1984 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 31 ஆம் நாள் காலை 9.30 மணியளவில் பிரதமர் இந்திரா காந்தி இங்கிலாந்து நாட்டு நடிகர் பீட்டர் உசுடினோ என்பவருக்குப் பேட்டி கொடுப்பதற்காக தமது வீட்டுத் தோட்டத்தில் நடந்து செல்லும்போது சீக்கிய மதத்தைச் சார்ந்த அவரின் பாதுகாப்பு வீரர்களான சத்வன்சிங் மற்றும் பெனட்சிங்  ஆகியோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் சீக்கியர்கள் தங்கள் மத உணர்வை மறந்து எதிர்காலத்தில் இதுபோன்று நடந்து கொள்ள மாட்டார்கள் என்று நம்பமுடியுமா?

2001 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 13 ஆம் நாள் பாக்கிசுதான் தீவிரவாதிகள் 5 பேர் இந்தியப் பாராளுமன்றக் கட்டடத்தில் நுழைந்து சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டதில் 12பேர் கொல்லப்பட்டனர். பிரதமர் வாஜ்பேயும், எதிர்கட்சித் தலைவர் சோனியாவும் தாக்குதலுக்கு முன்னரே வெளியேறினர். தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் கொல்லப்பட்டனர்.

தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அப்சல்குரு எனக் குற்றம் சுமத்தப்பட்டு 9.2.2013 அன்று தூக்கிலிடப்பட்டார்.தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டாலும் காசுமீர் பிரச்சனை தீர்க்கப்படுகின்ற வரை இது போன்ற தாக்குதல்கள் நடைபெறாது என உறுதி கூறமுடியுமா?

இதுபோன்ற நிகழ்வுகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்துவிட்டால், அதுவே தனது சாதனையாக மத்திய அரசு கருதுகிறது. குற்றங்களுக்குத் தீர்வு தண்டனைக் அல்ல.குற்றங்கள் நடைபெறுவதற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து அதனைக் களைவதே அரசின் கடமையும் பொறுப்பும் ஆகும்.

இந்நிலையில் 2012 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 16 ஆம் நாள் தில்லி மருத்துவக் கல்லூரி மாணவி ஓடும் தனியார் பள்ளிப் பேருந்தில் 6 பேர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு 13 நாட்களுக்குப் பின் உயிரிழந்தார்.இதனால் தில்லி மட்டுமின்றி நாடு முழுவதும் அதிர்ச்சி உண்டாகி 10 நாட்களுக்கு மேல் பலவிதமான போராட்டங்கள் நடைபெற்றன.

இதுபோன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்ததால் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வர்மா தலைமையில் குழு ஒன்றை மத்திய அரசு நியமித்தது.வர்மா குழுவின் பரிந்துரையின்படி பாலியல் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு அதிக பட்சமாகத் தூக்குத் தண்டனை வழங்கிட அவசரச் சட்டம் ஒன்றை மத்திய அரசு அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளது.

இந்த அவசரச் சட்டம் மூலம் நீதிமன்றங்கள் பாலியல் குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க முடியும். மகிழ்ச்சி. ஆனால் 17 வயதுள்ளவன் சிறுவன் எனவே இந்தச் சட்டம் அவனுக்குப் பொருந்தாது என்பது என்ன நியாயம்? அந்த 6 பேரில் அந்தப் பெண்ணை அதிக அளவு துன்புறுத்தியவன் இவர்கள் சொல்லும் அந்தச் சிறுவனே.

தேர்தலில் வாக்களிப்பதற்கான வயது 18.அதற்காக 17வயதுள்ளவன் ஒரு பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் அந்தப் பெண்ணைக் கொன்றுவிடுபவன் சிறுவனா? வேடிக்கையாக இல்லை.அவசரச் சட்டம் இதனையும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருக்க வேண்டாமா?

      ஆண்டு                    குற்றம் சாட்டப் பட்டவர்கள்                  தண்டனை பெற்றவர் 
          2009                                              21,397                                                 5316
          2010                                              22,172                                                 5632
          2011                                              24,206                                                 5724 

இந்தியாவில் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது தொடர்பான குற்றங்களின் பட்டியலைத் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 3 ஆண்டுகளில் தாவது 2009, 2010 மற்றும் 2011 ஆம் ஆண்டுகளில் 67,775 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர் (உண்மை இதைவிடப் பல மடங்கு இருக்கும்)

மேற்கண்ட தகவல்களின்படி பாலியல் பலாத்காரம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே போகிறது என்பதையும் குற்றம் சாட்டப்பட்டவர்களில் நான்கில் மூவர் தப்பித்துவிடுகின்றனர் என்பதையும் நாம் அறிய முடிகிறது.

மேலும் நம் நாட்டில் மொத்தம் உள்ள 4835பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களில் 1448 பேர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன என்ற செய்தியும் வெளியாகின்றன என்பது வெட்கக்கேடானது.மக்கள் பிரதிநிதிகளின் நிலையே இப்படி என்றால், மக்களின் நிலை என்னவாக இருக்கும்.

உயிர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று பாலியல்.உலகில் வாழும் அனைத்து உயிரினங்களும் பாலியல் உறவு வைத்துக் கொள்கின்றன.எனவே ஆண் பெண் உறவு தவிர்க்க முடியாத ஒன்று.ஆனால் மனித இனத்தில் ஆண்கள் மட்டுமே தனது உடல் பசியைத் தீர்த்துக்கொள்ளப் பெண்களைப் பலாத்காரம் செய்கின்றனர்.பிறகு அந்தக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்ள மேலும் ஒரு குற்றம் செய்து அந்தப் பெண்ணைக் கொன்று விடுகின்றனர்.இப்படிப்பட்ட மனித மிருகங்களுக்கு அதிகப் பட்ச தண்டனை கொடுப்பதே நியாயமாகும்.ஆனால்,தண்டனையே தீர்வாகாது.

குற்றவாளிகளுக்குத் தண்டனை காலகாலமாய் கொடுக்கப்பட்டுதான் வருகிறது.அதனால் குற்றம் குறைகிறதா? இல்லையே, அதற்கு மாறாகக் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. ஏன்?

பாலியல் குற்றங்கள் நடைபெறுவதற்கு நம் நாட்டில் பல காரணங்கள் உண்டு, எடுத்துக்காட்டு

* திருமணம் எல்லோருக்கும் நடப்பதில்லை. திருமணம் செய்து கொள்ள முடியாதவர்கள் பல கோடி. 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, திருமணமாகாத ஆண்கள் 28,96 கோடி, திருமணமாகாத பெண்கள் 22.30 கோடி. ஆண்களில் விதவைகள் 97.00 லட்சம், பெண்களில் விதவைகள் 3.42 கோடி. இன்றைய நிலையில் இந்தப் புள்ளி விவரம் இன்னும் அதிகமாக இருக்கும்.

* நம் நாட்டில் திருமண வயது ஆண்களுக்கு 21பெண்களுக்கு 18.மேலை நாடுகளில் திருமண வயது ஆண்களுக்கு 18பெண்களுக்கு 16.திருமணத்திற்கு முன் உடல் உறவு வைத்துக் கொள்வது அங்கு குற்றம் அல்ல.

* உலகமயமாக்கல் கொள்கையால் நீலப்படங்களைப் பார்த்துக் காம உணர்வுகளைத் தூண்டும் கருவிகளாகக் கைப்பேசியும் கணினியும் இளைஞர்களுக்கு அமைந்துள்ளன.

* இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாவதால் பாலியல் குற்றங்களில் ஈடுபட வழிவகுக்கிறது.

மேலை நாடுகளில் காம உணர்வு வெளிப்படையாக உள்ளது. ஆண் – பெண் பாலியல் உறவு கல்விக் கூடங்களில் பாடமாக கற்பிக்கப்படுகிறது.திருமணத்திற்கு முன் உடல்உறவு வைத்துக்கொள்வதைக் குற்றமாகக் கருதுவதில்லை. விபச்சாரம் அனுமதிக்கப்படுகிறது. சில நாடுகளில் விபச்சாரத்திற்குத் தடை இருந்தாலும் அது பெயரளவிற்குத்தான். எடுத்துக்காட்டு தாய்லாந்து நாடு.

சுவிட்சர்லாந்தில் 16 வயது ஆண் – பெண் உடல் உறவு கொள்ளச் சட்டம் அனுமதிக்கிறது. 2001 ஆம் ஆண்டு அங்கு 73,509 குழந்தைகள் பிறந்தன. அதில் குழந்தை பெற்ற 8380 பெண்கள் திருமணமாகாதவர்கள். எனவேதான் பாலியல் வன்கொடுமைகள் மேலை நாடுகளைவிட நம் நாட்டில் பூதாகாரமாக உள்ளன.

அமெரிக்க நாட்டின் புள்ளி விவரப்படி ஆண்டு தோறும் சுமார் 50,000 பெண்கள் பாலியல் தொழிலுக்கு ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளுக்குக் கடத்தி வரப்படுவதாகத் தெரிவிக்கிறது.

இந்தியாவில் 90.00 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளதாகவும் அதில் 27.00 இலட்சம் குழந்தைகள் என்றும் ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது.மேலும் ஒவ்வொரு ஆண்டும் 10,000 பெண்கள் 10வயதுக்கும் 18வயதிற்கும் உட்பட்டவர்கள் நேபாள நாட்டிலிருந்து இந்தியாவுக்குக் கடத்தி வரப்படுவதாகவும் ஒரு செய்தி குறிப்பிடுகிறது.

இந்தியாவில் விபச்சாரம் சட்டமாக்கப்பட்டுள்ளது.ஒரு பெண் பாலியல் தொழில் செய்யச் சட்டப்படி அனுமதி உண்டு.அதே நேரத்தில் சில நிபந்தனைகள் இத்தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ளன அதாவது. 1) பொது இடங்களின் அருகாமையில் (200 மீட்டர்) விபச்சாரம் செய்ய அனுமதி இல்லை.2) தொலைபேசி எண்களை விளம்பரம் செய்யக்கூடாது.3) 18 வயதை அடைந்திருக்க வேண்டும்.

இதனால் காவல்துறையினர் பாலியல் தொழிலாளர்கள் மீது தெளிவற்ற வழக்குகளைத் தொடுத்துத் துன்புறுத்துகின்றனர்.பொது இடத்தில் தொல்லை தந்ததாகவும் அல்லது பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாகவும் வழக்குப் பதிவு செய்கின்றனர்.

பாலியல் தொழிலாளர்கள் மீது அரசு அக்கறை கொள்வது போல் சட்டதில் அனுமதிப்பதும், மறுபக்கம் அந்தத் தொழிலை நடைபெறாமல் தடுப்பதுமாகவும் அரசு இரட்டை வேடம் போடுகிறது.இதனால் இந்தத் தொழிலில் இடைத்தரகர்களும் குண்டர்களும் கொடிகட்டிப் பறக்கின்றனர்.

பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களில் பெரும்பாலோர் விரும்பி அதில் ஈடுபடுவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையே அவர்களை இந்நிலைக்குத் தள்ளியது.

பாலியல் தொழிலை முறைப்படுத்தினால் இத்தொழிலில் ஈடுபடும் இலட்சக்கணக்கான பெண்கள் துன்பமின்றி மரியாதையுடன் வாழ வழி ஏற்படும்.இன்று காவல்துறைக்கு அஞ்சிவாழும் இவர்களுக்கு நாளை காவல்துறையின் பாதுகாப்பு கிடைக்கும். இடைத்தரகர்களும் குண்டர்களும் ஒழிக்கப்படுவர். பாலியல் நோய் (எய்ட்ஸ்) பரவுவதைத் தடுக்க வழி ஏற்படும். பாலியல் நோய் (எய்ட்ஸ்) உள்ளவர்கள் தொழில் நடத்த உரிமை பெற முடியாது.

இதன்மூலம் நாட்டில் நடைபெறும் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும் பெண்கள் காப்பாற்றப்படுவார்கள். "அவசரச்சட்டம்'' மட்டும் இவர்களைக் காப்பாற்றாது.

"உலகில் மிகப்பழமையான பாலியல் தொழிலை ஒழித்திட முடியாது என்கிறீர்கள். அப்படி என்றால் அதனைச் சட்டப்பூர்வமாக்கிக் கண்காணிக்கலாமே!போதுமான மருத்துவ உதவி செய்யலாமே''

என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தன்வீர் பண்டாலியும், ஏ.கே. பட்நாய்க்கும் மத்திய அரசின் வழக்கறிஞர் கோபால சுப்ரமணியன் அவர்களிடம் மேற்கண்ட கேள்விகளை 2009ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் 9 ஆம் நாள் முன்வைத்தனர்.

வழக்கம்போல் மத்திய அரசிலிருந்து மௌனமே பதிலாக வந்தது.ஆட்சி நடத்துவது மக்களுக்காகத்தான் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். மக்களுக்கு உதவி செய்வது போல் நடிப்பது நீண்ட காலத்திற்குக் கை கொடுக்காது.காலதாமதமும் அலட்சியமும் மக்களாட்சித் தத்துவத்தைக் குழிதோண்டிப் புதைக்கும்.

"மண்ணுக்கும் கேடாய் மதித்தீரோ பெண்ணினத்தை?
பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருõட்டில்
மண்ணடிமை தீர்ந்திடுதல் முயற்கொம்பே'

என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பெண்களைப் போற்றாத நாடு வாழ்ந்ததாய் வரலாறில்லை. பெண்ணியம் போற்றுவோம், பெருமைக்குரிய சமுதாயமாக இதைமாற்றுவோம்.

33 விழுக்காடு இடஒதுக்கீடு

பெண்கள் ஜாதி உணர்வு அற்றவர்கள் அல்ல.
ஜாதியை எதிர்ப்பவர்களும் அல்ல,
ஜாதிக்கு எதிராக வலுவானதோர் எதிர்ப்பை இதுவரையிலும்
எந்தப் பெண்கள் அமைப்பும் பதிவு செய்ததில்லை எனில்
உள் ஒதுக்கீடுயின்றி அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும்
33 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டவரைவு ஜனநாயகத்திற்கு எதிரான சட்ட விரோதமின்றி வேறென்ன?

Pin It