அரசு, தேர்தல் வழிமுறைக்கு செலவழிக்க வேண்டும், அரசியல் கட்சிகளுக்கல்ல!

"அங்கீகரிக்கப்பட்ட" கட்சிகளுடைய சிறப்புரிமையான நிலைக்கு முடிவு கட்டப்பட வேண்டும்!

கம்யூனிஸ்டு கெதர் கட்சி மத்தியக் குழுவின் அறிக்கை, ஆகஸ்டு 27, 2013

தகவல் அறியும் சட்டத்தை அரசியல் கட்சிகளுக்குப் பயன்படுத்துவது பற்றிய விவாதம், சில கொள்கை அடிப்படையான கேள்விகளை எழுப்பியிருக்கிறது. முதலாவதாக, அரசியல் கட்சிகள், பொது அதிகார அமைப்பா? அவர்களுக்கு பொது அதிகார அமைப்புகள் என்ற தகுதியைத் தர வேண்டுமா? இரண்டாவதாக, கட்சிகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பது பற்றி முழு விவரங்களையும் வெளியிட வேண்டுமென்ற சட்டம், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பண பலம் ஆதிக்கம் செலுத்துவதற்கு முடிவு கட்டுமா?

காங்கிரசு, பாஜக, சிபிஎம், சிபிஐ, பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் தேசிய காங்கிரசு கட்சி ஆகிய ஆறு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சிகள் குறிப்பிடத்தக்க அளவு சலுகைகளும், சிறப்புரிமைகளும் பெற்று வருவதை மத்திய தகவல் ஆணையம் சுட்டிக் காட்டியுள்ளது. “அரசியல் கட்சிகள் அரசு அல்லாதவைகளாக இருந்த போதிலும், அவை நேரடியாகவும், மறைமுகமாகவும் அரசு அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்துகின்றன. எல்லா அரசு நிறுவனங்களுக்கும் வெளிப்படைத் தன்மை நல்லது, ஆனால் அரசின் எல்லா முக்கிய நிறுவனங்களையும் கட்டுப்படுத்துகின்ற அரசியல் கட்சிகளுக்கு அது அவ்வளவு நல்லதல்ல என்று கூறுவது பொறுத்தமாக இருக்காது” என்று அது வாதிக்கிறது.

அரசியல் கட்சிகள், அரசைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அனுமதிக்கப்படுகிறது என்பது இன்றுள்ள அரசியல் அமைப்பின் மையப் பிரச்சனையாகும். தீர்மானிப்பவர்களாக மக்கள் மாறுவதற்கு, அனைவரின் பெயரில் முடிவெடுக்கும் அதிகாரத்தை அரசியல் கட்சிகள் கைப்பற்றியிருப்பதைத் தடுக்க வேண்டியது அவசியமாகும். 

மத்திய தகவல் ஆணையம் வெளியிட்டுள்ள கருத்தின் முக்கிய பிரச்சனையானது, அரசியல் கட்சிகள் அரசியல் அதிகாரத்திற்கு காவலாளிகளாக இருப்பதை அது ஏற்றுக் கொண்டுவிட்டது என்பதும், அந்த நிலையை அது மேலும் உறுதிப்படுத்துகிறது என்பதும் ஆகும். இதன் மூலம் அது, மக்கள் அதிகாரம் பெறுவதற்குத் தடையாகச் செயல்படுகிறது.

தாங்கள் விரும்பும் அரசியல் கட்சியை உருவாக்க குடிமக்கள் எவருக்கும் உரிமை உண்டு என்பதை அங்கீகரிக்க வேண்டும். சமுதாயத்திலுள்ள தனிப்பட்டவர்கள் ஒவ்வொருவருக்கும், அவர்கள் விரும்பும் எந்த அரசியல் கட்சியிலும் சேருவதற்கோ, ஆதரவளிப்பதற்கோ அல்லது எந்த கட்சியிலும் சேராமல் இருப்பதற்கோ, ஆதரவளிக்காமல் இருப்பதற்கோ உரிமை உண்டு. ஒரு அரசியல் கட்சி என்பது ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகுப்பு அல்லது ஒரு வர்க்கத்தின் நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. அதற்கு சமூகப் பொறுப்புக்கள் உள்ளன. ஆனால் அது ஒரு பொது அதிகார அமைப்பாக ஆவதற்கு அனுமதிக்கக் கூடாது. 1984-இல் சீக்கிய மக்களைப் படுகொலை செய்வதற்கும், 2002-இல் முஸ்லீம் மக்களைப் படுகொலை செய்வதற்கும் பயன்படுத்தப்பட்டது போல, எந்தக் கட்சியையும் அரசைத் தன்னுடைய சொந்த நலன்களுக்காகப் பயன்படுத்த நாம் அனுமதிக்கக் கூடாது.

மத்திய தகவல் ஆணையத்தின் வாதத்தில் உள்ள இன்னொரு பிரச்சனையானது, அது சலுகை விலையில் அலுவலகத்திற்கு இடம், இலவசமாக தொலைக் காட்சியில் நேரம், போன்ற எண்ணற்ற வடிவங்களில் அரசின் நிதியைப் பெறுகின்ற அதிகாரபூர்வமாக “அங்கீகரிக்கப்பட்ட” கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்பதாகும். நமது நாட்டிலுள்ள எண்ணெற்ற கட்சிகள் எந்தவகையான அரசின் ஆதரவையும் பெறுவதில்லை. இது ஒரு பெரிய பாரபட்சமாகும். இவை, கடந்த காலத்தில் தேர்தல்களில் வெற்றி பெற்ற பின்னணியைக் கொண்ட இந்தக் கட்சிகள் பெறும் நியாயமற்ற பயன்களாகும். இது மற்ற கட்சிகளை ஒரு பாதகமான நிலையில் வைக்கிறது. இது பழைய நன்கு வேறூன்றிய கட்சிகளுக்கும், பெரும் எண்ணிக்கையில் உள்ள சிறிய மற்றும் புதிய கட்சிகளுக்கும் இடையே ஒரு சமனற்ற களத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பதிலாக, மத்திய தகவல் ஆணையம், அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் என்றழைக்கப்படும் கட்சிகளை பொது அதிகார அமைப்புக்களென அறிவிப்பதன் மூலம் அவர்களுடைய இந்த பாகுபாட்டையும், தனிச் சிறப்பான நிலையையும் மேலும் உறுதிப்படுத்துகிறது.

அதிகரித்துவரும் ஊழலாலும், குற்றவியலான அரசியலாலும் வெறுப்படைந்துள்ளவர்கள், ஒரு சில குறிப்பிட்ட கட்சிகளுக்குப் பொதுப் பணத்திலிருந்து சலுகையளிப்பதும் ஒரு வகையான அரசியல் ஊழல் என்பதை உணரவேண்டும். இப்படிப்பட்ட எல்லா நிதியுதவிகளையும் உடனடியாக நிறுத்த வேண்டுமென நாம் கோர வேண்டும்.

மத்திய தகவல் ஆணையத்தின் தீர்ப்பை எதிர்த்து, தாங்கள் பொது நிறுவனங்கள் இல்லை என்று கூறி இந்த ஆறு தேசிய கட்சிகளும் வாதிட்டு வருகின்றன. ஆயினும் அவர்கள் பெற்றுவரும் அரசு சலுகைகளையும், பிற சிறப்புரிமைகளையும் நியாயப்படுத்த முயன்று வருகின்றனர். அவர்கள் பொது அதிகார அமைப்பு இல்லையென்றால், அவர்களுக்கு ஏன் பொது நிதியிலிருந்து செலவழிக்க வேண்டும்?

எந்த அரசியல் கட்சிக்கும் பொதுப் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட செலவழிக்க எந்த நியாயமும் கிடையாது. அரசியல் கட்சிகளும், அவர்களுடைய செயல்பாடுகளும் அவர்களுடைய உறுப்பினர்களாலும், ஆதரவாளர்களாலும் நிதியுதவி செய்யப்பட வேண்டும்.

அரசியல் கட்சிகள் தங்களுடைய கடமைகளைச் செய்வதற்கு உரிமை உண்டு என்பதையும் நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர்களுடைய அரசியல் நோக்கமும், திட்டமும் வெளிப்படையாக இருக்க வேண்டும். அவர்களுடைய பொதுச் செயல்பாடுகளுக்கு பதிலளிக்கும் பொறுப்பு அவர்களுக்கு உண்டு. அதே நேரத்தில் அவர்களுடைய உள் அமைப்பு தொடர்பான கருத்துக்களை இரகசியமாக வைத்திருக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. ஒரு அரசியல் கட்சிக்கு எந்த இரகசியமும் இருக்கக் கூடாதென கேட்பதானது, தனிப்பட்ட உரிமையை மீறுவதாகும். தனிப்பட்ட குடிமக்கள் மற்றும் தொகுப்புகளுடைய உரிமைகளை எல்லா சக்தியும் கொண்ட அரசுக்கு முழுமையாக அடிபணியச் செய்வதாக, பாசிசத்தை நோக்கிய ஒரு முயற்சியாக அது இருக்கும்.

பணபலம், தேர்தல் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்தும் பிரச்சனையை தகவல் அறியும் சட்டத்தை அரசியல் கட்சிக்கு கொண்டு வருவதன் மூலம் தீர்க்க முடியாது. தங்களுடைய பரப்புரை நிகழ்வுகளுக்கு நிதி எங்கிருந்து வருகிறதென்பதை வெளிப்படையாகவே அறிவிக்கும் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளைக் கொண்ட நாட்டிற்கு அமெரிக்கா ஒரு எடுத்துக் காட்டாகும். தேர்தல் பிரச்சாரங்களுக்கு மிகுதியான பணத்தைச் செலவழிக்கும் நாடும் அதுதான். பண பலம் அங்கு மிகப் பிரமாண்டமாக இருப்பதால், அங்கு ரிபப்லிகன் மற்றும் டெமாக்ரடிக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களைத் தவிர மற்ற எந்த வேட்பாளர்களும் தேர்களத்தில் இறங்குவதைக் கூட அது தடுக்கிறது.

சமுதாயம் வர்க்கங்களாகப் பிளவுபட்டிருக்கும் வரை, இந்த வர்க்க நலன்களுக்கு சேவை செய்வதற்காக, வெவ்வேறு அரசியல் கட்சிகள் உருவாக்கப்படுவது தவிற்க முடியாததாகும். அந்த வர்க்க நலனுக்கு சேவை செய்யும் கட்சிகளுக்கு அந்த குறிப்பிட்ட வர்க்கத்தின் உறுப்பினர்கள் நிதி பங்களிப்பைத் தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சுரண்டல் வர்க்கங்களும், எல்லா வர்க்கப் பிரிவுகளும் மறையாத வரை, சில கட்சிகளுக்கு மற்ற கட்சிகளைக் காட்டிலும் அதிக பணபலம் இருப்பது தவிற்க இயலாததாகும். உடனடியாகத் தேவைப்படுவது என்னவென்றால், பணபல ஏற்றத்தாழ்விலிருந்து தேர்தல் வழிமுறையானது பிரித்து வைக்கப்பட வேண்டும் என்பதாகும். இதற்கு (1) எந்தத் தேர்தலுக்கும் முன்னர் வேட்பாளர்களைத் தீர்மானிக்க மக்களுக்கு உரிமை இருக்க வேண்டும். (2) எந்தக் கட்சியோ அல்லது தனிப்பட்ட வேட்பாளர்களோ தேர்தலுக்காக பணம் செலவழிப்பதை அரசு தடுத்து நிறுத்துவதோடு, தேர்தல் வழிமுறைக்கு அரசே நிதியைச் செலவிட வேண்டும், இவற்றைச் செய்தால் மட்டுமே நாம் மேற்கூறியதை அடைய முடியும்.

வேட்பாளர்களைத் தீர்மானிப்பதில் வாக்காளர்களுக்கு எந்த பங்கும் இல்லாமல் இருக்கும்வரை, வேட்பாளர்களைக் கட்சிகள் தீர்மானித்து அவர்களை வாக்காளர்கள் மீது திணிப்பது தொடரும் வரை, பெரும்பான்மையான மக்கள் அதிகாரமற்றவர்களாகவே இருப்பார்கள். வேட்பாளர்களைத் தீர்மானிப்பதில் மக்களுக்கு எவ்வித பங்கும் இல்லாம் இருக்கும் நிலையில், தேர்தலானது மிகவும் பலம் வாய்ந்த பொருளாதார நலன்களின் பின்பலத்தோடு நிற்கும் சிறப்புரிமை பெற்ற சிலருக்கிடையே நடைபெறும் ஒரு போட்டியாக ஆகிவிடுகிறது. அது, வெவ்வேறு முதலாளித்துவ குழுக்களுடைய சுய நலன்களுக்கு இடையிலான ஒரு போட்டியாக மாறி விடுகிறது. அப்படிப்பட்ட நிலையில், உழைக்கும் பெரும்பான்மையான மக்கள் வாக்களிக்கும் மந்தைகளாக சிறுமைப் படுத்தப்படுகிறார்கள். மேலும், மக்கள் கொடுத்த கடமைக்குத் துரோகமிழைக்கும் பிரதிநிதிகளைத் திருப்பியழைக்கும் உரிமையின்றி, தங்களுடைய பிரதிநிதிகள் மீது மக்களுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை.

தகுதியின் அடிப்படையில் வேட்பாளர்களை மக்கள் தாம் தீர்மானிக்க வேண்டும். கொள்கைத் தீர்மானிப்பதிலும், சட்டங்கள் செய்வதிலும் தேர்ந்தெடுத்தவர்களோடு, மக்களும் பங்கேற்க முடிய வேண்டும்.

வேட்பாளர்களைப் பொறுக்கி எடுக்கவும், தேர்வு செய்யவும் வழிமுறை சரியாக நடைபெறுவதை உறுதி செய்ய, அனைத்திந்திய தேர்தல் ஆணையத்தின் ஒரு அங்கமாக, கட்சி சார்பற்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக் குழுக்கள் அமைக்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது. இக்குழுக்கள், நியமிக்கப்பட்ட ஒவ்வொறு வேட்பாளரைப் பற்றிய விவரங்களை, தொகுதியில் உள்ள எல்லா வாக்காளர்களுக்கும் கிடைக்க வழி செய்ய கடமைப்பட்டவர்களாக இருப்பார்கள். அதன் மூலம் தேர்தலில் நிற்கக் கூடிய வேட்பாளர்களை தீர்மானிக்கும் உரிமையை வாக்காளர்கள் செயல்படுத்துவார்கள்.

அரசியல் கட்சிகளும், தொழிற் சங்கங்கள், விவசாய சங்கங்கள், பெண்கள் அமைப்புக்கள், இளைஞர் மன்றங்கள், தேசிய விடுதலை இயக்கங்கள், மனித உரிமை அமைப்புக்கள், பிராந்திய மற்றும் உள்ளூர் குழுக்கள் உட்பட கட்சி சார்பற்ற அமைப்புக்களும், தேர்தலுக்கு வேட்பாளர்களை முன்னிறுத்த அனுமதிக்க வேண்டும். முன்மொழியப்பட்டவர்கள் அனைவரும் ஒரு தேர்ந்தெடுக்கும் வழிமுறையைச் சந்தித்தாக வேண்டும். வேட்பாளருக்காக முன்மொழியப்பட்டவர் எவர் மீதும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்ல வாக்காளர்களுக்கு வழிவகை செய்து தரப்பட வேண்டும். இறுதி செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை ஒவ்வொறு தொகுதியிலும் உள்ள வாக்காளர்கள் அங்கீகரிக்க வேண்டும். இதற்குப் பின்னர், இவ்வாறு முடிவு செய்யப்பட்ட வேட்பாளர்களுக்கு இறுதி வாக்கெடுப்பு நடைபெறும்.

மேற்கூறியவாறு வேட்பாளர்களை மக்கள் தெரிவு செய்த பின்னர், எல்லா வேட்பாளர்களுக்கும் சம நேரமும், வாய்ப்பு தரவும், தங்களுடைய கருத்துக்களையும் திட்டங்களையும் முன்வைப்பதற்கு சம வாய்ப்பளிக்கவும், தேர்தலுக்கான எல்லா செலவினங்களையும் ஏற்றுக்கொள்ளவும் அரசு வழி செய்ய வேண்டும். வேட்பாளர்களை முடிவு செய்வதிலும், தேர்தல் பிரச்சாரத்திற்கும் எந்த அரசியல் கட்சியோ, தனிப்பட்ட வேட்பாளர்களோ எந்தச் செலவும் செய்ய அனுமதிக்கக் கூடாது. தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் பணபலம் ஆதிக்கம் செலுத்தும் பிரச்சனைக்கு இதுவே திட்டவட்டமான தீர்வாகும்.

அரசியல் கட்சிகள் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களை முன்மொழியலாம். அவர்கள் வாக்காளர்களுடைய நம்பிக்கையைப் பெறவும், அவர்களோடு பிரச்சனைகளை கலந்து விவாதிக்கவும், அவர்களுடைய கருத்துக்களைக் கேட்கவும் வேண்டும். இன்று இவை எதுவும் நடைபெறுவதில்லை. இந்த வழிமுறையைப் பின்பற்றினால், தேர்தலில் நிற்கும் மற்றவர்களுக்கு சமமான நிலையில் அரசியல் கட்சிகளுடைய உறுப்பினர்களும் இருப்பார்கள்.

அரசியல் வழிமுறையிலிருந்து ஓரங்கட்டப்பட்டு நிற்காமல் நாட்டின் போக்கைத் தீர்மானிப்பவர்களாக மக்கள் ஆவதற்கு கீழ்க்கண்ட நடவடிக்கைகள் உடனடியாகத் தேவைப்படுவதாக இந்திய கம்யூனிஸ்டு கெதர் கட்சி கருதுகிறது.

  1. வாக்காளர்கள், வேட்பாளர்களைத் தெரிவு செய்யாமல் தேர்தல் நடத்தக் கூடாது.
  2. ஒவ்வொறு தொகுதியிலும் தொகுதிக் குழுக்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அது, வேட்பாளர்களை முடிவு செய்யவும், தேர்தல் பிரச்சாரத்தை நடத்தவும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை மீண்டும் அழைக்கவும், வாக்காளர்கள் சட்டங்களை முன்மொழியவும் வேண்டிய வழிமுறைகளை திட்டமிடுதல், மேற்பார்வையிடுதல் ஆகிய கடமையை நிறைவேற்ற வேண்டும்.
  3. அரசு எந்த அரசியல் கட்சிக்கும் நிதியளிக்கக் கூடாது. ஆனால் அது மக்கள் வேட்பாளர்களை முடிவு செய்யவும், தேர்ந்தெடுக்கவும் தேவையான முழு வழிமுறைக்கும் செலவு செய்ய வேண்டும். தேர்தல் பிரச்சாரத்திற்காக, எந்த கட்சியோ, தனி வேட்பாளர்களோ செலவு செய்ய அனுமதிக்கக் கூடாது.
Pin It