்பீடு மற்றும் இரயில்வே போன்ற பொருளாதாரத்தின் முக்கிய துறைகள், அதிக அளவு அன்னிய நேரடி முதலீட்டிற்காகத் திறந்து விடப்பட்டுள்ளன. பொது மக்களுடைய எதிரில் ஒரு "பெரிய மோதல்" நடப்பதாக அவர்கள் நாடகமாடிக் கொண்டு, இந்த இரு கட்சிகளும் நில சீர்திருத்தச் சட்டத்தையும், ஜிஎஸ்டி சட்டத்தையும் கொண்டுவர பல்வேறு பாராளுமன்றக் குழுக்கள் மூலம் ஒத்துழைத்து வருகின்றனர்.

ஜிஎஸ்டி-ஐ நிறைவேற்ற வேண்டுமென ஏகபோக முதலாளிகளும், முதலாளி வர்க்கத்தின் பேச்சாளர்களும் முயன்று வருகிறார்கள். இந்த கோரிக்கையை நிறைவேற்றுவதில் கட்சிகளைக் கடந்த அளவில் பல பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆர்வம் கொண்டுள்ளனர். இன்னொரு பக்கம், வாழ்வாதாரத்திற்கு உரிமை கோரும் உழவர்களுடைய பேரணிகள், காவல் துறையால் காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கப்படுகின்றன. மக்களுடைய இந்தப் "பிரதிநிதிகள்" யாருடைய நலன்களுக்காக சேவை செய்கிறார்கள் என்பது மிகவும் தெளிவாகத் தெரிகிறது.

பெரும் ஆலைகள் மற்றும் சிறிய ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசாங்கப் பணியாளர்கள், ஆங்கன்வாடி தொழிலாளர்கள், உதவியாளர்கள், உழவர்கள், மலைகளிலும் காடுகளிலும் வாழும் பழங்குடி சமூகத்தினர் என எல்லாப் பிரிவு மக்களும் தற்போதைய பொருளாதாரப் போக்கையும், முதலாளி வர்க்கத்தினுடைய திட்டத்தையும் எதிர்த்து வருகின்றனர். உழவர்களுடைய சங்கங்கள், நிலையான இலாபகரமான வேளாண்மை இடுபொருள், விளைபொருட்களுடைய விலைகளுக்காக ஒரு ஐக்கியப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். பெரும் நிறுவனங்கள் நிலங்களைக் கைப்பற்றுவதை எதிர்ப்பதற்காக, எண்ணெற்ற உழவர், பழங்குடி மக்கள் குழுக்கள் ஒன்றுபடுகின்றன. பொறுத்துக் கொள்ள முடியாத அளவிற்கு அவர்கள் சந்தித்து வரும் பாதுகாப்பற்ற நிலைமைகளையும், வீட்டிலும் சமூகத்திலும் தொடர்கின்ற பாரபட்சத்தையும், ஒடுக்குதலையும் ஒப்புக்கொள்ள பெண்கள் மறுக்கின்றனர். ஒடுக்கப்பட்ட சாதியினர், மத மற்றும் தேசிய இன சிறுபான்மையினர் போன்றவர்கள் மீது இடைவிடாமல் தொடர்கின்ற, மேலும் வளர்ந்து வருகின்ற ஒடுக்குமுறைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

தொழிலாளி வர்க்கத்தின் உடனடித் திட்டமானது, தனியார்மயம், தாராளமயம் மூலம் இந்திய மூலதனத்தை உலகமயமாக்கும் திட்டத்தை நிறுத்துவதும், அதைப் பின்வாங்கச் செய்வதும் ஆகும். மேலும், தொழிலாளர்கள், உழவர்கள், பெண்கள், ஒடுக்கப்பட்ட தேசிய இனங்கள் மற்றும் எல்லா மக்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதும் ஆகும். எல்லா மக்களுடைய வளர்ந்து வருகின்ற பொருளாதார, பண்பாட்டுத் தேவைகளை நிறைவு செய்வதற்கு பொருளாதாரத்தைத் திருத்தியமைப்பதற்காக இன்றுள்ள முதலாளி வர்க்க ஆட்சியை மாற்றி, தொழிலாளர் - உழவர்களுடைய ஒரு புதிய அரசை நிறுவுவது மைய நோக்கமாகும்.

சுரண்டலுக்கும், ஒடுக்குமுறைக்கும் எதிரான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் தங்களுடைய சொந்த திட்டத்திலிருந்து தொழிலாளி வர்க்கம், உழைக்கும் பெரும்பான்மையான மக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த பாராளுமன்ற நாடகம், ஆளும் முதலாளி வர்க்கத்திற்கு உதவுகிறது. ஊழல் பிரச்சனை என்ற பெயரில், பாராளுமன்ற நாடகம் மூலம் முதலாளி வர்க்கம் வைக்கும் பொறியில் சிக்கிக் கொள்ளாமல் தொழிலாளி வர்க்கமும், அதனுடைய கட்சிகளும், தொழிற் சங்கங்களும் கவனத்துடன் இருக்க வேண்டும். ஊழலான பாஜக அமைச்சர்களை நீக்கக் கோரி காங்கிரசு கட்சி நடத்தும் இயக்கத்திற்கு நம்மில் எவரும் ஆதரவளித்தால் அது ஒரு பெரும் தவறாகும். காங்கிரசுக்கும், பாஜக-விற்கும் நடக்கும் மோதல், முதலாளி வர்க்கத்திற்குள்ளே நடக்கும் நாய்ச் சண்டையாகும். நாம் நம்முடைய வர்க்கத் திட்டத்திலிருந்து திசை திரும்பிவிடக் கூடாது.

நம்முடைய வாழ்வாதாரத்தின் மீதும், பாதுகாப்பின் மீதும் நடத்தப்படும் தாக்குதல்களை எதிர்த்து நம்முடைய போராட்டத்தில் நம்முடைய ஒற்றுமையை நாம் கட்ட வேண்டும். முதலாளி வர்க்க ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு, அனைவருக்கும் வளமையையும், பாதுகாப்பையும் உறுதி செய்ய ஒரு புதிய அரசையும், பொருளாதாரப் போக்கையும் நிறுவும் திட்டத்தையும், கண்ணோட்டத்தையும் ஒட்டி எல்லா ஒடுக்கப்பட்டவர்களுடைய அரசியல் ஒற்றுமையை நாம் கட்டுவோம்.

Pin It