பொதுவாக இடைத்தேர்தல் முடிவு என்பது இறந்துபோன ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வின் இடத்தை மற்றொரு ஆளும்கட்சி உறுப்பினரைக் கொண்டு நிரப்புவதாகவும், எதிர்கட்சி வென்ற தொகுதியில் இடைத்தேர்தல் என்றால், ஆளும்கட்சியின் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் ஒன்றை உயர்த்துவதாகவும் தான் உள்ளது.

இடைத்தேர்தல் வெற்றி என்பது ஆளுங்கட்சிக்கு உறுதி செய்யப்பட்ட ஒன்று என்றாலும் விதிவிலக்காக எதிர்கட்சிகள் வென்ற வரலாறும் உண்டு.

திமுக ஆட்சியில் இருந்த கால கட்டத்தில் நடந்த மதுரைக் கிழக்கு மற்றும் மருங்காபுரி இடைத்தேர்த லில் எதிர்கட்சியான அதிமுக வெற்றி வாகை சூடியது. இடைத் தேர்தலாக இருந்தாலும், அது பொதுத் தேர்தலாக இருந்தாலும் வென்றவர்கள் தங்களின் ஆட் சிக்கு அல்லது கட்சிக்கு மக்கள் தந்த அங்கீகாரம் என்று மகிழ்வ தும், தோற்ற கட்சிகள், "பணபல மும் - படைபலமும்' வென்று விட்டது என்று முகாரி பாடுவதும் அரசியல் அரங்கில் வழக்கமான ஒன்றுதான்.

அந்த அடிப்படையில் சங்கரன் கோவில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான அதிமுக பெரு வாரியான வாக்குகள் வித்தியாசத் தில் வெற்றி பெற்றதோடு, திமுகவை டெபாசிட் இழக்கச் செய்து சாதனை படைத்துள்ளது.

நாக்கை துருத்திக் கொண்டு மோதிப் பார்ப்போமா என சினிமா வசனம் பேசிய எதிர்கட்சித் தலை வரின் கட்சியும் வழக்கம்போல டெபாசிட் இழந்து காணாமல் போயுள்ளது. இந்நிலையில், இந்த தேர்தல் முடிவு குறித்து கருத்துச் சொல்லியுள்ள விஜயகாந்தும் கருணாநிதியும் சில "காமெடி' வார்த்தை களை உதிர்த்துள்ளனர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சங்கரன்கோவில் இடைத்தேர்தல் என்பது கரன்சிக்கும், கட்சிகளுக் கும் இடையே நடந்த போட்டியா கும்'' என்று கூறியுள்ளார். இதே விஜயகாந்த் தேர்தல் பிரச்சாரத்தின் போது, "இந்த தேர்தல் ஆளும் கட்சிக்கும் மக்களுக்கும் இடையே நடக்கும் தேர்தல்'' என்று பேசினார்.

அதாவது இந்த தொகுதியில் மோதுவது ஆளும்கட்சியும் மக்களும்தான் என்று சொன்னார். விஜயகாந்தின் கூற்றுப்படி ஆளும் கட்சி ஜெயித்து விட்டது. அப்படி யானால் குஷ்பு பாணியில் இது "மக்களின் தோல்வி' என்று சொல் வாரா?'' ஆளும் கட்சி பணத்தை வாரி இறைத்தது.

எதிர்க்கட்சிகள் அதற்கு ஈடுகொ டுக்க முடியவில்லை. வாக்காளர் களை சந்தித்து நேரில் வாக்குகள் தான் கேட்க முடிந்தது. 32 அமைச் சர்களும் தங்கள் பரிவாரங்கள் புடைசூழ அங்கேயே முகாமிட்டு தேர்தல் வேலைகளில் ஈடுபட்ட னர்'' என்றெல்லாம் விஜயகாந்த் சொல்வது தோற்றபின் சொல்லும் வழக்கமான சுலோகமாகும்.

ஆளும்கட்சி பணத்தை வாரி இறைத்தது என்று சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் விஜயகாந்த் கட்சி மீது மக்களுக்கு உண்மையான நம் பிக்கை இருப்பின் பணநாயகத்தை மீறி இவரது கட்சி வெற்றி வகை சூடியிருக்குமே? நான்காவது இடத்திற்கு போகவேண்டிய நிலை வந்திருக்காதே!

சரி, இவர்தான் அரசியலுக்கு புதியவர் இப்படி ஏதோ புலம்புகிறார் என்றால், அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட பகுத்தறிவுவாதியான திமுக தலைவர் கலைஞர் இவரையும் தாண்டி தமாஷ் செய்கிறார்.

அதாவது, "சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதியில் 1991ம் ஆண்டு முதல் அதிமுக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறதாம். எனவே இந்த முறையும் வெற்றி பெறும் என்று இவருக்குத் தெரியு மாம். ஆனால் ஜனநாயகக் கட மையாற்றத்தான் தனது வேட்பா ளரை களமிறக்கினாராம்.

தோற்போம் என்று தெரிந்தே ஒருவரை நிறுத்தி, பல கோடிகளை வீண் விரயம் செய்வதைவிட, தொகுதியை அதிமுகவுக்கே விட்டுக் கொடுத்து விட்டு தேர்தலிலிருந்து ஒதுங்கியிருந்தால் கலைஞரின் கண்ணியம் உயர்ந்திருக்குமே!

நீச்சல் தெரியாத ஒருவன் மூழ்கித்தான் போவோம் என்று தெரிந்தே கடலில் குதிப்பானா? அப்படி குதித்தால் அதற்கு பெயர் பகுத்தறிவா?

இந்த தொகுதியில் 1991ம் ஆண்டு முதல் தொடர்ந்து அதிமுக வெற்றி பெற்று வருவதால் அதிமு கவை வெல்ல முடியாது என்று கருணாநிதி சொல்வதும் ஒருவகை அரசியல் பிழைதான்.

ஏனென்றால் அதிமுகவின் வெற்றி வரலாற்றை 1991லிருந்து பார்த்தவர், அதற்கு முந்தைய தேர்தல் முடிவுகளை கவனிக்கத் தவறி விட்டார். தவறி விட்டார் என் பதைவிட வேண்டுமென்றே தவற விட்டார் என்பதுதான் சரியானது.

ஏனென்றால், சங்கரன் கோவில் தொகுதி இதுவரை 13 தேர்தல் களை சந்தித்துள்ளது. ஆரம்பத்தில் காங்கிரஸ் 2 முறை இந்த தொகுதி யில் வெற்றி பெற்றது. அதன்பிறகு நடந்த 3 தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றது. 1980, 84-ல் தொகுதி அதிமுக வசமானது. 1989-ல் நடந்த தேர்தலில் மீண்டும் திமுக வெற்றி பெற்றது.

1991, 1996, 2001, 2006, 2011 ஆகிய 5 தேர்தல்களிலும் தொடர் ந்து அதிமுகவே வென்றுள்ளது. இப்போது இடைத் தேர்தலிலும் 6-வது முறையாக தொகுதியை அதி முக தக்கவைத்துக் கொண்டுள்ளது. 1980, 84-ல் இத்தொகுதியில் வென்ற அதிமுகவை, 89 தேர்தலில் திமுக தோற்கடிக்க முடியும் என்றால், 2012 தேர்தலில் தோற்கடிக்க முடியாதா என்று யாரேனும் கேட்பார்கள் என்பதனால்தான் பழைய வரலாற்றை மறைத்துள்ளார் கலைஞர்.

மேலும், இதே சங்கரன்கோவில் தொகுதியில், கடந்த முறை தி.மு.க. வேட்பாளர் 61,902 வாக்குகள் பெற்றதற்கு மாற்றமாக இந்த இடைத் தேர்தலில் 26,212 வாக்கு களை மட்டுமே பெற்றுள்ளார்.

அதாவது 35,690 வாக்குகள் திமுகவிற்கு இந்த ஒன்பதே மாதங்களில் என்ன காரணத் தாலோ குறைந்து விட்டன. அல் லது குறைக்கப்பட்டு விட்டன என்று கூறும் கலைஞர், அவ்வாறு வாக்குகள் குறைந்ததா? குறைக்கப் பட்டதா? என்பதை ஆய்வு செய்து தனது கட்சியை தூக்கி நிறுத்த முயசிக் கட்டும்.

அதை விட்டுவிட்டு தோல்வியை மறைக்க இவ்வாறெல்லாம் அறிக்கைவிடுவது அவரது கட்சிக்குத்தான் பின்னடைவாக அமை யும். ஏனென்றால் தொடர்ந்து அதிமுக வென்ற தொகுதிகளில் மீண்டும் அக்கட்சிதான் வெல்லும் என்று தலைவரே சொல்லிவிட்டார் என்று உடன்பிறப்புகள் தேர்தல் களப்பணியாற்ற முன்வர மாட்டார் கள் என்பதை கலைஞர் கவனத்தில் கொள்வது நல்லது.

அடுத்து அதிமுக தலைவியும் முதல்வருமான ஜெயலலிதா, இந்த தேர்தல் வெற்றியை தனது ஆட்சிக்கு கிடைத்த அங்கீகாரம் என நினைத்து இருமாந்துவிடக் கூடாது. அசுர பலத்தோடு இருக்கும் ஆளும்கட்சிக்கு வாக்களித்தால்தான் தொகுதிக்கு ஏதேனும் சில நல்லது நடக்கும் என மக்கள் நினைத்து இந்த வெற்றியை வழங்கியிருக்கலாம்.

எனவே முதல்வர் செய்ய வேண்டியது, தனது இந்த ஒன்பது மாத ஆட்சியில் மக்கள் அதிருப்தியை பெற்ற விசயங்களை ஆய்வு செய்து அதை இனிவரும் காலங்க ளில் தவிர்க்க வேண்டும்.

அதோடு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதுடன், தண்ணீர், மின்சாரம், போன்ற அத் தியாவசிய பிரச்சினைகளில் கூடு தல் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் அவர் கவனிக்க வேண்டிய அம்சங்களாகும்.

இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இடைத்தேர்தல்களை ஒழித்து அந்த தொகுதியில் ஏற்கனவே வென்ற கட்சியே உறுப்பினரை தேர்வு செய்யும் அதிகாரத்தை வழங்கிவிட்டு, மற்ற கட்சிகள் ஒதுங்கிக் கொண்டால் கட்சிகளுக்கு மட்டுமன்றி, நாட்டுக்கும் நல்லது; செலவும் மிச்சமாகும். 'டென்ஷனும்' இருக்காது.

இதுபோன்ற அறிக்கைகளை விட்டு கிச்சுகிச்சு மூட்டவேண்டிய அவசியமும் இருக்காது என்பது தான் நமது கருத்து. அரசியல் கட்சிகள் உணருமா?

- தரசை தென்றல்

Pin It