கீற்றில் தேட...

விலைமதிப்பிட முடியாத பண்பாட்டுப் பொக்கிசங்களை நாம் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறோம். ஒருகாலத்தில் கிராமத்துச் சிறுவர்களும், சிறுமிகளும் விளையாடிய விளையாட்டுக்கள் கூட சமூக அக்கறை சார்ந்ததாக இருந்தது. உழைப்பவர்களின் செல்வத்தை ஏகாதிபத்தியத்தின் வலிய கரங்கள் கவர்ந்து கொள்ளும் காரியம் காலகாலமாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தச் செய்தியை மிக அழகாக கிராமத்து சிறுவர்கள் தாங்கள் விளையாடும் விளையாட்டு ஒன்றில் பதிவு செய்துள்ளார்கள். அந்த விளையாட்டை வாசகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தால், போதும் அந்த விளையாட்டு நேரடியாகவும், மறைமுகமாகவும் சுட்டிக் காட்டும் செய்திகளை உணர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

அந்த விளையாட்டு பெயர் “பூசணிக்காய் விளையாட்டு” என்பது ஆகும். இனி, பூசணிக்காய் விளையாட்டைப் பற்றிப் பார்ப்போம்.
இந்த விளையாட்டை இருபால் குழந்தைகளும் சேர்ந்து விளையாடினார்கள் பெண் குழந்தைகள் தரையில் கால்களை அகலித்து ஒருவர்பின் ஒருவராக வரிசையாக உக்கார்ந்து ஒருவர் இடுப்பை மற்றவர் கைகளால் கோர்த்துப் பிடித்துக் கொள்வார்கள். வரிசையில் முன்னால் ஒரு பையன், ரெயில் பெட்டிகளின் முன்னால் இருக்கும் ரயில் எஞ்சின் போல உட்கார்ந்து இருப்பான். அவன் தான் இந்த விளையாட்டில் தோட்டக்காரனாக நடிப்பான். வரிசையாக உட்கார்ந்த நிலையில் இருக்கும் சிறுமிகள் பூசணிக்காய்களாக நடிப்பார்கள்.

இந்த சிறுவர், சிறுமிகளின் நீண்ட வரிசை அமர்வுக்குச் சற்று தொலைவில் ஒரு மேடான பகுதியில் அல்லது ஒரு கல்லின் மேல் ஒரு பையன் உக்கார்ந்திருப்பான். அவன் ராஜாவாக நடிப்பான். ராஜாவின் பக்கத்தில் கைகட்டி வாய் பொத்தி ஒரு பையன் நின்று கொண்டிருப்பான் அவன் சேவகனாக நடிப்பான். இதுதான் பூசணிக்காய் விளையாட்டின் அமைப்பு முறை. இனி விளையாட்டு ஆரம்பமாகும். முதலில் ராஜா, சேவகனைப் பார்த்து, உத்தரவு போடுகிற தொனியில் நீ போய் அந்தத் தோட்டக்காரனிடம் சென்று, நான் கேட்டேன் என்று ஒரு பூசணிக்காய் வாங்கிக் கொண்டு வா! என்பார்.

சேவகன், ராஜாவிடம், “சரி, ராஜா உத்தரவு” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பி, தோட்டக்காரனிடம் வந்து சேவகனும் அதிகாரத் தோரணையில், “ஏய் தோட்டக்காரா, ராஜா மகளுக்கு கல்யாணமாம், அதனால் உன்னிடம் ஒரு பூசணிக்காயை உடனே வாங்கி வரச்சொன்னார்” என்பான். (இங்கே சேவகன் ராஜா சொல்லாத ஒரு காரணத்தை ராஜாவின் மகளுக்கு கல்யாணமாம் என்பதையும் சேர்த்து தோட்டக்காரனிடம் சொல்கிறான் என்பதை வாசகர்கள் கவனிக்க வேண்டும்).

தோட்டக்காரன் சேவகனைப் பார்த்து இப்பதான் பூசணி விதையே ஊன்றி இருக்கிறேன் அதற்குள் பூசணிக்காய் கேட்டால் எப்படி? என்று பதில் சொல்வான். சேவகன், ராஜாவிடம் வந்து, தோட்டக்காரன் இப்பதான் விதை நட்டிருக்கிறானாம் என்பான். ராஜா, அப்படி என்றால் அந்த விதையையே கேட்டு வாங்கிட்டுவா என்பார். சேவகன், தோட்டக்காரனிடம் வந்து “ராஜா பூசணை விதையை வாங்கிட்டு வரச் சொன்னார்” என்பான். தோட்டக்காரன், “நட்டவிதை இப்பதான் முளைச்சிருக்கு, காய் காய்த்ததும் தருகிறேன்” என்பான். ராஜா சேவகனிடம், “பரவாயில்லை, முளைத்த செடியைக் கொண்டு வா” என்பார்.

சேவகன் மீண்டும் ராஜாவிடம் வந்து ராஜா முளைத்த செடி இப்பதான் கொடி வீசி இருக்கிறது” என்பான். ராஜா விடாமல், “கொடி வீசியதைக் கொண்டு வா” என்பார். சேவகன் தோட்டக்காரனிடம் வந்து, “வீசியக் கொடியைக் கொடு” என்பான். தோட்டக்காரன், “இப்பத்தான் கொடியில் பூ பூத்திருக்கிறது” என்பான். தோட்டக்காரன் சொன்னதை சேவகன் ராஜாவிடமே சொல்வான். ராஜா அதையும் கொண்டுவா” என்பார்.
இப்படியாக தோட்டக்காரன், இப்பதான் பூ, பிஞ்சாகி இருக்கிறது; பிஞ்சு, இப்பதான் விளைகிறது; இப்பதான் காய் திரண்டிருக்கிறது” என்று படிப்படியாகச் சொல்ல, சேவகன், அதை ஒவ்வொரு முறையும் ராஜாவிடம் போய் சொல்வான்.

ராஜாவும் சளைக்காமல், அந்தந்தப் பருவத்தில் விளைந்ததை, “உடனே பறித்து வா” என்று உத்தரவிட்டுக் கொண்டே இருப்பார். இந்த விளையாட்டில் சேவகனாக நடிப்பவன்தான் அதிகமாக அலையோ அலை என்று அலைவான். கடைசியில் தோட்டக்காரன் ஒரே ஒரு பூசணிக்காயை மட்டும் பிடுங்கிக்கிட்டு போ என்பர். சேவகனைப் பார்த்து. தோட்டக்காரன் பூசணிக் கொடிகளுக்குத் தண்ணீர் விடுவது போல, பாவனை செய்வான். தோட்டத்திற்கு வேலி அடைப்பது போல பாவனை செய்வான்.

சேவகன், வரிசையாக அமர்ந்திருக்கும் பெண் பிள்ளைகளின் தலையை உடம்பைத் தொட்டு, திருப்பிப் பார்த்து ஒவ்வொரு பெண் பிள்ளையையும், பூசணிக் காயாகப் பாவித்து, இது சூத்தை, இது சொள்ளை இதில் வடுப்பட்டிருக்கு, இது சூம்பிப் போய் இருக்கு என்று ஒவ்வொரு பூசணிக்காயையும் கழிப்பதைப் போல பாவனை செய்வான். சேவகன் இப்படி, ஒவ்வொரு பூசணிக்காயையும் புரட்டிப் பார்க்கும் போது, அதில் ஒரு பெண் குழந்தை சேவகனின் காலில் ‘கடுக்’கென்று முள்ளி வைத்து விடுவாள். சேவகன் நடிப்புடன், ‘ஐயோ தேள்கடித்து விட்டதே! என்று அழுது கொண்டே அந்த இடத்தைவிட்டு நொண்டிக் கொண்டே நகர்வான்.

வரிசையின் இடையில் உள்ள ஒரு குழந்தையை (பூசணிக்காயை) பிடித்து இழுப்பான், சேவகன். அப்போது மற்ற பிள்ளைகள் நாய்கள் குரைப்பதைப் போல ‘லொள், லொள்’ என்று சத்தமிட்டுத் தங்கள் எதிர்பைத் தெரிவிப்பார்கள். எனவே சேவகன் வரிசையின் கடைசியில் இருக்கும் பிள்ளையை (பூசணிக்காயை) பிடித்து இழுப்பான். கடைசியாக உக்கார்ந்திருக்கும் பிள்ளை தனக்கு முன் உள்ள பிள்ளையைத் தன் கைகளால் கோர்த்துப் பிடித்துக் கொள்ளும். அதேபோல மற்றப் பிள்ளைகளும் தனக்கு முன்னால் உள்ள பிள்ளையின் இடுப்பைத் தன் கைகளால் கோர்த்துப் பிடித்துக் கொள்ளும்.

சேவகன் விடாமல் முயன்று கடைசியாக வரிசையில் இருக்கும் பிள்ளையை, அத்தொடரில் இருந்து பிரித்து இழுத்து விடுவான்.
பிள்ளைகளின் தொடர் இருக்கையில் இருந்து பிரித்து எடுத்த பிள்ளையை (பூசணிக்காயை) இழுத்துக்கொண்டு போய் சேவகன் ராஜாவின் முன்னால் கொண்டு சென்று நிறுத்தி, “ராஜா, பூசணிக்காய் கொண்டு வந்திருக்கிறேன்” என்பான். ராஜா, அந்தப்பிள்ளையைச் சுற்றிச்சுற்றி வந்து பார்த்து விட்டு, “இந்தப் பூசணிக்காய் அழுகி இருக்கு, வேறு ஒரு பூசணிக்காய் கொண்டு வா!” என்று உத்தரவிடுவார்.

சேவகன், தோட்டக்காரனிடம் வந்து, “தோட்டக்காரரே, நான் முதலில் பிடுங்கிக் கொண்டு சென்ற பூசணிக்காய் அழுகி இருக்கும். எனவே வேறுஒரு பூசணிக்காயை வாங்கி வரச்சொன்னார் ராஜா” என்பான். தோட்டக்காரன், சேவகனைப் பார்த்து, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்த்து விட்டு, உரம் போட்டு விட்டு வேறொரு பூசணிக்காயைப் பறித்துக் கொண்டு போ!” என்று சொல்வான். சேவகனும், தோட்டத்திற்குத் தண்ணீர் பாச்சுவது போலவும், உரம் போடுவது போலவும் பாவனை செய்து விட்டு, வரிசையில் இப்போது கடைசியாக இருக்கும் பிள்ளையைப் பிடித்து இழுப்பான்.

தொடராக அமர்ந்திருக்கும் பிள்ளைகள் ஒருவரை ஒருவர் கோர்த்துப் பிடித்திருப்பதால் சேவகன் கஷ்டப்பட்டுக் கடைசியாக உக்கார்நதிருக்கும் பிள்ளையைப் பிடித்து இழுப்பான். ஒரு மட்டுக்கும் மல்லுக்கட்டி இழுத்த அந்தப் பிள்ளையைக் கூட்டிக்கொண்டுபோய் ராஜாவின் முன்னால் நிறுத்தி, “ராஜா புதிய பூசணிக்காய் கொண்டு வந்திருக்கிறேன்” என்பான், சேவகன், ராஜா, இரண்டாவது பூசணிக்காய் என்று வந்த அந்தப் பிள்ளையைச் சுற்றி வந்து பார்த்து விட்டு, சே, இந்தப் பூசணிக்காய் சூத்தையாக இருக்கிறது, வேறு ஒரு பூசணிக்காய் கொண்டு வா!” என்பார்.
சேவகன் மீண்டும் தோட்டக்காரனிடம் சென்று, “ராஜா நீ தந்த பூசணிக்காய் சூத்தையாக இருக்கிறது எனவே வேறொரு பூசணிக்காய் கேட்கிறார் என்பான்.

தோட்டக்காரன் இப்போதும் சேவகனைச் சில வேலைகள் செய்யச் சொல்லி, வேறொரு பூசணிக்காயைப் பறித்துக் கொண்டு போ!” என்பார்.
சேவகன் மீண்டும் வரிசையில் கடைசியாக அமர்ந்திருக்கும் பிள்ளையைப் பிடித்து இழுத்துக் கொண்டு போய் ராஜாவின் முன்னால் கொண்டு போய் நிறுத்துவான். இப்படியாக, சேவகன், தோட்டக்காரன் அடுத்தடுத்து பூசணிக்காய்களைக் கேட்டு வாங்க, ராஜா, அக்காய்களைப் (பிள்ளைகளைப்) பார்த்து ‘குறை’ சொல்லி வேறொரு பூசணிக்காயைக் கொண்டு வா” என்பார். இப்படி, கடைசிப்பிள்ளை பூசணிக்காயாக வரிசையில் இருக்கும் வரை சேவகன், பிள்ளைகளை இழுத்துக் கொண்டு போய் ராஜாவின் முன்னால் நிறுத்துவான்.

இதுதான் ஒரு காலத்தில் கிராமத்துப் பிள்ளைகள் விளையாடிய பூசணிக்காய் விளையாட்டாகும். இதுவெறும் விளையாட்டு மட்டுமாக அல்லாமல் சமுதாயச் சிந்தனையுடைய செய்திகளை மக்களுக்கு அறிவிக்கும். விளையாட்டாகவும் திகழ்ந்தது. நிகழ்த்துதல் கலைபோல, நிஜநாடகம் போல குழந்தைகளால் பாவனைகளுடனும், நடிப்புடனும் விளையாடப்படுகிற இந்த விளையாட்டில் ராஜா, தோட்டக்காரன், சேவகன் என்ற பாத்திரங்களில் ஆண் பிள்ளைகளும் பூசணிக்காய் என்ற பாத்திரத்தில் பெண்பிள்ளைகள் மட்டும் இடம் பெறுவதில் ஒருவித நுண் அரசியலும், ஆணாதிக்க மனோபாவமும் இருப்பதை வாசகர்கள் கவனிக்கலாம்.

ராஜாவின் மேலாண்மையும், சேவகர்களின் அலைச்சலும், தோட்டக்காரன் சுரண்டப்படுவதும், பூசணிக்காய்கள் நுகர்பொருளாகக் கருதப்படுவதும், இவ்விளையாட்டு மறைமுகமாக நமக்கு உணர்த்தும் செய்திகளாகும். கிராமாந்தரங்களில் குழந்தைகள் விளையாடிய இத்தகைய விளையாட்டுக்கள் மாற்றுப் பிரதிகளாக நின்று நம் சிந்தனையைக் கிளர்கின்றன. இது போன்ற எண்ணற்ற பொருள் பொதிந்த கிராமிய விளையாட்டுக்கள், இன்று இருந்த இடம் தடம் தெரியாமல் மறைந்து விட்டன.

(தடங்களைத் தேடுவோம்)