கோவை ஞானி என்று அறியப்படும் கி. பழனிச்சாமி தமிழாசிரியர். கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழிலக்கியத்தில் தீவிரச் சிந்தனையாளராகவும் கோட்பாட்டாளராகவும் திறனாய்வாளராகவும் இயங்கி வருகிறார். தமிழின் புதிய இலக்கியங்களை மார்க்சிய நோக்கில் ஆராய்ந்தவர்களில் முதன்மையானவர். தமிழ் நிலத்திற்கேற்ற தமிழ் மார்க்சியம் என்ற திறப்பைச் செய்தவர் என ஆய்வாளர்களால் மொழியப்படுபவர். நுட்பமான இலக்கிய உணர்வும் பேரிலக்கியங்களைத் திறந்த மனத்துடன் அணுகும் பண்பும் கொண்டவர். நிகழ் என்ற சிற்றிதழைப் பல ஆண்டுகளாகத் தமிழில் புதிய இலக்கியத்திற்கான களமாக நடத்திவந்தார். இதுவரை 24 திறனாய்வு நூல்களையும் 12 தொகுப்பு நூல்களையும் நான்கு கட்டுரைத் தொகுதிகளையும் இரண்டு கவிதை நூல்களையும் எழுதியிருக்கிறார். இவருடைய நீண்டகாலத் தமிழ்ப்பணிக்காக விளக்கு விருது, தமிழ்த் தேசியச் செம்மல் விருது, தமிழ்த் தேசியத் திறனாய்வு விருது, பாரதி விருது ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. இவரின் வாழ்நாள் இலக்கியப் பணிக்காகக் கனடாவில் உள்ள தமிழ் இலக்கியத் தோட்டம்

4-7-2010 அன்று சென்னையில் இயல் விருதை வழங்கியது. இந்த ஆண்டு இயல் விருது தொல்லியல் அறிஞர் ஐராவதம் மகாதேவனுக்கும் வழங்கப்பட்டது. இயல் விருது பெறச் சென்னை வந்திருந்த ஞானியிடம் வினாக்கள் அளித்துப் பெற்ற செவ்வி இது. வினாத் தொடுத்தவர் ந. அரணமுறுவல், விடை பெற்றுதவியவர் சவகர்.

 தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்கிய இயல் விருது பற்றி என்ன கருதுகிறீர்கள்?

ஈழத்தமிழறிஞர் சிலர் நிறுவி ஆண்டுதோறும் தமிழறிஞர் ஒருவருக்கு வழங்கிவருகிற இயல் விருது எனக்கு வழங்கப்பட்டது என்பது பற்றி மகிழ்ச்சிதான். ஈழத் தமிழருக்கு நாம் இழைத்த இரண்டகத்தையும் பொருட்படுத்தாது இந்த விருதை வழங்கியிருக்கிறார்கள். இதுவரை விருது பெற்றவர் பட்டியலை நினைத்துப் பார்க்கிறபோது இவர்கள் அளவுக்கு எனக்கு என்ன முகாமை என்பது பற்றி நினைத்துக்கொள்கிறேன். தமிழுக்கு நானும் ஏதோ செய்திருக்கிறேன் என்ற முறையில் என்னை இவர்கள் வழியே தமிழறிஞர் உலகம் ஏற்றுக்கொள்கிறது என்பது குறித்து எனக்குச் சற்று ஆறுதலாக இருக்கிறது. என்னளவில் நான் எதற்காகவும் பெருமைப்பட்டுக் கொள்வதில்லை. அறிஞர் ஐராவதம் மகாதேவனோடு இணைத்து எனக்கும் இந்த விருதை வழங்கியிருக்கிறார்கள். விழாவின்போது இதுவரை நான் சந்தித்திராத அறிஞர் பெருமக்கள் குழுமியிருந்தார்கள்.

எனக்கு விருப்பமில்லை என்றாலும் விருதுக்கான விண்ணப் பத்தை அனுப்பியவர்கள் என்ற முறையில் திரு. கு. முத்துக் குமார் திரு.க.சவகர் ஆகியவர்களுக்கு என் நன்றி. விருது பெற்றபோது பாராட்டுரை வழங்கிய பேராசிரியர் வீ. அரசு, பேராசிரியர் தமிழவன், நண்பர் திரு.செயமோகன் ஆகியவர்களுக்கும் என் நன்றி, விருதுக்கு முன்னர் நான் எப்படி இருந்தேனோ அப்படியே இப்பொழுதும் இருக்கிறேன். ஈழத்தமிழர் இப்படியும் நமக்கு நன்மை செய்கிறார்கள்.

கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி உங்கள் கருத்தென்ன?

தமிழ் மொழிக்கு இப்படி ஒரு மாபெரும் திருவிழா நடைபெற்றிருப்பது குறித்து இந்தி, மராத்தி உட்பட பிற இந்திய மொழியாளர்கள் வியப்படையலாம். மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவைக் காட்டிலும் பெரிய தொரு திருவிழாவைக் கண்டதோடு விழாவில் கலந்து கொண்ட மகிழ்ச்சியையும் தமிழ்மக்கள் நுகர்ந்து இருக்க லாம். விழாவின்போது நடைபெற்ற இனியவை நாற்பது அன்றியும் மிகச்சிறந்த கண்காட்சி அரங்கம், இணையத்தளக் கண்காட்சி ஆகியவற்றைக் கண்ட மக்கள் இவற்றை என்றும் மறக்கமாட்டார்கள். விழாவுக்கான செலவை நம்மால் நினைத்துப் பார்க்கவே முடியாது. ஆய்வரங்குகள் முதலிய பல்வேறு அரங்க அமைப்புகள் சிறப்பாகவே அமைந் திருந்தன. கலைஞர் எல்லாவற்றையும் இப்படித் திட்ட மிட்டுச் செய்வதில் தேர்ந்தவர் என்பதில் ஐயமில்லை. பொது அரங்குகளில் கலைஞர் புகழ்பாடுவதில் கவிஞர்களும் தமிழறிஞர்களும் குறைவைத்துக் கொள்ளவில்லை. தமிழகம் முழுவதிலிருந்தும் கட்சிக்காரர்கள் பெருமளவில் இலவய மாக வந்து சென்றார்கள். இவையெல்லாம் ஒரு புறம் இருக்க இவற்றில் தமிழுக்கு என்ன ஆக்கம் நேர்ந்தது என்பது பற்றிச் சிந்திக்கும் பொழுது பெரிதாக எதையும் சொல்வதற்கில்லை. இணையத்தின் மூலம் தமிழுக்கு எதிர்காலத்தில் பேராக்கம் நிகழும் என்பதில் ஐயமில்லை. ஆய்வரங்குகளின் மூலம் தமிழுக்கு நேர்ந்த ஆக்கம் என்ன என்பது பற்றியும் உறுதியாக இப்பொழுது எதுவும் சொல்வதற்கில்லை. உலகளவில் குறிப்பாக மேற்கிலிருந்து அறிஞர் பலர் வந்திருந்தார்கள். தமிழ் மக்களின் கலைத்திறன் குறித்து அவர்கள் வியப் படைந்திருப்பார்கள்.

சிந்துவெளி நாகரிகம் தமிழ் நாகரிகம் என்பதைத் தெளிவுபடுத்தியமைக்காக அறிஞர் பார்ப்போலாவுக்குக் கலைஞர் பத்து இலட்சம் வழங்கியிருக்கிறார். எனினும் சிந்து வெளி நாகரிகம் பற்றிய ஆய்வுகள் குறித்து மாறுபட்ட கருத்துக்களும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன. மாநாட்டில் இதுபற்றி இறுதி முடிவு எதுவும் இல்லை என்றே தோன்று கிறது. பேராசிரியர் கி.நாச்சிமுத்து கூறியதுபோல ஆய்வுக் கட்டுரைகளுக்கும், பொதுக் கட்டுரைகளுக்குமான வேறு பாட்டைத் தமிழியல் ஆய்வாளர்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை. ஆய்வாளர்கள், நோக்கர்களின் கூட்டம் ஆய்வரங்குகளுக்குள் இல்லை. மாநாட்டுக்கு நான் செல்ல வில்லை என்றாலும் மாநாட்டுக்குச் சென்றவர்கள் உட்பட பலருக்கும் இருந்த கருத்துகள் இவை. மாநாட்டில் உளவுத் துறையின் கெடுபிடிகள் கடுமையாகவே இருந்தன. கலைஞ ருக்குத் தமக்கான அரசியல் என்ற முறையில் ஏதேனும் கிடைத்திருக்கலாம். தமிழுக்கு மாநாட்டின் மூலம் என்ன கிடைத்தது என்பது ஆய்வுக்குரியதுதான். ஏற்கனவே உலகத் தமிழ் ஆய்வு மன்றத்தின் மூலமான எட்டு மாநாடுகள் பற்றி இனி நாம் மறந்துவிட வேண்டும்தானா? என்று நாம் ஏங்குகி றோம். இதற்காகக் கலைஞரை நொந்தும் பயனில்லை. இடையில் 15 ஆண்டுகளில் முன்னைய பெரியவர்கள் ஏன் இயங்கவில்லை. பொருட்படுத்தத்தக்க தமிழியல் ஆய்வுகள் நடைபெறவில்லை என்று அவர்கள் கருதினார்களா? இனி கலைஞருக்குப் பிறகு நடைபெறும் செம்மொழி மாநாடுகள் எங்கே எப்படி நடைபெறும் என்று புரியவில்லை.

செம்மொழி மாநாட்டுத் தீர்மானங்கள் குறித்து உங்கள் மதிப்பீடு என்ன?

பொது அரங்கில் அரசியல் தலைவர்களும் தமிழறிஞர் சிலரும் முன்வைத்த கோரிக்கைகளை, ஆணையிடுங்கள் நிறைவேற்றுகிறேன் என்று கூறி ஏற்றுக்கொண்டார். மாநாட்டு இறுதி உரையில் கலைஞர் தம் வாக்குறுதியில் எத்துணை யளவு உறுதியாக இருந்தார் என்று சொல்ல முடியவில்லை. ஈழத்தமிழ் மக்களுக்குத் தனிநாடு இல்லாமல் முடியாது என்று ஒருசிலர் கூறினர். ஆனால் இறுதித் தீர்மானத்தில் இந்த உறுதி இல்லை. சிங்கள அரசு தன் வாக்குறுதிகளைக் கைவிடுகிறது என்பதற்குமேல் இலங்கை பற்றிய தீர்மானம் வழக்கம் போலவே உப்புசப்பில்லாமல் இருந்தது.

தில்லியில் கூட்டாட்சி உருவாவதற்கு முன்பு கூட்ட ணிக்கான தேர்தல் அறிக்கையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் மொழிகளும் இந்திய அரசின் ஆட்சிமொழிகளாக ஆவதற்கான ஆய்வை வல்லுநர் குழு ஒன்று செய்யும் என்று வாக்குறுதி தரப்பட்டதாகத் து.இராசா சொன்னார். ஆனால் கலைஞர் அறிவித்த தீர்மானத்தில் நடுவண் அரசில் அனைத்து மாநில மொழிகளும் ஆட்சி மொழிகளாக வாய்ப்பில்லை என்றாலும் செம்மொழியான தமிழுக்கு அந்தத் தகுதியைத் தரவேண்டும் என்றார். உயர்நீதி மன்றத்தில் தமிழைப் பயன்பாட்டு மொழியாக ஏற்க முடியும் என்று அரசியல் சட்டம் கூறியபோதிலும் இதை நிறை வேற்றத் தயங்கும் நடுவண் அரசு தமிழை எப்படி ஆட்சி மொழியாக ஏற்கமுடியும்.

தமிழ்நாட்டில் அரசுத்துறையின் அனைத்து மட்டங் களிலும் தமிழைச் செயல்படுத்த முடியாத நிலையில், அரசு ஊழியர்களும் பொதுமக்களும் தமிழை ஆட்சி மொழி யாக்குவதில் ஒத்துழைக்க வேண்டும் என்று ஒரு தீர்மானத்தில் கலைஞர் கூறுகிறார். கலைஞரின் திறமையான சொல்லாடல் இது என்று நாம் புரிந்துகொள்கிறோம்.

இந்தியாவில் கண்டறியப்பட்ட கல்வெட்டுகளில் பெரும்பகுதி தமிழகத்தில் கிடைக்கும் கல்வெட்டுகள். இது பற்றித் தமிழறிஞர்கள் பலமுறை பேசியிருக்கின்றனர். ஆனால் இப்பொழுது கலைஞர் வெளியிட்டுள்ள தீர்மானத் தில் இந்தத் தொல்லியல் கழகம் தமிழகத்தில் அமைய வேண்டு மென்று நடுவண் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பூம்புகார், குமரிக்கண்டம் குறித்த கடலியல் ஆய்வை நடுவண் அரசு அகழ்வாராய்ச்சி செய்யவேண்டும் என்கிறார் கலைஞர். தமிழகத்தின் தொன்மையை நடுவண் அரசால் எப்படி ஏற்க முடியும்.

தமிழில் படித்தவர்களுக்கே அரசு வேலைவாய்ப்பு தரவேண்டும் என்ற நம் நெடுநாள் கோரிக்கையை மறுக்க இயலாத நிலையில் இதற்காகச் சட்டம் செய்யலாம் என்கிறார். முறைமன்றத்தில் ஒருவேளை இந்தச் சட்டம் தடுத்து நிறுத்தப்பட்டால் அப்புறம் நம்மால் கலைஞரைக் குறைசொல்ல முடியாது.

தமிழ் வளர்ச்சிக்கெனத் தமிழக அரசு ரூ 100 கோடிக்கு ஒரு நிதியத்தை ஏற்படுத்தும் என்றார் கலைஞர். மதுரையில் தொல்காப்பியர் பெயரில் செம்மொழிக்கான தமிழ்ச் சங்கம் உருவாக்கப்படும் என்றும் அதன் செயல்பாடுகள் இவையாக இருக்கும் என்றும் ஒரு தீர்மானத்தில் கூறினார். குறிஞ்சி முதலிய ஒவ்வொரு திணைப்புலத்திலும் ஓர் அருங்காட்சி யகம் ஏற்படுத்தலாம் என்றார். தமிழ்ப்படைப்புகளைப் பிற மொழிகளிலும் பிற மொழிகளிலிருந்து நல்ல படைப்பு களைத் தமிழிலும் மொழிபெயர்க்கும் நிறுவனம் ஒன்றை ஏற்படுத்தலாம் என்றும் தமிழ்ச் சங்கத்தில் பன்னாட்டுத் தமிழறிஞர்கள் இடம்பெறுவர் என்றும் கூறினார். இவை யெல்லாம் கலைஞரின் கனவுகள். நமக்கும் இவை கனவுகள்.

செம்மொழி மாநாட்டால் கோவைக்கு என்ன வரவு என்று நமக்குள் ஒரு கேள்வி எழுகிறது. ஆறுவழிச்சாலை, நான்கு வழிச்சாலை என்பதற்காக ஆயிரக்கணக்கில் மரங்கள் வெட்டப்பட்ட அவலத்தைக் கோவை மக்களால் மறக்கத் தான் முடியாது. கோவையில் வாழ்ந்த தமிழறிஞர் சிலருக் கேனும் நினைவுச் சின்னங்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்க லாம். கொங்குத்தமிழ் ஆய்வை மேம்படுத்த ஏதேனும் ஒரு திட்டத்தை அறிவித்து இருக்கலாம். சென்னையில் உள்ள தமிழாராய்ச்சி நிறுவனம் தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல் கலைக் கழகம் ஆகியவற்றுக்குச் சில பத்துகோடிகள் அறிவித்து இருக்கலாம். ஆய்வு மாநாட்டின் ஒரு பகுதியைப் பாரதியார் பல்கலையின் ஒரு பகுதியில் நடத்தியிருந்தால் சில நன்மைகள் பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டிருக்கலாம். தமிழை முழு அளவில் பயிற்றுமொழியாகச் செய்ய இயலாத போது செம்மொழி என்ற முடி (மகுடம்) நமக்கு என்ன வாழ்வைத் தரமுடியும்? செம்மொழி மாநாடு செம்மொழிக் கான மாநாடுதானா? என்றெல்லாம் கேட்கத் தோன்றுகிறது. பொறியியல் கல்லூரியில் தமிழ் இப்பொழுது குறைந்த அளவுக்கேனும் கல்விமொழி ஆகிறது. இத்தகைய செயலை எப்பொழுதோ செய்திருக்கலாம். கலைஞரை எதிர்த்து எவரும் கேட்கவில்லை. நடுவண் அரசைக் கலைஞர் எதற்காகவும் எதிர்க்கமாட்டார். கலைஞரின் வாக்குறுதி களை நம்பித் தமிழ்மக்கள் காலமெல்லாம் காத்திருக்கலாம். ஈழத்திற்குத் தாம் செய்த இரண்டகத்திற்கு எப்பொழு தேனும் கலைஞர் மன்னிப்பு கேட்பாரா?

தமிழுக்கு கிடைத்த செம்மொழித் தகுதி பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

உலகளவில் செம்மொழியெனத் தமிழை அறிஞர் பலர் ஏற்றுக்கொண்டு ஒரு நூற்றாண்டுக்கு மேலானநிலை யில் தமிழுக்கான இந்தத் தகுதியை நடுவண் அரசோடு போராடித்தான் நாம் பெறவேண்டியிருந்தது. தில்லியில் கூட்டாட்சி ஏற்பட்டாலொழிய பேராயக் கட்சி தலைமைக்கு வரமுடியாது என்ற சூழலில், பேராயக் கட்சிக்குக் கலைஞர் ஆதரவு தேவை என்ற நிலையில்தான் கலைஞரின் கோரிக்கையைத் தில்லி ஏற்றுக்கொண்டது. தில்லி அரசில் கலைஞர் கட்சிக்கும் இடம் கிடைக்கும் என்ற பின்னணி யில்தான் கலைஞர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். இரண்டாயிரம் ஆண்டுக்குக் குறையாத தொன்மை தமிழிலக்கியத்திற்கு இருந்தபோதிலும் தில்லி அரசு முதலில் தெரிவித்தபடி ஆயிரமாண்டு என்பதைக் கலைஞர் ஏற்றுக் கொண்டார். தமிழறிஞர் எதிர்ப்பின் விளைவாகத் தமிழின் தொன்மை 1500 ஆண்டுகள் என ஆயிற்று. கன்னடத்திற்கும் தெலுங்கிற்கும் இந்த வரையறை ஆதரவாக இருக்கும் என்பதைக் கலைஞரும் அறிந்துதான் இதை ஏற்றிருக்க வேண்டும். தில்லியைப் பொறுத்தவரை இந்த அறிவிப்பு கூட கல்வி/பண்பாடு என்ற முறையில் தமிழுக்கான முழுத் தகுதியைப்பெறவில்லை. இம்முறையில் சமசுகிருதத்திற்கு நிகரான செம்மொழித் தகுதி தமிழ் பெறவில்லை என்றே கருதலாம். சமசுகிருதம் ஆண்டுக்குப் பெறும் ஆயிரம் கோடியைத் தமிழ் என்றைக்கும் பெறமுடியாது. மேலும் ஒன்று, சென்னைக்குக் கொண்டு வரப்பட்டுள்ள செம்மொழி ஆய்வு நிறுவனம் செம்மொழி ஆய்வு எனத் தொடங்கித் தொல்காப்பியம் சங்க இலக்கியம் முதலிய இலக்கண/இலக்கிய ஆய்வுகளோடு தமிழிசை, தமிழ் மருத்துவம் என்றெல்லாம், பலமுனைகளில் ஆய்வைத் தொடரலாம். எனினும் இந்திய நாகரிகம் என்ற தொகுப்பினுள் சமசுகிருதத்தைக் காட்டிலும் தொன்மையும் இந்திய நாகரிகத்தின் அடிப்படைகளை உருவாக்கிய தமிழர்களின் முதன்மையும் குறித்த ஆய்வுகளை நோக்கிச் செல்வதை இந்திய அரசால் ஏற்க இயலாது. இத்தகைய தமிழியல் ஆய்வு இந்துத்துவத்திற்கு எதிராகவே செல்லும். செம் மொழித் தகுதியை இப்படி நிறுவுவதற்கு எதிர்காலத்தில் நமக்குத் தடை ஏற்படலாம். இவையன்றியும் இத்தகைய ஆய்வுகளைச் செய்யும் திறன் நம் தமிழ் அறிஞர்களுக்கு உண்டா என்றும் நாம் கேட்பதில் தவறில்லை. எனினும் செம்மொழி நிறுவனத்திற்கு வெளியில் உள்ள தமிழறிஞர் நமக்குத் தேவையான ஆய்வுகளைத் தொடர இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நிறு வனத்திற்குள் உள்ளவர்க்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். வெளியில் உள்ளவர் கட்டுப்பாடுகளை மீறத்தான் வேண்டும்.

செம்மொழி இலக்கிய ஆய்வு என்பதனுள் இலக்கிய இலக்கண ஆய்வுகளோடு வேறு எந்த வகையான ஆய்வுகள் தேவை என்பது பற்றிச் சொல்லுங்கள்?

இந்திய நாகரிகம் என்று அறியப்படும் தொகுப்பினுள் மேலடுக்கு, ஆரிய நாகரிகமே என்று கருதப்பட்ட போதிலும் இந்திய நாகரிகத்தின் அடித்தளம் முழுவதும் தமிழர் நாகரிகம்தான் என்றும் அறிஞர் பலர் கருத்துரைத் துள்ளனர். உண்மையில் இந்திய நாகரிகம் என்பதன் அடிப் படைகள் என அறியப்படும் வேளாண்மை, நீர்ப்பாசனம், கால்நடை வளர்ப்பு, மருத்துவம், கட்டடம், சிற்பம், கணிதம், பொறியியல், அளவையியல், மெய்யியல், இசை, மருத்துவம் முதலிய அனைத்தினுள்ளும் தமிழர் பங்களிப்பு என்பதைத் தவிர ஆரியரின் பங்களிப்பெனச் சொல்வதற்கு எதுவுமில்லை. சமசுகிருதம் என்ற மொழியும் தமிழைப் பார்த்து தன்னைத் திருத்தம் செய்துகொண்ட மொழிதான். வேதம், இதிகாசம், உபநிடதம் என்பனவற்றுள்ளும் தமிழர் பங்களிப்பைக் கண்டு சொல்லமுடியும். தமிழ் நாகரிகத்தின் தொன்மையைச் சிந்துவெளிக்கப்பாலும் தொடரமுடியும். தொல்லியல் மற்றும் கடலியல் ஆய்வுகள் தமிழ்நாகரிகத்தின் தொன்மையை இருபதாயிரம் ஆண்டுகளுக்கு மேலும் கொண்டு செல்லும். வடஇந்திய மொழிகள் அனைத்தின் அடிப்படையும் தமிழ் எனவே அறியமுடியும். இந்தியாவின் எல்லைகளிலும் எல்லைகளுக்கு அப்பால் உலகளவிலும் தமிழ்மொழி மற்றும் தமிழ்நாகரிகத்தின் தாக்கத்தைக் காண முடியும். ஏற்கனவே திரட்டப்பட்ட ஆதாரங்களை வைத்தே இவ்வளவும் சொல்லமுடியும். தமிழரின் தொல்லியல் முதலிய ஆய்வுகளைத் தடுத்து வைத்திருப்பதில் இந்திய அரசுக்கு மட்டுமல்லாமல் தமிழக அரசுக்கும் பங்கு உண்டு.

தமிழ்மார்க்சியம் என்ற உங்கள் கருத்தை எப்படி விளக்குவீர்கள்?

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முடிந்த மறுநாள் பேராசிரியர் கா.சிவத்தம்பியைச் சந்தித்தேன். நலன் உசாவிய பிறகு உடனடியாக ஒன்றைக் கூறினார். “ஞானி நானும் இப்பொழுது தமிழ் மார்க்சியம் என்று பேசுகிறேன்” என்றார். இதை அவரே மேலும் விளக்கினார். “இரசியாவின் சூழலுக்கு ஒத்த மார்க்சியத்தை இலெனின் உருவாக்கினார். சீனாவின் மரபுகளுக்கு ஒத்த மார்க்சியத்தை மாவோ உருவாக்கினார். நம் மரபுக்கு ஒத்த மார்க்சியம் தேவை” என்றார். இப்படி அவர் சொன்னது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன் கோவைக்கு வந்த சிவத் தம்பியைச் சந்தித்து நெடுநேரம் பேசினேன். நான் புறப் படும்பொழுது அவர் ஒன்றைச் சொன்னார். “ஞானி உங்கள் கட்டுரைகள் ஆங்கிலத்தில் வெளிவரவேண்டும். காரணம் நீங்கள்தான் தமிழ் மரபையும் மார்க்சியத்தையும் இணைத்துப் பேசுகிறீர்கள்.” எனக்கு வாய்ப்பில்லை என்று கூறியபோது, பேராசிரியர் கூறினார் “உங்களின் இருபது கட்டுரைகளாவது ஆங்கிலத்தில் வரட்டும். பிறகு மேற்கத்தியர் உங்களைத் தேடி வருவார்கள்” என்றார். எனக்கு வியப்பாகத்தான் இருந்தது. நான் செய்த சில முயற்சிகள் நிறைவேறவில்லை.

இப்பொழுது கோவையில் சிவத்தம்பி எனக்கு ஒத்த நிலைப்பாட்டிற்கு வந்திருக்கிறார். இடைக்காலத்துப் பட்டறிவு அவரின் இந்த நிலைபாட்டுக்குக் காரணமாக லாம். சிவத்தம்பி பேசி நிறுத்திய பின் நான் தொடர்ந்தேன். தமிழ் மரபிலிருந்து மார்க்சியம் என்று பேசமுடியும். இந்திய மரபு என ஒன்றைக் கண்டுபிடித்து மார்க்சியத்தோடு இணைத்துப் பேசமுடியுமா? என்று நாம் பார்க்கவேண்டும். இந்துத்துவம் குறுக்கே வந்துவிடும். இந்துத்துவத்தையும் மார்க்சியத்தையும் இணைத்துப் பேச முடியாது. நான் பேசுவதைக் கேட்டுக் கொண்ட சிவத்தம்பி தன் பட்டறிவிலிருந்து பேசினார். “இலங்கையில்/சிங்களர்க்குத் தேவை சிங்களத்தேசியம்/ தமிழ் மக்களுக்குத் தமிழ்த் தேசியம்” என்றார். சிவத்தம்பி ஒப்புக்கொள்வாரோ இல்லையோ என்னளவில் இப்படிச் சொல்ல முடியும். இலங்கையில் இருப்பவை இரண்டு தேசிய இனங்கள். இலங்கைத் தேசியம் என்று யாரும் பேசுவதற்கில்லை. இரண்டும் தனித்தேசிய இனங்கள் என்றால் இன்றைய நிலையில் தனித்தனித் தேசமே ஒத்துவரும். சிவத்தம்பி ஒரு நெருக்கடிக்குள்தான் இருக்கிறார். நம்மால் புரிந்துகொள்ள முடியும். மாநாட்டின்போது பி.பி.சி தமிழோசைக்குத் தந்த ஒரு செவ்வியில் அவர் கூறினார். “முதலில் நான் இலங்கையன் - பிறகு நான் தமிழன்.”

தமிழிலக்கியம் குறித்து நான் நிறைய எழுதியிருக் கிறேன். வரலாற்றுக்கு முன் நிலவிய இனக்குழுச் சமூகத்தின் சமத்துவ உணர்வு தமிழிலக்கியத்தின்மூலம் தமிழ்வாழ்வின் மூலம் தமிழ்வரலாற்றில் தொடர்ந்து வந்திருக்கிறது. கணியன் பூங்குன்றன், திருவள்ளுவர், இளங்கோ, சித்தர்கள் இறுதியாக வள்ளலார், பெரியார் மூலம் இந்தச் சமத்துவ உணர்வு வெளிப்படுகிறது. இலெனின் கூறியபடி இவ்வாறு தமிழ் மரபிலிருந்து தான் மார்க்சியத்தை நமக்குள் செரித்துக் கொள்கிறோம். இது சிவத்தம்பியின் சொற்களில் தமிழ்மார்க்சியம்.

தமிழ்த்தேசிய அமைப்புகளுக்கிடையிலான உள் முரண்பாடுகள் என நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்? இவற்றைக் களையமுடியாதா?

தமிழ்த்தேசியம் என்று தமிழகத்தில் பல அமைப்புகள், இயக்கங்கள் பேசினாலும் இவற்றுக்கிடையில் முழுஅளவில் ஒத்த கருத்தும் அணுகுமுறையும் இல்லை என்பது தெளிவு. இந்தியா ஒரு துணைக்கண்டம் என்பதையும் இந்தியாவில் உள்ள அனைத்துத் தேசிய இனங்களும் ஒப்புக்கொள்கிற ஒரு கூட்டாட்சி தேவை என்ற கருத்தையும் தமிழ்த்தேசியம் பற்றிப் பேசுகிற அனைத்து அமைப்புகளும் ஒப்புக்கொள்ளும் என்பதில் ஐயமில்லை. இந்திய அரசு தேசிய இனங்களின் இறையாண்மையை ஒப்புக்கொள்கிற கூட்டாட்சியாகத் தன்னை மாற்றிக் கொள்ளும் என்று கருதுவதற்கு இடமில்லை. இந் நிலையில் தன்னுரிமையா? தனி ஆட்சியா? என்ற முறையில் அமைப்புகளுக்குள் தீராத கருத்து முரண்பாடு இருக்கிறது. இந்திய அரசிடமிருந்து எந்த ஒரு தேசிய இனமும் அண்மைக்காலத்தில் தன்னை விடுவித்துக்கொள்ள முடியும் என்று சொல்வதற்கு அடிப்படையில்லை. இந்தியா எப் பொழுதேனும் உடைய நேரும் என்றால் அதற்கு முதன்மை யான காரணம் தேசிய இனங்களின் இறையாண்மையை ஒப்புக்கொள்ளாதது என்பதாகவே இருக்கமுடியும். அமெரிக்கா கிளப்பியுள்ள ‘பயங்கரவாதம்’ என்பதை இந்திய அரசும் ஏற்றுக் கொண்டிருக்கிற நிலையில் எந்த ஒரு தேசிய இன விடுதலைக்கும் வாய்ப்பில்லை. இந்நிலையில் தன்னுரி மையா? தனியாட்சியா? என்ற கருத்தாடலை ஒதுக்கிவிட்டுத் இப்போதைக்குத் தன்னுரிமை என்றுதான் தொடங்க வேண்டியிருக்கும்.

இந்தச் சிக்கல் ஒருபுறம் இருக்க, மேலும் பல சிக்கல்களும் உண்டு. தமிழகத்திற்குள் மார்வாடிகள் முதலிய வடக்கத்தியரும் அண்மைக்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களும் தமிழ்மக்களின் நிலங்கள் முதலியவற்றைத் தொடர்ந்து பறித்துக் கொண்டு இருப்பதைப் பார்க்கிறோம். தமிழர் தனக்கான பொருளியலோடு அரசியல் முதலிய உரிமைகளையும் தொடர்ந்து இழக்க வேண்டி உள்ளது. இத்தகைய போக்கின் விளைவுகள் என்று பலவற்றைச் சொல்ல முடியும். உழவர் தம் நிலங்களை நீர்வளம் முதலியவற்றை இழந்து வரு கின்றனர். தமிழகத்தில் ஆங்கிலமே பயிற்றுமொழி ஆகியிருக்கிறது. தமிழக அரசும் தமிழர் நலன்களைக் காப்ப தாக இல்லை. அரசதிகாரிகள், முதலாளிகள், அரசு ஊழியர், படிப்பாளிகள் முதலிய பலரும் அடித்தள மக்களுக்கு எதிராக அயலவரோடும் அரசோடும் முழுமையாக ஒத் துழைக்கின்றனர். இயற்கை மாபெரும் அழிவுக்குள்ளாகிறது. இந்தச் சூழலில்தான் தமிழ்வாழ்வு, தமிழ்வரலாறு, தமிழ்ப் பண்பாடு, தமிழ்த்தேசம் முதலிய அனைத்தும் நம்மிட மிருந்து பறிக்கப்படுகின்றன. மெக்காலே கல்வி முறை நம்மை மேற்கத்தியருக்கு, மேற்கத்திய நாகரிகத்திற்கு முற்றாக அடிமையாக்கிவிட்டது. தமிழ்த்தேசியம் சந்திக்கும் மிகக் கடுமையான சிக்கல்/நெருக்கடி என்று இதைத்தான் சொல்ல முடியும். இந்த நெருக்கடியை எதிர்கொள்ளும் முறையில் தமிழ்த்தேசிய அமைப்புகள் தமக்குள் ஒன்றுபட வேண்டும். பெரியாரியமா? மார்க்சியமா? என்று முரண்படுவதில் பொருளில்லை. தலித்தியம் பெண்ணியம் என்று பேசி இந்த நெருக்கடியிலிருந்து தப்பிச்செல்லவும் முடியாது. தனிமனிதர் தனி இயக்கம் என்பதில் பயனில்லை. இணைப்பு இல்லை என்றால் அழிய நேரும்.

இடதுசாரி இயக்கம் தமிழ்த் தேசியத்தை உள்வாங்கிக்கொள்ளத் தயங்குவது ஏன்?

இந்தியா ஒரு தேசம் என்றுதான் இடதுசாரிகள் இன்னும் நம்புகின்றனர். இந்தியா ஒரு தேசமாக என்றும் இருந்ததில்லை. படையைக் கொண்டு தம் பொருளியல் சுரண்டலுக்காக இந்தியாவை ஒரு தேசம்போல் ஆங்கிலேயர் வைத்துக்கொண்டனர். ஆனால் இந்தியாவில் உள்ள சாதிமத பண்பாட்டு முரண்பாடுகளை மட்டுமல்லாமல் ஏற்றத்தாழ் வான பொருளியல் போக்கையும் என்றைக்கும் யாராலும் சரிபடுத்த இயலாது. ஆங்கில அரசின் செல்லப் பிள்ளை யாகத்தான் இந்திய அரசு உருவாகியுள்ளது. இந்துத்துவம் இந்தியாவைப் பிளக்குமே ஒழிய ஒன்றுபடுத்தாது. இந்தி என்ற ஒரு மொழியை வைத்து இந்தியாவை ஆளமுடியாது. தேசிய இனக் கோரிக்கைகளைப் ‘பயங்கரவாதம்’ என்று சொல்லி இந்திய அரசால் என்றைக்கும் ஒடுக்க முடியாது. இப்படித் தொடங்கி இந்தியாவைப் பிளவுபடுத்தும் சிக்கல்கள் ஒரு நூறு இருக்கமுடியும். இடதுசாரிகளைப் பொறுத்தவரை இந்தியா ஒரு தேசம் என்ற கருத்தை விட்டுவிடவில்லை. இந்தியா தகர்ந்ததைப் பார்த்த பிறகும் தேசிய இனம்பற்றி இடதுசாரிகள் பேசுவதில்லை. இடதுசாரிக்கட்சிகளினுள்ளும் வடக்கத்தியரின் ஆதிக்கமே மிகுதி. இவர்களினுள்ளும் ஆதிக்கம் செய்வோர் பார்ப்பனர்.

தேசிய இனம் பற்றிய வரையறையைத் தாலின் முன்வைத்தார் என்பதும் உண்மைதான். தாலின் வகுத்த வரையறை முதலாளியத்திற்கு ஒத்த வரையறை. தேசிய இனம் என்ற வரையறைக்குள் அடங்கிய வரலாறு, பொருளியல், பண்பாடு முதலியவற்றினுள் மறைந்திருக்கும் முதலாளியத்தை வெளியேற்றி நமக்கான வரையறையை வகுக்க முடியும். தேசிய இனம் என்பது முதலாளியக் கருத்து என்பதை இடதுசாரிகள் விடாப்பிடியாகப் பேசுவதில் பொருளில்லை. தமிழ்த்தேசிய உணர்வோடு பேசிய சீவாவை, இராமமூர்த்தியும் அவரது கூட்டாளிகளும் ஒடுக்கியே வைத்திருந்தனர்.

1946க்கு முன் தேசிய இனங்கள் பற்றிப் பேசிய இடதுசாரிகள் பின்னர்த் தம் கருத்தைக் கைவிட்டது ஏன் என்று புரியவில்லை.

தமிழகத்தைப் பொறுத்தவரை திராவிட இயக்கத்தினரின் இனம்பற்றிய கருத்தை இட்லரின் பாசிசம் என்ற கருத்தோடு வைத்து மார்க்சியர் பார்த்தனரே அன்றி, தேசிய இனம் சார்ந்த கருத்து என்று இவர்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. காரணம் தமிழ்ச் சமூகத்தில் திராவிட இயக்கம் பற்றிய செல்வாக்கை இவர்களால் பெற முடியவில்லை. தமிழக அரசியலில் இந்த இரண்டு சாராரும் இரு துருவங்கள் என எதிர்நிலையில் நின்றனர். சங்ககாலத் தினுள்ளும் நடைபெற்ற வகுப்புப் போராட்டத்தை இவர்கள் சரிவரக் காணவில்லை. பாரி முதலியவர் ஒருபக்கம். வேந்தர் மறுபக்கம் என்று பார்க்கவில்லை. இனக்குழுச் சமூக உணர்வின் தொடர்ச்சியான நீரோட்டமே கம்பரிடம் பொதுமை உணர்வாக வெளிப்பட்டது. தம்மைத் தமிழர் என்று இவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. இவர்கள் என்றைக்கும் இந்தியர். சீவா அளவுக்கு இவர்கள் தமிழில் ஊறவில்லை. இலெனின் கூறியதுபோல இவர்கள் தமிழ் மரபிலிருந்து மார்ச்சியத்தைப் படைக்கவில்லை. வையா புரியின் ஆய்வுதான் இவர்களுக்கு உச்சம். பாவாணர் பக்கம் இவர்கள் நெருங்கமாட்டார்கள். விடுதலைக்கான ஈழத் தமிழர் போராட்டம் கூட இவர்கள் நெஞ்சைக் கலக்க வில்லை. சச்சனியாவை இவர்கள் எங்கே பார்த்தார்கள்.

தனித்தமிழ் இயக்கம் பற்றிய உங்கள் பார்வை என்ன?

தமிழுக்குத் தனித்தமிழ் இயக்கம் தேவை என்பதை நான் என்றும் மறுத்ததில்லை. தனித்தமிழ் இயக்கத்தின் மூலமே பொதுத்தமிழுக்கு நல்ல தமிழ்ச் சொற்கள் மெதுவாகவேனும் வந்து சேர்கின்றன. இவ்வாறுதான் தலைவர், சொற்பொழிவு, பேருந்து, மருத்துவமனை போன்று நூற்றுக்கணக்கான சொற்கள் பொதுத்தமிழுக்குள் வந்து தமிழை அழகுபடுத்தின. தனித்தமிழால் எதையும் சொல்ல முடியும் என்பது குறித்து அழுத்தம் திருத்தமாகச் சில தமிழறிஞர் பேசுகின்றனர். வடமொழிச் சொற்களையும் பிறமொழிச் சொற்களையும் தமிழை விட்டு வெளியேற்றுவதில் தமிழரின் தனித்தமிழ் இயக்கம் வெற்றி கண்டுள்ளது என்பதில் ஐயமில்லை. இன்னும் இந்தப்பணி முடியாத நிலையில் ஆங்கிலம் நம்மை எல்லாத்திசைகளிலும் தாக்குவதை நம்மால் தடுக்க இயலவில்லை. பொறியியல், மருத்துவம் போன்ற சில துறைகளில் முழு அளவில் தனித் தமிழ்ச் சொற்களை உருவாக்கும் முனைப்பு மக்களிடையில் எப்படி வெற்றிபெறும் என்பது புரியவில்லை. முழுஅளவில் தூய்மையான காற்றை நம்மால் நுகர இயலாது. அந்தக் காற்று நம்மை எரித்துவிடும். ஓரளவுக்குக் கலப்படமான காற்றைத் தான் நம்மால் நுகர இயலும். தனித்தமிழ் இயக்கம் முழுஅளவில் தூய்மையான காற்றைப் படைப்பது பெரும் முயற்சி.

எனினும் தனித்தமிழ் இயக்கத்தினர் என்பவர்களுள் ஒரு பகுதியினர் தமிழுக்குள்ளேயே மூழ்கி விடுகின்றனர். வெளி உலகம் - இன்றைய உலகம் அவர்களுக்குத் தட்டுப் படுவதில்லை. இன்றைய உலகின் பொருளியல் சிக்கல் அவர்களைத் தாக்காமல் இல்லை என்றாலும் அதைப்பற்றிய புரிதல் அவர்களுக்கு இல்லை. தமிழ் எங்களுக்கு உயிர் என்று தமிழோடு மட்டுமே வாழ்ந்து விடலாம் என்று அவர்கள் நம்புகின்றனர். திருக்குறள் போதும் என்கின்றனர். தனித்தமிழ் இயக்கத்தினருள்ளும் சிலர் சமயப்பற்றுடைய வர்கள். உண்மையில் தமிழ் என்பது ஒரு கடல், கடலை அளக்க முயலும்போது கடல் ஒருவரை மூழ்கடிக்கத்தான் செய்யும். இதைத் தவிர்க்க இயலாது என்பதும் உண்மை தான். எனினும் தமிழ் வழியே இன்றைய வாழ்வுக்குள் இன்றைய அரசியல் பொருளியல் உலகத்திற்குள் நம்மால் வர இயலும். வள்ளுவரின் பொருளியல் தற்காலப் பொருளி யலுக்குள் நம்மைத் தள்ளமுடியும். கம்பரின் அரசியல் இன்றைய உலகக் கொடுமைகளை நமக்கு உணர்த்தமுடியும். மறைமலை அடிகளாரை, பாவாணரை, பெருஞ்சித்திரனாரை, அருளியாரை, அரசேந்திரனை உருவாக்கிய தனித்தமிழ் இயக்கத்திற்கு நாம் என்றும் நன்றிக்குரியவர்.

பழந்தமிழ் இலக்கியங்களை இக்காலச் சூழலுக்கேற்ப மறு வாசிப்பு செய்யவேண்டும் என்று நீங்கள் கூறும் தேவை என்ன?

பழந்தமிழ் இலக்கியத்தை, அந்தப் பழங்காலத்திற்குள் சென்று இன்று நம்மால் வாசிக்க இயலாது. நம் காலத்துப் படிப்பினைகள், பார்வைகளோடு இருக்கும் நாம் நமக்கு ஒத்த முறையில்தான் பழந்தமிழ் இலக்கியத்தை வாசிக்க முடியும். நமக்கு இன்று சமத்துவமும் சமவுடைமையும் இல்லாமல் முடியாது என்று உணர்கிறோம். நம் உணர்வுக்கு ஒத்த பல கூறுகள் சங்க இலக்கியம், திருக்குறள், சிலப்பதிகாரம் முதலி யவற்றுள் இருக்கின்றன. ஆகவே இந்த இலக்கியங்களைக் கொண்டாடுகிறோம். பரிமேலழகர் தம் காலத்திற்கும் தம் சமயப் பார்வைக்கும் ஒத்த முறையில் திருக்குறளைப் பொருள்படுத்தினார். இன்று பரிமேலழகரின் சமயப்பார் வையை நாம் ஏற்கவில்லை. இளங்கோவின் விதிக்கொள்கை இன்று நமக்கு உடன்பாடில்லை. கண்ணகி மதுரையை எரித்ததை இன்று நாம் ஏற்கிறோம். சைவச்சமயச் சித்தாந்தத் தோடு நமக்கு உடன்பாடில்லை. எனினும் சித்தர்களின் சாதிமத மறுப்பை நாம் இன்று போற்றுகிறோம். எந்த ஒரு இலக்கியத்தையும் இன்று நமக்குள் பதிந்திருக்கிற உணர்வு களை முற்றாக ஒதுக்கிவிட்டு வாசிக்கவே முடியாது. திருத்தக்கதேவரை இன்று நாம் கொண்டாடுவதில்லை. பெரியபுராணத்தில் இடம்பெறும் சமயப்பார்வையை நம்மால் இயன்ற அளவுக்கு ஒதுக்கி வைத்து மனித வாழ்வை வாசிக்கிறோம். மனுநீதிச் சோழனின் நீதி உணர்வைப் போற்றுகிறோம். கதையை ஒதுக்கி விடுகிறோம். நம் காலத்திலும் சைவப்பற்றுள்ளவர்கள் கொண்டாடுவதைப் போல சேக்கிழாரை நாம் கொண்டாடுவதில்லை. முதலை உண்ட பாலனைச் சுந்தரர் மீட்டார் என்று அவர்கள் நம்பும்போது நாம் ஏற்பதில்லை.

எனினும் வரலாறு சமூகம் பற்றிய புரிதலில் இன்று நாம் மேம்பட்டிருக்கிறோம். சடங்குகள் இல்லாமல் எந்த ஒரு சமூகமும் இருந்ததில்லை என்று புரிந்துகொள்கிறோம். சமயத்தாக்கம் இல்லாமலும் மக்கள் இருந்ததில்லை. கடவுள், விதி, ஆன்மா, வினை முதலிய நம்பிக்கைகள் பழங்காலத்தில் மக்களை ஆட்டிப்படைத்தன என்பதுபோலவே வாழ்வித்தன என்று சொல்வதையும் இன்று நம்மால் புரிந்துகொள்ள இயலும்.

வித்தும் இடல்வேண்டும் கொல்லோ என்று வள்ளுவர் சொன்னதைப் பொய் என்றோ வெற்றுக் கற்பனை என்றோ நாம் குறைத்துப் பேசுவதில்லை. புனைவு என்கிறோம். புனைவுகள் இல்லாமல் மனிதனுக்கு வாழ்வில்லை என்று இன்று நமக்குப் புரிகிறது. பகுத்தறிவு கொண்டு இலக்கியத்தை மதிப்பிட முடியாது. பகுத்தறிவு தேவை என்று ஒப்புக்கொள்கிற அதே சமயம் மணிமேகலையில் இடம்பெறும் அமுதசுரபியை நாம் மறுக்கவில்லை. கொடிய வறுமை உள்ள சூழலில் மனிதரின் புனைவு இப்படித்தான் இருக்கமுடியும். காகம் நரிக்கதை ஓர் அழகிய புனைவு. குழந்தைகள் புனைவுகளோடுதான் வாழ்கிறார்கள். நமக் குள்ளும் எத்தனையோ புனைவுகள் நன்மை, தீமை, உண்மை, அழகு, உயர்வு என்றெல்லாம் எத்தனையோ புனைவுகள். பொருள்கோள் என்று இலக்கணம் குறிப்பிடு கிறது. இப்படித்தான் எதையும் பொருள்படுத்திப் புரிந்து கொள்கிறோம். “இளங்கோவுக்குச் சிலப்பதிகாரம் - கலைஞ ருக்குப் பூம்புகார்” - இவையும் மறுவாசிப்புகள். உலகம், வாழ்க்கை, மெய்யியல், வரலாறு எல்லாவற்றையும் மறுவாசிப்புக்கு உட்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம். பழந்தமிழ் இலக்கியத்தை, நம் தேவைக்கு ஒத்தபடி இன்று வாசித்துப் புதுப்பித்துக்கொள்கிறோம். அவ்வளவுதான்.

Pin It