இலங்கையில் தமிழர்கள் சுயமரியாதையுடனும், பாதுகாப்புடனும் வாழ்வதற்கு உதவ வேண்டும் என்கிற நிலைப்பாட்டிலிருந்து இந்தியா பின் வாங்காது என்று பாரதப் பிரதமர் மன்மோகன் சிங், சமீபத்தில் தன்னை சந்தித்த இலங்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கைப் பிரச்சினையில் துவக்கத்திலிருந்தே தமிழ் மக்களின் நலன் காக்கப்படும் என்பது போன்ற பாசாங்கு வார்த்தைகளை கூறி பொய்யான வாக்குறுதிகளை கொடுப்பதை இந்திய அரசு தொடர்ந்து செய்து வந்திருக்கிறது. சமீபத்திய பிரதமரின் பேச்சும் இந்த ரகம்தான் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது.

இனத் தீர்வுக்கான பிரச்சினையில் "பூனைக்கும் தோழன் பாலுக்கும் காவல்' என்கிற இரட்டை நிலையைத்தான் இந்திய அரசு மேற்கொண்டு வந்திருக்கிறது. தமிழர் நலம், தமிழர் பாதுகாப்பு என்று இந்திய அரசு பேசும் பேச்சுகளெல்லாம் இந்திய நலன் சார்ந்தவைகள்தானே தவிர தமிழ் மக்களுக்கு இதன் மூலம் விடிவு ஏற்படும் என்கிற நோக்கத்தில் அமைந்தவை அல்ல. ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் மூலம் ஏற்படும் உடன்பாடுகள், வாக்குறுதிகள் என இனப்பிரச்சினையில் எதையுமே சிங்கள அரசு பின்பற்றியதில்லை; காப்பற்றியதில்லை. 1987ல் உருவான இலங்கை - இந்தியா அமைதி ஒப்பந்தம் தமிழர்களின் இனப் பிரச்சினையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் ஒரு ஷரத்தைக் கூட அது பின்பற்றியதில்லை.

rajiv_jayawardana_640

இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, பிரிட்டன், இஸ்ரேல், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் உளவுப் பிரிவு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் இலங்கையில் முகாமிட்டு இருப்பதை தடுக்க வேண்டும். வெளியுறவு மற்றும் இராணுவ விவகாரங்களில் மேற்கண்ட நாடுகளுடனான ஈடுபாட்டை இலங்கை தவிர்த்துக் கொள்ள வேண்டும். இலங்கையின் கப்பல் துறை முகங்கள், விமான நிலையங்கள் ஆகியவற்றை வெளிநாடுகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் வகையில் இலங்கை நடந்து கொள்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வாய்ஸ் ஆஃப் அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் இராணுவ காரணங்களுக்காக இலங்கையிலிருந்து பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றெல்லாம் ஷரத்துகள் சேர்க்கப்பட்டு அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவால் ஒப்புக் கொள்ளப்பட்டது.

இதற்கான உத்திரவாதங்களை ஜெயவர்த்தனேவிடமிருந்து பெற்றுக் கொண்டுதான் தமிழர்களுக்கான அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கினார் ராஜீவ் காந்தி. இந்த ஒப்பந்தம்தான் இலங்கையில் இனப்பிரச்சினைக்கு தீர்வு என்று பிரதமர் மன்மோகன் சிங் உறுதியாக நம்புகிறார். இலங்கை அதிபர் ராஜபக்சேவும் இந்த ஒப்பந்தப்படி தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கத் தயார் என்று முன்பு அறிவித்திருந்தார். இந்த அமைதி ஒப்பந்தத்தின் அடிப்படையில் உருவானதுதான் இலங்கை அரசு கொண்டு வந்துள்ள 13வது அரசியல் திருத்தச் சட்டம்.

இலங்கை ஒற்றையாட்சி முறையைக் கொண்டிருந்தாலும் இந்த 13வது அரசியல் சட்டத் திருத்தம் தமிழர்களுக்கு அரசியல் ரீதியான அதிகாரப் பகிர்வுக்கு ஓரளவு வழி செய்கிறது. கூட்டாட்சி என்ற இந்தியாவின் ஆட்சி முறையை ஏறக்குறைய பிரதிபலிப்பதாகவே இந்த 13வது சட்டத் திருத்த ஷரத்துகள் இருக்கின்றன.

13வது சட்ட திருத்தத்தின் முக்கிய நோக்கமே தமிழர்களுக்கென்று தனி மாகாணம் அமைப்பதே! தமிழர்கள் அதிகம் வாழ்கின்ற வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை ஒரே மாநிலமாகக் கருத வேண்டும் என்ற தமிழர் தரப்பின் கோரிக்கை 13வது சட்டத் திருத்தத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதே சமயம், கிழக்கில் பெரும்பான்மையாக முஸ்லிம் சமூகம் வாழ்ந்து வருவதால் அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை கருத்தில் கொண்டு வடகிழக்கு இணைந்து ஒரே மாநிலமாக ஒரு வருட காலம் செயல்படும் என்றும், தொடர்ந்து வட கிழக்கு ஒரே மாநிலமாக இருக்க வேண்டுமா அல்லது தனித்தனி மாகாணங்களாக செயல்பட வேண்டுமா என்பதை மக்கள் வாக்கெடுப்பு மூலம் முடிவு செய்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

தமிழர்களுக்கான இந்த மாகாணத்தில் ஒரு கவர்னர் இருப்பார். அவரை இலங்கை அதிபர் 5 வருட காலத்திற்கு நியமனம் செய்வார். மாகாண முதல்வரின் ஆலோசனைப்படி கவர்னர் செயல்படுவார். ஆனால் கவர்னருக்கான அதிகாரம் இந்திய கவர்னருக்கு இருப்பதைப் போன்ற அதிகாரம் கொண்டதாக வரையறுக்கப்பட்டது. மாகாணத்தின் ஆயுட்காலம் 5 வருடங்கள்தான். ஒரு முதல்வர், 4 பேருக்கு மிகாமல் அமைச்சர்கள் இருப்பார்கள். மாகாணங்களில் செயல்படும் கட்சிகளில் எந்தக் கட்சி 50 சதவிகித எம்.எல்.ஏ.க்களைக் கொண்டதாக உள்ளதோ அக் கட்சியின் தலைவரை முதல்வராக கவர்னர் நியமிக்க வேண்டும்.

தமிழர் மாகாண அதிகாரத்தைப் பொறுத்தவரை, இந்தியாவில் மத்திய அரசு இயற்றும் சட்டங்களுக்கு சென்ட்ரல் லிஸ்ட் என்றும், மாநில அரசு இயற்றும் சட்டங்களுக்கு ஸ்டேட் லிஸ்ட் என்று மத்திய மாநில அரசுகள் இணைந்து இயற்றும் சட்டங்களுக்கு கன்கரண்ட் லிஸ்ட் (ஒரே நேரத்தில் இணைந்து நடவடிக்கை எடுக்கும் வகையில் அமைந்தவை) என்றும் இருப்பதைப் போலவே இலங்கையிலும் சட்டத் திருத்தத்தில் இவையே ஏற்றுக் கொள்ளப்பட்டன.

இலங்கை அரசின் மத்திய லிஸ்டின்படி இராணுவம், தேசிய பாதுகாப்பு, வெளியுறவு, தகவல் ஒளிபரப்பு போன்றவை மத்திய அரசிடம் இருக்கும். கல்வி, உள்ளாட்சி, வீட்டு வசதி, சாலை வசதி, சுகாதாரம், கூட்டுறவு, சமூக சேவை, நீர்ப்பாசனம், வளர்ச்சித் திட்டங்கள் குறித்த திட்டமிடல்கள், சட்டம் ஒழுங்கை செயல்படுத்தும் போலீஸ் அதிகாரம் உள்ளிட்டவை மாகாண சபைக்கு வழங்கப்பட்டது.

ஆட்சிக் கலைப்பு விஷயத்தைப் பொறுத்தவரை இந்தியாவில் இருக்கும் 356வது அரசியல் சட்டப் பிரிவைப் போல, இலங்கையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டாலோ, மாகாண அரசு அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு நடக்கவில்லை என்று அதிபர் கருதினாலோ ஆட்சியைக் கலைக்கலாம்.

நீதித்துறையைப் பொறுத்தவரை மாகாணங்களுக்கு தனியாக உயர் நீதிமன்றம் இருக்கும். நீதிபதிகளை இலங்கை தலைமை நீதிபதி நியமிப்பார். இந்தியாவில் மாநில அரசுகளுக்கு தலைமைச் செயலாளர் இருப்பதைப் போன்று இலங்கை மாகாணத்திலும் தலைமைச் செயலாளர் இருப்பார். இந்தியாவில் மாநில அரசு தலைமைச் செயலாளர்களை நியமித்துக் கொள்ள முடியும். ஆனால் இலங்கையில் மாகாணத்திற்கு தலைமைச் செயலாளரை, சம்மந்தப்பட்ட மாகாண முதல்வரின் ஒப்புதலுடன் அதிபரே நியமிப்பார். மேலும், தமிழ் ஆட்சி மொழியாக ஏற்கப்படும்.

மேற்கண்ட இவை 13வது சட்டத் திருத்தத்தில் இணைக்கப்பட்ட முக்கிய ஷரத்துகளின் சுருக்கம்தான். இப்படி இன்னும் தமிழர்களுக்கு சில அதிகாரங்களை வழங்கும் ஷரத்துகள் உள்ளன. இவற்றைப் பார்க்கும்போது ஒரு விஷயம் பளிச்சென புரிந்து விடும். இந்த 13வது சட்டத் திருத்தங்களை வரைவு செய்து இலங்கை அரசிடம் இந்தியாதான் கொடுத்திருக்கிறது என்பதுதான் அது! அல்லது இந்தியாவில் இயங்கும் இலங்கைத் தூதரகம் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை அப்படியே ஜெராக்ஸ் எடுத்து இலங்கையிடம் கொடுத்திருக்கிறது என்றும் நம்பலாம்.

இந்த சட்டத் திருத்தம் - புலிகளுடனான பேச்சுவார்த்தைகளின்போதே நிறுவப்பட்டு, இதிலுள்ள நிறைகுறைகள் திறந்த மனதோடு இரு தரப்பிலும் பேசப்பட்டு சட்டத் திருத்தம் முழுமை பெற்றிருந்தால் தமிழர்களுக்கு இந்நேரம் அதிகாரப் பகிர்வு கிடைத்திருக்கும்.

ஆனால் இலங்கை அரசு இந்த சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதில் முனைப்பு காட்டவில்லை. இதற்கு காரணம், புலிகளை முற்றாக ஒழித்து விட்டுத்தான் இதனை அமுல்படுத்துவேன் என்ற கொள்கையில் ராஜபக்சே இருந்ததுதான் என்கின்றனர் இனத் தீர்வு பிரச்சினையை அவதானித்து வரும் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

13வது சட்டத் திருத்தத்தை அமுல்படுத்தி புலிகளை ஜனநாயகப் பாதைக்கு திசை திருப்பும் நல்ல வாய்ப்பு இருந்தும், சிங்களப் பேரினவாதத்தின் காரணமாக அந்த வாய்ப்பை நழுவ விட்டது சிங்கள அரசு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இலங்கை அரசு இதுவரை 13வது சட்டத் திருத்தத்தை அமுல்படுத்தாமல் இருப்பது அதன் மீதான நம்பிக்கையின்மையை இன்றுவரை தமிழ் மக்கள் மத்தியில் உருவாக்கி வைத்திருக்கிறது.

இதனை, சமீபத்தில் இந்தியாவிற்கு வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திப்பதற்கு முன் இலங்கை ஊடகங்களுக்கு பேட்டியளித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனின் பேச்சும் மெய்ப்பிப்பதாக உள்ளது.

“13வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற தயார் என்று அரசு கூறவில்லை. 13வது சட்டத் திருத்தத்தை பொருத்தவரை நியாயமான, ஏற்றுக் கொள்ளக் கூடிய அதிகாரப் பகிர்வை ஏற்படுத்தி அரசியல் தீர்வை நோக்கி நகர்ந்தால் அதை ஏற்றுக் கொள்ளலாம்...” என்று தெரிவித்துள்ளார் சம்பந்தன்.

இதற்கிடையில் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை பாராளுமன்ற தேர்வுக் குழுவை ஏற்படுத்தியிருக்கும் ராஜபக்சே தமிழ் தேசியக் கூட்டணி அதில் இணைய வேண்டும் என்பதில் முனைப்புடன் செயல்படுகிறார்.

“நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்தக் கூடிய செயல் திட்டத்துடன் நகர்வதாக இருந்தால் பாராளுமன்ற தேர்வுக் குழுவில் இடம் பெறுவோம். இரு தரப்பும் முதலில் தீர்வு திட்டம் குறித்துப் பேசி, உடன்பாடு கண்டு அதனை பாராளுமன்ற தேர்வுக் குழுவிற்கு கொண்டு செல்லலாம் என்று தமிழ் கூட்டமைப்பின் நிலைப்பாடு அரசுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதன்படி அரசு நடந்து கொள்ளவில்லை. பாராளுமன்ற தேர்வுக் குழுவில் நடைபெறும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடியலாம் என்று கருதுகிறோம்...” என பாராளுமன்ற தேர்வுக் குழுவில் தாங்கள் இடம் பெறாததற்கு காரணம் கூறுகிறார் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன்.

ஆனால், ராஜபக்சேவோ, தமிழ் கூட்டமைப்பை பாராளுமன்ற தேர்வுக்குழுவில் இடம் பெறச் செய்து விட வேண்டும் என்பதில் மும்முரமாக இருப்பது, சம்மந்தன் கூறுவதைப்போல் ஏமாற்றும் நோக்கம் கொண்டதாகத்தான் கருத வேண்டியுள்ளது.

தமிழ் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இந்தியப் பிரதமரைச் சந்திப்பதற்கு சில தினங்களுக்கு முன் ராஜபக்சே சந்தித்து விட்டுப் போனார். தமிழ் கூட்டமைப்பை பாராளுமன்றத் தேர்வுக் குழுவில் இடம்பெற முயற்சி செய்ய வேண்டும் என்று பிரதமரிடம் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அதோடு, முன்னதாக சுஷ்மா சுவராஜ் தலைமையில் அரசியல் குழு இலங்கைக்கு சென்றபோது, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீமை பிரத்யேகமாக சந்தித்த சுஷ்மா, “தமிழ் தேசியக் கூட்டமைப்பை பாராளுமன்ற தேர்வுக் குழுவில் இடம் பெற நீங்கள்தான் முயற்சிக்க வேண்டும்” என கேட் டுக் கொண்டிருந்தார். இவையெல்லாம் இனப்பிரச்சினைக்கு பாராளுமன்ற தேர்வுக் குழு மூலம்தான் தீர்வை எட்ட முடியும் என்று ராஜபக்சே உறுதியாக நம்புவதை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆனால் இந்த தேர்வுக் குழுவை தமிழ் கூட்டமைப்பு நம்புவதாக இல்லை.

இந்த தேர்வுக் குழுவின் மூலம் எதிர்பார்த்த அதிகாரப் பகிர்வு கிடைக்காமல் நாங்கள் ஏமாற்றப்படுவோம் என்று கூட்மைப்பு நம்புவதால் அது பின் வாங்குகிறது. கூட்டமைப்பு இப்படி நம்புவதில் நியாயம் உள்ளது. இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வாக அமையும் வகையிலுள்ள 13வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற தயாராக இல்லாத ராஜபக்சே அரசு பாராளுமன்றத் தேர்வுக் குழுவை பிடித்து தொங்கிக் கொண்டிருப்பது தமிழர்களை ஏமாற்றத்தான் என்பதற்கு அவர் சமீபத்தில் கொண்டு வந்திருக்கும் திவிநெகும சட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் சீர்திருத்தச் சட்டம் சான்றளிப்பதாகவே உள்ளது.

manmohan_eelam_mps_640

“திவிநெகும சட்டம் மாகாண சபைகளின் கீழ் வரும் நிதி அதிகாரங்களை பறிக்கும் வகையில் உள்ளது, உள்ளாட்சி தேர்தல் திருத்தச் சட்டம் - உள்ளாட்சி மன்றங்களில் விகிதாச்சார தேர்தல் முறையில் தேர்வு செய்யப்படும் பிரதிநிதிகளை குறைக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் வடகிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் தங்கள் அரசியல் பிரதிநிதிகளை இழக்கும் சூழ்நிலை இதனால் உருவாகும்...” என்கிறார் ஜனநாயக மக்கள் முன்னணி கட்சித் தலைவர் மனோ கணேசன்.

வடகிழக்கில் பல ஆண்டுகளாகவே சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது சிங்கள அரசு. இதன் மூலம் தமிழ் மற்றும் முஸ்லிம்கள் அரசியல் அதிகாரம் பெறமுடியாத சூழ்நிலையை அது உருவாக்கப் பார்க்கிறது. ஒருவேளை 13வது சட்டத் திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டாலும் வட கிழக்கில் நிகழும் சிங்கள மக்களின் அதிவேக குடியேற்றங்கள் மூலம் காலப் போக்கில் வடகிழக்கின் அதிகாரங்களும் சிங்களர்களின் கைகளுக்கு போகும் வகையில் திட்டமிட்டே இலங்கை அரசு செயலாற்றி வருகிறது என்பதை திவிநெகும போன்ற சட்டங்கள் மூலம் அது மறைமுகமாக உணர்த்துகிறது.

2012ம் ஆண்டின் இலங்கை மக்கள் தொகை கணக்கெடுப்பு அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கிழக்கு மாகாணத்தில் சிங்களர்கள் 22.86 சதவிகிதம் இருப்பதாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இது கடந்த காலங்களில் கிழக்கில் சிங்களக் குடியேற்றம் அதிகரித்திருப்பதற்கு சான்று. தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு வேண்டும் என்ற கருத்து வலுவடைந்து வரும் நிலையில் சிங்கள அரசும் அதற்கேற்ற அரசியல் சதித் திட்டங்களை தீட்டத் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில்தான் தமிழர்கள் சுயமரியாதையுடனும், பாதுகாப்புடனும் வாழ வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியுடன் இருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார். தீர்வுத் திட்டத்திற்கு ஏதுவானது என்று பிரதமர் நம்புகிற 13வது சட்டத் திருத்தத்தை அமுல்படுத்த உரிய அழுத்தம் தராமல் வெறும் வாயால் தமிழர்கள் நலன் பற்றி பிரதமர் பேசுவது கண்துடைப்பு தான்.

இந்தியாவின் உறுதிப்பாடு எந்த அளவில் இருக்கும் என்பதை சிங்கள அரசு நன்கு உணர்ந்து இருப்பதால்தான், இந்தியா எங்களை ஒன்றும் செய்ய முடியாது என்று இலங்கை ஊடகத்துறை அமைச்சரால் பேச முடிகிறது. இந்திய அரசு விரும்பும் தீர்வுத் திட்டத்தை சிங்கள அரசே ஒப்புக் கொண்டாலும் அதன்படி அது நடந்து கொள்ளுமா என்பது உறுதி செய்ய முடியாதது!

அமைதி ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்ட ஷரத்துகளை மீறி சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் போன்ற நாடுகளுடன் இராணுவ ரீதியிலான தொடர்புகளை வைத்திருக்கிறது இலங்கை. இஸ்ரேலுக்கு சில மாதங்களுக்கு முன் தனது நாட்டில் தூதரகத்தையே ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேற்கண்ட நாடுகளின் இராணுவ மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் இலங்கையில் முகாமிட அது அனுமதிக்கிறது. கப்பல் துறைமுகங்கள் கூட சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் பயன்படுத்திக் கொள்ள அனுமதித்தது இருக்கிறது.

ஆக, அமைதி ஒப்பந்தத்தையே அலட்சியப்படுத்தும் சிங்கள அரசு, இனப் பிரச்சினைக்காக இந்திய அரசு விரும்பும் தீர்வுத் திட்டத்தை செயல்படுத்தும் என்று எப்படி நம்ப முடியும்? அப்படியே ஒப்புக் கொண்டாலும் அதில் இலங்கை தமிழர்களின் நலனைத் தாண்டி இரு நாடுகளின் நலனே மிகைத்திருக்கும்.

இந்தியாவால் இலங்கை மீது அழுத்தம் கொடுத்து எதையும் சாதித்து விட முடியாது. இந்தியாவின் நிர்பந்தங்கள் ஏற்படுமானால் - சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுடன் நெருக்கம் காட்டி இந்தியாவை பணியச் செய்யும் கலையை கற்று வைத்திருக்கிறது இலங்கை. அதனால் தான் இந்தியாவின் பேச்சை தொடர்ந்து அது அலட்சியப்படுத்தியே வருகிறது.

ஆக, இனப் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டங்களில் சிங்கள அரசின் கைதான் ஓங்கியிருக்கிறது. இந்தியாவோ, தமிழர் நலன்... தமிழர் நலன் என்று பேசிக் கொண்டே இருக்கிறது. இப்படி செல்வதைத் தாண்டி இந்தியாவால் தமிழர்களுக்கு வேறென்ன செய்துவிட முடியும்?

13வது சட்டத் திருத்தத்தை இல்லாமல் ஆக்க வேண்டும் - கோத்தபய ராஜபக்சே

இலங்கையில் யுத்த முடிவுக்குப் பின்னரான அபிவிருத்தி திட்டங்களுக்கு 13வது சட்டத் திருத்தம் இடையூறாக இருப்பதால் அதனை இல்லாமல் ஆக்க வேண்டும் அல்லது அதில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்கிறார் அதிபர் ராஜபக்சேவின் சகோதரரும், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தபய ராஜபக்சே.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய கோத்தபய, “மக்கள் நலன் தொடர்பான செயல் திட்டங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்போ அதன் ஆதரவாளர்களோ தலையிடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. 13வது சட்டத் திருத்தமும், 2002 பிப்ரவரியில் நார்வே அரசாங்கத்தின் ஏற்பாட்டின்படி கையெழுத்திடப்பட்ட போர் நிறுத்த உடன்படிக்கையும் ஒரே மாதிரியானவை. இவை விடுதலைப் புலிகள் உள்ளிட்ட தமிழர்களுக்குத்தான் ஆதரவளிக்கின்றன. 13வது சட்டத் திருத்தத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டும் அல்லது அதை அழித்தொழிக்க வேண்டும். இதனை செய்ய அரசாங்கம் தவறினால் தற்போதைய நெருக்கடிகள் தேசிய பாதுகாப்பின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும்...” என தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசில் அங்கம் வகிக்கின்ற - சிங்களக் கட்சியான ‘ஜாதிக ஹெல உறுமய' கட்சியின் செய்தித் தொடர்பாளரான நிஷாந்த் ஸ்ரீவர்ணசிங்கேவோ, “13வது சட்டத் திருத்தம் இலங்கையை பீடித்துள்ள புற்றுநோயாகும். உடனடியாக இதற்கு தீவிர சிகிச்சையளிக்க வேண்டும். இலங்கையின் ஒற்றையாட்சிக்கும், இறையாண்மைக்கும் ஆபத்தான 13வது திருத்தத்தை இந்தியாவின் தேவைக்காக அமுல்படுத்துவதென்பது ஆபத்தையே ஏற்படுத்தும். 1987ல் இந்தியாவால் பலாத்காரமாக எங்கள் மீது திணிக்கப்பட்டதுதான் 13வது திருத்தச் சட்டம். எங்கள் நாட்டு மக்கள் மத்தியில் இதற்கு ஆதரவில்லை. இது அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் பல்வேறு பிரச்சினைகளை தோற்றுவிக்கும் என்பதால்தான் நாட்டின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபய இதனை ரத்து செய்ய வேண்டும் என்கிறார்..” என தெரிவித்துள்ளார்.

சிங்கள அரசும், சிங்களக் கட்சிகளும் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கக் கூடாது என்பதில் குறியாக, ஒன்றுபட்டு நிற்பதைத்தான் இவர்களின் பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன.

- ஃபைஸல்

Pin It