பேராசானைச் சந்தித்தேன்!

ஆசிரியர்தினம் (செப்.15) நாளான இன்று வாழும் பெரியார், சுயமரியாதை இயக்கத்தின் பேராசான், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் தலைவர் அய்யா ஆனைமுத்து (96) அவர்களைச் சந்தித்தேன். தாம்பரத்தை அடுத்த இரும்புலியூரில் தனது மகன் ஆனை. பன்னீர்செல்வம் அவர்களின் அன்பான அரவணைப்பில் உள்ள அய்யா அவர் களைச் சந்தித்துப் பேசியது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

வயது மூப்பின் காரணமாக ஓய் வெடுத்துக் கொண்டிருக்கும் அய்யா அவர்கள், தானே எழுந்து வந்து வரவேற்று, இருக்கைகளைத் தானே எடுத்துவந்து போட்டு அமரவைக்கும் பாங்கும் பண்பும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அய்யா அவர்களிடம் உள்ள அற்புதமான அம்சம் என்னவென்றால், அவரது நினைவாற்றால். வாழும் வரலாறாய் அத்தனைத் தகவல்களையும் விரல் நுனியில் வைத்திருக்கும் இந்தப் பேராசான், அத்தனையையும் நினைவு தவறாமல் பேசுவது தான் பேராச்சரியம்.

பள்ளிப்பருவத்தில் அருட்பிரகாச வள்ளலாரின் அன்பர்கள் தொண்டராகவும் இருந்துள்ளீர்கள். வள்ளலார் மீது ஈர்ப்பு வந்தது எப்படி?

பள்ளித் தொடக்கத்தில் அகரம் என்கின்ற சிற்றூரில் என் தாயைப் பெற்ற பாட்டி வீட்டில் தங்கிப் படித்தேன். அங்கு ஆசிரியர் அழகப்பன் என்பவர் என்னுடைய முதலாவது ஆசிரியர் ஆவார். அவருடைய நண்பர் பெருமாள் என்பவர். இவர்கள் இருவரும் வள்ளலார் அன்பர்கள். இவர்கள் இருவரும் அனைத்து மாணவர்களையும் மார்கழி மாதம் சிற்றாற்றுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டுவார்கள். ஊரைச் சுற்றி அதிகாலை யில் பஜனை பாடிக்கொண்டு வருவோம். பிறகு எட்டாம் வகுப்பு லெப்பைக்குடிக்காட்டில் படித்தேன். அங்கு ந. கணபதி என்கின்ற ஆசிரியர் பணியில் இருந்தார். அவரும் வள்ளலார் அன்பர். அப்படித்தான் வள்ளலார் பற்று எனக்கு வந்தது.

கல்லூரியில் படிக்கும்போது மறைமலை அடிகள் மீது பற்றுதலும், அவரது தனித்தமிழ் இயக்கத் தின்பால் ஈடுபாடும் தங்களுக்கு இருந்துள்ளது. அதைப் பற்றிக் கூறுங்கள்?

நாமக்கல் மாவட்டத்தில், நஞ்சை இடையாறு என்கின்ற பேரூர் ஆற்றங்கரையில், கந்தசாமிக் கண்டர் என்கின்ற செல்வந்தர் இருந்தார். அவர் குழந்தை யற்றவர். நாமக்கலில் உயர்நிலைப் பள்ளிக் கூடம் மற்றும் இலவச உணவு விடுதி நடத்தினார். அதன் தொடர்ச்சியாக வேலூரில் ஒரு தொடக்கப்பள்ளி, உயர் நிலைப் பள்ளி, உணவு விடுதியும் தொடங்கினார். அந்தப் பள்ளியில் இரண்டு தமிழாசிரியர்கள். மூத்தவர் பெயர் கனகசபை என்கின்ற பொன்னம்பலனார். இளையவர் புலவர் கண்ணப்பன்.

ஆசிரியர் பொன்னம்பலனார் மறைமலை அடிகள் மகனோடு தமழ்க் கல்லூரியில் படித்தவர். தனித் தமிழில் வடமொழி கலக்காமல் பேசுவது மறைமலை அடிகள் பழக்கம்.

அதனால், அப்போது எங்கள் மாணவர்களுக்கு நல்ல தமிழில் சொற்களைச் சொல்லிக் கொடுப்பார். என்னோடு படித்த கருப்பையா என்பவர் மிகவும் சிவப்பாக இருப்பார். அவருக்கு செவ்வண்ணன் என்று பெயரிட்டார். அதேபோன்று பொய்யாமொழி என்கின்ற என்னுடைய நண்பர், அவர் தம் 95 வயதில் 2019 நவம்பரில் இறந்துவிட்டார்.

அவருடைய இயற்பெயர் பெரியசாமி ஆகும். அவருக்குப் பொய்யாமொழி என்று பெயரிட்டார்கள். இப்படிப் பல மாணவர்களின் பெயரை மாற்றினார். மறைமலை அடிகள் பெயரில் எனக்கு அதிக ஈடுபாடு உண்டு. ஆகையால் பத்தாம் வகுப்புக் குள்ளாகவே அவருடைய நூல்கள் அனைத்தையும் விரும்பிப் படித்து முடித்தேன்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது, இராமசாமி படையாட்சியின் உழைப்பாளர் கட்சியின் ஆதரவாளராக இருந்துள்ளீர்கள்... அக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டி ருந்தீர்கள் அல்லவா?

காங்கிரசுக் கட்சியில் பின்தங்கிய சமூக மக்கள் பலர் உழைத்து வந்தார்கள். ஆனால் 1952இல் நடந்த முதல் பொதுதேர்தலில் அவர்களுக்குப் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை. காங்கிரசுக் கட்சியில், ஆதிக்கச் சாதியினர் மிகுதியாக ஆதிக்கம் செலுத்தினர். ஆகையால் ஒரு மாற்றுக் கட்சி தேவைப்பட்டது. அப்போது இக்கட்சிக்கு அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஆதரவு தெரிவித்தனர்.

அதனால் நானும் இக்கட்சிக்கு ஆதரவு தெரிவித்துப் பணிகளில் ஈடுபட்டேன். நானும், கடலூர் ஆ.கோவிந்தசாமி என்பவரும், அவருடைய மைத்துனர் வழக்கறிஞர் கோ.செல்வராஜ் ஆகியோரும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்காகத் தேர்தல் பணியாற்றினோம். அதில் வெற்றியும் கண்டோம். நான் 1956 வரையில், தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியில் ஆர்வமாக இருந்தேன். பின்னர், 1957இல் காமராசர் அமைச்சரவையில் இராமசாமி படையாட்சி சேர்ந்தார். அதுமுதல் அந்தக் கட்சியுடன் தொடர்பில்லை.

திருச்சியில், “தமிழ்நாடு டுடோரியல் காலேஜ்” என்ற கல்விப் பயிற்சி மையத்தைத் தொடங்கி நடத்தி வந்துள்ளீர்கள். இந்த எண்ணம் எதனால் ஏற்பட்டது. அதன் அனுபவத்தைக் கூறுங்கள்?

ராமன், பார்த்தசாரதி போன்ற உயர் வகுப்பினரே தனிக் கல்லூரிகள் நடத்தினார்கள். அதைப் பார்த்து விட்டு, ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த ஒருவர் “குமரி டுடோரியல் காலேஜ்” என்று தனிப்பயிற்சிக் கல்லூரி ஒன்றைத் தொடங்கினார். அதுபோலவே நானும், திருச்சியில், “தமிழ்நாடு டுடோரியல் காலேஜ்” என்ற கல்விப் பயிற்சி மையத்தைத் தொடங்கி, ஒடுக் கப்பட்ட மக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, அதை ஒரு தொண்டு எனக் கருதி ஈடுபட்டேன்.

1950-இல் திருக்குறள் வீ.முனுசாமி அவர்களுடன் இணைந்து “குறள் மலர்” என்ற ஏட்டையும் அதற்குப்பின், 1957-இல் “குறள் முரசு” என்ற ஏட்டையும் நடத்தினீர்கள். இதன் அடிப்படைக் கொள்கை எது? மக்களிடையே அதற்கான வரவேற்பு எப்படி இருந்தது?

தந்தை பெரியார் அவர்கள் 1949இல் சென்னை யில் ‘திருக்குறள் மாநாடு’ நடத்தினார். அதைத் தொடர்ந்து பலரும் இதழ் தொடங்கினர்.

நான், ஆசிரியர் ந. கணபதி, வெ. மாணிக்கம் பிள்ளை ஆகிய மூவரும் கூட்டுச்சேர்ந்து, திருக்குறள் வீ.முனுசாமி என்பவரை மாதம் ரூபாய் 120-க்கு ஊதியத்திற்கு அமர்த்தி, திருச்சியில் 1950-இல் “குறள் மலர்” தொடங்கினோம்.

கடலூரில் “திருக்குறள் அச்சகம் லிமிடெட்” என்கின்ற நிறுவனத்தின் மேலாளராக முனுசாமி இருந்தார். அங்கிருந்து எளிய முறையில் கட்டுரைகள் எழுதி அனுப்பு வார்.அந்தஇதழுக்குமக்களிடம்நல்லவரவேற்புஇருந்தது.

திருச்சியில் 1957-இல் நான் சிறைக்குப் போவ தற்கு முன், “குறள் முரசு” என்னும் இதழைத் திராவிடக் கொள்கைகளை பரப்பும் ஏடாகத் தொடங்கினேன். அதில், என் மனைவி சுசீலாவின் 10 பவுன் நகையை விற்று நடத்தினேன். அந்த இதழுக்கும் மக்களிடம் நல்ல வரவேற்பு இருந்தது. இருப்பினும், நான் சிறைக்குச் சென்றதால் பத்திரிக்கையை நிறுத்திவைக்க வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.

தந்தை பெரியாருடன் எப்போது இணைந்தீர்கள்? திராவிடர் கழகத்தில் உங்கள் பங்கு பற்றிக் கூறுங்கள்?

நான் 1950-இல் பெரியாருடன் இணைந்தேன். எல்லாப் போராட்டங்களிலும் பங்கு பெற்றேன். பல ஆண்டுகள் திருச்சி மாவட்டச் செயலாளராகவும் இருந் தேன். 1967 முதல் மத்திய திராவிடர் கழகத் திருச்சி மாவட்ட உறுப்பினராக இருந்தேன். என்னை மூன்று தடவை தன்னோடு விடுதலை அலுவலகத்தில், மற்றும் நிருவாகத்தில் இருக்கும்படிப் பெரியார் பணித்தார். இருப்பினும் நான், அவரிடம் ஊதியம் பெற்றுப் பணி யாளராக இருக்க விரும்பாமல், மூன்று தடவையும் தட்டிக் கழித்தேன்.

1974இல் “பெரியார் ஈ.வெ.இரா. சிந்தனைகள்” நூலை அப்போதைய தமிழக முதல்வர் கலைஞர் தலைமையில் வெளியிட்டீர்கள். பெரியாருடைய பேச்சைத் தொகுக்கவேண்டும் என்ற எண்ணம் எதனால் ஏற்பட்டது? அந்தப் பணியின்போது நீங்கள் சந்தித்த சவால்கள் என்ன?

பெரியாருடைய சிந்தனைக்கு வடிவம் கொடுக்க வேண்டும்; பெரியாருடைய பேச்சு, எழுத்து அனைத் தையும் தொகுக்கவேண்டும் என்கின்ற எண்ணம் எனக்கு இருந்தது. என் வழிகாட்டி ஆசிரியர் ந. கணபதியிடம் கலந்து பேசினேன்.

நோபிள் கு. கோவிந்தராசலு, 2020இல் மறைந்த கு.ம. சுப்பிரமணியம், து.மா. பெரியசாமி, உறையூர் கோ.முத்துகிருஷ்ணன், பெரியார் மாளிகை மேலாளர் ச. சோமசுந்தரம் ஆகியோரிடம் கலந்து பேசினோம். பஞ்சவர்ண சுவாமி கோவில் தெருவில், முத்துக்குமாரசாமி செட்டியார் வீட்டில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதைக் கொண்டு நான் 150 தலைப்புகளை எழுதினேன். பிறகு 80 பேருக்கு மடல் எழுதினேன்.

சிலர் மட்டும் கருத்துகளைத் தெரிவித்தார்கள். அவற்றையும் பயன்படுத்திக் கொண் டோம். நான், வடகரையில் தனிப்பயிற்சிக் கல்லூரி நடத்தியதால், கீழ்க்கரையில் உள்ள ஒரு விடுதியில், பெரியாரிடம் பெற்ற எல்லா நூல்களையும், “விடுதலை”, “குடிஅரசு” போன்ற ஏடுகள் அனைத்தையும் தொகுத்து அங்கு வைத்து நான் படிப்பேன்.

அவற்றை, சின்ன புங்கனேரி வே. காசிநாதன், ந. கணபதி ஆகியோர் மேற்பார்வையில், நான் கூறியவற்றைத் தொகுத்து எழுதினார்கள்; சிலர் அதற்குப் பயன்பட்டார்கள். அப்படி ஓராண்டு எடுத்துக் கொண்டோம். பின்னர் அவற்றைப் பெரியாருடைய பார்வைக்கு உட்படுத்தினோம்.

3200 டிபுள் டிம்மி தாள்களில் எழுதியவற்றைப் பார்வையிட்ட பெரியார், 500 இடங்களில் கையெழுத்திட்டார். கடைசி யில், “திருச்சி சிந்தனையாளர் கழகம் வெளியீட்டு உரிமையைப் பெறும்” என்று எழுதிக் கையெழுத்துப் போட்டார். அதற்குப் பிறகு சிதம்பரத்தில் வ.மாணிக்கம் செட்டியார், டாக்டர் பொற்கோ ஆகியோரிடம் சில கருத்துக்களைப் பெற்றேன். 1974-இல் வெளியிட்ட வடிவம் வ.மாணிக்கம் செட்டியார் சொன்னதுதான்.

பிறகு நானும், ஆசிரியர்கள் ந. கணபதி, வே. காசிநாதன் மூவரும் சென்னையில் வாடகைக்கு ஒரு அறை பேசி, ஒரு மாதம் தங்கி, பகுதி -தொகுதி எனப் பிரித்தல் செய்தோம். அதை அச்சிடப் பலர் மறுத்து வந்தார்கள். ஏனெனில், திராவிட நாடு பற்றிப் பெரியார் பேசியதால் அச்சகத்தின் பெயரில் நடவடிக்கை எடுப் பார்கள் என்று எண்ணினார்கள்.

திருச்சி கீதா பிரஸ் உரிமையாளர், மணி ஐயர் திருவல்லிக்கேணியில் “கபீர் அச்சகம்” என்பதை ஏற் பாடு செய்தார்.

கு.ம. சுப்பிரமணியம் மூலம் ரூபாய் 40,000 வட்டிக்குக் கடன் வாங்கி அச்சடிக்க ஆரம்பித்தோம். பணமுடக்கத்தால் காலதாமதம் ஆயிற்று. இதனிடையே, எதிர்பாராதவிதமாக, பெரியார் 24.12.1973 அன்று மறைந்தார்.

பின்னர் ஆறு மாதம் கழித்து, அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களைப் புத்தக வெளியீட்டுக்காக அழைத்தோம். பின்னர் சூலை 01, 1974 புத்தக வெளியீட்டில், மணியம்மையார், கி. வீரமணி, நெ.து.சுந்தரவடிவேலு, அன்பில் தர்மலிங்கம், செ.கந்தப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

மண்டல் கமிஷன் செயலாக்கத்திற்கு வட இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு கட்சிகளின் ஆதரவைத் திரட்டி உள்ளீர்கள். இதில் சோஷியலிஸ்ட் கட்சி தலைவர் ராம் அவதேஷ் சிங் நட்பும் ஆதரவும் குறிப்பிடத்தக்கதாக இருந்துள்ளது. அதுபற்றி...?

பெரியார் மறைவுக்குப்பின் நான் கி.வீரமணி, மணியம்மையார் ஆகியோரைக் கண்டித்துக் கண்டன அறிக்கை வெளியிட்டதன் காரணமாக, என்னை தி.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து 16.11.1975 அன்று நீக்கினார்கள்.

உடனே, நானும், என்னைச் சார்ந்த தோழர்களும் சிந்தனையாளர் கழகப் பொறுப்பை வைத்துக்கொண்டு, வேறு ஒரு அமைப்பைத் தொடங்குவது என்று முடிவெடுத்து, 8.8.1976 “பெரியார் சமஉரிமைக் கழகம்” என்கின்ற பெயரில் சீர்காழி மா.முத்துசாமி வீட்டில் கட்சி தொடங்கி னோம்.

தந்தை பெரியார் அவர்களின் வாழ்நாள் கொள்கைப் படி, திராவிட மக்களுக்கு அவரவர் வகுப்பு வாரியாகப் படிப்பிலும் மத்திய, மாநில அரசு வேலைகளிலும் உரியபங்கு பெறுவது என்று முடிவெடுத்தோம்.

அதன் தொடர்ச்சியாக, 29.4.1978 முதல் இன்று வரையில், நாங்கள் விடாமல் முயற்சிக்கிறோம். அதன் வழியாக மத்திய அரசில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு பெற்றிட வேண்டும் என்கின்ற ஒற்றைக் கோரிக்கையுடன், 1978-இல் நானும், சீர்காழி மா. முத்துசாமி, பெரியாரின் அண்ணன் மருமகன் சேலம் தாதம்பட்டி எம்.ராஜூ ஆகியோர் புதுதில்லிக்குப் பயண மானோம்.

எங்களை தில்லியில் அன்புடன் அன்று வரவேற்றவர், மக்களவை உறுப்பினர் வாழப்பாடி கூ. இ.ராமமூர்த்தி. அவர் எங்களுக்கு தில்லியில் தொடர்ந்து தங்குவதற்கு இடம் கொடுத்து உதவினார். இடஒதுக்கீடு தொடர்பாக முதன்முதலில் சந்தித்தது அன்றையக் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சீவ ரெட்டியைத்தான். அவரோடு நீண்டநேரம் பேசினோம். அவர் எங்கள் கோரிக் கையை ஏற்காதது போலப் பேச்சைத் திசை திருப்பினார்.

பின் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் இந்திரா காந்தி அம்மையாரைச் சந்தித்துக் கோரிக்கையை முன்வைத்தோம். “நான் ஆட்சி அதிகாரத்தில் இல்லை யே” என்று பதிலுரைத்தார்.

தொடர்ந்து அன்றைய உள்துறை இணை அமைச்சர் தனிக்லால் மண்டல் என்பவரைச் சந்தித்தோம். அவர் எங்களுக்கு முழு ஆதரவு அளிப் பதாக உறுதியளித்தார். தொடர்ந்து பல வடஇந்தியத் தலைவர்கள், நாடாளுமன்ற மேலவை, மக்களவை உறுப்பினர்கள் ஆகியோரைச் சந்தித்தோம். அப்போது எங்களோடு அறிமுகமானவர் மக்களவை உறுப் பினர் ராம் அவதேஷ் சிங் மற்றும் ஜெயபால் சிங் கஷ்யாப்.

லோகியாவாதியான இராம் அவதேஷ் சிங் அவர்கள் கலந்துகொள்ள இருந்த உத்திரப்பிரதேசம் முசாஃபர் நகரில் நடந்த மாநாட்டிற்கு எங்களையும் அழைத்துச் சென்றார். பெரும் மக்கள் திரள் கூடியிருந்த மாநாட்டில் நான் ஒன்றரை மணிநேரம் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தினேன். அதை இந்தி மொழியில் செடிலால் சாத்தி என்பவர் மொழியாக்கம் செய்தார்.

இடஒதுக்கீடு தேவை என்ற கருத்தை வட மாநில மக்கள் மத்தியில் பதித்த நாள் அதுதான். (7.5.1978)

தங்களது முன்முயற்சியால், பீகாரில், கர்ப்பூரி தாகூர் முதல்வராக இருந்தபோது, அம்மாநிலம் முழுக்கப் பெரியார் நூற்றாண்டு விழா கொண் டாடப்பட்டது அல்லவா?

தோழர் ராம் அவதேஷ் சிங் அவர்கள் எங்களிடம் “உங்களது முதல் பயணம் பீகார் முழுவதும் பயணிப் பதாக இருக்கவேண்டும்” என வேண்டுகோள் விடுத் தார். பீகாரின் எல்லா மாவட்டங்களிலும் தந்தை பெரியார் பிறந்த நாள் கூட்டம் ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். அதன்படி நானும் சீர்காழி மா. முத்துசாமி, வேலூர் நா.பா. செந்தமிழ்க்கோ, திருச்சி து.மா. பெரியசாமி ஆகியோர் பயணமானோம். தொடர் கூட்டங்கள்; ஆயுத பாணிகளாக உலாவரும் ஆதிக்கச் சாதிகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் எங்களது பயணம்.

ராம் அவதேஷ் சிங், எங்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல சிறிய தானியங்கித் துப்பாக்கி போன்ற ஆயுதங்களோடு உள்ள குழுவினரை ஏற்பாடு செய்திருந்தார்.

இறுதி நிகழ்ச்சியாக பாட்னா நகரில் மிகப்பெரிய பேரணிக்கு ஏற்பாடு செய்து இருந்தனர். அப்போது பீகார் மாநில முதல்வராக இருந்தார் கர்ப்பூரி தாகூர். இந்தப் பேரணியின் முடிவில் பேருரை ஆற்றினார். மக்கள் கூட்டம் ஆர்ப்பரித்தது. இந்த மக்கள் எழுச்சி, பீகார் மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு மாநில அரசு வேலை வாய்ப்பில் 20 விழுக்காடு இடஒதுக்கீடு பெற வழிவகுத்தது.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்து வது தொடர்பாக வடஇந்தியாவில் பல மாதங்கள் சுற்றுப்பயணம் செய்து, பல்வேறு அமைப்புகள் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து இருக்கிறீர் கள். அவர்களுடனான சந்திப்பு மற்றும் அனு பவங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

பீகாரை அடுத்து அன்றைய உத்திரப்பிரதேச முதல்வராக இருந்த ராம் நரேஷ் யாதவ், மாநில அரசு வேலை வாய்ப்பில் 15 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கி உத்தரவிட்டார். இப்படித் தொடர் பயணங்கள் மூலம் பெற்ற வெற்றி, பல வடமாநிலத் தலைவர்களுக்கு இடஒதுக்கீட்டின் தேவையை உணர்த்தியது. அது எங்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தது.

நாங்கள், 24.6.1978 சென்னையில், “அகில இந்தியப் பிற்படுத்தப்பட்டோர் மாநாடு” ஏற்பாடு செய்தோம். இம்மாநாட்டில் அன்றைய மத்திய அரசின் உள்துறை இணை அமைச்சர் தனிக்லால் மண்டல், பல வட நாட்டுத் தலைவர்கள், கர்நாடகா, கேரளாவின் ளுசூனுஞ தலைவர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இதன் தொடர்ச்சியாக உத்திரப்பிரதேசம், பீகார், இராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், கேரளா எனப் பல மாநிலங்களில் மாநாடு, பொதுக் கூட்டங்கள் என்று எங்கள் பணி விரிவுபடுத்தப்பட்டது.

தொடர்ந்து, 01.01.1979-இல் பிந்தேஸ்வரி பிரசாத் மண்டல் தலைமையில் மண்டல் குழு அமைக்கப்பட்டது,

நாங்கள் புதுடில்லியில் 23.03.1979-இல் நடத்திய பேரணியில் ஏறக்குறைய 30,000 மக்கள் பங்கு பெற்றனர். என் துணைவியார் மறைந்த சுசீலா அம்மையார், பேரணி முகப்பில் பதாகை ஏந்தி, “பெரியார் வாழ்க!, பெரியார் கொள்கை வெல்க!” என முழக்கமிட்டபடி வந்தார். பேரணி முடிவில் நடந்த மாநாட்டில் அன்றைய துணைப்பிரதமர் பாபு ஜெகஜீவன் ராம் மற்றும் ராஜ் நாராயணன் பங்கு பெற்றனர்.

1980 சேலம் புத்துணர்வுக் கலை மன்றத்தில் “அகில இந்தியப் பிற்படுத்தப்பட்டோர் மாநாடு” நடந்தது. இதில் டாக்டர் கலைஞர், உத்தரப்பிரதேச முதல்வர் ராம் நரேஷ் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் தா. பாண்டியன் போன்றோர் கலந்து கொண்டனர். உத்தரப்பிரதேச முன்னாள் பா.ச.க மாநிலத் தலைவரும், பிற்படுத்தப்பட்டவருமான வினய் கட்நாயக், இராஜஸ்தான் பிற்படுத்தப்பட்ட தலைவரான

O.P. பார்மர், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிற்படுத்தப் பட்டோர் தலைவரான பியாரிலால் லோதி, பஞ்சாப் மாநில முன்னாள் நீதிபதி அஜித் சிங் பெய்ன்ஸ், கேரள மாநில SNDP தலைவர்கள் A.M. பிரபா, வேலாயுதம், கர்நாடக மாநில எம். தர்மலிங்கம், நஞ்சுண்டசாமி போன்றவர்களின் ஆதரவுத் தளமும் கிட்டியது. பிறகு, பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனத் தலைவர் கன்ஷிராம் அவர்களின் நட்பும் கிட்டியது.

அவர் BAMCEF அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நாக்பூர் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேச என்னை அழைத்தார். DS 4 தற்காப்புப் படைப் பிரிவைக் கன்னியாகுமரியில் தொடங்கி வைக்க என்னைப் பணித்தார். அவரின் அமைப்பினால் நடத்தப்பட்ட OPPRESSED INDIAN என்ற ஆங்கில இதழில் எனது சமூகநீதிக் கட்டுரைகளை ஆங்கிலத்தில் தொடர்ந்து எழுதச் சொல்லி வலியுறுத்தினார். நானும் அதுபோல தொடர்ந்து எழுதி வந்தேன். எங்களது நடவடிக்கைக்கு ஊக்கமும் ஆதரவும் தெரிவித்தார்.

இப்படி உத்திரப்பிரதேசம், பீகார், இராஜஸ்தான், அரியானா, பஞ்சாப், அசாம், மேற்குவங்கம், கேரளா, தமிழ்நாடு, கருநாடகா என எங்களது நீண்ட நெடிய பயணம் தொடரும் முயற்சியினாலும் மண்டல் கமிஷன் நடைமுறைக்கு வந்ததற்கு பெரும் காரணங்களாகும்.

1978 முதல் நாங்கள் எடுத்த முயற்சிக்கு தி.மு.க. தலைவர் கலைஞர் மு.கருணாநிதி, நாடாளுமன்ற முன்னாள் துணைச் சபாநாயகர் ஜி.இலட்சுமணன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ச.இராமதாசு, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எம்.கல்யாணசுந்தரம் ஆகியோர் ஆதரவு அளித்தனர்.

எங்கள் மாநாட்டிற்கு, கூட்டத்திற்கு அழைத்தால் உடனே வருகைதந்து எங்களை ஊக்கப்படுத்தினர்.

இந்திய அரசியல் அரங்கில், 1980 முதல் இன்று வரை சமூகநீதிப் புயல் வீசி அதிர்ந்து கொண்டிருப் பதற்கு மேற்கூறியவர்கள் எல்லோருமே காரணம்.

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்து வது தொடர்பாக அப்போதைய உள்துறை அமைச்சர் ஜெயில் சிங் அவர்களைச் சந்தித்துள்ளீர்கள். அந்தச் சந்திப்புப் பற்றியும் அதற்குப் பின் அவருடனான நட்புப் பற்றியும் கூறுங்கள்?

கியானி ஜெயில் சிங் 1982-இல் உள்துறை அமைச் சராக இருந்தார். அப்போது அவரின் அழைப்பின் பேரில், 25.01.1982-இல் நாங்கள் அவரைச் சந்தித்தோம்.

அவர் நடுவணரசில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற அவசியத்தைத் தீவிர மாக ஆதரிப்பதாகக் கூறினார். எங்களுக்குப் போராட்ட வழிமுறைகளையும் எடுத்துச் சொன்னார். அடிக்கடிச் சந்திக்கும்படி அறிவுறுத்தினார். அவரது வழிகாட்டல் எங்களுக்குப் பேருதவியாய் அமைந்தது.

பெரியாருக்கு முன்பே மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு பற்றிப் பேசிய அத்திப்பாக்கம் வேங் கடா சல நாயகர் பற்றியும் அவர் எழுதிய நூலை மறுபதிப்பாக நீங்கள் வெளியீட்டீர்கள். அது பற்றி?

ஆமாம். அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயகர் நல்ல படிப்பாளி. அவர் செய்யுள் வடிவில் “இந்து மத ஆசார ஆபாச தரிசினி” என்கின்ற நூலை எழுதி வெளியிட்டார். பிறகு, 1948-இல் அந்த நூலை குரு. இராமலிங்கம் என்பவர் மீண்டும் வெளியிட்டார். பல ஆண்டுகளுக்குப் பின்னர், 2014-இல் நான் மறு பதிப்பாக வெளியிட்டேன். அது, கடவுள் நம்பிக்கை தவிர, மற்ற மூடநம்பிக்கைகளை எல்லாம் கண்டனம் செய்த முதல் நூலாகும்.

பி.பி. மண்டல் எப்போது சந்தித்தீர்கள்?

மண்டல் குழு அமைப்பதற்கு முன்பே, 29.4.1978 ­லும், 10.5.1978-லும், பி.பி. மண்டலை நேரில் சந்தித்து, பிற்பட்டோருக்கு இடஒதுக்கீடு அவசியம் ஏன் என்பதை வலியுறுத்தி விளக்கினோம். அவர்தான் குழுவின் தலைவராக நியமிக்கப்படுவார் எனத் தெரி யாமல் நடந்த எதிர்பாராத நிகழ்வு இது.

பிரதமர் மொரார்ஜி தேசாயை நீங்கள் சந்தித்து இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாகக் கோரிக்கை வைத்த போது கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதை முழுமையாக விளக்குங்கள்?

நானும், என்னைச் சார்ந்த தோழர்கள் என 20 பேர் மொரார்ஜி தேசாய் அவர்களை 25.03.1979-இல் நேரில் சந்தித்தோம்.

அப்போது நடந்த உரையாடல் பின்வருமாறு : மொரார்ஜி தேசாய் : தமிழ்நாட்டில் பிராமண மாண வர்களுக்குக் கல்லூரியில் இடம்கிடைக்க வில்லையாமே? நான் : அது உண்மையல்ல. அப்படி இருக்குமேயானால், வருமான வரித் துறையில் 330 பேர் கெசட்டட் ஆபிசர்கள் பிராமணர்களாக உள்ளனர். அதற்கு என்ன சொல்கிறீர்கள்?

(மொரார்ஜி சிறிது நேரம் எதுவும் பதில் சொல்லவில்லை) பின்னர்,

மொரார்ஜி : தேர்தல் வாக்குறுதி எல்லாம் நிறை வேற்றிவிடவேண்டும் என்று நினைக் கிறீர்களா?

நான் : தேர்தல் அறிக்கை எழுதிய குழுவில் நீங்கள் துணைத்தலைவராக இருந் துள்ளீர்கள். அப்போது அந்த வாக் குறுதியை முட்டாள்தனமாகக் கொடுத் தீர்கள் என்று சொல்லட்டுமா?

மொரார்ஜி : என்னை மறைமுகமாக முட்டாள் என்கிறாயா? நான் : இல்லை ஐயா.

மொரார்ஜி : பொறு. மண்டல அறிக்கை வரட்டும். நான் நியாயமாகச் செய்கிறேன். நேரு, கலேல்கர் அறிக்கையைக் குப்பைத் தொட்டியில் எறிந்ததுபோல நான் செய்யமாட்டேன்.

அத்துடன் விவாதம் முடிவடைந்து, நாங்கள் 20 பேரும் அவரிடம் விடைபெற்றுக் கொண்டோம்.

மத்தியில் ஆளும் இன்றைய பா.ச.க. அரசு ஒரே நாடு, ஒரே கட்சி, ஒரே மதம், ஒரே மொழி என்கின்ற ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை நடைமுறைப் படுத்துவதற்காக அனைத்து முயற்சிகளையும் செய்துவருகிறது. சாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்திற்காகத் தங்கள் வாழ்க்கையை அர்ப் பணித்தவர் நீங்கள். இந்தியாவின் இன்றைய நிலைமை பற்றித் தங்கள் கருத்து என்ன?

காங்கிரசு, இந்திரா காந்தி அம்மையார் காலத்தி லேயே பலவீனப்பட்டுவிட்டது. தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சிக்குப் பிறகு காங்கிரஸ் தலைதூக்க வில்லை. பல மாநிலங்களிலும் காங்கிரசு பலம் இழந்துவிட்டது.

பாரதிய சனதா நீடித்த ஆட்சியில் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

திராவிட இயக்கம் மற்றும் பொதுவுடைமைக் கட்சி ஆகியவை அனைத்திந்திய இயக்கமாக மாறினால் ஒழிய, வேறு போக்கு இல்லை; பொதுவுடைமைக் கட்சி, இந்திய அளவில் எங்கேயும் வலுவாக இல்லை. ஆகையால் பொதுவுடைமைக் கட்சிகள் மற்றும் திராவிட இயக்கங்கள் அனைத்திந்திய அளவில் ஒருங்கிணைந் தால் அது இந்தியாவிற்கு மிக நல்லதாக இருக்கும்.

மதவாத அச்சம் மேலோங்கியிருக்கும் இன்றைய சூழலில் பிரிந்து கிடக்கின்ற திராவிட இயக்கங் களை ஒன்றுபடுத்தும் எண்ணம் தங்களுக்கு உள்ளதா?

எனக்கு 96 வயது ஆகிவிட்டது. என்னால் திராவிட இயக்கங்கள் அனைத்தையும் ஒருசேர ஒருங்கிணைக்க இயலாத சூழலில் உள்ளேன். இருப்பினும் திராவிட இயக்கங்கள் ஒன்றுசேருவது நல்லதுதான் என்பது என் எண்ணம்.

நன்றி : “திராவிடச் சுவடுகள்”-மலர், 15-9-2020

- வே. ஆனைமுத்து

Pin It