hydro carbon farmer'தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு அனுமதி வழங்காது! என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். 

கடந்த சூன் 13ஆம் நாள் ஐட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு முதல்வர் இந்தியத் தலைமையமைச்சருக்கு எழுதிய கடிதத்தில் ”ஐட்ரோகார்பன் ஆய்வுக்கும் ஆக்கத்துக்கும் தேவைப்படும் அனுமதிகளைத் தமிழ்நாடு அரசு ஒரு போதும் வழங்காது” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டைக் கிஞ்சிற்றும் மதிக்காமல் அடுத்த இரண்டே நாளில் ஐட்ரோகார்பன் ஆய்வுக்கிணறுகளுக்கு எண்ணெய் இயற்கை எரிவாயு நிறுவனம்(ஒ என்ஜிசி) சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருக்கிறது.

இவ்வகையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சுற்று வட்டாரத்தில் 10 கிணறுகளும், கடலூர் மாவட்டத்தில் நெய்வேலி, காட்டுமன்னார்கோயில் உள்ளிட்ட பகுதியில் 5 கிணறுகளும் அமைக்கவேண்டும் என்பது ஒ.என்.ஜி.சி.யின் திட்டம்.

ஐட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி நிறுவனம் தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பாய்வு ஆணையத்துக்குக் கடிதம் எழுதியுள்ளது. இது பொதுமக்களுக்கும் சுற்றுச் சூழல் ஆர்வலர்களுக்கும் அதிர்ச்சியளித்துள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு பெற்ற உரிமத்தின் அடிப்படையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஆனால் அதன் பிறகு, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய 8 மாவட்டங்களையும் முழு அளவில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் கொண்டு வர வேண்டுமென்று மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு மாநில அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது.

ஆனால் இப்போதுள்ள படியே கூட காட்டுமன்னார் கோயில் வட்டம் காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலத்தில் அடங்கும். இந்தப் பகுதியில் ஒ.என்.ஜி.சி. மேற்கொண்டுள்ள முயற்சி சட்டப் புறம்பானது. இது தமிழ்நாட்டின் இறைமையைக் கேள்விக்குள்ளாக்குவதாகும்.

மேலும் சென்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ”தமிழ்நாட்டில் மீத்தேன், ஐட்ரோ கார்பன் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம்” என்ற வாக்குறுதியைத் தந்து வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும் மாநில சுற்றுச்சூழல் மதிப்பாய்வு ஆணையம் உடனடியாக ஓ.என்.ஜி.சி அளித்துள்ள இந்த விண்ணப்பத்தை ம்றுதலிக்க வேண்டும் எனக் கோருகிறோம்.

இந்திய அரசே அனுமதித்தாலும், தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்காது என்பதில் தமிழக உறுதியாக இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

தமிழ்நாட்டு மக்கள் நடத்திய போராட்டங்களின் விளைவாகவே மீத்தேன், ஐட்ரோகார்பன் திட்டங்கள் தடுத்து நிறுத்தப் பட்டுள்ளன. காவிரி வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டதும் மக்கள் போராட்டங்களின் விளைவே ஆகும்.

தமிழக மக்கள் விழிப்போடிருந்து காவிரி வேளாண் பாதுகாப்பை முழுமை செய்ய வேண்டும்.

ஒ என் ஜி சி பெயரில் தமிழ்நாட்டின் வேலி தாண்ட மோதி அரசு செய்யும் கெடுமுயற்சிகளை முறியடிக்க வேண்டும் என அறைகூவி அழைக்கிறோம்!

- தியாகு

Pin It