பிரதமர் நரேந்திர மோடி, கசகிஸ்தான், கிரகிஸ்தான், டஜிகிஸ்தான், உசுபெகிஸ்தான் மற்றும் துருக்மெனிஸ்தான் ஆகிய மத்திய ஆசிய நாடுகளுக்கு சூலை 6 - 13 வரை சென்றுவந்தார். இதற்கிடையில் இரசியாவில் யுஃபாவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டிலும் பங்கேற்றார்.

இதுவரை ஜெவகர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, 60 ஆண்டுகளுக்கு முன்னர் 1955 இல் இந்த நாடுகளுக்கு சென்று வந்த பயணமே, கடைசி இந்தியப் பிரதமருடைய பயணமாக இருந்தது. அப்போது இவை சோவியத் யூனியனுடைய குடியரசுகளாக இருந்தன. தற்போது சுதந்திர நாடுகளாக இருக்கும் இவற்றின் மீது புதிப்பிக்கப்பட்ட ஆர்வம் இருப்பதற்குக் காரணம், இந்திய முதலாளி வர்க்கத்தினுடைய முக்கிய நலன்களாகும்.

இந்த நாடுகளில் எரிசக்தி வளங்கள் நிறைந்திருக்கின்றன. அவற்றின் மீது இந்திய முதலாளி வர்க்கத்திற்கும், சீன, அமெரிக்க முதலாளி வர்க்கங்களுக்கும் ஒரு கண் இருக்கிறது. சாலை, இரயில்வே உட்பட உள்கட்டுமானத்தில் பெருமளவில் முதலீடுகளைச் செய்வதன் மூலம் கடந்த சில ஆண்டுகளில் சீனா இந்தப் பகுதியில் நன்கு காலூன்றியிருக்கிறது. சீனாவின் புதிய "பட்டுச் சாலை பொருளாதாரச் சங்கிலி" செயலூக்கத்தில் இந்தப் பகுதி ஒரு முக்கிய அங்கம் வகிக்கிறது. ஈரோசியாவெங்கும் தொடர்பையும், உள்கட்டுமானத்தையும் உருவாக்கும் சீனாவின் இந்த பேராசையான திட்டத்தைப் பற்றி இந்திய முதலாளி வர்க்கத்திற்கு ஆழமான சந்தேகங்கள் இருக்கின்றன. எனவே அதை எதிர்கொள்ள இது விரும்புகிறது.

இந்திய அரசுக்கு இந்தப் பகுதி முக்கியமானதாக இருப்பதற்கு ஒரு மூன்றாவது காரணமும் உண்டு. அது, வல்லரசுகள் போட்டியிட்டு வரும் இடமாக இருக்கும் ஆப்கானிஸ்தானுக்கு அருகிலும் அதன், பண்பாட்டோடு நெருங்கியும் இருப்பதும் ஆகும். பாகிஸ்தான் கருதுவதைப் போலவே, இந்திய அரசும், ஆப்கானிஸ்தானை தன் செல்வாக்கைச் செலுத்துவதற்கு "உரிமையுள்ள" இடமாகக் கருதுகிறது. ஆப்கானிஸ்தான் மீது தம் செல்வாக்கைச் செலுத்துவதில் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையே கடுமையான போட்டி நிலவுகிறது. வெளிப்படையாக ஒப்புக் கொள்ளாவிட்டாலும், ஆப்கானிஸ்தானில் பல்லாண்டுகளாகவே இந்தியா வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தீவிரமாகத் தலையிட்டு வந்திருக்கிறது. பாகிஸ்தானை ஒதுக்கித் தள்ளிவிட்டு, ஆப்கானிஸ்தானில் தன்னுடைய செல்வாக்கைப் பாதுகாத்துக் கொள்ளவும், மேலும் அதை விரிவுபடுத்தவும் இந்திய அரசு விரும்புகிறது.

மத்திய ஆசியப் பகுதியோடு பண்டைக் காலத்தில் வாணிகமும், பண்பாட்டுத் தொடர்புகளும் இருந்துங்கூட, இன்றைய இந்தியா அதோடு உறவுகளை வைத்திருக்கவில்லை. இந்தியாவிற்கும் இந்தப் பகுதிக்கும் இடையே உள்ள வர்த்தகத்தின் அளவு மிகவும் குறைவானதாகும். அதனுடைய எண்ணெய், எரிவாயு, யுரேனிய வளங்களைப் பெறுவதில் சீனாவைப் போல இந்தியா அந்த அளவிற்கு வெற்றி பெற வில்லை. இதற்கான ஒரு காரணம் இந்தியாவிற்கும் இந்தப் பகுதிக்கும் இடையில் இருக்கும் மிகவும் கடினமான மலைப் பிரதேசமாகும். இன்னொரு காரணம், அதற்கான நில வழிப் பாதைகள் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் வழியாகச் செல்வதாகும். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண அண்மைக் காலங்களில் இரானிய துறைமுகமான சாபாகாரை மேம்படுத்தும் திட்டத்தை இந்திய அரசு கொண்டு வந்திருக்கிறது. இத் திட்டமானது, இந்தியாவின் மேற்குக் கடற்கரையிலிருந்து சாபாகார் வரை கடல் போக்குவரத்தையும், அங்கிருந்து இரசியா, அசர்பைஜான் வழியாக மத்திய ஆசியாவிற்கு தரைவழிப் பாதையையும் பயன்படுத்துவதாகும். இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் வழியாக செல்வதைத் தவிர்த்து மத்திய ஆசியாவிற்கும் இந்தியாவிற்கு இடையே சரக்குகளைக் கொண்டு செல்ல முடியும்.

ஆனால் இரானுக்கு எதிரான அமெரிக்கத் தடைகள் இத் திட்டத்தைப் பாதிக்கலாம் என்ற அச்சம் காரணமாக இதில் இந்தியா மெதுவாக நகர்கிறது. இப்போது இரானுக்கும் அமெரிக்கா, மற்ற சக்திகளுக்கும் இடையில் அணு ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதால், இந்தத் தடைகள் நீக்கப்பட்டுவிடும் என்பதால், இந்திய முதலாளி வர்க்கம் தன்னுடைய திட்டத்தை மேற் கொண்டு எடுத்துச் செல்லாமென நம்புகிறது.

அதே நேரத்தில், மத்திய ஆசியாவிற்கு பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் பாதையைப் பயன்படுத்தும் திட்டமும் இருக்கிறது. மோடி துருக்மெனிஸ்தானில் இருந்த போது, அங்கு கிடைக்கும் மிகுதியான இயற்கை எரிவாயுவை ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் வழியாக இந்தியா கொண்டுவரும் நீண்டநாளாக தாமதமான டாபி (TAPI) குழாய்த் திட்டத்தை எப்படித் துரிதப்படுத்தவது என்பதை விவாதித்திருக்கிறார். உலகத்திலேயே மிகப் பெரிய யுரேனிய ஆதாரங்கள் இருக்கும் கசகிஸ்தானில் மோடி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு இந்திய அணு ஆலைகளுக்கு 5000 டன்கள் யுரேனியத்தை வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். கசகிஸ்தானில் எண்ணெய் தேடுவதற்காக ஓஎன்ஜிசி விதேஷ்-க்கு மேலும் அதிக இடங்களை ஒதுக்குமாறு அவர் கேட்டிருக்கிறார். ஆனால் இது குறித்து எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாக வில்லை. மோடியின் பயணத்தின் போது, ஒரு இராணுவ பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தத்தையும் இந்தியா, கசகிஸ்தானுடன் கையெழுத்திட்டிருக்கிறது. பயணத்தின் போது அதே போன்ற இராணுவ பாதுகாப்பு கூட்டுறவு ஒப்பந்தம் கிரகெஸ்தானுடனும் கையெழுத்தாகியிருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் காரணமாக, இந்த நாடுகளோடு பாதுகாப்பு மற்றும் முக்கிய உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளுவது இந்திய அரசுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.

எண்பதுகளின் இறுதியில் சோவியத் ஆக்கிரமிப்புப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்ற பின்னர் பின்னர், அந்த நாட்டில் எழுந்த உள்நாட்டுப் போரில் இந்தியாவும் பாகிஸ்தானும் எதிரெதிரான குழுக்களுக்கு ஆதரவளித்தன. பாகிஸ்தான் தாலிபானுக்கு ஆதரவளிக்கையில் இந்தியா வடக்குக் கூட்டணிக்கு (Northern Alliance) நிதியளித்து, பயிற்சி தந்து உதவி செய்தது. இரானும், இரசியாவும் கூட வடக்குக் கூட்டணிக்கு ஆதரவளித்தன. எல்லா குழுக்களுக்கும் நிதியுதவியளித்து ஆயுதங்களை வழங்குவதன் மூலம் தங்களுடைய நலன்களை அமெரிக்க ஏகாதிபத்தியர்கள் முன்னேற்றினர்.

1995 இலிருந்து 2001 வரையில் காபூலும் பெரும்பான்மையான தெற்கு ஆப்கானிஸ்தானும் தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்தபோது, அந் நாட்டுப் பொருளாதாரத்தில் பாகிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியது. இந்தியா தன்னுடைய தூதரகத்தை மூடக் கூடச் செய்தது. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்து அதனை ஆக்கிரமித்துக் கொண்டு, தாலிபான் அரசாங்கத்தைத் தூக்கியெறிந்ததும், ஆப்கானிஸ்தானில் தன்னுடைய நலன்களை முன்னேற்றுவதற்கு இந்திய அரசுக்கு வழி கிடைத்தது. அஷ்ராஃப் கானியின் புதிய ஆப்கான் அரசாங்கம் இந்தியாவின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் தாலிபானுடன் பேச்சு வார்த்தைகளைத் துவக்கியிருக்கிறது. இது ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் கை மீண்டும் மேலோங்க வழி வகுக்குமென இந்திய முதலாளி வர்க்கம் அஞ்சுகிறது. இந்த சூழ்நிலையில், இதுவரை அலட்சியப்படுத்தி வந்த பழைய உறவுகளை மீண்டும் கட்டி, மத்திய ஆசிய நாடுகளோடு உறவுகளைப் புதுப்பித்துக் கொள்வது இந்தியாவுக்கு முக்கியமானதாகும். ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் தனக்குப் பிடித்த குழுக்களுக்கு இராணுவ உதவியை இந்தியா உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் நாடுகள் மூலம் அளித்தது.

மத்திய ஆசிய நாடுகள் பாரம்பரியமாக இரசியா மற்றும் சீனாவின் செல்வாக்கின் கீழ் இருந்து வந்துள்ளன. பனிப் போருக்குப் பின்னர் அமெரிக்காவின் செல்வாக்கும் அங்கு இருந்து வருகிறது. மத்திய ஆசியாவில் மோடி அரசாங்கம் எடுக்கும் முயற்சி, இந்தப் பகுதியில் தன்னுடைய கால்தடத்தை விரிவு படுத்த இந்திய அரசு முயற்சிப்பதைக் காட்டுகிறது. இந்தப் பகுதி பெரும் வல்லரசுகள் போட்டியிடும் இடமாக இருந்து வந்திருக்கிறது. இப்போது, உலகின் இந்தப் பகுதியில் இந்தியாவும் போட்டியிலும், பகைமையிலும் மிகவும் ஆழமாக தன்னை ஆழ்த்திக் கொள்கிறது.

Pin It