மாந்தப் பிறவி முதல்நிலைப் பிறவி
என்ற எண்ணம் எவர்க்கும் உண்டு
ஆண்பெண் இருவரில் ஆணே முதல்நிலை
பெண்,எப் போதும் இரண்டாம் நிலைதான்
வீட்டில் வெளியில் அவன் அதிகாரம்
பூட்டுவான் பெண்ணைப் புறக்கடை ஓரம்
இப்படிப் பட்ட, ஈனத் தனத்துத்,
தப்படி கொடுத்த,தாய் முத்து லட்சுமி!
இத்தனை பெரிய இந்தி யாவில்
முதன்முதல் பெண் மருத்துவர் அவரே
தமிழகச் சட்ட மன்றம் தன்னில்
முதன்முதல் பெண், துணைத் தலைவர் அவரே
அயல்நாடு சென்று உயர்ம ருத்துவம்
முதன்முதல் முடித்து வந்தவர் அவரே
தொள்ளாயிரத்து முப்பதில் ஈரோட்டில் நடந்த
தன்மான இயக்கப் பெண்கள் மாநாட்டுக்கு
முதன்முதல் தலைமை தாங்கினார் அவரே
இந்திய மாதர் சங்கத் தலைமை
ஏற்றுத் திறம்பட இயங்கது அவரே!
பெண்கல்வி குறித்தும் பெண்கள் நாளும்
மண்ணுக்குள் கேடாய் மாள்வது குறித்தும்
குழந்தை மணத்தின் கொடுமை குறித்தும்
திருமண வயதை உயர்த்தல் குறித்தும்
போராடிப் போராடி வாழ்ந்தவர் இங்கே
வேறுயார்? அந்த வீராங் கனையே!
முத்து இலட்சுமி அம்மையார்புகழ்
எத்திசை மருங்கும் என்றென்றும் வாழ்கவே!

Pin It