தமிழ்நாட்டில் சத்தமில்லாமல், யுத்தமில்லாமல், அரசியல் என்ற சொல்லையே பயன்படுத்தாமல் ஆர்ப்பாட்டமில்லா ஒரு அரசியல் புரட்சி செய்தவர் நம்மாழ்வர் அவர்கள். இம்மண்ணின் மக்களுக்கான புரட்சி அது. அடையாளங்களைத் துறந்து இயற்கையோடு ஒன்றான அவரின் உண்மை, எளிமை அரசியலில் கடக்கமுடியாத பெருந்தடைகளைக் கடந்தது. மத இன வர்க்க வேறுபாடுகளைக் கடந்து, வலது இடது மையம் எனப் பல அரசியல் புலங்களைக் கடந்து அனைவரையும் இயற்கை என்ற ஒரு குடையின் கீழ் ஒன்றிணைத்த பெருமைக்குரியவர் நம்மாழ்வார்.

காலநிலை மாற்றத்தால் நாம் பல்வேறு இயற்கைப் பேரிடர்களை சந்திக்க உள்ள இந்நேரத்தில் இயற்கைச் சூழலைப் பாதுகாக்க தம் வாழ்வையே அர்ப்பணித்த காலநிலைப் போராளியான நம்மாழ்வார் அய்யாவை நினைவு கூர்வோம்.

nammazhvaar 450அய்யா நம்மாழ்வார் அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகிலுள்ள இளங்காடு என்ற கிராமத்தில் 1938ம் ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி, பிறந்தார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை பட்டப்படிப்பை முடித்தார். கோவில்பட்டி மண்டல மழைப்பயிர் ஆய்வகத்தில் 1960ஆம் ஆண்டு ஆய்வு உதவியாளராக பணியில் சேர்ந்தார். 1966 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை கோவில்பட்டி பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் வேலை செய்தார். விவசாய நிலங்களில் களப்பணி மேற்கொள்ளாமல் பெயரளவிற்கே செய்யப்படும் ஆய்வுகளில் பெரிதும் அதிருப்தியுற்று அதற்கெதிராக குரல் கொடுத்து தன் அரசு வேலையை உதறித் தள்ளினார். ஜப்பானிய இயற்கை விஞ்ஞானி மசனோபு ஃபுக்குவோக்கா, பாண்டிச்சேரி ஆரோவில்லின் சுற்றுச்சூழலியாளர் பெர்னார்டு நம்மாழ்வார் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினர். ரசாயன உரங்களால் மண்ணிற்கும், பயிர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை அறிந்த அவர், விவசாய முறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும் என முடிவு செய்தார். காந்தியப் பொருளாதார அறிஞர் ஜே. சி. குமரப்பா மீது பெருமதிப்பு கொண்டிருந்தார்.

பசுமைப் புரட்சி, தொழில்மயமாக்கம், சூழல் மாசடைதல் ஆகிய சூழலுக்குக் கேடு செய்யும் முறைகளுக்கு மாற்றாக இயற்கை வேளாண்மையை விதைத்தவர் நம்மாழ்வார். விதைத்தவன் உறங்கினாலும் விதை உறங்குவதில்லை என்பதற்கு இலக்கணமாக லட்சக்கணக்கான இளைஞர்களையும், பொதுமக்களையும் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுத்தி இயற்கை வாழ்வியலைக் கடைபிடிக்க செய்த பெருமைக்குரியவர் நம் அய்யா அவர்கள்.

மேற்குத்தொடர்ச்சி மலையில் இருக்கும் சோலைக்காடுகள் அழிவை எதிர்த்துக் கடைசி வரை போராடினார். நம் சுற்றுச்சூழலையும், விவசாயத்தையும் பாதிக்கக்கூடிய பேரழிவுத் திட்டங்களான பசுமைப் புரட்சி, மீத்தேன் திட்டம் நியூட்ரினோ திட்டம் ஆகிய அனைத்துத் திட்டங்களையும் முழுமூச்சாக எதிர்த்துக் கடைசி வரைப் போராடியவர். பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலியாக செயல்படும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளையும், விஞ்ஞானிகளையும் வாழ்நாள் முழுவதும் எதிர்த்தவர். பசுமைப் புரட்சி எவ்வாறு விவசாயிகளின் தற்சார்பு பொருளாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் அழித்தது என்ற விழிப்புணர்வை தமிழகமெங்கும் பரப்புரை செய்தார். நுகர்வுக் கலாச்சாரம் எவ்வாறு, நம் தற்சார்பையும், இங்குள்ள விவசாயத்தையும் அழிக்கிறது, அதனால் ஏற்படும் சூழலியல் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி மக்களை இயற்கை வாழ்வியல் முறைக்கு மாற வழிகாட்டியாக இருந்தவர். அய்யாவுக்குப் பிடித்த மிகச் சிறந்த சொல்: செயல். போகும் இடமெங்கும் “ நுனி வீட்டுக்கு, நடு மாட்டுக்கு, அடி மண்ணுக்கு “ என்று கூறி இயற்கை விவசாயத்தை மூன்று வரிகளில் எளிமைப்படுத்தி பரப்புரை செய்வார்.

பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு நடைமுறைப் பயிற்சி ஏதுமற்ற ஏட்டுக் கல்வி தரும் மெக்காலே கல்வி முறையைக் கடுமையாக சாடியவர் நம்மாழ்வார். அவரின் இலக்கை மூன்று வரிகளில் கூறுவதென்றால் நஞ்சில்லா விவசாயம், மருந்தில்லா மருத்துவம், சுவரில்லா பள்ளிக்கூடம் எனலாம். அதிகாலை 4. 30 மணிக்கு எழுந்து கருவிகளுடன் வேலை செய்யப் புறப்பட்டு விடுவார். அவருடைய பயிற்சி வகுப்புகள் களை கட்டும். யாருக்கும் கவனச் சிதறல் ஏற்படாத வண்ணம் விளையாட்டு, விடுகதை, கதை, அருமையான பாடல்கள் என விளையாட்டு முறையில் பயிற்சி கொடுப்பார்.

மக்களுக்குப் பரிச்சயமான எளிமையான இயல்பான மொழி நடையில் அவரது பேச்சுக்கள் இருந்ததாலே அது லட்சக் கணக்கானவர்களை சென்றடையும் ஆற்றல் கொண்ட ஆயுதமாகியது. அய்யா இறுதி வரை இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையையே கடைபிடித்தார். விவசாயிகளுடன் விவசாயியாக இருந்ததோடு, வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் இயற்கையையோடு இரண்டற ஒன்று கலந்தவர்.

2004-ல் ஆழிப் பேரலையின்போது கடல் நீர் உட்புகுந்து நிலங்கள் பாழ்பட்டுப் போயின. நிலங்களைச் சீர்திருத்த பல ஆண்டுகள் ஆகும் என்று வல்லுநர்கள் கூறிவிட்டனர். நம்மாழ்வார் ஐயா தலைமையில் குறுகிய காலத்தில் இயற்கையோடு இயைந்த முறையிலே நாகப்பட்டினம் மாவட்ட நிலங்கள் வெற்றிகரமாக மறுசீரமைக்கப்பட்டன.

வேம்புக்கான காப்புரிமையை மீட்டுக் கொடுத்தார். அமெரிக்காவின் டபுள்யூ. ஆர் கிரேஸ் நிறுவனம் வேம்புக்கான காப்புரிமையை அறிவு சார் சொத்துரிமையை பெற்றிருந்தது. அதை எதிர்த்து சுற்றுசூழல் போரளி வந்தனா சிவா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கு தொடர்பாக ஜெர்மனியில் வாதிட்டு அந்நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த வேம்புக்கான காப்புரிமையைத் திரும்பப் பெற்றதில் நம்மாழ்வாருக்கு முக்கியப் பங்கு உண்டு. தமிழ்நாடு வேளாண் மன்றச்சட்டத்தை நிரந்தரமாக தமிழக அரசு கைவிட வேண்டும். வேளாண்மையும், வேளாண் குறித்த ஆராய்ச்சி மற்றும் கல்வி அறிவையும் பன்னாட்டு மற்றும் வேளாண் தொழில் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் கொண்டு வரவே வேளாண் மன்றம் பயன்படும். விவசாயிகளுக்கு விதை மற்றும் வேளாண் உறவில் உள்ள உரிமை, அறிவு பகிர்வை இச்சட்டம் முடக்கிறது என தமிழ்நாடு வேளாண்மன்ற சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்காக மாவட்டம் தோரும் போராட்டங்களைக் கட்டமைத்து அதில் வெற்றியும் பெற்றார்.

72 நாடுகளில் தடை விதிக்கப்பட்ட, 17 வகை உள்ளிட்ட, 140 வகை பூச்சிக்கொல்லி மருந்துகள், இந்தியாவில் பயன்படுத்துப்படுகின்றன. மற்ற நாடுகள் அபாயகரமான பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதித்துள்ள நிலையில், மக்கள் குறித்து கவலைப்படாமல், தங்களுக்கு கிடைக்கும் வருவாயை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, இந்தியாவில் ஒரு குழுவினர் வெளிநாட்டு பூச்சி மருந்து கம்பெனிகளுக்கு சாதகமான செயல்படுகின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு, தேனீக்கள், சிறு பூச்சிகள், பறவைகள் என, அனைத்துமே அழிகின்றன. சுற்றுசூழலையும் பயிர்களையும் பாதுகாக்க மூலிகை பூச்சி விரட்டிகளையே பயன்படுத்த வேண்டும் என்று பரப்புரை செய்து பலர் இன்று பெருமளவில் மூலிகைப் பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்தவும் காரணமானார். பாரம்பரியமான விதை ரகங்களை பராமரிப்பதன் அவசியத்தை உணர்த்தியவர் நம்மாழ்வார். 1996 ல் அய்யா மரபு விதைகளை மீட்டெடுக்க, நாடுதழுவிய விதைப் பயணத்தை மேற்கொண்டார். இரசாயன உரப் பயன்பாட்டால் மண்ணின் காரத்தன்மை கூடும், அது அளவுக்கு அதிகமான தண்ணீரை எப்படி உறிஞ்சுகிறது. பயிர் சுழற்சி மற்றும் உழவு மூலம் இயல்பாகவே பயிர்கள் தனக்குத் தேவையான அங்ககக் கனிமங்களைப் பெறுமாறான நடைமுறைகளை வெற்றிகரமாக செயல்படுத்திக் காட்டியவர். மரபணு மாற்று பயிர்களைக் கடுமையாக எதிர்த்தார். தமிழகத்தில் மரபணு மாற்ற பிடி-கத்தரிக்கு தடை உத்தரவும் பெறப் போராடியவர்.

விவசாயிகளைப் பதுகாக்க வேண்டிய வேளாண் பல்கலைக்கழகங்களில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சிகளில் 90 சதவீதம் மரபணு மாற்றுத் தொழில்நுட்பம் போன்றவை, பன்னாட்டு நிறுவனங்களில் லாபத்துக்காக அவர்களின் நிதியுதவியுடன் நடத்தப்படுவதை பெரும் வருத்தத்துடன் அம்பலப்படுத்தினார்.

ஒற்றை நாற்று நடவு விதை, நீர், நேரம் அனைத்தையும் குறைத்து, அதிக மகசூல் தரும் முறையாகும். அதைத் தமிழ் நாட்டில் மீண்டும் பிரபலப்படுத்திய பெருமை அய்யாவையே சேரும். தமிழ்நாடு மட்டுமல்லாமல் கோழிக்கோட்டில் பெரும் பகுதி ஒன்றை இயற்கை விவசாய பூமியாக மாற்றிய பெருமைக்குரியவர்.

தமிழ் நாடெங்கும் இயற்கை வேளாண்மையை, மரபு விதைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்க பல்வேறு நடைபயணங்களை மேற்கொண்டார்

 நீர்நிலைகளை பாதுகாக்க பவாணி ஆற்றங்கரையில் தொடங்கி 500 கிலோ மீட்டர் நடைபயணம் மேற்கொண்டார். தமிழ் நாட்டில் அவர் பாதம் படாத இடம் இல்லை என்றே கூறலாம்.

"தமிழின வாழ்வியல் பல்கலைக்கழகம்' என்ற அமைப்பினைத் தொடங்கி, தமிழ்நாட்டின் கிராமப்புறங்கள் எல்லாவற்றிற்கும் கால்நடையாக சென்று, அங்கு கருத்தரங்கங்களும், பயிற்சி வகுப்புகளும் நடத்தினார். குடும்பம், லிசா, கொளுஞ்சி, தமிழ்நாடு இயற்கை வேளாண்மை கூட்டமைப்பு போன்ற பல்வேறு அமைப்புகளை உருவாக்கினார். பல விவசாய பயிற்சி மையங்களை தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் நிறுவினார்.

2009ல் கரூரை அடுத்த சுருமான்பட்டியின் 35 ஏக்கர் கொண்ட வறண்ட நிலத்தில் வானகம் என்ற உயிர் சூழல் நடுவத்தை நிறுவி அதை இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக்கி செழிப்பூட்டினார். நம்மாழ்வார் உயிர் சூழல் நடுவத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் ஆண்டு தோறும் விவசாயப் பயிற்சி, இயற்கை வாழ்வியல் பயிற்சி பெறுகின்றனர்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், அய்யாவுக்கு சுற்றுச் சூழல் சுடரொளி விருதினை வழங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்தி கிராம கிராமப்புற நிறுவனம் அய்யாவுக்கு முனைவர் பட்டம் வழங்கியது. காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் பேரழிவுத் திட்டத்துக்கு எதிராக தமிழகமெங்கும் கிராமம் கிராமமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போதே 2013 டிசம்பர் 30ஆம் நாள் நம்மாழ்வார் அய்யா இயற்கை எய்தினார். தனது வாழ்நாள் நாள் முழுவதையும் எளிய மக்களுக்காக அர்ப்பணித்த அவரின் இறுதி மூச்சும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் போதே இயற்கையோடு ஒன்று கலந்தது. நம்மாழ்வார் அய்யாவின் பிறந்தநாளான ஏப்ரல் 6 “மரபு விதை நாளாகக் கொண்டாடப்படுகிறது. விதைக்கப்பட்ட செயல்பாட்டாளராக அறியப்படும் அய்யா நீண்ட உறக்கத்துக்கு சென்று ஆறு வருடமாகி விட்டது. ஆனால் அவர் விதைத்த விதைகளோ விருட்சமாகி வருகின்றன. அய்யாவின் வழியில் தொடர்ந்து செயல்படுவோம்.

- சமந்தா

Pin It