சீனாவையும், இந்தியாவையும் புறக்கணித்து விட்டு உலகத்திலே எந்த நாடும், எந்தப் பொருளையும் உற்பத்தி செய்ய முடியாது. உற்பத்திகள் உலகத்திலே எந்த மூலையிலே வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் உற்பத்தி செய்த பொருள்களை எல்லாம் விற்பதற்கான பெரிய சந்தை, உலகத்திலேயே இந்தியாவும் சீனாவும்தான்.

1855 க்கும் 1860க்கும் இடைப்பட்ட ஆண்டுகள் உலக வரலாற்றில் மிகவும் முக்கியமானவை என்று குறிப்பார்கள். இந்தக் காலகட்டத்தில்தான் கார்ல்மார்க்சும், எங்கெல்சும் இணைந்து வெளியிட்ட பொதுவுடைமைக் கட்சியின் அறிக்கை வெளியாயிற்று. சார்ல்ஸ் டார்வினின் பரிணாமத் தத்துவம் வெளிப்பட்டது. மின்சாரம் இந்த உலகுக்கு மெல்ல மெல்ல அறிமுகமாயிற்று. எனவே பத்தொன்பாம் நூற்றாண்டில் அந்த ஐந்து ஆண்டுகள் மிக மிக முக்கியமானவை.

இருபதாம் நூற்றாண்டில் எடுத்துக் கொண்டால் 1938 லிருந்து 1992 வரைக்குமான நான்கு ஆண்டுகள் வரலாற்றில் அழுத்தமாகப் பதிந்து கிடக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டின் ஐந்து ஆண்டுகள் உலகத்திற்குப் புதிய வெளிச்சத்தைத் தந்தன என்றால், இந்த நூற்றாண்டின் இந்த நான்கு ஆண்டுகள் உலகத்திற்கு இருளைத் தந்தன என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நான்கு ஆண்டுகளிலேதான் அமெரிக்கா உலகத்தினுடைய ஒற்றை வல்லாதிக்க அரசாக மாறிற்று. இராணுவத்திலும், பொருளாதாரத்திலும் எந்த நாடு மேலோங்கி நிற்கிறதோ, எந்த நாடு ஆதிக்கம் செலுத்தித் தன்னுடைய குடையின் கீழ் உலக நாடுகளை வைத்துக் கொள்கிறதோ, அந்த நாடுதான் வல்லரசு என்று ஆயிற்று. அந்தச் சூத்திரத்தின் அடிப்படையில் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு அமெரிக்கா ஒரு பக்கமும், சோவியத் இன்னொரு பக்கமுமாக இரண்டு பெரும் வல்லரசுகள் தோன்றின. அமெரிக்கா தனக்குக் கூட்டாளிகளாகச் சில நாடுகளைச் சேர்த்துக் கொண்டது. அதற்கு நேட்டோ (NATO) அணிகள் என்று பெயர். அட்லாண்டிக் கரையோரம் இருந்த அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் எல்லாம் அந்த அணியில் இருந்தன. இன்னொரு பக்கத்திலே சோவியத் சில நாடுகளைச் சேர்த்துக் கொண்டது. அதற்கு வார்சா (Warsaw) ஒப்பந்தத்திலே கையெழுத்திட்ட நாடுகள் என்று பெயர். வார்சா என்கிற இடத்திலே அந்த ஒப்பந்தம் கையெழுத்தான காரணத்தினாலே அந்தப் பெயர் வந்தது.

45 தொடங்கி 90 வரைக்கும் இந்த இரு அணிகளுக்கும் இடையே பனிப்போர் நடந்துகொண்டே இருந்தது. முதல் இரண்டு உலகப் போர்களைப் போல நேரடியாக மூன்றாவது உலகப் போர் நடைபெறவில்லை என்றாலுங்கூட, இந்த 45 ஆண்டுகளும் பனிப்போர்கள் நடந்துகொண்டே இருந்தன. இந்த இரண்டு அணிகளும் வேறுவேறு இடங்களில் தங்களது வலிமையைப் பரிசோதித்துக் கொண்டு இருந்தன. வியட்நாம் போன்ற நாடுகளில் இந்த அணிகளுடைய வலிமை சோதிக்கப்பட்டது.

ஆனால் 90 களில் ஏறத்தாழ எல்லாம் முடிவுக்கு வந்துவிட்டது. சோவியத் 14 துண்டுகளாக உடைந்து போயிற்று. யுகோஸ்லோவியா ஆறு துண்டுகளாக உடைந்தது. எல்லாம் இந்த நான்கு ஆண்டுகளிலேதான், சீனம்கூட அமெரிக்காவினுடைய ஆளுகைக்குத் தன் இசைவைத் தெரிவித்துவிட்டது. குவைத்தைக் மீட்கிறோம் என்கிற பெயரில் ஈராக் என்கிற ஒரு நாட்டையே இல்லாமல் ஆக்குகிற முதல் முயற்சி அப்போதுதான் நடைபெற்றது. சீனத்தில் தியானன்மென் சதுக்கத்திலே பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் கூடி, அரசுக்கு எதிராக ஆர்ப்பரித்ததும், அரசு தன்னுடைய ஆயுத பலத்தால் அந்த மாணவர்களைச் சுட்டுக் கொன்றதும், 89 ஏப்ரலிலே இருந்து ஜூன் வரைக்கும் நடைபெற்றது.

மற்ற நாடுகளை எல்லாம் ஒடுக்கிய அமெரிக்கா, சீனாவினுடைய சர்வாதிகாரத்தை எதிர்த்தது. எப்போதும் அமெரிக்காவிற்கு ஒரு "நல்ல குணமுண்டு.' அது தன்னுடைய நாட்டில் முழுமையாக ஜனநாயகத்தை அனுமதிக்கும். பிற நாடுகளில் அதனை அனுமதிக்காது. பிற நாடுகளும் கூட தனக்கு ஆதரவான நாடுகளாக இருக்கின்றனவா இல்லையா வேண்டாமா என்பதை அமெரிக்கா முடிவு செய்யும். அமெரிக்காவின் அருகிலுள்ள பனாமாவின் அதிபர் நொறுக்கப்பட்டதும் இந்த நான்கு ஆண்டுகளுக்கிடையிலேதான்.

இந்த நான்கு ஆண்டுகளினுடைய வரலாற்றைத் திரும்பத் திரும்பப் படித்துப் பார்த்தால், இன்னொரு உண்மையும் நமக்குப் புரியும். அமெரிக்காவினுடைய அதிபராக இருந்த முதலாம் ஜார்ஜ் புஷ்சினுடைய கால கட்டத்திலேதான், இந்த உலகம் இத்தனை ஆதிக்கங்களையும் சந்தித்துள்ளது. மற்ற நாடுகளின் மீதெல்லாம் தன் ஆதிக்கத்தைச் செலுத்திய போதும், சீனா தியானென்மென் சதுக்கத்திலே அப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாது என்று சொல்லி, அமெரிக்கா, மிகப்பெரிய பொருளாதாரத் தடையைச் சீனாவின் மீது விதித்தது. அமெரிக்கப் பொருள்கள் எதுவும் இனி சீனத்திற்குச் செல்லாது. சீனத்தினுடைய பொருள்களை இனி வாங்குவதுமில்லை என்று ஒரு பெரிய தடையை விதித்தது. மற்ற இடங்களிலே எல்லாம் வெற்றி பெற்ற அமெரிக்காவால், சீனத்திலே மட்டும் வெற்றி பெற முடியவில்லை.

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. ஓர் அரசு வல்லரசாக இருக்க வேண்டுமென்றால், இராணுவத்தில் மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் அது வல்லரசாக இருக்க வேண்டும். சீனாவையும், இந்தியாவையும் புறக்கணித்துவிட்டு உலகத்திலே எந்த நாடும், எந்தப் பொருளையும் உற்பத்தி செய்ய முடியாது. உற்பத்திகள் உலகத்திலே எந்த மூலையிலே வேண்டுமானாலும் நடக்கலாம். ஆனால் உற்பத்தி செய்த பொருள்களை எல்லாம் விற்பதற்கான பெரிய சந்தை, உலகத்திலேயே இந்தியாவும் சீனாவும்தான். ஏறத்தாழ 200 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த இரண்டு நாடுகளிலே மட்டும் வாழ்கிறார்கள். எனவே இவ்வளவு பெரிய சந்தையைப் புறக்கணித்துவிட்டு, அவர்களுடைய உற்பத்திப் பொருள்களை வேறு எங்குபோய் கூவிக் கூவி விற்பது? அதனால் சீனாவிற்குப் பொருளாதாரத் தடை விதித்ததால் அமெரிக்காதான் பெரிய அளவிலே பாதிக்கப்பட்டது. எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டது என்பதை அமெரிக்காவினுடைய 1990 ஆவது ஆண்டு நிதிநிலை அறிக்கை நமக்குச் சொல்லுகிறது. அந்த நிதிநிலை அறிக்கையை இப்போதும் இணையத்தளத்திலே எடுத்து நீங்கள் புரட்டிப் பார்த்தால் பேரதிர்ச்சியான உண்மை நமக்குத் தெரியும்.

அமெரிக்கா உலகத்தையே கட்டி ஆண்டது. அமெரிக்காவைக் கண்டு அத்தனை நாடுகளும் அஞ்சின. ஆனால் அமெரிக்காவினுடைய நிதிநிலை அறிக்கை எப்படி இருந்தது என்றால், இரண்டு லட்சத்து முப்பதாயிரம் மில்லியன் டாலர் பற்றாக்குறையிலேதான் அன்றைய நிதிநிலை அறிக்கை இருந்தது. இவ்வளவு பற்றாக்குறை ஏன் வந்தது? உலக நாடுகளின் மீதெல்லாம் போர் தொடுத்ததினாலே வருமானத்தில் பெரும்பான்மையை அது இராணுவத்திற்கு மட்டுமே செலவழித்து விட்டது. சீனாவிற்குத் தடைவிதித்ததால், அங்குப் போக வேண்டிய உற்பத்திப் பொருள்கள் எல்லாம் தேங்கிப் போய்விட்டன. மிகப் பெரிய பொருளாதாரப் பின்னடவை அமெரிக்கா சந்தித்தது.

அப்போதுதான் அமெரிக்கா மறுபடியும் சொல்லிற்று. "சீனாவின் மீதான தடையை விலக்கிக் கொள்கிறோம்'. சீனாவின் மீது தடைவிதித்தது ஒரு கோட்பாட்டின் அடிப்படையில் என்றாலும், வணிக உறவில் எப்போதும் அவர்கள் நம் சகோதரர்கள் இல்லையா? என்று சமாதானம் பேசிற்று. ஏனென்றால் அந்தச் சந்தை இல்லாமல் அவர்களால் பொருள்களை விற்க முடியாது. எனவே இராணுவத்திலும், பொருளாதாரத்திலும் வல்லரசாக வேண்டுமென்றால் இந்தியா, சீனா ஆகிய இரண்டு நாடுகளோடும் தொடர்பு இருக்க வேண்டுமென்ற புத்திசாலித்தனமான முடிவுக்கு அமெரிக்கா வந்ததும் இந்த நான்கு ஆண்டுகளுக்கு இடையிலேதான்.

மேற்குலக நாடுகளுக்கிடையே அமெரிக்கா வல்லரசாக இருக்கிறதென்றால், இப்போதும் கிழக்கிலே ஒரு ராட்சசன் இருக்கிறான் என்பதை அமெரிக்கா புரிந்து வைத்திருக்கிறது. மக்கள் தொகையினால் மாத்திரமல்ல, மற்ற மற்ற விஞ்ஞானத் தொழில் நுட்ப வளர்ச்சியினாலும், சீனா இன்றைக்கு ஒரு ராட்சசனாக வளர்ந்து நிற்கிறது. எனவே அமெரிக்கா எக்காரணம் கொண்டும் சீனாவைப் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதனாலோதன் இலங்கையிலே சீனா இத்தகைய பெரிய உதவிகளைச் செய்து, ஆக்கிரமிப்புகளைச் செய்து, தமிழ் மக்களை அழித்த போதும், உதவிக்குவரும் என்று எதிர்பார்த்த அமெரிக்கா, வராமலே போய்விட்டது. ஏனென்றால் சீனப்பெருஞ்சந்தையை இழக்க அது விரும்பவில்லை. சீனப் பெருஞ்சுவரைத்தானே நாம் அறிந்திருக்கிறோம். சீனப்பெருஞ்சந்தையை அமெரிக்கா அறிந்து வைத்திருக்கிறது.

இந்தியாவும் அதே அளவுக்கு மக்கள் தொகை கொண்ட நாடுதானே என்று நாம் கருதிவிடக் கூடாது. மக்கள் தொகையிலே நாமும் அவர்களும் நெருக்கமாக இருந்தாலும், நம்மைவிட மிகப்பெரிய நிலப்பரப்பை சீனா வைத்திருக்கிறது. அறிவியலிலும் முன்னேறி இருக்கிறது.

எனவே 1988க்கும் 92க்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த உலகத்தின் வரலாறு இன்னொரு முறை திருத்தி எழுதப்பட்டிருக்கிறது என்பதை நாம் சரித்திரப் பக்கங்களில் பார்க்கலாம்.

Pin It