பெண்ணுரிமை பேசிவந்த பெரியார் பின்னால்
பெண்நலன்கள் முத்துலட்சுமி காக்க வந்தார்!
எண்ணெழுத்துக் கற்காமல் இருட்டில் உள்ள
எலிகளைப்போல் அந்நாளில் பெண்கள் வாழ்ந்தார்!
பண்ணுகிற சமையலினைத் தலையில் கட்டிப்
படுக்கையறைப் பதுமையென்று குழந்தை பெற்றார்!
உண்ணுகிற குழம்பிலவர் உப்பைப் போடும்
உரிமைமட்டும் தம்மிடத்தில் வைத்துக் கொண்டார்!
நாய்களுக்குச் சோறளித்தால் நன்றி யோடு
நம்பின்னே வாலாட்டும்! வீட்டி லுள்ள
தாய்மாரும் நாயானார்! ஆக லாமா?
தடை உடைக்கக் கேட்டாரே முத்து மங்கை!
“போய்வாரும்” எனச்சொல்லும் கோயில் தாசி
புழுவாகத் தேய்வதனை வெளியே சொன்னார்!
பாய்விரிக்கப் பலபெண்கள் வைத்தி ருந்த
பாதகர்கள் திருந்திடவே முழக்கம் இட்டார்!
தமிழ்நாட்டுச் சட்டமன்றம் இவர்பேச் சாலே
சந்தித்த நெருக்கடிகள் பலவாம்! “கண்ணின்
இமைதானே பெண்கள்! ஏன் மறந்தீர்? இன்னும்
இந்நாட்டுக் கோயில்களில் எதற்குத் தாசி?
உமையொன்று கேட்கின்றேன்! தேவதாசி
உம்வீட்டுப் பெண்களிலே வருவாரா? சொல்!
எமக்கெல்லாம் தலைவரென்று வீற்றிருக்கும்
இவர்சத்திய மூர்த்தியா?” என்று கேட்டார்!
நடுங்கிற்றே சட்டமன்றம்! வாயி ழந்து
நாற்காலி யோடமர்ந்தார் சத்திய மூர்த்தி!
ஒடுங்கிற்றே கோயில்களில் தாசி என்னும்
ஒருகொடுமை! இல்லையினி தேவ தாசி!
அடங்கிற்றே சட்டத்தால்! கணிகை என்னும்
அடையாளம் அழிந்ததெல்லாம் அவரால் தானே!
மடங்கிற்றே பெண்குலத்தின் அடிமை வாழ்க்கை
வரிப்புலியாம் முத்துலட்சுமி வாழ்க! வாழ்க!

Pin It