மே 1 காலை 7 மணிக்கு சென்னையில் உள்ள வி.எச்.எஸ் மருத்துவமனை முன்னர் அங்கு வேலை செய்யும் மருத்துவ பணியாளர்கள் ஒன்று கூடினர். செங்கொடிகளால் நுழைவாயில் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வி.எச்.எஸ் மருத்துவமனைத் தொழிலாளர்கள் தொழிற் சங்கத்தின் அறிவிப்புப் பலகையில் "மே தினம் வாழ்க!, உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்!" போன்ற எழுச்சிகரமான முழக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. மேதின நிகழ்ச்சிக்கு எல்லா துறைகளிலும் பல்வேறு நிலைகளிலும் பணி செய்யும் பணியாளர்கள் ஒன்று கூடியிருந்தனர்.

மேதின நுழைவாயில் கூட்டத்தை வி.எச்.எஸ் மருத்துவமனைத் தொழிலாளர்கள் தொழிற் சங்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் எஸ்.மணிதாசன் அவர்கள் துவக்கி வைத்தார். தன்னுடைய முன்னுரையில் அவர் இந்த மருத்துவமனைத் தொழிலாளர்கள் அண்மையில் மேற் கொண்ட போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றியும், அவர்கள் சாதித்தவற்றைப் பற்றியும் விளக்கமாக எடுத்துரைத்தார். அந்தப் போராட்டத்தின் வெற்றிக்கு அடிப்படைக் காரணமானது, மருத்துவமனைத் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றுபட்டு, விட்டுக் கொடுக்காமல் போராடியதுதானென ஆணித்தரமாக விளக்கினார். அது மட்டுமின்றி, பல்வேறு தொழிற் சங்கங்களும் அமைப்புகளும், ஆதரவளித்ததும் நாம் சோர்வடையாமல் போராட உறுதுணையாக இருந்தது என்றார். மருத்துவப் பணியாளர்களின் உரிமைகளைப் பறிப்பதற்கும், நிர்வாகத்தின் இலாபத்தை அதிகரிப்பதற்கும், மக்களுக்கு அளிக்கப்படும் சேவைகளை வெட்டிக் குறைப்பதற்கும் நிர்வாகம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை அவர் கடுமையாகக் கண்டித்தார். தொழிலாளர்களின் போராட்ட ஒற்றுமையின் அடிப்படையில் இந்தத் தாக்குதல்களை தொழிலாளர்கள் எதிர்கொண்டு வெற்றி காண்பார்களென உறுதிபட அவர் கூறினார்.

பின் பேசிய தோழர் குமார், நாட்டின் ஒட்டு மொத்த செல்வ வளத்தை உருவாக்கும் தொழிலாளர்கள் தங்களின் அடிப்படை தேவைகளைக்கூட போராடிப் பெற வேண்டியுள்ளது. இந்த போராட்டத்தில் நம்முடைய ஒரே ஆயுதம் நமது ஒற்றுமை தான். நாம் ஒன்றுபட்டு போராடினால் வெற்றி நிச்சயம் என்றார்.

தொழிலாளர் ஒற்றுமை இயக்கத்தின் சார்பாக தோழர் பாஸ்கர் அவர்கள் தியாகங்களின் வடிவமான செங்கொடியை ஏற்றினார். பின்னர் அவர் மேதின தியாகிகளுக்கும், வி.எச்.எஸ் மருத்துவமனைத் தொழிலாளர்களுக்கும், சங்கத்தின் செயல் வீரர்களுக்கும் மேதின வாழ்த்துக்களைத் தெரிவித்து தன் உரையைத் துவக்கினார். மருத்துவத்துறை பணியாளர்களுடைய போராட்டத்திலேயே நீண்ட கால வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்ற வரலாறும் பெருமையும் வி.எச்.எஸ் மருத்துவமனைத் தொழிலாளர்களுக்கு இருக்கிறது. உரிமைகளை வென்றெடுக்க வேண்டுமென்ற உங்களுடைய உறுதியும், ஒற்றுமை உணர்வுமே உங்களுடைய இந்த வெற்றிக்கு அடித்தளமென தோழர் மணிதாசன் கூறியதை அவர் ஆமோதித்தார். தொழிலாளர்கள் பெற்ற வெற்றி கடந்த சில மாதங்களிலேயே பண வீக்கத்தாலும், விலைவாசி உயர்வால் கரைந்து விட்டதை அவர் விளக்கினார். தொடர்ந்த போராட்டங்கள் மூலம் மட்டுமே நாம் நம்முடைய வாழ்க்கைத் தரத்தை காத்துக்கொள்ள முடியும் என்றார்.

வி.எச்.எஸ். மருத்துவமனை நிர்வாகம் மருத்துவமனையைத் தனியார் மயப்படுத்த மேற்கொண்டு வரும் முயற்சிகளை தோழர் பாஸ்கர் வன்மையாகக் கண்டித்தார். வி.எச்.எஸ் மருத்துவமனையின் பல்வேறு துறைகளையும் படிப்படியாக நிர்வாகம் தனியார்மயப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்த மருத்துவமனையை நம்பியிருக்கும் மக்களுக்கு சேவைகள் மறுக்கப்படுகின்றன. பணம் உள்ளவர்களுக்கு மட்டுமே சுகாதாரமும் மருத்துவ வசதிகளும் என்ற நிலையை அரசாங்கம் ஏற்படுத்தி வருகிறது. தனியார்மயத்தின் காரணமாக இங்கு வேலை செய்யும் தொழிலாளர்களின் எதிர்காலம் ஒரு கேள்விக் குறியாக மாறியுள்ளது. முதலாளி வர்க்கம், சமுதாயத்தின் நலனைப் பற்றியும், வேலை செய்யும் தொழிலாளர்களுடைய எதிர்காலம் பற்றியும் சிறிதும் கவலையின்றி பொது மக்களுடைய உடமைகளைத் தனியார்மயமாக்கி வருவதை நாம் அனைவரும் எதிர்க்க வேண்டும்.

வி.எச்.எஸ். மருத்துவமனைத் தொழிலாளர்கள், ஒரு குழுவை உருவாக்க வேண்டும். அதில் முன்னணித் தொழிலாளர்களும், இளைஞர்களும் பங்கேற்க வேண்டும். இக் குழு மாதத்திற்கு ஒருமுறையாவது கூடி, தொழிலாளர்களுடைய நிலை குறித்தும், பிரச்சனைகள் குறித்தும் விவாதித்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் இக்குழுவில் தொழிலாளி வர்க்கத்தின் நிலை குறித்தும், அரசியல் நிலவரம் குறித்தும், தொழிலாளி வர்க்கம் எடுக்க வேண்டிய நிலைப்பாடுகள் குறித்தும் விவாதங்கள் நடத்துவது மிகவும் அவசியமாகும். இந்த முறையில் மட்டுமே நாம் தொழிலாளிகளுடைய விழிப்புணர்வை மேலும் உயர்த்தவும், எஃகு போன்ற ஒற்றுமையைக் கட்டவும் முடியும் என்றார்.

மருத்துவ மனைப் பணியாளர்கள் அனைவரும், தங்களுடைய போராட்ட ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தி, தங்களுடைய உரிமைகளுக்காக விட்டுக் கொடுக்காமல் போராடுவோம் என்ற உறுதியோடு மேதின நிகழ்ச்சி நிறைவுற்றது.

Pin It