“நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில்தான் மெகா கூட்டணி" - கறாராகச் சொல்லிவிட்டார் எடப்பாடி.
“அ.தி.மு.க. தலைமையில்தான் கூட்டணி" - ஆமாஞ்சாமி என்கிறார் அண்ணாமலை.
“பா.ஜ.க.வோட நாங்கதான் கூட்டணி வைப்போம், மோடிதான் அடுத்த பிரதமர்" - ஓ.பி.எஸ் அணியின் கோவை செல்வராஜ் பிடிவாதம் இது.
பி.எஸ்.வீரப்பா பாணியில் சொன்னால் “ சபாஷ்! சரியான போட்டி!”
ஏன் இந்தப் போட்டி? எல்லாம் 2024, நாடாளுமன்றத் தேர்தலுக்காகத்தான்.
எதற்கு இந்தப் போட்டி?தி.மு.க ஒரு தீய சக்தி. சட்டசபையில் ஒரு துணைத் தலைவர் நாற்காலியைக் கூட எங்களுக்குக் கொடுக்கவில்லை. ஸ்டாலின்தான் தடுத்தார். அவர் ஓ.பி.எஸ் கூட அரை மணி நேரம் பேசிவிட்டார். நான் பொதுச் செயலாளர், அடுத்த முலமைச்சர் நான்தான். அதனால் தி.மு.கவைத் தோற்கடிக்க ‘மெகா’ கூட்டணி அமைப்பேன் - இது எடப்பாடியின் கொள்கைப் பிரகடனம்.
அ.தி.மு.க. தலைமையில் ‘தான்’ கூட்டணி. ஆனால் முடிவு ‘மேல’ இருந்துதான் வரும். மோடிஜிதான் பிரதமர். அதற்கான ‘ஆடு’களம் அமைப்போம்! - தெளிவாகச் சொல்லிவிட்டார் அண்ணாமலை.
“இந்த ஆட்டுக்கும்
நம்ம நாட்டுக்கும்
பெருங் கூட்டிருக்குது கோனாரே
இதை ஓட்டி ஓட்டித் திரிபவர்கள்
ஒரு முடிவுங் காணாரே “ - எவண்டா இந்த நேரம் பார்த்து இந்தப் பாட்டைப் பாடுறான்!
இல்லல்ல! நாங்கதான் அ.தி.மு.க! எடப்பாடி துரோகம் செஞ்சுட்டாரு, அவர் கூட யாருமே இல்ல. தி.மு.க.வைத் தோற்கடிக்க நாங்க பா.ஜ.க கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் மோடிதான் பிரதமர் - ஓ.பி.எஸ் குரலாகக் கோவை செல்வராஜின் கொள்கைப் பிரகடனம் இது.
அ.தி.மு.க காரர்(1) : ஆமா, இது அசெம்பிளி எலக்சனா, இல்ல பார்லிமென்ட் எலக்சனா?
அ.தி.மு.க.காரர் (2): அட எதா இருந்தா என்னப்பா! 2024 தேர்தல்ல தி.மு.க.வ சுத்தமா தோற்கடிச்சா சரிதான். என்ன சொல்ற?
அப்போது அந்தப் பக்கம் வந்த திருமூலரை அண்ணாமலை, எடப்பாடி, ஓ.பன்னீர் செல்வம் ஆகிய மூவரும் வணங்கி ‘அருளாசி ‘ கேட்கிறார்கள். திருமூலர் வழங்கிய ‘திருமந்திர (ம்)’ ஆசி, இதுதான்:
“குருடும் குருடும் குருட்டாட்டம் ஆடி
குருடும் குருடும் குழி வீழுமாறே “
(எனக்கும் கொஞ்சம் பொழுது போகணுமில்ல. அதுதான், ஒரு கற்பனைய ஓடவிட்டேன்)
- எழில்.இளங்கோவன்