"இந்த ஒப்பந்தம் எமது அரசியல் இயக்கத்தைப் பாதிக்கிறது. எமது அரசியல் இலட்சியத்தைப் பாதிக்கிறது. எமது போராட்ட வடிவத்தைப் பாதிக்கிறது. எமது ஆயுதப் போராட்டத்திற்கு ஆப்பு வைப்பதாகவும் அமைகிறது. நாம் ஆயுதங்களை கையளிக்காது போனால் இந்திய இராணுவத்துடன் மோதும் துர்பாக்கிய சூழ்நிலை ஏற்படும். இதை நாம் விரும்பவில்லை. இந்தியாவை நாம் நேசிக்கிறோம். இந்திய மக்களை நேசிக்கிறோம். இந்திய வீரனுக்கு எதிராக நாம் ஆயுதங்களை நீட்டத் தயாராக இல்லை. எமது எதிரியிடமிருந்து எம்மை பாதுகாக்கும் பொறுப்பை இந்திய இராணுவத்தினர் ஏற்கிறார்கள். நாம் ஆயுதங்களை கையளிப்பதிலிருந்து ஈழத் தமிழன் ஒவ்வொருவனதும் உயிருக்கும் பாதுகாப்பிற்கும் இந்திய அரசுதான் பொறுப்பாக இருக்க வேண்டும் என்பதை நான் இங்கே இடித்துக் கூற விரும்புகிறேன்.
இந்தியாவின் இந்த முயற்சிக்கு நாம் ஒத்துழைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்தச் சந்தர்ப்பத்தை நாம் அவர்களுக்கு வழங்குவோம். ஆனால் இந்த ஒப்பந்தத்தால் தமிழரின் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படுமென நான் நினைக்க வில்லை: சிங்கள: இனவாத பூதம் இந்த ஒப்பந்தத்தை விழுங்கி விடும் காலம் வெகுதூரத்தில் இல்லை’’ ‘‘தமிழீழ மக்களின் நலன் கருதி இடைக்கால அரசில் பங்கு பெற அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டிய சூழ்நிலை எமது இயக்கத்திற்கு ஏற்படலாம். ஆனால் நான் எந்தக் காலக்கட்டத்திலும் தேர்தலில் பங்கு பெறப் போவதில்லை முதலமைச்சர் பதவியையும் ஏற்கப் போவதில்லை. இதை நான் மிகவும் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன். ’’
இந்திய இலங்கை ஒப்பந்தம் கையெழுத்தான போது 1987 ஆகஸ்ட் 4ஆம் நாள் ஈழ மக்களிடம் ஒரு குழப்பம் நிலவியது அந்த குழப்பத்தைப் போக்கும் வகையில் யாழ்ப்பாணம் சுதுமலை அம்மன் கோவில் மைதானத்தில் திரண்டிருந்த ஈழ மக்களுக்கு மத்தியில் ‘‘நாம் இந்தியாவை நேசிக்கிறோம்’’ என்னும் தலைப்பில் பிரபாகரன் நிகழ்த்திய உரையின் சில வரிகள்தான் இவை. இருபதாண்டுகளைக் கடந்து விட்ட இந்த உரை இன்று காலத்தினால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. இடையில் கழிந்த இருபதாண்டுகளில் ஈழத்தில் யார் யாரோ வந்து போய் விட்டார்கள். சமாதானப்பேச்சுக்கள், சண்டை நிறுத்தங்கள், இயற்கைப் பேரிடர்கள், இடம் கடந்து செல்லல் என்று காலம் ஈழ மக்களை கடத்தி வந்திருக்கிறது. ஆனால் ஈழத் தமிழர் மேல் பூசப்பட்டுள்ள இனவாத துன்பச் சேறு இன்னும் கரைந்த பாடில்லை. யாராலும் அதை கழுவித் துடைக்கவும் முடியவில்லை. ‘‘இலங்கை சிங்களர்களுக்கே சொந்தம்’’என்று இலங்கை ஆட்சியாளர்கள் சொல்வதன் மூலம் இனவெறியின் கோர முகத்தை அறியலாம்.
ஆனாலும் கால் நூற்றாண்டை விழுங்கி விட்ட காலம் யதார்த்தத்தின் முன்னால் மெத்தனமாக அகங்காரத்துடன் நிற்கிறது கோரமான சிங்கள முகத்துடன். இனவாத பூதம் ஒப்பந்தத்தை விழுங்கி ஏப்பமிட பத்து ஆண்டுகள் கூட காத்திருக்க தேவையில்லாமல் போய் விட்டது. புலிகள் என்கிற போராளிக் குழு இந்திய இலங்கை தரப்பிற்கு வழங்கிய சந்தர்ப்பம் இரண்டு தரப்பையுமே நகைத்திருக்கிறது. இந்தியாவும் இலங்கையும் அமெரிக்க காலனியத்தின் சந்தையாக மாறியிருக்கிறது இந்த இருபதாண்டுகளில். ஆனால் புலிகள்?
இந்தியா உண்மையாக ஈழ மக்களை இலங்கையை நேசித்திருந்தால் இந்தப் போர் எப்போதோ முடித்து வைக்கப்பட்டிருக்கும். தமிழ் மக்கள் சிங்கள மக்களுடன் சமாதான, சகவாழ்வு, வாழாவிடினும் பாதுகாப்பான ஒரு வாழ்வை தங்களின் தாயங்களில் வாழ்ந்திருக்க முடியும். விமானப்படை உருவாக்கி இலங்கையின் மூல பொருளாதாரத்தை பலவீனமாக்கும் புலிகளின் போர்த்தந்திரத்தைப் பார்க்கும் போது போர் அடுத்த தலைமுறைக்கும் கைமாறியிருப்பதை அறிய முடிகிறது. அநீதியான இந்த போர் எத்தனை தலைமுறைகளைத்தான் கொன்று தீர்க்கப் போகிறது. இடையில் கழிந்த இருபதாண்டுகளில் சிங்கள ஆட்சியாளர்கள் இனவெறி வடிவத்தை இறுக்கமாக பின்னியிருக்கிறார்கள்.
புலிகளோ அதே தமிழ் மக்களின் சுயநிர்ணயக் கோரிக்கையோடு எந்த மாற்றமும் இல்லாமல் போராடிக் கொண்டிருக்கிறார்கள். புலிகள் போர் முறையை வளர்த்தெடுத்திருக்கிறார்களே தவிற கொள்கையை மாற்றிக் கொள்ள வில்லை. சுதுமலையில் ஒலித்த அதே குரல் அதே கோரிக்கை இன்றும் ஒலிக்கிறது வன்னியிலிருந்து.
தமிழகம் மீண்டும் ஈழத்தை திரும்பிப் பார்க்கிறது. ஈழ மக்களுக்கான ஆதரவுப் போராட்டங்களை எண்பதுகளைப் போல இளைஞர்கள் முன்னெடுத்திருக்கிறார்கள். ஆனால் மழையில் நனைவதும், ஈழ மக்களுக்காக ஒப்பாரிப் பாடுவதும், கூடி உண்ணாவிரதம் இருப்பதும் அரசியல் தெளிவற்று இருப்பதால் அந்த போராட்டங்கள் நமது ஓட்டுச் சீட்டு சுகவாசிகளால் சூறையாடப்படுகின்றன. ஆனால் நம்மைப் போல அல்ல ஈழமக்கள். அவர்கள் பதுங்கு குழிகளுக்குள் வாழ்கிறார்கள். அன்றாடம் செத்து மடிகிறார்கள். நாமோ அறிக்கைகளுக்குள் வாழ்கிறோம்.
பதுங்கு குழிகளுக்குள் வாழ்வதைப் போலன்று அறிக்கைகளுக்குள் வாழ்வது. யுத்தம் அன்றாடம் உயிரை பலியெடுக்கிறது. பசியை பரிசளிக்கிறது. குழந்தமையைக் கொன்று விடுகிறது. அடுத்த தலைமுறையை வேரோடு அறுத்துச் சாய்த்து சவக்குழிகளாக்குகிறது. ஆனால் அறிக்கைகள் அப்படியானதல்ல. கோஷங்களுக்கு என்ன முக்கியத்துவமோ அதே முக்கியத்துவம்தான் அறிக்கைகளுக்கும். சில நேரங்களில் சிலேடையாகவும் பல நேரங்களில் நகைச்சுவையாகவும் அவை அமைந்து விடுவதால் சலிப்பைப் போக்கிக் கொள்ள அவைகள் உற்சாக பானமாக பயன்படக் கூடும். ஈழ விடுதலையின் சாரம் தமிழகத்தின் விழிப்பிலேயே தங்கியிருப்பதான ஒரு கருத்து பல்வேறு சிந்தனையாளர்களாலும் முன்வைக்கப்படும் சூழலில் ஈழப் போரில் தமிழகத்தின் பங்கில் ஒரு வரலாற்று ஓர்மை பொதிந்துள்ளது.
எண்பதுகளில் தமிழ் மக்களுக்கு எதிராக நடந்த சிங்கள ஆட்சியாளர்களின் திட்டமிடப்பட்ட கலவரத்தின் விளைவாக தமிழ் இளைஞர்களின் ஆயுதப் போராட்டம் எழுச்சி பெற்ற காலம் அது. இன வெறி பாசிஸ்டுகளான சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிரான ஆயுதப் போரை தமிழகத்திலிருந்து முன்னெடுக்கும் விதமாக ஈழப் போராளிகள் தமிழகத்தை தங்களின் இயங்குதளமாக மாற்றியிருந்தனர். சொந்த நாட்டின் சூழலை எதிர் கொள்ள அண்டை நாட்டின் நிலப்பகுதியை இயங்குதளமாக மாற்றுவதும் கொரில்லா போருக்கான புறச் சூழலை வலுப்படுத்தும் தளமாக அண்டை எல்லையை பயன்படுத்துவதும் உலகெங்கிலும் உள்ள போராளிக் குழுக்களின் நடைமுறைதான். இன்று திபெத்தியர்களுக்கும் பாகிஸ்தான் பழங்குடிப் போராளிகளுக்கும் இந்தியா எதற்காக ஆதரவளித்ததோ அதை விட அதிகமாக ஈழப் போராளிகளை இந்தியா ஆதரித்தது. ஆனால் ஈழ அகதிகளை திபெத் அகதிகளைக் காட்டிலும் கேவலமாக பன்றித் தொழுவத்தில் அடைத்து வைத்திருப்பது போல் அடைத்து வைத்திருக்கிறது.
அதே நேரம் எண்பதுகளில் ஈழ மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகள் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியது. திராவிட இயக்க அரசியலில் எம். ஜி. ஆர், கலைஞர் என இருவருமே போராளிகளை ஆதரித்தனர். எண்பதுகளில் திமுக மேடைகளில் மூன்று முழக்கங்கள் பிரதானமாக இருக்கும். (அதிமுக மேடைகளில் கவர்ச்சிக் கோஷம் மட்டும்தான்) மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், ஈழத்தமிழர் கண்ணீர் துடைப்போம் என்கிற மூன்று முழக்கங்களும் வலிமையாக சமூகத் தளத்தில் எடுத்து வைக்கப்பட்ட வரலாறு திமுகவிற்கு உண்டு. அதன் பின்னர் தொண்ணூறுகளில் வாக்குச் சீட்டு அரசியலில் வீழ்ச்சியும் உதிரிக் கட்சிகள், பிராந்தியக் கட்சிகளின் வளர்ச்சியும் தேசிய கட்சிகளின் முக்கியத்துவத்தை டில்லியில் குறைத்தது அல்லது உடைத்துப் போட்டது.
மத்தியில் யார் ஆட்சியமைத்தாலும் தென் மாநிலங்களின் உதவி இல்லாமல் ஆட்சியமைக்க முடியாது அதிலும் குறிப்பாக தமிழக கட்சிகளின் துணையில்லாமல் அதிலும் திமுக,அதிமுக என்கிற இரண்டு கட்சிகளின் ஒத்துழைப்பு இல்லாமலும் மத்தியில் ஆட்சியமைக்க முடியாத சூழல். மத்தியில் செல்வாக்கு செலுத்தத் தொடங்கிய திமுகவின் மேடைகளில் இன்று இந்த மூன்று கோஷங்களும் இல்லை. அப்படியானால் மத்தியில் கூட்டாட்சியும் மாநிலத்தில் சுயாட்சியும் வந்து விட்டது என்று எடுத்துக் கொள்ளலாமா? அல்லது இந்தி திணிப்பு என்பதே ஒழிந்து போன ஒன்று என எடுத்துக் கொள்வதா? அல்லது ஈழத் தமிழனின் கண்ணீர்தான் துடைக்கப்பட்டு விட்டதா?
என்றால் இன்றைக்கு ஈழத்தில் கேட்கிற அதே அழுகுரல்தான் அன்றைக்கும் கேட்டது. முப்பதாண்டுகளைக் கடந்தும் கேட்டுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் விருப்பத்தையும் மீறி தமிழக முதல்வரின் விருப்பத்தையும் மீறி இந்தியா இலங்கை அரசின் போரை ஆதரிக்கிறது. இலங்கை அரசு ஈழ மக்கள் மீது கட்டவிழ்த்து விட்ட போரை இந்தியா தலையிட்டு தடுத்து நிறுத்தியதே இல்லையா? இந்தியா ஏன் இந்தப் போர் தொடருவதை விரும்புகிறது. எப்போதெல்லாம் இந்தியா இலங்கை அரசை ஆதரித்ததோ அப்போதெல்லாம் ஈழ மக்கள் மீதான போரை இலங்கை தீவீரப்படுத்தியிருக்கிறது. எப்போதெல்லாம் இந்தியா இலங்கையை கண்டித்ததோ அப்போதெல்லாம் இலங்கை பலவீனமாகியிருக்கிறது.
யாழ்குடா நாட்டை கைப்பற்றும் நோக்கோடு ஊரடங்குச் சட்டத்தை அமல் படுத்தி 1987 மே மாதம் ‘ஆப்பரேஷன் லிபரேஷன்’ நடவடிக்கையை முடுக்கி விட்டது இலங்கை ராணுவம். இந்தப் படையெடுப்பை விரும்பாத இந்தியா ஜூலையில் போர் விமானங்கள் மூலம் வடமராட்சி மக்களுக்கு உணவுப் பொட்டலங்களைப் போட்டது. உணவுப் பொருட்களை அப்போது செஞ்சிலுவைச் சங்கம் மூலம் இந்தியா அனுப்பி வைக்காமல் ஒரு அண்டை நாட்டின் எல்லைக்குள் அத்து மீறி தன் விமானங்களை பறக்க விட்டு உணவுகளைப் போட்டது. ஜெயவர்த்தன வடமராட்சி மீதான படையெடுப்பை கைவிட்டார். இந்த கைவிடலும் பின்னர் வந்த இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தம் என்ற இரண்டுமே ஈழ விடுதலைப் போரில் கசப்பான பல நிகழ்வுகளுக்கு இட்டுச் சென்றது இரு பக்கமும். வடமராட்சியின் மீதான போரை இந்தியாதான் நிறுத்தியது.
இலங்கை விவாகரத்தில் எப்போதும் இரட்டை அணுகுமுறையையே கடை பிடித்திருக்கிறது. இந்திராவின் காலத்தில் இருந்தே இதுதான் நிலை. அது ஒரு பக்கம் பார்த்தசாரதியை சாமாதானத் தூதராக இலங்கைக்கு அனுப்பும். இன்னொரு பக்கம் போராளிக்குழுக்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து ஈழத்தில் இறக்கும். இரு தரப்பும் ஒன்றை ஒன்று மோதி வென்று விடாமல் போரை நீடிப்பதுதான் அன்றைய இந்தியாவின் அணுகுமுறை. இன்றைய இந்தியா பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு என்று ஒரு பக்கம் சொல்லும். இன்னொரு பக்கம் சிங்கள ராணுவத்தினருக்கு இந்தியாவில் பயிற்சி கொடுக்கும். ஆயுதமும் வட்டியில்லாக் கடனும் கொடுக்கும். கூடவே இலங்கையில் வேறு குழுக்களை உருவாக்கவும் முயற்சிக்கும்.
ஆனால் இந்தியாவை தட்டிக் கழிப்பது என்பது இலங்கைக்கு கைவந்த கலை. இந்திராவின் தூதுவர் பார்த்தசாரதி உருவாக்கிய கிuஸீமீஜ்uக்ஷீமீ ‘நீ’ &யை நிராகரித்தது இலங்கை அரசு. இந்திய இலங்கை அமைதி ஒப்பந்தத்தின் பிரதான கூறுகளில் ஒன்றான வடக்கு கிழக்கு இணைப்பை உச்சநீதிமன்றத்தின் மூலம் உடைத்தெறிந்தது இலங்கை அரசு. வடக்கு கிழக்கை மூன்று அல்லது நான்கு கூறுகளாக்கி தமிழர் தாயகப்பகுதிகளில் இருந்து அவர்களை சிதறடித்து சிங்கள குடியேற்றங்களை நிறுவுவது இன்னும் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. (இதெல்லாம் தமிழக காங்கிரஸ் தலைவர் கே. வி. தங்கபாலுவுக்கு தெரிய வாய்ப்பில்லை. வெறுமனே இந்திய,இலங்கை அமைதி ஒப்பந்தம்தான் இலங்கைப் பிரச்சனைக்கு தீர்வு என்று கூவிக் கொண்டிருப்பதை விட்டு காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் கோஷ்டிகளை சரி பண்ண போதுமான கவனம் எடுப்பது நல்லது.)
அது போல இந்தியா முன்னெடுத்த திம்பு பேச்சுக்களில் தமிழர் தரப்பால் முன்வைக்கப்பட்ட நான்கு கோரிக்கைகளும் அது தொடர்பாக ஈழத் தேசிய விடுதலை முன்னணியால் தயாரிக்கப்பட்ட மகஜர் இன்னும் இந்திய புலனாய்வு அலுவலகத்தில் இருக்கக் கூடும். அதை தேடி எடுத்துப் பார்த்தாலே தெரியும் அதில் வைக்கப்பட்ட கோரிக்கைகளில் எதுவும் தனி ஈழத்தை வலியுறுத்தவில்லை. மாறாக தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிப்பதற்கான ஜனநாயக கோரிக்கையாகவே இருக்கும். திம்பு பேச்சுக்களின் தோல்விக்குப் பிறகு விடுதலைப் புலிகள் ஈழப் போரின் தனிபெரும் சக்திகளாக வளர்ச்சி பெற்றிருக்கும் இந்தக் காலத்திலும். இந்தியாவை யார் உதாசீனப்படுத்தினார்கள் தட்டிக் கழித்தார்கள் என்று பார்த்தால் பல உண்மைகள் நமக்குத் தெரிய வரும்.
ஒப்பந்தங்களை தொடர்ந்து சிதைத்து வந்தது. பேச்சுவார்த்தை மேஜைகளில் ஒப்புக் கொள்ளப்பட்ட விஷயங்களைக் கூட அமுல் செய்யாமல் இழுத்தடித்தது. சுனாமி நிதியைக் கூட பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்காமல் ஊழல் செய்தது என இந்தியாவை இலங்கை ஆட்சியாளர்கள் தொடர்ந்து ஏமாற்றி வந்ததை காலம் அறியும், ஆனால் போராளிகள் இந்தியாவை எப்போதும் பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பது அவர்களின் நடவடிக்கையில் தெரிகிறது. சகோதரக் குழுக்களுக்குள் எழுந்த மோதல் தமிழகத்திலும் சில விசும்பல்களை ஏற்படுத்த நமது தாய்நாட்டிலிருந்தே ஈழத்துக்காக போராடலாம் என்று யாழ்ப்பாணம் திரும்பிச் சென்ற பிரபாகரனையும் ஏனைய சில போராளித் தலைவர்களையும் வேண்டி விரும்பி அழைத்தது இந்தியாதான்.
அதனூடாகத்தான் விருந்தாளிகளுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது தமிழக மக்களிடம் போராளிகளுக்கு இருந்த செல்வாக்கு தமிழக தலைவர்கள் போராளிகள் மீது செலுத்திய செல்வாக்கு என இந்திய மத்திய அரசு இலங்கை மீதான தன் அயலுறவுக் கொள்கைக்கு போராளிகளையும் தமிழக தலைவர்களையும் பயன்படுத்திக் கொண்டது. தமிழ் மக்களுக்கு எதிரான அத்துமீறல்கள் நடந்து கொண்டிருக்கும் சூழலில் பேச்சுவார்த்தைக்கு போராளிகள் சம்மதித்தது என்பது இந்தியாவின் நிர்பந்தத்தின் பேரிலேதான் நடந்தது. அது மட்டுமல்லாமல் பேச்சுவார்த்தையும் ஈழ மக்களையும் அவர்களின் பிரதிநிதிகளையும் மூன்றாம் தரப்பாக்கி இந்தியாவும் இலங்கையும் ஒப்பந்தம் செய்து கொள்ள தமிழக தலைவர்களையும் தமிழக மக்களையும் ஒரு காயாக பயன்படுத்திக் கொண்டது இந்தியத் தரப்பு.
பல நேரங்களில் இந்தியா போராளிகளை பேச்சு வார்த்தைகளுக்கு சம்மதிக்க வைக்க எம். ஜி. ஆரை பயன்படுத்திக் கொண்டது. ஆனால் ஈழத் தமிழர் நலன் தொடர்பில் இந்திய அரசின் நிலைப்பாடும் தமிழக மக்கள் மற்றும் தமிழக தலைவர்களின் நிலைப்பாடும் ஒன்றாகவா இருந்தது? அன்றிலிருந்து இன்று வரை மத்திய அரசின் நிலைப்பாடும் தமிழக மக்களின்,தமிழக தலைவர்களின் நிலைப்பாடும் வேறு வேறானவை. இன்னும் சொல்லப்போனால் எதிரெதிரானவை. இந்தியா இலங்கை ஆட்சியாளர்களை மிரட்டியோ கெஞ்சியோ வலிந்த நட்பை உருவாக்கி ஈழத் தமிழர் பிரச்சனையை தீர்க்க முற்பட்டனர். தீர்க்க முற்பட்டதைக் காட்டிலும் இரு தரப்பும் தனக்கு கீழ் படிந்து நடக்க வேண்டும் என்கிற எண்ணத்தின் ஊடாக இனப் பிரச்சனை தீராமல் தொடர்ந்து அதை நீடிக்க விடுவது என்பதாய் கூட இந்தியாவின் அணுகுமுறை இன்று வரை இருந்து வருகிறது.
எண்பதுகளில் பிராந்திய நலன் நோக்கில் இலங்கையில் வேறு எந்த நாடும் கால்பதிப்பதை இந்தியா விரும்பவில்லை. இந்தியாவின் பிராந்திய நலனுக்கு தோதாக அன்று உலகம் ரஷ்யா,அமெரிக்கா என்னும் இரு பெரும் வல்லரசுகளின் கீழ் இருதுருவ அரசியலில் கீழ் அணிதிரண்டு பங்கிடப்பட்டிருந்த சூழலில் இந்தியாவின் தென் பிராந்திய நலன் என்பது இந்து மாகா சமுத்திரத்தின் மீதும் இலங்கையின் மீதும் இருந்தது. ரஷ்யாவின் பின்னடைவுக்குப் பிறகு அமெரிக்கா அறிவிக்கப்படாத காலனியாக மூன்றாம் உலக நாடுகளை ஆக்ரமித்த போது இந்தியாவும் இன்று அமெரிக்காவின் அறிவிக்கப்படாத காலனிப்பகுதியாக மாறியிருக்கிறது. இன்று இந்தியாவுக்கென்று என்ன பிராந்திய நலன் இருக்க முடியும்.
உண்மையில் அமெரிக்காவையும் மீறி திருகோணமலைத் துறைமுகத்தை தன் மேலாதிக்கத்தின் கீழ் இந்தியாவால் கொண்டு வர முடியுமா? இந்து மகாக் கடல் பகுதியை தன் ராணுவக் கட்டுக்குள்தான் வைக்க முடியுமா? என்றால் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளுக்கு கிடைத்த தோல்வியிலிருந்தே பிராந்திய நலனைப் பேச முடியும். வடக்கில் மட்டுமல்ல வடகிழக்கிலும் இந்தியாவின் பிராந்திய நலன் ஆட்டம் கண்டிருக்கிறது. அமெரிக்காவின் கொள்கைகளே இந்தியாவின் அயலுறவுக் கொள்கை என்று மாறிப் போன பிறகு இலங்கையை ஒரு சந்தையாக மட்டுமே பார்க்கிறது இந்தியா. அமெரிக்காவுக்கு எப்படி இந்தியா ஒரு சந்தையோ அது போல இலங்கை இந்தியாவின் சந்தை. சந்தையில் அதுவும் போர் நடக்கும் சந்தையில் எதை எதை எல்லாம் விற்பனை செய்ய முடியுமோ அதை எல்லாம் விற்றுக் கொண்டிருக்கிறது இந்தியா.
ஆப்கானில், ஈராக்கில், லெபனானின் நடந்த நடந்து கொண்டிருக்கிற போர்கள் எல்லாம் அமெரிக்க ஆயுத வியாபாரிகளின் நலனில் பேரிலேயே நடந்து வருகிறது. இலங்கையில் நடந்து வரும் போரும் முடிவில்லா போராக நீள வேண்டும் என இந்தியா விரும்புகிறதோ என நினைக்கத் தோன்றுகிறது காரணம். ஈழ மக்களுக்கெதிரான போரில் இந்தியா இலங்கை அரசின் கையையும் ஓங்க விட்டதில்லை. புலிகளின் கைகைகளையும் ஓங்க விட்டதில்லை தன் கட்டளைக்கு அடிபணிந்து நடக்கும் ஏவல் பையன்களைப் போல இவர்கள் போராளிகளை நடத்தினார்கள். ஆனால் ஈழ விடுதலை என்னும் விஷயத்தில் போராளிகள் விடாப்பிடியாக இருந்த ஒரே காரணத்தாலேயே போராளிகள் இந்தியாவை பகைக்கும்படியாயிற்று.
ராஜீவ் ஜெயவர்த்தனாவால் செய்து கொள்ளப்பட்ட இந்திய, இலங்கை ஒப்பந்தம் என்பது நிர்பந்தத்தின் பேரில் செய்து கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தை இலங்கை அரசும் விரும்ப வில்லை. போராளிகளும் விரும்பவில்லை. இந்தியாவை நட்புச் சக்தியாக பார்த்த போராளிகள் இந்தியாவின் பேச்சைக் கேட்டனர். எப்படி இந்திராவின் ஆலோசகர் பார்த்தசாரதி தயாரித்த Aunexure ‘நீ’ யை ஜெயவர்த்தனா சர்வகட்சி நாடகத்தின் மூலம் குலைத்தாரோ அது போல ராஜீவ் ஜெயவர்த்தன ஒப்பந்தமும் சிங்கள ஆட்சியாளர்களால் குலைக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்ட தமிழர்களின் பாரம்பரிய தாயகப்பகுதியான வடக்கு கிழக்கு இணைப்பைக் கூட இலங்கை தன் இனவாத நெருப்பில் எரித்துப் போட்டது.
இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் விளைவாய் அன்று நடந்த ஆயுத கையளிப்பு சடங்கு நடந்த வேளையில் கூடியிருந்த பத்திரிகையாளர்கள் எல்லாம் மீண்டும் மீண்டும் புலிகள் தரப்பை நோக்கி ஒரூ கேள்வியை வீசினார்கள். ‘‘முழு ஆயுதங்களையும் ஒப்படைக்கப் போகிறீர்களா?’’ ‘‘ஒரு ஆயுதத்தைக் கூட வைத்துக் கொள்ள மாட்டீர்களா? என்பதுதான் அந்தக் கேள்விகள். யோகி ஆயுத ஒப்படைப்பின் அடையாளமாக தன் ஜெர்மன் கைத்துப்பாக்கியை இந்தியத் தளபதிகளின் மேஜையில் யாரும் எதிர்பாராத வகையில் வெடுக்கென்று வைத்த போது அதை யாராலும் புகைப்படம் எடுக்க முடியவில்லை. யோகியின் இந்தச் செயல்பாடு மேலோட்டமாகப் பார்த்தால் சாரமில்லாமல் இருக்கும். ஆனால் ஒரு வேளை மொத்தமாக ஆயுதங்களை அன்று புலிகள் ஒப்படைத்திருந்தால் இந்த முப்பதாண்டுகளில் ஈழ மக்கள் அழிக்கப் பட்டிருப்பார்கள்.
சுதுமலயில் பிரபாகரன் சுட்டிக்காட்டிய இனவாத நெருப்பு தமிழ் மக்களை பொசுக்கியிருக்கும். இன்று இலங்கை அரசு ‘‘புலிகளுக்கு ராணுவத்தீர்வையும் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வையும்’’ வழங்குவதாகக் கூறி ஈழ மக்கள் மீது போரைத் தீவீரமாக்கியிருக்கிறது. இதை புலிகளுக்கு எதிரான போரா? ஈழ மக்களுக்கு எதிரான போரா? என்கிற கேள்விகள் மிக மிக அற்பத்தனமான அபத்தமான கேள்விகள். யுத்தத்தை விரும்பாத எவரும் யுத்தத்தை எதிர்ப்பார்களே தவிர அதை வகை பிரித்து எதிர்க்க முடியாது.
நாளை வடக்கு மக்களுக்கு சிங்கள அரசாங்கம் வழங்கப் போவதாக சொல்லப்படும் ஜனநாயத்தை கிழக்கு மக்களுக்கு ஏற்கனவே வழங்கிவிட்டது சிங்கள அரசு. கிழக்கில் கருணா குழுவின் ‘தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்’ அமைப்பின் பிள்ளையானைக் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறது இலங்கை. ஒரு பக்கம் கருணாவுக்கும் பிள்ளையானுக்கும் நடக்கும் உட்கட்சி மோதலில் ஏராளமானோர் கொல்லப்படும் சூழலில். ஒரு போலீஸ்காரரைக் கூட கிழக்கு மாகாண அரசால் நியமிக்க முடியாத அளவுக்கு எவ்வித அதிகாரமும் இல்லாத ஒரு அரசையே எம்மிடம் வழங்கியிருக்கிறார்கள் என்று பிள்ளையான் இலங்கை அரசு மீது குற்றம் சாட்டுகிறார். போதாக்குறைக்கு பிள்ளையானின் ஆட்கள் ஒவ்வொருவராக இலங்கை அரசால் படுகொலை செய்யப்படுகிறார்கள். கிழக்கில் நாள்தோறும் படுகொலைகள் அதிகரித்து வருகின்றன.
பிள்ளையானுக்கும் கருணாவுக்கும் இடையே நடக்கும் கோஷ்டி மோதலில் இடையில் சிக்கிக் கொண்டதென்னவோ கிழக்கு மக்கள்தான். கிழக்கின் அதிகாரம் குறித்து கருணா சொல்கிறார். ‘‘ கிழக்கிற்கு எவ்விதமான போலீஸ் அதிகாரமும் தேவையில்லை’’ என்கிறார். மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிக்கும் இலங்கை அரசின் லட்சணமும் இதுதான் கிழக்கு மக்களுக்கு தவணை முறையில் ஜனநாயகத்தை பரிசளிக்கும் கருணா கும்பலின் லட்சணமும் இதுதான். ஆக அரசியல் தீர்வு என்னும் மோசடிப் பேச்சின் மூலம் துப்பாக்கிகளாலே தீர்வுகளைக் காணலாம் என நினைக்கிறது இலங்கை அரசு. ஆனால் தான் போட்ட ஒப்பந்தத்தையே இல்லாதொழித்த இலங்கை அரசை கண்டும் காணாமல் இருக்கும் இந்தியா, ஒப்பந்தம் அமைதிப்படையினரின் அட்டூழியங்கள் இவைகளின் பின் விளைவாக நிகழ்ந்த ராஜீவ் கொலையில் ராஜீவ் கொலையை மட்டும் காரணமாக வைத்து புலிகளை தடை செய்து இந்தியாவில் முடக்கியிருக்கும் சூழலில் இலங்கை அரசுக்கு வட்டியில்லாக் கடனும் ஏராளமான ஆயுதங்களையும் கொடுக்கிறது.
ஒன்றிலோ இலங்கையையும் புலிகளையும் சம அளவில் விலக்கி வைக்க வேண்டும். ஆனால் இந்தியா தங்களுக்கு யார் துரோகம் இழைத்தார்களோ அவர்களை அணைத்துக் கொள்வதில் பொதிந்திருப்பது பிராந்திய நலன் என்பதெல்லாம் இல்லை. முதலில் நாம் சுட்டிக் காட்டிய புலித்தலைவரின் சுதுமலை பிரகடனத்தையும் இந்த ஆண்டு மாவீரர் நாள் உறையில் குறிப்பிட்டுள்ள விஷயங்களையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம். ’’ ‘‘உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம். ’’
‘‘எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம்.” ‘‘பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம். ’’ ‘‘இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம். ’’
‘‘சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.’’ ‘‘இந்தப் போர் உண்மையில் சிங்கள அரசு கூறுவது போல, புலிகளுக்கு எதிரான போர் அன்று. இது தமிழருக்கு எதிரான போர்; தமிழ் இனத்திற்கு எதிரான போர்; தமிழின அழிப்பை இலக்காகக் கொண்ட போர்; மொத்தத்தில் இது ஓர் இன அழிப்புப் போர். ’’ ‘‘இன்று இந்திய தேசத்திலே பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அங்கு அடங்கிக்கிடந்த எமது போராட்ட ஆதரவுக்குரல்கள் இன்று மீளவும் ஓங்கி ஒலிக்கின்றன. ’’
‘‘எமது போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்ற ஏதுநிலைகள் வெளிப்படுகின்றன. கனிந்து வருகின்ற இந்தக் கால மாற்றத்திகேற்ப, இந்தியப் பேரரசுடனான அறுந்துபோன எமது உறவுகளை நாம் மீளவும் புதுப்பித்துக்கொள்ள விரும்புகிறோம். ’’ ‘‘அன்று, இந்தியா கைக்கொண்ட நிலைப்பாடுகளும் அணுகுமுறைகளும் தலையீடுகளும் ஈழத்தமிழருக்கும் அவர்களது போராட்டத்திற்கும் பாதகமாக அமைந்தன. இனவாத சிங்கள அரசு தனது கபட நாடகங்களால் எமது விடுதலை இயக்கத்திற்கும் முன்னைய இந்திய ஆட்சிப்பீடத்திற்கும் இடையே பகைமையை வளர்த்து விட்டது. இந்தப் பகைப்புலத்தில் எழுந்த முரண்பாடுகள் மேலும் முற்றிப் பெரும் போராக வெடித்தது. இதன் ஒட்டுமொத்த விளைவாக எமது மக்கள் பெரும் அழிவுகளைச் சந்திக்க நேர்ந்தது. நாம் எமது இலட்சியத்தில் உறுதியாக நின்ற காரணத்தினால்தான் எமது இயக்கத்திற்கும் இந்திய அரசிற்கும் பிணக்கு ஏற்பட்டது. ’’
ஈழத் தமிழரின் விடுதலைப் போரை விடுதலைப் புலிகளே இன்று முன்னெடுத்து வரும் சூழலில்,இந்தியாவின் துரோகத்தை தோலிருத்துக் காட்டும் அதே சமயம் இந்தியாவின் நட்பை புலிகள் வேண்டி நிற்கிறார்கள். ஆனால் புலிகளை மோதி வென்று விடலாம் என்று இலங்கை அரசு நினைக்கும் என்றால் அதற்கும் இந்தியாவே மௌனசாட்சி. ஏனென்றால் வெல்ல முடியுமா? முடியாதா என்பதை இந்தியா அறியும். எண்பதுகளில் பிற்பகுதியில் இலங்கையில் நிலை கொண்டிருந்த இந்திய அமைதிப்படை புலிகளிடமிருந்து ஆயுதங்களைக் களைகிறோம் என்று 1987&அக்டோபர் பத்தாம் தேதி ‘ஆப்பரேஷன் பவான்’ என்ற பெயரில் புலிகள் மீது போர் தொடுத்தது. மூன்றாண்டுகலாம் நீடித்த இந்தப் போரில் ஒரு சின்ன கொரில்லா போராளிக் குழுவிடம் மோதி இந்தியா இழந்த ராணுவ வீர்களின் எண்ணிக்கை 1,500. சீனவுடனும் பாகிஸ்தானுடனும் இந்தியா நடத்திய பெரும் போரில் கூட இந்திய ராணுவத்தினரின் உயிரிழப்பு இந்த எண்ணிக்கையில் இருந்ததில்லை.
புலிகளை அழிக்கிறோம் என்று அன்றைக்கு இந்தியா வீசிய குண்டுகளும் சரி இன்றைக்கு இலங்கை வீசுகிற குண்டுகளும் சரி ஈழ மக்கள் மீதல்லவா? விழுகிறது. இல்லை இல்லை அவர்கள் புலிகள்தான் என்றால். தயவு செய்து நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். புலிகளையும் ஈழ மக்களையும் பிரித்துப் பார்க்க முடியாது. தமிழக முதல்வர் சொன்ன மாதிரி ‘‘புலிகள் மீது வீசப்படும் குண்டும் ஈழத் தமிழன் மேல் வீசப்படும் குண்டும் ஒன்றுதான்’’ குண்டு ஒன்றுதான் என்றால் உயிர்கள் மட்டும் வேறு வேறா?
இத்தனைக்கும் பிறகும் சர்வதேச நெருக்கடிகள் இந்தியாவின் நெருக்கடிகளையும் கடந்து ஈழப்போர் அடுத்த தலைமுறைக்கு கைமாறியிருக்கிறது. அதைத்தான் புலிகளின் தலைவர் இப்படிச் சொல்கிறார். ‘‘எத்தனை சவால்களுக்கும் முகம் கொடுத்தாலும் எத்தனை இடையூறுகளை எதிர்கொண்டாலும், எத்தனை சக்திகள் எதிர்த்து நின்றாலும் நாம் தமிழரின் சுதந்திர விடிவிற்காக தொடர்ந்து போராடுவோம். வரலாறு விட்ட வழியில் காலம் இட்ட கட்டளைப்படி அந்நிய சிங்கள ஆக்கிரமிப்பு அகலும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்.
மாவீரர் தின உரையில் பிரபாகரன். . .
எமது மாவீரர்கள் இந்த மண்ணை ஆழமாக நேசித்தார்கள். தாயக விடுதலைக்காகத் தமது கண்களைத் திறந்த கணம் முதல் நிரந்தரமாக மூடிய கணம் வரை அவர்கள் புரிந்த தியாகங்கள் உலக வரலாற்றில் ஒப்பற்றவை. எந்த ஒரு தேசத்திலும் எந்த ஒரு காலத்திலும் நிகழாத அற்புதமான அர்ப்பணிப்புக்களை எமது மண்ணிலே எமது மண்ணுக்காக எமது மாவீரர்கள் புரிந்திருக்கிறார்கள். இந்த மண்ணிலேதான் எமது மாவீரர்கள் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தார்கள். இந்த மண்ணிலேதான் அவர்களது பாதச்சுவடுகள் பதிந்திருக்கின்றன. அவர்களது மூச்சுக்காற்றும் கலந்திருக்கிறது. இந்த மண்ணிலேதான் எமது இனம் காலாதிகாலமாக,கொப்பாட்டன், பாட்டன் என தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வருகிறது.
சிங்களத்தின் கனவுகள் நிச்சயம் கலையும்
எமது இனச் சரித்திரம் நிலைபெற்ற இந்த மண்ணை ஆழமாகக் காதலித்து, இந்த மண்ணிற்காகவே மடிந்து, இந்த மண்ணின் மடியிலேயே எமது மாவீரர்கள் படுத்துறங்குகிறார்கள். அவர்கள் பள்ளி கொள்ளும் இந்த மண் எமக்கேயுரித்தான மண். எமக்கே சொந்தமான மண். இந்த வரலாற்று மண்ணை ஆக்கிரமித்து, அடக்கியாள சிங்களம் திமிர்கொண்டு நிற்கிறது; தீராத ஆசை கொண்டு நிற்கிறது. மனித துயரங்களெல்லாம் அடங்காத, அருவருப்பான ஆசைகளிலிருந்தே பிறப்பெடுக்கின்றன. ஆசைகள் எல்லாம் அறியாமையிலிருந்தே தோற்றம் கொள்கின்றன. ஆசையின் பிடியிலிருந்து மீட்சி பெறாதவரை சோகத்தின் சுமையிலிருந்தும் விடுபட முடியாது.
மண் ஆசை பிடித்து, சிங்களம் அழிவு நோக்கிய இராணுவப் பாதையிலே இறங்கியிருக்கிறது. உலகத்தையே திரட்டி வந்து எம்மோடு மோதுகிறது. இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கிறது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்.
எனது அன்பான மக்களே!
என்றுமில்லாதவாறு இன்று தமிழீழத் தேசம் ஒரு பெரும் போரை எதிர்கொண்டு நிற்கிறது. இப்போர் வன்னி மாநிலமெங்கும் முனைப்புப்பெற்று உக்கிரமடைந்து வருகிறது. சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கைகொண்டு நிற்பதால், இங்கு இப்போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் கண்டு வருகிறது. தமிழரின் தேசிய வாழ்வையும் வளத்தையும் அழித்து, தமிழர் தேசத்தையே சிங்கள இராணுவ இறையாட்சியின் கீழ் அடிமைப்படுத்துவதுதான் சிங்கள அரசின் அடிப்படையான நோக்கம்.
தனித்து நின்று போராடுகிறோம்
இந்த நோக்கத்தைச் செயற்படுத்தி விடும் எண்ணத்தில், தனது போர்த்திட்டத்தை முழுமுனைப்போடு முன்னெடுத்து வருகிறது. தனது முழுப் படை பலத்தையும் ஆயுத பலத்தையும் ஒன்றுதிரட்டி, தனது முழுத் தேசிய வளத்தையும் ஒன்றுகுவித்து, சிங்கள தேசம் எமது மண் மீது ஒரு பாரிய படையெடுப்பை நிகழ்த்தி வருகிறது. சிங்கள இனவாத அரசு ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை வீரர்கள் வீராவேசத்தோடு போராடி வருகின்றனர்.
உலகின் பல்வேறு நாடுகளும் தமிழ் இன அழிப்புப் போருக்கு முண்டுகொடுத்து நிற்க, நாம் தனித்து நின்று, எமது மக்களின் தார்மீகப் பலத்தில் நின்று, எமது மக்களின் விடிவிற்காகப் போராடி வருகிறோம்.
நெருக்கடிகள் நிறைந்த வரலாற்றுப் பயணம்
இன்று எமது விடுதலை இயக்கம் மிகவும் கடினமான, நெருக்கடிகள் நிறைந்த ஒரு வரலாற்றுப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. உலகின் எந்தவொரு விடுதலை இயக்கமுமே சந்தித்திராத பல சரிவுகளை, பல திருப்பங்களை, பல நெருக்கடிகளை நாம் இந்த வரலாற்று ஓட்டத்திலே எதிர்கொண்டிருக்கிறோம்.
எமது பலத்திற்கு மிஞ்சிய பாரிய சக்திகளையெல்லாம் நாம் எதிர்கொண்டிருக்கிறோம். வல்லமைக்கு மிஞ்சிய வல்லாதிக்க சக்திகளோடு நேரடியாக மோதியிருக்கிறோம். அலையலையாக எழுந்த எதிரியின் ஆக்கிரமிப்புக்களை எல்லாம் நேருக்கு நேர் நின்று சந்தித்திருக்கிறோம். பெருத்த நம்பிக்கைத் துரோகங்கள், பெரும் நாசச் செயல்கள் என எமக்கு எதிராகப் பின்னப்பட்ட எண்ணற்ற சதிவலைப் பின்னல்களை எல்லாம் தனித்து நின்று தகர்த்திருக்கிறோம். புயலாக எழுந்த இத்தனை பேராபத்துக்களையும் மலையாக நின்று எதிர்கொண்டோம். இவற்றோடு ஒப்புநோக்குகையில், இன்றைய சவால்கள் எவையும் எமக்குப் புதியவையும் அல்ல, பெரியவையும் அல்ல. இந்தச் சவால்களை நாம் எமது மக்களின் ஒன்றுதிரண்ட பலத்துடன் எதிர்கொண்டு வெல்வோம்.
இந்த மண் எங்களின் சொந்த மண்
சிங்கள தேசம் ஆக்கிரமித்து அடிமை கொள்ளத் துடிக்கும் இந்த மண் அதற்கு என்றுமே சொந்தமானதன்று. இந்த மண் எமக்குச் சொந்தமான மண்; பழந்தமிழர் நாகரீகம் நீடித்து நிலைபெற்ற மண்; வரலாற்றுக் காலத்திற்கு முற்பட்ட காலத்திலிருந்தே எமது மூதாதையர் வாழ்ந்து வளர்ந்த மண். இந்த மண்ணிலேதான் எமது ஆதிமன்னர்கள் இராச்சியங்களும் இராசதானிகளும் அமைத்து அரசாண்டார்கள். எமது இன வேர் ஆழவேரோடியுள்ள இந்த மண்ணிலே, நாம் நிம்மதியாக, கௌரவமாக, அந்நியரின் அதிகார ஆதிக்கமோ தலையீடுகளோ இன்றி, எமது வாழ்வை நாமே அமைத்து வாழ விரும்புகிறோம்.
ஆங்கிலேய காலனியாதிக்கம் அகன்று, சிங்கள ஆதிக்கம் எம்மண் மீது கவிந்த நாள் முதல், நாம் எமது நீதியான உரிமைகளுக்காக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் போராடி வருகிறோம். சுயநிர்ணய உரிமைக்கான எமது இந்த அரசியல் போராட்டம் கடந்த அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீடித்துச்செல்கிறது. இந்த நீண்ட படிநிலை வரலாற்றில், வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு வடிவங்களாக எமது போராட்டம் வளர்ச்சியும் முதிர்ச்சியும் கண்டு வந்திருக்கிறது.
ஆரம்பத்தில் அமைதியாக, மென்முறை வடிவில், ஜனநாயக வழியில் அமைதி வழிப்போராட்டங்கள் வாயிலாக எமது மக்கள் நீதிகேட்டுப் போராடினார்கள். அரசியல் உரிமை கோரி, தமிழ் மக்கள் தொடுத்த சாத்வீகப் போராட்டங்களைச் சிங்கள இனவாத அரசு ஆயுத வன்முறை வாயிலாக மிருகத்தனமாக ஒடுக்க முனைந்தது. அரச ஒடுக்குமுறை கட்டுக்கடங்காமல் உக்கிரம் அடைந்து, அதன் தாங்க முடியாத கொடுமைகளை எமது மக்கள் சந்தித்தபோதுதான், வரலாற்றின் தன்னியல்பான விதியாக எமது விடுதலை இயக்கம் பிறப்பெடுத்தது.
சிங்கள இனவாத அரசின் ஆயுதப் பயங்கரவாதத்திலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கவே நாம் ஆயுதமேந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். ஆயுத வன்முறை வழியை நாம் விரும்பித் தேர்வு செய்யவில்லை. வரலாறுதான் எம்மிடம் கட்டாயமாகக் கையளித்தது.