அறிவியல் கண்டுபிடிப்புகளில் உலக மக்களின் பெரும் பகுதியினர் பயன்படுத்தும் (அ) கண்டுகளிக்கும் சாதனமாக ஊடகங்கள் (தொலைக்காட்சி, செல்லிடப்பேசி, இணையம், இதழ்கள்) விளங்குகின்றன. ஒரு நாட்டின் நான்காவது தூணாக விளங்கும் ஊடகங்கள் உலகத்தையே உள்ளங்கையினுள் அடக்கிக் காட்டும் வலிமை வாய்ந்தவையாக உள்ளன. உலக மக்கள் அனைவரிடமும் அவர்களுடைய வாழ்வியல் அனுபவங்களைக் கதைகளாக சொல்வதும், கேட்பதும், நடித்துக்காட்டுவதும் என்ற நிலையே காணப்படுகிறது. உலக அளவில் பேசும்படம் தொடங்கி இன்றைய அனிமேஷன் படங்கள் வரை மக்களின் ரசனைக்கேற்ப தங்களின் வடிவத்தை தகவமைத்துக்கொண்டுள்ளதை அறியமுடிகிறது.

இந்தியா போன்ற தொன்மையான நாட்டில் அறிவியல் வளர்ச்சியின் பயனாக மக்கள் உலகளாவிய பண்பாட்டு நாகரீகத்தோடு தங்களை மாற்றிக் கொள்வதற்குக் காரணம் மற்ற நாடுகளைவிட இந்திய நாட்டின் மீதுதான் அதிக அளவில் படையெடுப்புகளும் ஆட்சி அதிகாரங்களின் ஆளுமைகளும் நடந்தேறியுள்ளன என்ற உண்மை, வரலாற்றை புரட்டின் நமக்கு விளங்கும்.

அதிக படையெடுப்புகளின் ஆதிக்கத்திற்குட்பட்ட இந்திய மக்களின் மனநிலையும் கொஞ்சம் கொஞ்சமாக (நடை, உடை, உணவு, இருப்பிடம், வாழ்வியல், கல்வி, வேலை வாய்ப்பு) என அனைத்துக் கூறுகளையும் ஐரோப்பிய முறையிலேயே பயன்படுத்தும் நிலைக்கு ஆட்படவேண்டிய சூழல் உருவான பின்பு அதுவே நம்முடைய நாகரிகம் என அடுத்தடுத்து தலைமுறையினர் நம்பத் தலைப்பட்டனர். பழக்கப்படுத்தப்பட்டனர்.

பழக்கமே வழக்கமாகிப்போன வாழ்வியலோடு வாழ்கின்ற இந்திய மக்களிடம் நாள்தோறும் வளருகின்ற விஞ்ஞான வளர்ச்சியும், அதன் அளப்பரிய செயல்பாடுகளும் வியப்பை மட்டுமல்ல அவர்களும் அதை நோக்கி பயணிக்க வேண்டியதாயிருக்கிறது.

உலகளவில் செய்திகளுக்காகவும் தகவல் தொடர்புகளுக்காகவும் பயன்படுத்தப்பட்ட ஊடகங்கள் பின்னர் வணிக மயமாக்கப்பட்டன. வணிக வியாபாரிகளின் கொழுத்த லாபத்திற்கு ஏற்ற களமாக பெரியதிரையும் (சினிமா) சின்னத்திரையும் (தொலைக்காட்சி) விளங்குகின்றன.

குறிப்பாக இந்தியா போன்ற மக்கள் தொகை நிறைந்துள்ள நாட்டில் சினிமாவும், தொலைக்காட்சியும் இளைஞர்களை குறிவைத்தே வணிகப்படுத்தப்படுகின்றன. உலகமயமாக்கலுக்குப் பிந்தைய காட்சி ஊடகங்களின் பங்களிப்பு என்பது வேகவேகமாக வாழ்வியல் முறையையும், ஆடம்பரங்களின் மீது மோகத்தையும், பயங்கரவாதத்தையும், நாயகத்தன்மையையும் இளைஞர்களிடம் பரவலாக்கச் செய்தன. திரைப்படம் இளைஞர்களையும், தொலைக்காட்சி குடும்ப உறுப்பினர்களையும் தங்கள் வசம் ஈர்த்து கொண்டதற்குக் காரணம் திரைப்படத்திலும், தொலைக்காட்சியிலும் வரும் நாயக, நாயகி வாழ்வியல் நம்முடைய வாழ்வியல் என்பதை நம்பத் தொடங்கியதேயாகும். ஒரு காட்சியைப் பலமுறை பார்க்கும் பொழுது அவர்களுடைய மனநிலையும் அந்நிகழ்விற்கு தக்க தன்னை தகவமைத்துக் கொள்கிறது. வன்முறையையே பன்முறை பார்க்கும் அவர்களுக்கும் வன்முறை கலாச்சாரம் தான் கண் முன்னே நிற்கும்.

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திருவண்ணாமலை மாவட்டக்குழுவின் சார்பில் பொன்விழா ஆண்டையொட்டி மாற்றுத்திரை 2011 நிகழ்வு திருவண்ணாமலை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியில் இருநாட்கள் நடைபெற்றது. குறும்பட, ஆவணப்படங்களை திரையிட்டு அப்படங்கள் தொடர்பான விவாதங்களும் அரங்கேறின. சுப்பிரமணியனின் மக்களிசைப்பாடலோடு

தொடங்கிய இவ்விழாவில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் 50 ஆண்டு கால வளர்ச்சியையும் பேராசான் ஜீவா இவ்வமைப்பைத் தொடங்கிய நோக்கத்தையும் மாவட்டத் துணைச் செயலாளர் சு.பிரேம்குமார் எடுத்துரைத்தார் . நிகழ்வுகளை கவிஞர் தி. பரமேசுவரி கே.கே.ஷா ஆகியோர் தொகுத்தும் ஒருங்கிணைத்தும் விவாதங்களையும் எழுப்பினர்.

அ.கி.அரசு வரவேற்புரையை நிகழ்த்த மன்றத்தின் சார்பில் சாந்தன் முருகன் பேரறிவாளன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை தமிழக அரசு திரும்ப பெற்று சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற தீர்மானத்தை ஹாமீம் முஸ்தபா முன்மொழிந்தார். தலைமையுரையை எஸ்.கே.பி. பொறியியல் கல்லூரியின் தலைவர் கு.கருணாநிதி ஆற்றினார். இம்மாற்றுத்திரையின் நோக்கம் குறித்து மாநிலச் செயலாளர் பெ. அன்பு தனதுரையில் திருவண்ணாமலை மாவட்டத்தின் தொன்மை, வரலாறு, கலைக்கான முக்கியத்துவத்தோடு மாற்றுத்திரை 2008,2011 ஆகிய இரு நிகழ்வுகளுக்கும் மருத்துவர் ராமதசு தொடங்கி வைப்பதற்கான காரணங்களையும் எடுத்துரைத்தார். தொடக்கவுரையாக மருத்துவர் இராமதாசு அவர்கள் இவ்வரங்கில் கூடியுள்ள இளைஞர்களையும், இயக்குநர்களையும், படைப்பாளர்களையும் அமைப்பையும் பாராட்டினார். கடந்த 25 ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்தில் மிகப்பெரும் சீரழிவுகள் திரைப்படம், தொலைக்காட்சிகளினால் ஏற்படுகிறது என்றும் நமது மொழி பண்பாடு நாகரீகம் என அனைத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம் என்றார். இந்த மாற்றுத்திரை அமைப்பு மக்கள் தொலைக்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குறும்பட ஆவணப்படங்களை திரையிட்டு அதன் படைப்பாளிகளின் பேட்டியினை ஒளிபரப்பி கௌரவபடுத்தியதை நினைவு கூர்ந்தார்.

முதல் திரையிடலாக அமைந்த தவமுதல்வனின் பச்சை ரத்தம் என்ற ஆவணப்படத்தையும் அதன் இயக்குநரையும் அறிமுப்படுத்தி சு.பிரேம்குமார் உரையாற்றினார். பச்சை ரத்தம் திரையிடலுக்குப்பின் இப்படம் குறித்த விவாதம் நடைபெற்றது. ஹாமீம் முஸ்தபா இவ்வாவணப்படத்தின் நீளத்தினைச் சுருக்கவும், திரும்ப திரும்ப வருகின்ற காட்சிகள், பின்னணி இசை, சாதியப் பிரச்சனை பற்றியும் குறிப்பிட்டு இப்படத்தில் பண்பாட்டு வாழ்க்கைப் பதிவுகள் இல்லை என்ற வாதத்தையும் முன்வைத்தார்.

படத்தின் இயக்குநர் தவமுதல்வன் தனதுரையில் இப்படம் எடுக்க 2 1/2 ஆண்டுகாலம் அவர் அடைந்த அனுபவங்களையும் தன் சொந்தச் செலவில் 1000 ரூபாய் வாடகைக் கேமராவை வைத்துக்கொண்டு இத்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வியல் அவர் பயணித்த அனுபவங்களையும் பகிர்ந்துக் கொண்டார். 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆவணப்படங்கள் அறிவு ஜீவிகளுக்கானதாக இருந்த நிலைமாறி இன்று அனைவருக்குமானதாக மாறிவிட்ட தன்மையையும் இலங்கையின் முன்வேலியைப்போல இத்தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கான வேறுவகையான வேலி என குறிப்பிட்டார். இதற்கடுத்த திரையிடலாக பாவல் நவநீதனின் மக்கப் மங்கம்மா என்ற குறும்படமும் அது தொடர்பான பகிர்தலும் நடைபெற்றது.

உணவினை முடித்து மதிய அமர்வின் தொடக்க உரையாக விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பின் தோழர் சிந்தனைச் செல்வன் சிறப்புரையாற்றினார். ஆதிக்கம், சுரண்டல் அநியாயத்திற்கு எதிரான சிந்தனைகளை மக்களிடத்தில் எடுத்துச் செல்ல நமக்கான ஊடகத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த வகையில் மாற்றுத்திரை மிகப்பெரிய ஆயுதமாக உள்ளது. வீதி நாடகங்கள், மூன்றாம் அரங்குகளைப் போல மக்களிடத்தில் இம்மாற்றுத்திரையைக் கொண்டு செல்ல வேண்டியக் கடமை நமக்கு உள்ளது. அதை கலை இலக்கியப் பெருமன்றம் போன்ற முன்னணி இயக்கங்கள் செய்ய வேண்டும் என்றார்.

ஓவியர் ராமசந்திரன் தனதுரையில் காட்சி ஊடகங்களில் மரபு வழியான மொழிக்கூறுகளை எடுத்துவிட்டால் அதை நாம் பொதுவாக உலகளாவிய கூறாகப் புரிந்து

கொள்ளலாம். பொது அர்த்தங்களை மீறி நம்முடைய வாழ்வை நாம் கவனிக்க முடிந்திருந்தால் இந்த மாற்றுத்திரை நிகழ்வே தேவைப்பட்டிருக்காது என குறிப்பிட்டார். தொடர்ந்து தீபக்கின் தி ஃபிப்த் சென்ஸ் குறும்படம் திரையிடப்பட்டது. இப்படத்தினை தொடர்ந்து திருச்சி நேருவின் தெருவில் இறக்கும் குதிரைகள் என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இப்படம் குறித்து குமார் அம்பாயிரம், எஸ்.ஜே. சிவசங்கர், பழனிவேள் ஆகியோர் கருத்துக்களையும் விவாதங்களையும் முன் வைத்தார்கள். மனநலம் பிறழ்ந்தவர்களைப் பற்றிய இவ்வாவணப்படம் குடும்பஉறவுகளிடமிருந்து அவர்கள் துண்டிக்கப்பட்ட பாங்கினையும் பண்பாட்டு வறட்சி, அறிவு வறட்சியினால் அவர்களின் வாழ்வியல் சிதைந்தத் தன்மையையும் எடுத்துரைப்பதாக அமைந்திருந்தது. இதைத் தொடர்ந்து தயாபாரனின் இதுவேறு காகிதம் என்ற கல்வி மறுக்கப்பட்ட சிறுவனின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட குறும்படம் திரையிடப்பட்டது.

அடுத்து சோமீதரனின் முல்லைத்தீவு சகா என்ற முல்லைத்தீவு படுகொலையின் கொடூரங்களை காட்சிப்படுத்தப்பட்ட ஆவணப்படம் திரையிடப்பட்டது. கேரள அரசின் சிறந்த படமாக தேர்வான இப்படத்தின் இயக்குநர் சோமீதரன் தனதுரையில் இலங்கை அரசு பிரதிநிதிகளும் விடுதலைப்புலிகளும் மக்களுக்காகவே இந்த சண்டை நடந்ததாகக் கூறுகின்றனர். போரினுடைய வலி என்பது சண்டை, தாக்குதல் அல்ல. அதைத்தாண்டி ஒரு இனத்தினுடைய வாழ்வாதாரமும் வாழ்வியலும் அழிக்கப்பட்டதுதான் போர். 2009லிருந்து தொடர்ச்சியாக ஒரு இனம் அழிக்கப்பட்டதும் போர் பற்றிய செய்திகளும் தமிழகத்தில் கொஞ்சம் பேருக்குதான் தெரிந்திருக்கிறது. பிற மாநிலங்களில் பெரும்பான்மையோருக்குத் தெரியவில்லை என்றும் பாராளுமன்றத்தில் இது பற்றிய விவாதம் வர 2 ஆண்டுகள் 2 மாதம் ஆனது என்று வேதனையோடு பதிவு செய்தார். இவ்வுரையோடு அன்றைய நிகழ்வு முடிந்தது. அடுத்த நாள் என். பாத்திமா நசீரின் டாக்கிங் ஹெட்ஸ் என்ற ஆவணப்படம் திரையிடலோடு நிகழ்வு தொடங்கியது. இப்படத்தின் விவாதத்தில் ஹாமீம் முஸ்தபா அவர்கள் ஒரு இடத்தில் பர்தா அணிந்த முஸ்லிம் பெண். இன்னொரு இடத்தில் பர்தா அணியாத முஸ்லீம் பெண் என் வேறுபாடுகளுடன் இப்படம் பயணிக்கிறது என்றும் பிரான்ஸ் முஸ்லிம் நாடுகளை அடிமைபடுத்தியபோது பர்தாக்களுக்குள் இருந்த முகங்கள் என்னை எதிர்வினையாற்றின என்பதுடன் மேற்குலகின் அச்சமாக பர்தா இன்றும் இருக்கிறது என்றார். இதைத் தொடர்ந்து மாற்றுத் திரைக்கான நோக்கமும் தேவவையும் குறித்து தோழர்கள் மு.சி.ராதாகிருஷ்ணன், அஜயன்பாலா, தாமரை ஆசிரியர் சி. மகேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். சி. மகேந்திரன் தனதுரையில் மாற்றுத்திரையில் நாம் ஆரம்ப நிலையில் தான் உள்ளோம். மாற்று அரசியலுக்காகத் தான் மாற்றுத்திரை. பொழுது போக்கிற்காக விளையாட்டிற்காக மாற்றுத்திரை இல்லை. ஒளித்து வைக்கப்பட்ட அரசியலை வெளிக்கொணருவதே மாற்றுத்திரையின் நோக்கம். விழிப்புணர்வினால் சிறந்த எழுத்ததுக்கள், மாற்றுத்திரை, சிறந்த இயக்கங்கள் தோன்றும். சமூகம் சிந்திப்பதை விட்டுவிட்டு இருக்கையில் மாற்றுத்திரை சிந்திக்க வைக்கிறது என குறிப்பிட்டார்.

இந்நிகழ்வினைத் தொடர்ந்து எஸ்.ஜே.சிவசங்கரின் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என்ற குறும்படம் ஒளிபரப்பபட்டது. இப்படத்தின் இயக்குநர் சிவசங்கர் இப்பட அனுபவங்கள் குறித்து பேசுகையில் ஒரு வீடியோ கேமரா இருந்தால் போதும் படத்திற்கான கதைகளும் நமக்கு சமூகத்தில் விரவிக்கிடக்கின்றன என்றும் இப்படம் எடுக்க 300 ரூபாய்தான் செலவானதாகவும் குறிப்பிட்டார்.

இதைத்தொடர்ந்து கவிஞர் குட்டிரேவதியின் முடிவிலா நடனம் என்ற இருளர்களின் பண்பாட்டுச்சடங்கு குறித்த ஆவணப்படம் திரையிடப்பட்டது. கன்னியம்மன் திருவிழாவின் மூலம் இருளர்களின் வாழ்வியல், வழிபாடு, நடனம், இசை ஆகியவற்றை வெளிப்படுத்திய இப்படத்தினைத் தொடர்ந்து பொன்ராஜ் இயக்கிய ஒரு ஊருல என்ற குறும்படம் ஒளிப்பரப்பபட்டது. நகரவாழ்க்கையில் இருக்கும் தன்னுடைய பேரனுக்கு கிராமத்தின் மேன்மையை எடுத்துரைக்கும் வண்ணம் அமைந்திருந்த இப்படத்தோடு காலை அமர்வு நிறைவுற்றது. உணவுக்குப் பின்பு பாவலர் வையவன். பேரா.செந்தில்வேலன் அவர்களின் தமிழிசைப்பாடலோடு மதிய அமர்வு தொடங்கியது. பாடலைத் தொடந்து செங்குருதி குறும்படம் திரையிடப்பட்டது. இப்படம் பல்வேறு விவாதங்களை எழுப்பியது. இப்படத்தினைத் தொடர்ந்து ஆர்.ஆர். சினிவாசனின் என் பெயர் பாலாறு என்ற ஆவணப்படம் திரையிடப்பட்டது. இவ்வாவணப்படம் குறித்தும், இப்படத்தில் தன்னுடைய பங்களிப்பைக் குறித்தும் எழுத்தாளர் அழகிய பெரியவன் உரையாற்றினார். பாலாற்றின் தொடக்கம் எவ்வாறு தமிழக மக்களுக்கான தனது பங்களிப்பு, மணல் கொள்ளையினால் ஆறு தன்னுடைய வளமிழந்து மலட்டுதன்மை அடைந்துள்ளதையும் எடுத்துக்காட்டினார்.

தொடர்ந்து சிறந்த குறும்பட ஒளிப்பதிவிற்கான தேசிய விருது பெற்ற தோழர் முரளிக்கு பாராட்டு விழா நடைபெற்றது. முரளியைப் பாராட்ட தோழர் ஆர்.நல்லக்கண்ணு அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து இந்நிகழ்வினைச் சிறப்பித்தார். முரளிக்கும் திருவண்ணாமலை அரும்புகலைக்குழு, கலை இலக்கியப் பெருமன்றத்திற்குமான பங்களிப்பினையும், திருவண்ணாமலையில் அவருடைய செயல்பாடுகள், வளர்ச்சிகள் என அவரை நாடகத்துறையிலும் அமைப்பிலும் வெளிக்கொணர்ந்த மாவட்டச் செயலாளர் கோ.வி.செல்வராஜ் தனது அனுபவங்களை நெகிழ்ச்சியோடும் நகைச்சுவையோடும் குறிப்பிட்டு தனக்கே உரிய பாணியில் நிகழ்வைச் சிறப்பித்தார். இவரைத் தொடர்ந்து வாழ்த்திய அ.கி.அரசு முரளிக்கும் திருவண்ணாமலைத் தோழர்களுக்குமான நட்பினை எடுத்துரைத்தார். தொடர்ந்து தோழர் கு.ஜோதி அவர்கள் தன்னுடைய வாழ்த்துரையில் மன்றத்தின் செயல்பாடுகள் குறித்தும் முரளியின் பங்களிப்பு குறித்தும் பேசினார். முரளியை வாழ்த்தி சிறப்புரையாற்றிய தோழர் தோழர் நல்லக்கண்ணு அவர்கள் தனதுரையில் 1997ல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் திருவண்ணாமலைத் தோழர்கள் பெ.அன்பு, அரசு, குமார், முரளி, ஸ்ரீதர், ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டதையும் மாநாட்டில் அவர்களுடன் பழகிய விதத்தையும் நினைவுகூர்ந்தார். முரளி சிறுபிள்ளையிலிருந்து பார்த்து வந்த அவரின் வளர்ச்சியைப் பாராட்டினார். தேசிய அளவிலான விருதினை வாங்கியது நம்முடைய அமைப்பிற்கு பெருமை எனவும் குறிப்பாக இது போன்ற விருதுகள் இளைஞர்களுக்குக் கிடைத்தால் மேலும் பல சாதனைகளை நிகழ்த்தலாம் என்றும் இது போன்ற பல விருதுகளையும் சாதனைகளையும் அவர் பெறவேண்டும் என வாழ்த்தினார்.

இன்றைய ஊடகங்களின் வளர்ச்சி நிலையை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் 20 ஆண்டுகளுக்கு முன்பு சப்னாசகாரின் மும்பை வாழ்க்கையை மய்யப்படுத்திய படத்தினைப் பற்றிய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். நகர வாழ்வினை படம்பிடித்துக் காட்டும் வேளையில் கிராம வாழ்வியலையும் படம்பிடித்துக்காட்ட வேண்டும் என வலியுறுத்தினார். முரளி போன்ற படைப்பாளிகள், கலைஞர்கள் எழுத்தாளர்கள் நாட்டிற்கும் தன்னுடைய ஊருக்கும் இயக்கத்திற்கும் பெருமை சேர்க்கும் படியான செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும் என வாழ்த்தினார்.

தோழர்களின் வாழ்த்துரையைத் தொடர்ந்து ஏற்புரை நிகழ்த்திய தோழர் முரளி 17 ஆண்டுகள் தாயின் வளர்ப்பில் இருந்தேன் அடுத்த 17 ஆண்டுகள் திருவண்ணாமலை தனக்கு தாய் வீடானது 82, மத்தாலங்குளத் தெரு தான் அத்தாய் வீடு எனக் குறிப்பிட்டார்.

தனக்கான முன்மாதிரிகள் திருவண்ணாமலையில் தான் கிடைத்தார்கள் என்றும் அதற்கான முகவரி தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் தான் எனக்குறிப்பிட்டார். எளிமையும் எதார்த்தமும் கொண்ட ஆர்.நல்லக்கண்ணு தோழர் தன்னை வாழ்த்தியது பாராட்டியது தேசிய விருதை விட மேலானதாகக் கருதுகிறேன் என நெகிழ்ச்சியடைந்தார். அவருக்கு தேசிய விருது கிடைத்த ஷாம் ராத்ஷிகார் படம் மும்பையின் நகர வாழ்க்கைக்குள்ளிருக்கும் நிலைப்புத் தன்மையில்லாத உறவு முறைகளுக்கான மூன்று கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட படம் என படத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார். தொடர்ந்து முரளியின் தாயார் முரளியைப்பற்றியும் திருவண்ணாமலை கலை இலக்கியப் பெருமன்றத்தினைப் பற்றியும் கோவி. செல்வராஜ், பி.கே.பி. தோழர் அவரது மனைவி இவர்களுக்கான நட்பினையும் கூறி தனது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார். இவ்வுரையோடு மாற்றுத்திரை 2011 நிகழ்ச்சி நிறைவடைந்தது. இந்த 2 நாட்கள் நிகழ்வினை திருவண்ணாமலை கலை இலக்கியப் பெருமன்றத் தோழர்கள் பெ. அன்பு, கோவி.செல்வராஜ், அ.கி.அரசு, கே.கே.ஷா, தி.பரமேசுவரி, சு.பிரேம்குமார், பந்தலராஜா, இரா.ஸ்ரீதர் ராஜன், எல.ராசா, த.மூ.கிதாம்பரி, மே.ரா.சுரேஷ், இரா.கண்ணன், பெ.எழிலரசன், ச்.சண்முகமணி, விஜயலட்சுமி, பாக்கியலட்சுமி உள்ளிட்டவர்கள் ஒருங்கிணைத்து நிகழ்வினை சிறந்த முறையிலானதாகவும் வெற்றிகரமாகவும் நடத்தி கொடுத்தனர்.

இந்நிகழ்வில் தமிழ்நாடு அளவிலான கலை இலக்கியப் பெருமன்ற இயக்குனர்களும், எழுத்தாளர்களும், குறும்பட ஆவணப்பட இயக்குனர்களும் சமூக ஆர்வலர்களும், கல்லூரிமாணவர்களும், பொதுமக்களும் கலந்துக் கொண்டனர்.

Pin It