கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அரசு பயங்கரவாதம் என்பது அரசே மக்கள்மீது ஏவிவிடும் அடக்குமுறையாகும். அடக்குமுறை ஒன்றே தனது வழிமுறையாக அரசு மாற்றிக் கொள்கிறது.

இந்தியாவில் 1947க்கு பிறகு அதிகாரத்தில் அமர்ந்த பெருமுதலாளிகள் சாதி - நிலவுடைமையை முற்றிலுமாக அழிக்காமல் சமரசம் செய்துகொண்டு நீடிக்கச் செய்தனர். இப்போக்கு கிராமப்புற பொருளாதாரத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியது. பசுமைப் புரட்சிகள் மூலம் இந்நெருக்கடியை தணிக்க முயற்சி செய்தனர். ஆனால் தணியவில்லை.

1967இல் நக்சல்பாரியில் ஆயுதப் போராட்டமாக வெடித்தது. நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதை ஒட்டி உருவான இ.க.க. (மா.லெ) கட்சி செயல்பட்ட இடங்களில் கடுமையாக அடக்குமுறை ஏவப்பட்டது. ஆளும் வர்க்கங்களும் எழுபது காலக் கட்டத்தை சிவப்பு அபாயமாக அலறி அறிவித்தன.

பின்னர், பங்களாதேஷ் விடுதலைப் போராட்டத்தை ஒட்டி இந்தியா தலையிட்டு இந்தியா - பாகிஸ்தான் யுத்தம் வெடித்தது. இது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடியை உருவாக்கியது. நாடெங்கும் தொழிலாளர் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, உலகிலேயே மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இரயில்வே போராட்டங்கள் தீவிரமாக நடந்தன.

மறுபக்கம் ஆளும்வர்க்க முரண்பாடுகள் கூர்மையடைந்தன. பாசிச இந்திராகாந்திக்கெதிராக ஜெயபிரகாஷ் நாராயணின் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் அணி திரண்டன. இந்திராகாந்தி கடும் அடக்குமுறையை ஏவினார். 1978இல் அவசர நிலை (எமர்ஜென்சி) கொண்டு வரப்பட்டது. நாடெங்கும் எதிர்க்கட்சிகள், ஜனநாயக சக்திகள், புரட்சியாளர்கள் என ஆயிரக்கணக்கில் “மிசா” சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

1980இல் நதிநீர் பங்கீட்டிற்காக பஞ்சாப் விவசாயிகளின் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்து ஆயுதப் போராட்டமாக மாறியது. இந்திராகாந்தி பாசிச அரசு பொற்கோவிலில் இராணுவத்தை அனுப்பி பிந்தரன்வாலே தலைமையிலான நூற்றுக்கணக்கான சீக்கியர்களைக் கொன்றது. பஞ்சாப் முழுவதும் அடக்குமுறைக் கட்டவிழ்த்துவிடப்பட்டது. தேசிய பாதுகாப்புச் சட்டம் (N.S.A) கொண்டுவரப்பட்டது.

தமிழகத்தில் கபடவேடதாரி எம்.ஜி.ஆர் ஆட்சியில் குண்டர் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. குண்டர் தடுப்புச் சட்டமும் தேசிய பாதுகாப்புச் சட்டமும் முதலில் தொழிற்சங்கத் தலைவர்கள் மீதும் புரட்சியாளர்கள் மீதும் சேலம் - தருமபுரியில் ஏவப்பட்டது.

நக்சலைட் ஒழிப்பு என்ற பெயரில் வடாற்காடு - தருமபுரி மாவட்டங்களில் வெறிநாய் தேவாரம் தலைமையில் தோழர் பாலன், கண்ணாமணி உட்பட 26பேர் படுகொலை செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டத்தை எம்.ஜி.ஆர். அடக்குமுறைக் களமாக மாற்றினர். பின்னர் கருணாநிதி, ஜெயலலிதா என்று இன்றுவரை தருமபுரியில் அடக்குமுறை தொடர்கிறது.

1991க்கு பிறகு இஸ்லாமிய பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரில் தடா கருப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கில் அப்பாவி மக்கள் பல மாநிலங்களில் கைது செய்யப்பட்டனர். தமிழ்நாட்டிலும் புரட்சியாளர்களும் விடுதலைப்புலிகளும் கைது செய்யப்பட்டனர்.

இச்சட்டம் கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. இதனால் அய்க்கிய முன்னணி அரசு இச்சட்டத்தை நீக்கியது.

பின்னர் பி.ஜே.பி. வாஜ்பாய் அரசு பொடா கருப்புச் சட்டத்தை கொண்டு வந்தது. தமிழகத்தில் அ.தி.மு.க. ஜெ. அரசு புரட்சியாளர்கள் மற்றும் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மீது மட்டுமல்லாமல் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் மீதும் பொடா சட்டத்தை ஏவியது. பொடா சட்டத்திற்கு நாடெங்கும் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

பின்னர் ஆட்சிக்கு வந்த காங்கிரசு தலைமையிலான கூட்டணி மன்மோகன் அரசு “பொடா” சட்டத்தை நீக்கியது. ஆனால் “பொடா” சட்டத்திற்கு பதிலாக (U.A.P.A) என்ற “பொடா” சட்டத்தைக் கொண்டு வந்தது. இதனால், சத்தீஸ்கரில் சனநாயகவாதியான டாக்டர் “பினாய்க்சென்” இச்சட்டத்தினால் கைது செய்யப்பட்டார். இதற்கு உலகெங்கும் எதிர்ப்பு கிளம்பியது. இருப்பினும் இன்றையவரை இச்சட்டம் தொடர்கிறது.

இச்சட்டம் இப்போது திருத்தப்பட்டு தடை செய்யப்பட்ட அமைப்பைச் சேர்ந்தவர்கள் கைது என்பதற்கு பதிலாக எந்த தனிநபர் மீதும் நேரடியாக தீவிரவாத வழக்கு பதியப்படலாம் என்று மாற்றப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்துவதற்கான அமைப்பாக என்.ஐ.ஏவிற்கு முழு அதிகாரமும் தரப்பட்டுள்ளது.

மேலும், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம், தடா, பொடாச் சட்டங்களைவிட கொடூரமானது. இஸ்லாமியர்களை இந்தியாவைவிட்டே அகதிகளாக வெளியேற்றும் நவீன பார்ப்பனீய-இந்துத்துவா பாசிசக் கும்பலின் சதியாகவே உள்ளது.

உலக வணிக அமைப்பு (W.T.O) உலகமயமாக்கலை கொண்டு வந்தபொழுது அய்.நா.சபை கருப்புச் சட்டங்களை இயற்ற வலியுறுத்தத் தொடங்கியது. இதன் பிறகு அமெரிக்காவில் “பேட்ரியாட்” என்ற கருப்புச் சட்டமும் இதை தொடர்ந்து இந்தியாவில் “பொடா” சட்டமும் கொண்டு வரப்பட்டது. உலகமயமாக்கலை பாதுகாக்கவே உலகம் முழுவதும் கருப்புச் சட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.

உலகமயமாக்கலின் நடைமுறைக்கெதிராக மக்களின் எதிர்ப்புகள், போராட்டங்கள், கிளர்ச்சிகளை ஒடுக்கவே உலக அரசு பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்படுகின்றன. இதையும் மீறி அரபு எழுச்சிகள் நடைபெற்றன. இதன் படிப்பினைகளை நாம் பெற்றுக்கொள்வது மிக முக்கியமாகும்.

உலகெங்கும் குடிமைச் (சிவில்) சமூகமே போலீஸ்மயமாக்கப்  படுகிறது அல்லது இராணுவமயமாக்கப் படுகிறது. தமிழகமும் படிப்படியாக போலீஸ்மயமாக்கப்பட்டுள்ளது. இந்த அபாயகரமான சூழலை எதிர்க்க அனைத்து உழைக்கும் மக்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் அணிதிரட்ட வேண்டியது நமது கடமையாகிறது.

- துரை.சிங்கவேல்

(அடுத்த பகுதி)