மனிதகுல மேம்பாட்டிற்கான பகுத்தறிவுக் கொள்கைகளை தமிழரிடையே பரவலாகக் கொண்டுசெல்வதற்காக, அமெரிக்காவில் 04 -14 -2017 அன்று நிறுவப்பட்ட” பெரியார் அம்பேத்கர் படிப்பு வட்டம் – அமெரிக்கா” அமைப்பு வெளியிடவுள்ள “The common sense “ மாத இதழின் வாசகர்களுக்கு வணக்கம்!
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் ஆகியோரின் கோட்பாட்டினை அடிப்படையாகக்கொண்ட அமெரிக்கவாழ் தோழர்களின் சிந்தனைகளையும், மற்ற தலைவர்களின் பகுத்தறிவுக் கருத்துகளையும் பொதுவெளிக்குக் கொணர்ந்து சரியான புரிதலை உருவாக்கும் விதமாக, “The common sense “தமிழ், ஆங்கில மொழிப் படைப்புக்களைத் தாங்கி மாதந்தோறும் வெளிவரும்.
இச்சமூகத்தில் நிகழும் அட்டூழியங்களைத் தடுக்கும் வலிமையிருந்தும், எந்தவொரு முயற்சியும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பவர்களே சமூகத்தின்மிகப்பெரிய எதிரியாகும் .இதைத்தான் அண்ணல் அம்பேத்கர் ’கள்ளமவுனம்’ என்கிறார். இந்தக் கள்ளமவுனத்தை உடைக்கும் சம்மட்டியாக “The common sense’’ செயற்படும்.
புலம்பெயர் இந்திய மக்கட்தொகை உயர்வால் அமெரிக்காவில் பெருகிவரும் சாதியவாதத்தையும் ஆதிக்க மனப்பான்மையையும், அவற்றைக் களைந்து மட்டுப் படுத்தும் மருந்தான தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கரின் கோட்பாட்டினைத் தொடர்ந்து பரப்புரை செய்வோம். மேலும் இங்குள்ள தமிழ் அமைப்புகளில் நிலவும் சாதிய, தனிமனித ஆதிக்கத்தைக் கண்டிக்கும் குரலாகவும், அவற்றைச் சுட்டிக்காட்டி வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் கருவியாகவும் செயற்படுவோம்.
முதன்முறையாக ஆணவக் கொலைக்கு எதிரான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பைப் போராடி வென்றெடுத்த தோழர் கவுசல்யாவை வாழ்த்தும் விதமாக, அவரது நிழற்படத்தை இதழின் அட்டைப்படமாக வெளியிட்டுள்ளோம். நம்மை வாழ்த்தி அட்டைப்படத்தை வழங்கிய ஓவியர் இரவி பேலட் அவர்களுக்கு நன்றி.
பெரியாரும் அண்ணலும் வகுத்துக்கொடுத்த பாதையில் நேர்மையாகவும், வெளிப் படையாகவும், தன்னாட்சியுடனும் தொடர்ந்து செயற்பட, தங்களின் மேலான ஆதரவையும் ஊக்கத்தையும் வழங்கிடவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.
தங்கள் படைப்புகள், கருத்துகள், விமர்சனங்கள், விளம்பரங்களை ‘
வாழ்க தந்தை! வாழ்க அண்ணல்! வளர்க பகுத்தறிவு! செழிக்க மனிதநேயம்!
நன்றி
ஆசிரியர் குழு