மின்னிக்கொண்டிருக்கும் மீன்கள் மத்தியில்
செத்துக்கொண்டிருந்தன மீன்கள்
உப்பிப்புடைத்த அதனுடல்
குடல் சரிந்து மாலையாகி
காய்ந்த இலைதழைகளினூடே
நீர்க்குமிழியின் வாழக்கையைப் போல்
வேகமாக கடக்கலாயின
கருஞ்சிவப்பு நிறமேறிய அதன்நீரை
பாழாறு எனப்பெயரிட்டு அழைத்தனர் மக்கள்
பின் அந்த ஆற்றை சாயக்கழிவுநீர் என
மறுபெயரிட்டு அழைக்கலாயினர்
முற்பகல் தாண்டி பிற்பகலில்
கூடிக்கலைந்த கூட்டம் அதன் நிறம் கண்டு
காடு தீப்பற்றி எரிவது போல் எரியலாகின என்றார்கள்.

 ***        
சிட்டுக்குருவிகளுக்கு தானியமில்லா ஏமாற்றம்
பச்சைக் கிளிகளுக்கு நீரில்லா ஏமாற்றம்
என்ன ஆனதோ தெரியவில்லை சோழக்காட்டு பொம்மை
வயல் நெடுக நம் பாட்டிமார்களின் கால்தடம்
நம் சகோதரிகளின் தெம்மாங்கு பாட்டு
எத்திசைச் செல்லுமோ யாரறிவார்

Pin It