இந்திராகாந்தியின் நெருக்கடி நிலை ஆட்சியின் (1975-77) கொந்தளிப்பான அரசியல் சூழ்நிலையில், வட இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அரசியலில் எழுச்சியும் செல்வாக்கும் பெற்றனர். இந்தப் பின்னணியில் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியும், அனைத்திந்திய ஒடுக்கப்பட்டோர் பேரவையும் மேற்கொண்ட தீவிர முயற்சியின் - போராட்டங்களின் விளைவாக 1978இல் மண்டல் குழு அமைக்கப்பட்டது. 1990இல் பிரதமர் வி.பி.சிங் மண்டல்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் நடுவண் அரசு வேலைகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27ரூ இட ஒதுக்கீடு வழங்கினார்.

மண்டல் குழுவின் பரிந்தரையின்படி, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் எண்ணிக்கை 52ரூ ஆகும். எனவே, இவர்களுக்கு 27ரூ மட்டும் அளிப்பது போதாது, அநீதியானது, இதை விகிதாசார அளவில் உயர்த்தித் தரவேண்டும் என்று மா.பெ.பொ.க. கோரி வருகிறது. பல்வேறு கட்சிகளும் அமைப்புகளும் இவ்வாறு கேட்கின்றன.

மண்டல் தொடர்பான வழக்குகளில் உச்சநீதி மன்றம், மொத்த இட ஒதுக்கீட்டின் அளவை 50ரூக்கு மேல் தரக்கூடாது என்றும், மண்டல் குழுவில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் எண்ணிக்கை முறையாகக் கணக்கு எடுக்கப்பட்ட ஒன்றல்ல என்றும் 1992 முதல் கூறிவருகிறது. எனவே, உள்சாதி வாரியாக மக்கள் தொகைக் கணக்கு எடுக்கப்பட வேண்டும்; அப்போது தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் எண்ணிக்கையைத் திட்டவட்டமாக அறியமுடியும் என்கிற கருத்தைப் பல கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

2001ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொண்ட போதே உள்சாதி வாரியாகக் கணக்கு எடுத்திருக்க வேண்டும். இந்தியத் தலைமைப் பதிவாளரும் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தலாம் என்று நடுவண் அரசுக்குப் பரிந்துரைத்தார். ஆனால், வாஜ்பாய் தலைமையில் ஆட்சியில் இருந்தத் தேசிய சனநாயகக் கூட்டணி அரசு, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது என்கிற கருத்தை ஏற்க மறுத்துவிட்டது.

கடந்த வரவு - செலவுத் திட்ட நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு விடையளித்த பிரதமர் மன்மோகன்சிங், சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து நடுவண் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவித்தார். பா.ச.க. உள்ளிட்ட எல்லா அரசியல் கட்சிகளும் சாதிவாரிக் கணக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவித்தன.

4-5-2010 அன்று அமைச்சரவைக் கூட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து முதன்முதலாக விவாதிக்கப்பட்டது. எம்.எஸ்.கில், கபில் சிபில், ஆனந் சர்மா முதலான அமைச்சர்கள் இதை எதிர்த்தனர். இது நடைமுறையில் மிகவும் சிக்கலானது; எனவே, வேண்டாம் என்று ப. சிதம்பரம் அவருக்கே உரிய வழுவல் தன்மையில் கூறினார். 26-5-2010 அன்று மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து விவாதிக்கப்பட்டது. இது குறித்து ஆராய்ந்து முடிவு எடுக்க பிராணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது. 1-7-2010 அன்று கூடிய அமைச்சர் குழுக் கூட்டத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து அனைத்துக் கட்சிகளிடமும் எழுத்து வடிவில் கருத்துக் கேட்பது என்றும், 7-8-2010க்குள் கட்சிகள் தங்கள் கருத்தை அனுப்ப வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

காங்கிரசுக் கட்சிக்குள் கருத்து வேறுபாடு நீடித்தது. நாடாளுமன்றத்தில் பா.ச.க. தன் ஆதரவைத் தெரிவித்த போதிலும் அக்கட்சியின் தலைவர் நிதின் கட்கரும், ஆர்.எஸ்.எஸ்-ம் சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது என்று கூறினர். பா.ச.க. தன் ஆதரவைத் திரும்பப் பெற்றால், சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து முடிவு எடுப்பதைத் தள்ளிப் போடலாம் என்று காங்கிரசு நினைத்தது. அடுத்த ஆண்டில் பீகாரிலும் உத்தரப்பிரதேசத்திலும் சட்டப்பேரவைகளுக்குத் தேர்தல் நடக்க விருப்பதால், பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் வாக்குகளை இழந்துவிடக் கூடாது என்கிற அரசியல் நோக்கத்திற்காகவே 6-8-2010 அன்று பா.ச.க. தன் ஆதரவை நடுவண் அரசுக்குத் தெரிவித்தது. காங்கிரசும் இதே அரசியல் ஆதாய நோக்கத்திற்காகவே சாதிவாரிக் கணக்கெடுப்பை ஆதரிக்கிறது. உ.பி.யில் முலாயம்சிங், மாயாவதி, பீகாரில் லாலுபிரசாத், நிதிஷ்

குமார் ஆகியோரின் அரசியல் செல்வாக்கை ஒடுக்க வேண்டும் என்பதே காங்கிரசு, பா.ச.க.வின் திட்டம்.

பிரணாப் முகர்ஜி தலைமையிலான அமைச்சர் குழு 11-8-2010 அன்று சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஒப்புதலை அளித்தது. இந்தியாவில் மேல்சாதி ஆளும் அதிகார வர்க்கம் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் நலனுக்காகப் பாடுபடுவதாகக் காட்டிக் கொள்வதில் - நடிப்பதில் கைதேர்ந்தது. சாற்றைப் பிழிந்து பருகிவிட்டு சக்கையை ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு வழங்கும் வஞ்சகநெஞ்சம் கொண்டது. சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துவது என்று எடுக்கப்பட்டுள்ள முடிவும் சாற்றைப் பிழிந்துவிட்டு சக்கையைத் தருவதாகவே உள்ளது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று கோருவதன் முதன்மையான நோக்கம் கல்வி, வேலைவாய்ப்பு, குடியிருப்பு, மருத்துவ வசதி தொழில், வணிகம், வருவாய், சொத்துடைமை, பெண்கள் முன்னேற்றம், வாழ்க்கைத் தரத்தை அளவிடும் பிற கூறுகள், முதலானவற்றில் எந்த அளவுக்கு ஒவ்வொரு சாதியும் முன்னேறியுள்ளது என்பதைக் கண்டறிவதற்கே ஆகும். பின் தங்கியுள்ள சாதிகள் முன்னேறுவதற்கு இடஒதுக்கீடு உள்ளிட்ட பல திட்டங்களை - வாய்ப்புகளை அரசு உருவாக்கி, அவர்களை உயர்த்த வேண்டும் என்பதே ஆகும். மண்டல் குழு அறிக்கையில் இட ஒதுக்கீடு தவிர, வேறு எவ்வெவ்வகைகளில் அரசு, வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

கல்வி என்றால், எழுத்தறிவின்மை, தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை எனப் பல நிலைகள் உள்ளன. வேலைவாய்ப்பில் ஏவல் பணியிலிருந்து உயர் அதிகாரப் பதவிவரை உள்ளது. சுய தொழில் என்றால் சிறு விவசாயி, கைவினைத் தொழில் செய்வோர் முதல் பெருநிலவுடைமையாளர், பெரு முதலாளி, பெரும் பணக்காரர் என்ற பலநிலைகள் உள்ளன.

ஒவ்வொரு துறையிலும் வாழ்க்கையின் எல்லாக் கூறுகளிலும் ஒவ்வொரு சாதியும் எந்தப் படிநிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது, அந்தந்தச் சாதியினருக்கு உள்ள சனநாயக உரிமையாகும். அப்போதுதான் சமூகத்தில் மற்ற சாதிகளைப் போல் தானும் உயருவதற்கான முயற்சியில் ஈடுபட முடியும்.

இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இருபிறப்பாளர் எனும் தகுதிபெற்ற பார்ப்பன, சத்திரிய, வைசிய வருண சாதியினரே உற்பத்திச் சாதனங்கள் உடைமை, கல்வி, ஆட்சி அதிகாரம், நிர்வாகப் பதவிகள் என எல்லாவற்றையும் பெற்றிருக்கின்ற சிறப்புரிமை பெற்றவர்களாக இருந்து வந்துள்ளனர். இவை மறுக்கப்பட்ட கீழ்ச்சாதி வகுப்பினர் கல்வியிலும், வேலையிலும், ஆட்சி அதிகாரத்திலும் விகிதாசாரப் பங்கு வேண்டும் என்று கேட்பதையும், போராடுவதையும் மேல் சாதியினர் தாங்கள் காலங்காலமாக அனுபவித்துவந்த வாய்ப்பு வசதிகளைப் பறிப்பதாகக் கருதுவதால்தான் எதிர்க்கின்றனர். இந்தியா சுதந்திரம் பெற்று 63 ஆண்டுகள் ஆனபின்னும் மேல்சாதியினரே இந்தியாவில் உண்மையான ஆளும் வகுப்பாக இருப்பதை சாதிவாரிக் கணக்கெடுப்பு அம்பலப்படுத்திவிடும் என்று அஞ்சுகிறார்கள். அதனால் பட்டியல் குலத்தினர், பழங்குடியினர் என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் விவரங்கள் திரட்டுவதுபோல் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று மட்டும் கணக்கெடுக்கலாம் என்கிற சமரச உடன்பாட்டுக்கு வந்துள்ளனர்.

ஆகவேதான் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு தயாரிப்பதற்காக 15 அகவைக்கு மேற்பட்டவர்களிடம் பலநோக்குப் பயன்பாட்டு விவரங்கள் திரட்டப்படும்போது சாதிபற்றிய விவரத்தைக்கேட்டுப் பதிவு செய்வது என்று அமைச்சர் குழு முடிவு செய்துள்ளது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் மூன்றாவது கட்டம் இது என்று கூறப்படுகிறது.

இவ்வாறு மூன்றாவது கட்டத்தில் திரட்டப்படும் விவரங்களிலிருந்து ஒவ்வொரு சாதியிலும் உள்ள மக்கள் தொகையை மட்டுமே அறியமுடியும். ஆனால், கல்வி, வேலை, பிற வாழ்க்கைத் தரக்கூறுகள் முதலானவற்றில் - நாட்டின் செல்வத்தை, அதிகாரத்தைப் பெற்றிருப்பதில் சாதிகளுக்கிடையே உள்ள ஏற்றத் தாழ்வைப்பற்றி அறிய முடியாது. மேதை அம்பேத்கர் கூறியுள்ளதுபோல், இந்தியாவில் சாதிகள் ஏணியின் படிக்கட்டுகள் போலவே மேலிருந்து கீழாக அமைக்கப்பட்டுள்ளன. இன்றும், சமூக வாழ்நிலையை மட்டுமின்றி, பொருளாதார வாழ்நிலையையும் தீர்மானிப்பதில் சாதி முக்கியப் பங்காற்றுகிறது. இந்த உண்மையை மறைப்பதற்காகவே மூன்றாம் கட்ட நிலையில் சாதி பற்றிய கணக்கெடுப்பை நடத்திட முடிவு செய்துள்ளனர்.

இம்மூன்றாம் கட்டத்தில் புகைப்படம் எடுப்பது, கைரேகை பதிவு செய்வது போன்ற விவரங்கள் மட்டுமே கணக்கெடுக்கப்படும். மேலும், இந்த விவரங்களை எடுப்பதற்கு காலவரையறை வகுக்கப்படவில்லை. இதை எடுத்து முடிக்க அய்ந்தாண்டு, பத்தாண்டு கூட ஆகலாம். இந்த விவரங்கள் 1948ஆம் ஆண்டின் மக்கள்தொகைக் கணக்கெடுப்புச் சட்டத்தின்கீழ் எடுக்கப்படுபவை அல்ல. ஆனால், தேசிய மக்கள் தொகை பதிவேடு தயாரிக்கப்படுவதற்கான விவரங்கள் 2003ஆம் ஆண்டின் குடி உரிமைச் சட்டத்தின்கீழ் எடுக்கப்படுகின்றன. இதன்படி எடுக்கப்படும் விவரங்களின் அடிப்படையில், ஒருசாதி கல்வியிலும் சமூகத்திலும் எந்த அளவுக்குப் பின்தங்கி உள்ளது. என்றோ, முன்னேறியுள்ளது என்றோ கணிக்க முடியாது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் முதல் கட்டத்தில் வீடுகளின் எண்கள் குறிக்கப்பட்டுப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அத்துடன் வீட்டில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் கணக்கெடுக்கப்படுகிறது. இம்முதல் கட்டப் பணி தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இரண்டாம் கட்டப் பணி 2011 பிப்பிரவரி 9 முதல் பிப்பிரவரி 28 வரை நடைபெறவுள்ளது. இரண்டாம் கட்டப்பணியில் வீடுகளில் வசிப்பவர்கள் போக, வீதிகளிலும், நடைபாதைகளிலும், வெட்டவெளிகளிலும், மரத்தடிகளிலும், பொது இடங்களிலும், வாழும் மக்களின் கணக்கு எடுக்கப்படும். 1-3-2011 அன்று காலை கதிரவன் தோன்றுவதற்கு முன், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடிந்து விட்டதாகக் கருதப்படும்.

ஆகவே, 2011 பிப்பிரவரி 9 முதல் 28 வரை நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட கணக்கெடுப்பின் போது சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். வீடுகளில் வாழ்வோர், வீடின்றி வெளியில் வாழ்வோர் ஆகியோரிடம் சாதி, கல்வி, வேலை, பிற வாழ்க்கைத் தரக் கூறுகள் பற்றிய விவரங்கள் கேட்டறிந்து பதிவு செய்யப்படவேண்டும். இவ்வாறு செய்வது மட்டுமே முழுமையான சரியான சாதிவாரிக் கணக்கெடுப்பாக அமையும்.

சாதிவாரிக் கணக்கெடுப்பு, சாதி உணர்வை சாதிப் பிரிவினையை - சாதிகளிடையே போட்டியை - மோதலை மேலும், வளர்க்கும்; சமூகத்தில் அமைதியும் ஒற்றுமையும் குலையும் என்று மேல்சாதி அறிவாளிகள் கூறுகின்றனர்.

‘தினமணி’ நாளேட்டில், இந்திய ஆட்சிப் பணியிலிருந்து ஓய்வுபெற்ற என். முருகன் என்பவர் சிறந்த கட்டுரைகளை எழுதுபவர். ஆனால், 30-06-2010 தினமணி நாளேட்டில், “வெள்ளையர் ஆட்சியில் இந்தியாவில் தனது தேசத்தைவிட ஒரு சராசரி இந்தியனுக்குத் தனது சாதியே முக்கியம் எனும் சூழ்நிலை நிலவியது. இதை முழுமையாகப் பயன்படுத்தித் தங்களது காலனி ஆட்சியைத் திடப்படுத்திக் கொள்ள, சாதிகளைப் பட்டியலிட்டு அவற்றில் உயர்ந்த சாதி எது, தாழ்ந்த சாதி எது என வரிசைப்படுத்தி சாதிகளுக்குள் பிரிவுகளை நிலைபெறச் செய்யும் வகையில் 1881ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில், சாதிகளின் கணக்கெடுப்பும் எடுக்கப்பட்டது” என்று என். முருகன் எழுதியுள்ளார். மேல்சாதி அறிவாளிகள் மட்டுமின்றி, பார்ப்பனியச் சிந்தனைக்கு ஆட்பட்டுவிட்ட சூத்திர சாதி அறிவாளிகளும் இவ்வாறு எழுதுகின்றனர். உயர்ந்த சாதி எது? தாழ்ந்த சாதி எது? என்பதை ஆங்கிலேய ஆட்சி செய்ததுபோல் காட்டுவது கடைந்தெடுத்த கயமை அல்லவா?

இந்துமத சாத்திரங்கள் அடிப்படையிலான சாதி அமைப்பு சமூகச் சட்டமாக மட்டுமின்றி ஆட்சியாளர்களின் - அரசர்களின் மீற முடியாத - தண்டனைக்குரிய சட்டமாகவும் இரண்டாயிரமாண்டு காலமாக மக்களைக் கூறுபோட்டு ஒடுக்கிவந்த உண்மையை மறைக்க முயல்கின்றனர்.

சுதந்தர இந்தியாவில் பட்டியல் குலத்தினருக்கும், பழங்குடியினருக்கும் உள் சாதிவாரியாகக் கணக்கு எடுக்கப்படுகிறது. 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, பட்டில் குலத்தினருள், 1234 உள் சாதிகளும், பழங்குடியினருள் 698 உள் சாதிகளும் உள்ளன. இவ்வாறு உள்சாதிவாரிக் கணக்கு எடுக்கப்பட்டதால் சாதிப்பிரிவினையும், மோதலும் அதிகமாகி இருக்கிறதா? இல்லையே! இந்து - முசுலீம் மத அடிப்படையிலான அரசியல் ஆதிக்கப் போட்டியால் இந்தியா - பாக்கிஸ்தான் பிரிந்தது. சுதந்தர இந்தியாவில் 1951 முதல் மத அடிப்படையில் கணக்கெடுப்பு நடத்துவதால் இந்து - முசுலீம் மத மோதல் உண்டாகவில்லை. சங்கப் பரிவாரங்களின் மத ஆதிக்க வெறிச்செயல்களால் முசுலீம்கள், கிறித்தவர்கள் தாக்கப்படுகின்றனர். முசுலீம்கள் ஒன்று திரண்டு இந்துக்களைத் தாக்கியதாக ஒரு நிகழ்ச்சிகூட நடக்கவில்லையே!

சூத்திர அறிவாளியான ப. சிதம்பரம் சொல்கிறார் - ‘சாதிவாரிக் கணக்கெடுப்பு மிகவும் சிக்கலானது; நடைமுறையில் முடியாத ஒன்று’ என்று கூறுகிறார். 2001ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் பட்டியல் குலத்தில் 1234 உள்சாதிகளும், பழங்குடியினருள் 698 உள் சாதிகளும் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. கடந்த பத்து ஆண்டுகளில் கணினி மென்பொருள் தொழில் நுட்பம் பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த 15ஆவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 25 இலட்சம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தகவல்களைத் திரட்டி கணினியில் ஒருமுறை பதிவு செய்து விட்டால் போதும். எத்தன்மையிலான விவரத்தையும் கணினியே தொகுத்து அளித்து விடும். ஹார்வர்டில் படித்த சிதம்பரத்துக்கு இது தெரியாதா என்ன? முடிந்தவரையில் ஏமாற்றலாம் என்ற எண்ணம்தான்.

தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், சமூகத்திலும் கல்வியிலும் பின்தங்கியுள்ள சாதிகளின் பட்டியலைத் தயாரித்து வைத்துள்ளது. இந்திய மானுட ஆய்வு மய்யமும், மாநில அரசுகளும் சாதிகள் பட்டியலைக் கொண்டுள்ளன. இவற்றைத் துணையாகக் கொண்டு சாதிவாரிக் கணக்கெடுப்பை மேற்கொள்ள முடியும்.

2006ஆம் ஆண்டு 28 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சமூக நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. 2008இல் திட்டக்குழு, 11ஆவது அய்ந்தாண்டுத் திட்டம் குறித்த தன் ஆய்வறிக்கையில், பழங்குடியினர், பட்டியல் குலத்தினர், மதச் சிறுபான்மையினர், உடல் ஊனமுற்றோர் என்று மக்கள்தொகைக் கணக்கெடுப்பு செய்வது போல, பிற்படுத்தப்பட்ட சாதிகளின் கணக்கையும் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதேபோன்று நாடோடி இனக்குழுக்கள் மற்றும் சீர் மரபினருக்கமான தேசிய ஆணையம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் சாதிவாரிக் கணக்கு எடுக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளது.

சாதிவாரிக் கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் 50 விழுக்காட்டுக்கு மேல் இருப்பதைத் திட்டவட்டமாக உறுதி செய்துவிடும். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குத் தற்போது 27ரூ இட ஒதுக்கீடு தருவதை 50ரூ க்கு மேல் உயர்த்தித் தரவேண்டும் என்று இவர்கள் போராடுவார்கள். அவ்வாறு தரக்கூடிய நிலை ஏற்பட்டால் உயர்கல்வியிலும் உயர் அதிகாரப் பதவிகளிலும் தாங்கள் பெற்றுள்ள ஆதிக்கம் தகர்ந்துவிடும் என்று மேல்சாதி ஆதிக்க அதிகார வர்க்கம் உறுதியாக நம்புகிறது. அதனால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்பைக் கடுமையாக எதிர்க்கிறது.

மேலும், முழுமையான சாதிவாரிக் கணக்கெடுப்பு, உயர் கல்வி, உயர் வேலைவாய்ப்பு தவிர, நாட்டில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் முன்னேற்றத்தின், துய்ப்புகளின் பெரும் பங்கை சிறிய பகுதியினராக உள்ள மேல்சாதியினரே அனுபவித்து வருகிறார்கள் என்கிற பேருண்மையும் அம்பலமாகிவிடும். அதனால் இவர்கள் எதிர்க்கிறார்கள்.

இந்த உண்மையை மறைப்பதற்காக, மேல்சாதி ஆளும் அதிகார வர்க்கமும், அதன் அறிவாளிகளும், சாதிவாரிக் கணக்கெடுப்பு கூடாது, கேடானது என்பதாக தவறான - பொய்யான காரணங்களைக் கூறுகின்றனர். “பிறந்த சாதியின் அடிப்படையில் தந்தை செய்த தொழிலையே மகன் செய்ய வேண்டும் என்றநிலை மாறிவிட்டது; சாதி பையப்பைய செத்துக் கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர்க்குக் கல்வியிலும் வேலையிலும் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதன் மூலமே சமத்துவமான வளர்ச்சியை அடைய முடியும். சாதியை அடிப்படையாகக் கொள்வது சமூகத்தையும், நாட்டையும் சீரழிக்கும்” என்று வாதிடுகிறார்கள்.

ஒரே உள்சாதிக்குள் திருமணம் செய்வது என்பதால்தான் சாதி உயிர்ப்புடன் நீடித்திருக்கிறது. இந்த அகமண முறையை இந்து மதமும், சாத்திரங்களும், பழக்க வழக்கங்களும் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றன. முதலாளித்துவப் பொருளாதாரம் எவ்வளவுதான் வளர்ச்சி அடைந்துள்ள போதிலும் ஒருவரின் சமூகத் தகுதியை, பொருளாதார வாழ்வைத் தீர்மானிப்பதில் சாதி இன்றும் அச்சாணியாகத் திகழ்கிறது. எனவே, சாதியின் இருப்பை, அதன் உள்ளுறை ஆற்றலை ஒதுக்கி வைத்துவிட்டு எந்தச் சிக்கலுக்கும் தீர்வு காண முடியாது.

சாதி ஒழிய வேண்டுமென்பது வேறு, சாதியின் அடிப்படையில் இடஒதுக்கீடு கோருவது வேறு. மதமும் கோயிலும் வேண்டாம் என்பது வேறு, கோயிலில் அர்ச்சனை செய்யும் உரிமையும், கோயிலில் தமிழ் வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்று போராடுவதும் வேறு.

பிற்படுத்தப்பட்ட, பட்டியல்குல, பழங்குடி மக்கள் சாதி வாரிக் கணக்கெடுப்பை 2011 பிப்பிரவரி 9 முதல் 28 வரையிலான இரண்டாம் கட்ட நிலையிலேயே எடுக்க வேண்டும் என்று கோரி நாம் போராட வேண்டும். பட்டியல் குலத்தினர், பழங்குடியினரின் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் மூன்றாம் கட்டத்திற்கு மேல் சாதி ஆளும் வர்க்கம் தள்ளிவிடக்கூடிய ஆபத்து இருக்கிறது. இவ்வாறு செய்யாமல் மூன்றாம் கட்டத்தில் எடுக்கப்படும் சாதிவாரிக் கணக்கெடுப்பு, வெறும் கண்துடைப்பு நாடகமாகவே அமையும்.

Pin It