தமிழக வரலாற்றைத் தொகுப்பதில் பல்வேறு அரசியல் பின்னணிகளைக் கொண்ட பலர் தங்கள் பங்களிப்புகளைச் செய்துள்ளனர். ஆனால் வரலாற்றுக்கு காவிச் சாயம் பூசுவதையே நோக்கமாகக் கொண்டிருந்த சைவத் தமிழறிஞர்களே அதில் பெருமளவிலான வெற்றி கண்டனர். இனப் பெருமையையும் மதத்தையும் சரிவிகிதத்தில் கலந்து இந்துத்துவாவுக்கு ஒரு புதிய முகத்தை அளித்தனர் ‘சைவத் தமிழறிஞர்கள்’. பெரும்பாலும் இவர்கள் தொகுத்த வரலாறுகள் மாமன்னர்கள் கட்டிய மாபெரும் சிவாலயங்கள், ஆற்றிய சைவத் திருப்பணிகளும் நடத்திய போர்களும் மட்டும்தான் காணக் கிடைக்கின்றனவே தவிர பெரும்பான்மை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அதில் கொஞ்சமும் இடமேயில்லை. அப்பட்டமான உண்மைகளையும் அரைகுறை உண்மைகளையும் கொண்டுள்ள பெரிய புராணம் போன்ற மத இலக்கியங்கள், வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை என்று தமிழக மக்களை நம்பச் செய்தவர்கள் இவர்கள்.
தமிழக வரலாற்றில் தங்கள் வரலாற்றைத் தேடும் ஒடுக்கப்பட்ட மக்கள் தடுமாறிப் போவதற்கும் அன்னியமாய் உணருவதற்கும் இந்த சைவ முகமூடி அணிந்த இந்துத்துவா போக்கே காரணம். இது சம்பந்தமான ஒரு விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று கூறி நண்பர் கூதிலி லட்சுமணன் பல்வேறு நூல்களை என்னிடம் அளித்தார். அதை ஆய்வு செய்யும் பொழுது சைவத் தமிழறிஞர்களின் முகமூடி வெளிப்பட்டது. அதற்கு மிகச் சிறந்த உதாரணம் சேரமான் பெருமான். அதைப் பார்ப்போம்:
பெரிய புராணம் கூறும் கழற்றறிவார் என்னும் சேரமான் பெருமான் நாயனார் கதை உள்ளத்தை உருக்கக் கூடியது. சேர வம்சத்தின் கடைசி மன்னரான இந்தச் சேரமான் பெருமான் சிவபெருமான் மீது பெரும் பக்தி பூண்டவர். நாள் தவறாமல் உள்ளம் கசிந்துருகி சிவனுக்குப் பூசை செய்வார். இறைவனும், அவரது பூசையை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக தன் பாத சிலம்புகளை ஒலித்துக் குறிப்புக் காட்டுவார். அதன் பின்னரே தனது மற்ற இவ்வுலகக் கடமைகளைக் கவனிக்கச் சேரமான அணியமாவார்.
ஒருநாள் சேரமான் பூசை முடித்த பின்பும் எம்பெருமானின் பாதச் சிலம்புகள் ஒலிக்கவில்லை. மன்னர் துடித்தார். தனது பூசையை இறைவன் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவருக்குத் தோன்றியது. அந்தக் கணத்தில் இனிதான் இவ்வுலகில் வாழக் கூடாதென்று முடிவெடுத்தார். வாளையுருவி மார்பில் பாய்ச்சிக் கொள்ளப் போகும் தருணத்தில் எம்பெருமானின் பாதச் சிலம்பு அவசரமாக ஒலிக்கிறது. சேரமான் அமைதியடையவில்லை. அவரது உள்ளம் பதை பதைத்துக் கொண்டேயிருந்தது.
அனலிலிட்ட புழுவாகத் துடிக்கும் சேரமானின் வேதனையைக் காணச் சகிக்காமல் தாமதத்திற்கான காரணத்தை தன்னிலை விளக்கமாக சிவன் அசரீரியாகத் தெரிவித்தார். நம்பியாரூரார் என்னும் சுந்தர மூர்த்தி நாயனார் தில்லையில் பாடிய பாசுரங்களில் மயங்கிப் போய் தான் உரிய நேரத்தில் சிலம்பொலிக்க மறந்துவிட்டதாகக் கூறிய பின்பே சேரமானின் உள்ளம் அமைதியடைந்தது. ஆனால் ஈசனையே மதி மயங்கிப் போகச் செய்யக் கூடிய அந்த ஆரூராரைப் பார்க்க வேண்டுமென்ற ஆவல் அவரைப் பிடித்துக் கொண்டது.
பாராளும் மன்னரான சேரமான் சிவன் தொண்டரான சுந்தரமூர்த்தி நாயனாரை தரிசிக்க உடனடியாகக் கிளம்பித் தில்லை செல்கிறார். அங்கே எம்பெருமானின் பொற்பாதங்களை வணங்கி பொன்வண்ணத்தந்தாதி என்ற நூலைப் பாடுகிறார். பின்பு சுந்தரமூர்த்தி நாயனாரைக் காண்கிறார். அவரோடு சோழ, பாண்டிய நாட்டுத் திருத்தலங்களுக்கு எல்லாம் செல்கிறார். நாடு திரும்பி பின் பல ஆண்டுகள் சிவநெறி வழுவாமல் அரசு செலுத்திய பிறகு சுந்தரமூர்த்தி நாயனாருடன் கைலாயம் சென்றார் என்று முடிகிறது சேரமான் பெருமான் நாயனாரின் கதை.
ஆயிரமாண்டுகளாக அடியார்களின் உள்ளங்களை ஆட்கொண்டு வந்திருக்கும் இந்தக் கதையில் நமக்கும் சந்தேகம் வந்திருக்கப் போவதில்லை. கறிவிரவு நெய்ச் சோற்றில் கல் போல அந்தச் சிறிய இடறல் மட்டும் இல்லாமலிருந்திருந்தால். . . . . சேரமான் பெருமான் நாயனார் சென்றது கைலாயம் அல்ல மெக்கா என்கின்றன கேரள இலக்கியங்களான கேரள மான்மியமும், கேரளோற்பத்தியும். ஆங்கிலேயரான வில்லியம் லோகான் எழுதிய மலபார் மேனுவலும் நாயனார் சென்றது மெக்காதான் என்று உறுதிப்படுத்துகிறது.
‘சேரமன்னர் வரலாறு’ என்ற நூலை எழுதிய ஒளவை துரைசாமிப் பிள்ளை இது முற்றிலும் தவறான செய்தி என்கிறார். கேரளோற்பத்தியும், கேரள மான்மியமும் காலத்தால் மிகவும் பிற்பட்டவை என்றும் எனவே அவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட மலபார் மேனுவல் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல என்றும் வாதிடுகிறார். சேரமான் பெருமான் குறித்து நமது சேக்கிழார் பிரான் மிக விரிவாக விளக்கமாகக் குறிப்பிட்டிருப்பதால் சேரமான் சென்றது ஈசன் வீற்றிருக்கும் கயிலைதான் என்று ஏற்றுக் கொள்வதே சாலச் சிறந்ததாகும் என்பது துரைசாமிப் பிள்ளையின் கூற்றாகும். பெரிய புராணத்திற்கு ஆதரவாகவும், மலபார் மேனுவல் மற்றும் கேரள இலக்கியங்களுக்கு எதிராகவும் துரைசாமிப் பிள்ளை வைக்கும் வாதங்கள் அரைப்பக்கத்திற்கு முடிந்து விடுகின்றன. (சேரமன்னர் வரலாறு பக்கம் 338)
ஆனால் சேரமானின் மெக்கா யாத்திரை குறித்து மலபார் மேனுவல் தரும் ஆதாரங்கள் எளிதில் ஒதுக்கித் தள்ளிவிட்டுச் செல்ல கூடியவையாக இல்லை. அரேபியாவில் உள்ள கடற்கரை நகரான ஜாபரில் அப்துல் ரஹ்மான் சாமுரி என்பவரின் கல்லறை உள்ளது. மலபாரைச் சேர்ந்த இஸ்லாமியராக மாறிய ஒரு இந்து அரசனின் கல்லறை அது என்று கூறப்படுகிறது. இக்கல்லறை உள்ளூர் மக்களால் மிகவும் மதிக்கப்படுகிறது. சாமுரி என்பது சாமுத்ரி என்பதன் திரிபாகும். சாமுத்ரி என்பது கேரள அரசர்களுக்கு வழங்கப்படும் பெயர் என்று மாப்பிள்ளாக்கள் கூறுகிறார்கள் என்கிறார் லோகான். (மலபார் மேனுவல் பக்கம் 196)
அக்கல்லறையில் ஹிஜிரி 212ம் ஆண்டு வந்து சேர்ந்தார். 216ம் ஆண்டு காலமானார் என்று ஒரு குறிப்பு உள்ளது. மாதம் ஏறக்குறைய ஆகஸ்டை ஒட்டி வருகிறது. இந்தக் காலம்தான் வடகிழக்குப் பருவக் காற்று தொடங்கும் முன் மலபாரிலிருந்து கப்பல்கள் அரபு தேசத்திற்குப் புறப்படும் காலமாகும். தவிர இந்த ஆண்டுகள் கிபி 827&832ஐக் குறிக்கின்றன. (லோகான் மலபார் மேனுவல் பக்கம் 196) இந்த ஆண்டிற்கு ஒரு மிகப் பெரிய முக்கியத்துவமும் உள்ளது என்கிறார் லோகான். சேரமான் சற்றேறக் குறைய கி. பி. 825 வாக்கில் மலபாரிலிருந்து மெக்காவுக்குப் புறப்பட்டிருக்க வேண்டும். மலையாள ஆண்டான கொல்லம் ஆண்டு கி. பி. 825 ஆகஸ்டில் தான் தொடங்குகிறது. ஓணம் பண்டிகையும் ஏறக்குறைய இதே நாளில்தான் வருகிறது. (மலபார் மேனுவல் 231)
கொல்லம் ஆண்டுக்கும் சேரமான் அரேபியா சென்றதற்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொள்ள அவரது முந்திய வரலாற்றையும் தெரிந்து கொள்ள வேண்டும். சேரமான் பெருமான் சேர வம்சத்தின் கடைசி மன்னர் என்பதை ஏற்கனவே பார்த்தோம். அவருக்கு முன்பிருந்த மன்னர் சந்ததியில்லாமல் இறந்துவிட சேரமான் அதிகாரிகளாலும் மற்ற முக்கியஸ்தர்களாலும் மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார். கிபி 600களின் இறுதியில் அரேபிய தீபகற்பமும் அண்டை நாடுகளும் அரேபியர்களின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிட்டன. அரபிக்கடல் மற்றும் இந்தோனேஷியா வரையான கடல்களில் அரபு வணிகர்களே ஆதிக்கம் செலுத்தினர். வணிகத்தோடு மதம் பரப்புதலையும் தொழிலாக கொண்டிருந்த ஏராளமான இஸ்லாமிய மதப்பிரச்சாரகர்களும் தொடர்ந்து கடல்களில் பயணம் செய்து கொண்டேயிருந்தனர்.
அப்படி இலங்கை வழியாகச் சேர நாடு வந்த ஷேக் உத்தீன் என்பவரை நமது சேரமான் பெருமான் சந்திக்கிறார். அதற்கு முன்பு ஒருநாள் சேரமான் ஒரு முழு நிலவு இரண்டாகப் பிரிந்து பின்பு மீண்டும் இணைந்தது போல் ஒரு கனவு காண்கிறார். இதற்கான விளக்கத்தை ஷேக் உத்தீனிடம் கேட்டதும் சேரமான் இஸ்லாத்தின் பால் ஆர்வம் கொண்டார். அது மேலும் வளர்ந்து மெக்கா செல்வதென முடிவு செய்கிறார். பின்பு தனது வாரிசுகள் மற்றும் முக்கியஸ்தர்கள் அனைவரையும் அழைத்து நாட்டைப் பல பகுதிகளாகப் பிரித்து ஒவ்வொன்றின் பொறுப்பையும் ஒவ்வொருவரிடமும் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பியதாக கதை சொல்கிறது.
இத்தோடு சேர மன்னர்கள் ஆட்சி முடிவிற்கு வந்து சேர நாடு திருவாங்கூர், கள்ளிக்கோட்டை, வள்ளுவ நாடு என பல பிரிவுகளாக ஆளப்படும் நிலை உருவாகிறது. ஓணத்தில் ஒரு சடங்கு உள்ளது. எஜானருக்கு மரியாதை செலுத்திவிட்டு சுதந்திரப் பிரகடனம் செய்வது, இது சேரமான் நாடு விட்டு சென்றதும் குறுநில மன்னர்கள் தாங்கள் சுதந்திரமடைந்ததைக் குறிப்பதாகும். அண்மைக் காலம் வரை கேரள மன்னர்கள் அரசுரிமைக்கு அடையாளமாக வாளைப் பெறும் போது மெக்காவிலிருந்து மாமா திரும்பி வரும் வரை என்று கூறியே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. கேரளம் மருமக்கள் தாய முறையைப் பின்பற்றி வந்தது. அதன்படி மாமனின் சொத்திற்கு மருமகனே (அக்கா தங்கை மக்கள்) வாரிசு ஆவான். எனவே மாமன் திரும்பி வரும் வரை என்று கூறப்பட்டது.
எனவே சேரமானின் புறப்பாடு பழைய யுகத்தின் முடிவையும் ஒரு புது யுகத்தின் தொடக்கத்தையும் குறிப்பதாக உள்ளது என்று லோகான் கருதுகிறார். இந்தப் புது யுகத்தின் குறியீடாகத்தான் கொல்லம் ஆண்டு அந்த நாளிலிருந்து தொடங்குகிறது. எனவே சேரமான் மெக்கா சென்றது, கைலாயம் சென்றதைப் போன்ற ஒரு ஆதாரமற்ற கற்பனையாக இருக்க வாய்ப்பில்லை என்ற முடிவிற்கே வர வேண்டியுள்ளது. சேரமான் பெருமான் என்ற பெயரில் வேறு யாராவது சேர மன்னன் இருந்ததாகவும் செய்திகள் இல்லை. அதோடு சேரமானுக்கும் இஸ்லாத்திற்கும் இடையிலான தொடர்பு ஏதோ அவருடனே தொடங்கி அவருடனே முடிந்து போன ஒன்றாகவும் பார்க்க முடியாது என்பதற்கும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
ஜாபர் நகரில் தாயகம் திரும்பும் நிலையில் மரணப் படுக்கையில் விழும் சேரமான் என்னும் அப்துல் ரஹ்மான் சாமுரி இனிதான் பிழைக்க மாட்டோம் என்பதை உணர்ந்து கொண்டு கேரளப் பகுதிகளில் இஸ்லாத்தைப் பரப்புவதற்காகச் சில ஏற்பாடுகளைச் செய்கிறார். மாலிக் இபின் தினார் என்ற இஸ்லாமிய அறிஞரிடம் அவரை ஆதரிக்க வேண்டும் என்ற கோரும் கடிதங்களை கேரளத்திலிருக்கும் தனது பிரதிநிதிகளுக்குக் கொடுத்தனுப்புகிறார். தான் இறந்துவிட்டால் அதைத் தாயகத்தில் தெரிவிக்க வேண்டாமென்றும் கேட்டுக் கொள்கிறார். சேரமானின் மரணத்திற்கு பின்பு கேரளம் திரும்பும் மாலிக் இபின் தினார் அங்குள்ள மன்னர்களால் அன்போடு வரவேற்கப்படுகிறார்.
அவர்களது உதவியோடு மூன்று இடங்களில் மசூதிகளும் கட்டுகிறார். கேரள மன்னர்களின் ஆதரவை இஸ்லாம் பெற்றிருந்தது என்பதற்கு இதைவிட சிறந்த ஒரு உதாரணமும் இருக்கிறது. கோழிக்கோடு பகுதியை ஆண்ட சாமூத்ரி மன்னர் தனது கடற்படையில் பணிபுரிவதற்காக ஒவ்வொரு மீனவக் குடும்பமும் குடும்பத்தில் ஒருவரை அல்லது அதற்கு மேற்பட்டவரை இஸ்லாமியராக வளர்க்க வேண்டுமென்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு அண்மைக்காலம் வரை பின்பற்றப்பட்டு வந்தது. (மலபார் மேனுவல் 197)
இவையனைத்தும் சேரமானின் உத்தரவால் அல்லது அவர் மேலுள்ள மரியாதையால் மட்டுமே செய்யப்பட்டவை என்று கொள்ள பெருமளவு கற்பனை தேவைப்படும். இஸ்லாத்திற்கான தேவை மேற்கு கடற்கரையில் இருந்திருக்கிறது. கேரள மன்னர்களுக்கு ஏதோ ஒரு வகையில் இஸ்லாத்தை ஆதரிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்கிறது என்ற உண்மை எளிதாகவே புலப்படுகிறது. வணிகத்தை அடிப்படையாகக் கொண்டிருந்த கேரள ஆளும் வர்க்கங்களுக்கு இஸ்லாத்தின் மையப்படுத்தப்பட்ட தன்மையும், தொடர்புகளும், தேவைப்பட்டால் சாதியத்தில் உடைப்புகளை ஏற்படுத்த அது அளித்த வாய்ப்பும் அவசியமாக இருந்திருக்கக் கூடும். குறிப்பிட்ட சில சாதியினரே வணிகத்தில் ஈடுபட வேண்டும். படைகளில் பணிபுரிய வேண்டும் என்றெல்லாம் சைவம் விதித்திருந்த கட்டுப்பாடுகள் கடல் சார்ந்த, பரப்பளவில் சிறிய கேரள நாட்டை ஆண்ட மன்னர்களுக்கு, இடையூறாகத்தான் இருந்திருக்கும். எனவே சேரமானுக்கு முன்பிருந்தே இஸ்லாத்துடன் அறிமுகம் சேர நாட்டிற்கு இருந்திருக்க வேண்டும் என்ற முடிவிற்கே வர வேண்டியிருக்கிறது.
இப்போது நாம் திரும்பவும் பெரிய புராணத்திற்கு திரும்பி சேக்கிழார் சேரமான் குறித்துக் கூறுவதைக் கொஞ்சம் பார்ப்போம். அறுபத்தி மூன்று நாயன்மார்களில் சேர நாட்டைச் சேர்ந்தவர்கள் இரண்டே இரண்டு பேர்தான். ஒருவர் நமது சேரமான். இன்னொருவர் விறன்மிண்ட நாயனார். பெரிய புராணத்தில் சேர நாட்டை விட சேரமான் சோழ பாண்டிய நாடுகளின் சைவத் திருத்தலங்களுக்கு மேற்கொண்ட புனித யாத்திரையைப் பற்றியே அதிகம் கூறப்படுகிறது. விறன்மிண்ட நாயனாரும் தில்லைவாழ் அந்தணர்களுடன் கலந்து ஒன்றாகிவிட்டவராகவே காட்டப்படுகிறார். இஸ்லாம், சேரநாடு உடைபடுவது போன்ற அக்கால சேர நாட்டின் வரலாற்று நிகழ்வுகள் எதற்கும் பெரிய புராணத்தில் இடமே இல்லை.
சேரமான் மெக்கா சென்றது நமக்குத்தான் புதிய செய்தியாகத் தோன்றுகிறதே தவிர கேரளத்தைப் பொறுத்த வரை அது அனைவரும் அறிந்த ஒன்றாகவே இன்று வரை இருந்து வருகிறது. எனவே சேக்கிழார் சேரமானின் சேர நாட்டின், இஸ்லாமியத் தொடர்புகள் குறித்து ஒன்றுமே அறியாமலிருந்திருப்பார் என்று எதிர்பார்க்க வாய்ப்பே இல்லை. சேக்கிழாரின் தந்திரம் சேரமானை சோழ பாண்டிய நாடுகளோடு சைவத்தின் அடிப்படையில் ஒன்றிணைத்து மற்ற வரலாற்றுச் செய்திகளை இருட்டடிப்புச் செய்வதாகவே உள்ளது.
சேக்கிழார் கையாண்ட தந்திரத்தைத் தான் சேர நாட்டு வரலாற்றை எழுதியப் பெரும்பாலான தமிழறிஞர்கள் செய்து வருகின்றனர். இந்த சேரமான் பெருமான் வரையிலான சேர நாட்டு வரலாற்றை தமிழகத்தின் மற்ற பகுதிகளின் வரலாற்றோடு இணைத்துவிட்டு, பிந்திய சேர நாட்டுச் செய்திகளை, அதன் சமூகப் பொருளாதார நிலையை கிறித்துவ இஸ்லாமிய வேர்களை அடியோடு புறக்கணிக்கும் போக்குத்தான் தொடர்ந்து வந்திருக்கிறது. தமிழகத்தின் வரலாற்றை சைவம் சார்ந்தே தொகுப்பதும் முரணாக உள்ளவற்றை அடியோடு மறுப்பதும், புறக்கணிப்பதுமே தொடர்ந்து வந்திருக்கிறது.
பெரிய புராண ஆய்வு என்ற ஆ. சா. ஞானசம்பந்தனின் நூல் சுமார் 730 பக்கங்கள் கொண்டது. ஏறக்குறைய அத்தனை பக்கங்களையுமே சேக்கிழாரின் பரந்து விரிந்த அறிவு, நுணுக்கம், இன்ன பிற தகுதிகளைப் பாராட்டவே ஆசிரியர் பயன்படுத்திக் கொள்கிறார். சேரமான் பெருமான் நாயனார் குறித்து இப்படியொரு கதை இருக்கிறது என்று மேலோட்டமாக விவாதிக்கக் கூட ஆ. சா. ஞானசம்பந்தன் தயாராக இல்லை. கடந்த 100 ஆண்டுகளாக தமிழக வரலாற்றைத் தொகுப்பதில் இந்த இருட்டடிப்புச் செய்யும் போக்கே, சைவத்தின் மேன்மையை நிலை நாட்டும் போக்கே பெரும் செல்வாக்கு செலுத்தி வந்துள்ளது.
இந்த சைவ முகமூடி அணிந்திருக்கும் இந்துத்துவ வரலாற்றுப் பார்வை தமிழகத்தின், தலித்திய இஸ்லாமிய, கிறித்துவ, பழங்குடியின வேர்களை கவனமாகவே புறக்கணித்து வந்திருக்கிறது. இந்தப் பார்வை மாறாதவரை வரலாற்று மாணவர்களுக்கான புதிய கதவுகள் திறக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை.