மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு உள்ள 27சதவீத இடஒதுக் கீடு என்பது அனைவரும் அறிந்ததுதான்.

ஆனால்,இடஒதுக்கீடு கிடைப்பதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு முன்னோடியாக இருந்தவர்களில் முக்கியமானவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவரும்,பெரியாரின் தீவிரப் பற்றாளரும்,பொதுவுடைமைச் சிந்தனiயாளருமான வே.ஆனைமுத்து ஒருவர் என்பது இன்றைய இளைய தலைமுறையினர் பலர் அறிந்திருக்கவில்லை.

பழைய திருச்சி மாவட்டத்தின் முருக்கன்குடி கிராமத் தில் 1925-இல் பிறந்து, அப்போதைய இண்டர்மீடியட் வகுப்பு வரை மட்டுமே படித்த ஆனைமுத்து,1944-ம் ஆண்டிலிருந்தே, பெரியாரின் தீவிரப்பற்றாளர்.

1974-இல் பெரியாரின் கருத்துகள் குறித்து “ஈ.வே.ரா. சிந்தனைகள்” என்ற நூலை வெளியிட்டார்.

1976-இல் தான் உருவாக்கிய பெரியார் சம உரிமைக் கழகத்தை, பின்னர் ‘மார்க்சியப் பெரியாரி யப் பொதுவுடைமைக் கட்சி’யாக மாற்றம் செய்தார்.தற்போது,அதன் பொதுச் செயலாளராக இருக்கிறார்.

குறுள் மலர் போன்ற இதழ்களை நடத்தி,தற்போது ‘சிந்தனையாளன்’என்ற இதழை நடத்திவரும் ஆனைமுத்து, இதுவரை 17 நூல்களை வெளியிட்டுள்ளார்.

88 வயதிலும், இருபது வயது இளைஞரைப் போலச் சுறுசுறுப்புடனும், கொண்ட கொள்கையில் ஈடுபாட்டு டன் உள்ள ஆனைமுத்து,மக்கள் தொகை விகிதாசார அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்டுப் போராடி வருகிறார்.

அந்த கோரிக்கைக்காக,அடுத்த மாதம் 4-ஆம் தேதி தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அனைத்திந்திய வகுப்புரிமை மாநாடு நடைபெற உள்ள நிலையில், தில்லியில் ‘தினமணி’க்கு ஆனைமுத்து அளித்த பேட்டி :

தினமணி :மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பதன் பின்னணி என்ன?

ஆனைமுத்து :இந்தியாவில் எல்லா மதத்திலும் பிற்படுத்தப்பட்ட மக்கள்,மொத்த மக்கள் தொகையில் 57 சதவீதம் பேர் உள்ளனர்.

அதற்கேற்ப மத்திய அரசு வேலைவாய்ப்புகளில் அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லை. மக்களவையில் 2008-ஆம் ஆண்டு தெரிவிக்கப்பட்டபடி,மத்திய அரசின் முதல் நிலைப் பணிகளில் (குரூப் 1), முன் னேறிய சமூகத்தினர் 77.2 சதவீதம், பட்டியல் இன மக்கள் 12.5 சதவீதம், பழங்குடியின மக்கள் 4.9 சதவீதம் உள்ளனர்.

57 சதவீதம் உள்ள பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் 5.5 சதவீதம் மட்டுமே உள்ளனர். அவர்களுக்கு 57 சதவீதம் இடஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை.

அரசியலமைப்புச் சட்டம் உருவானபோது தாழ்த் தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு,பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திற்கு இடஒதுக்கீடு வழங்கப்படாமல் போனது ஏன் என்று கருதுகிறீர்கள்?

பிற்படுத்தப்பட்டோருக்கு 1950-ஆம் ஆண்டே இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது பிற்படுத்தப்பட்டவர்கள் குறித்த பட்டியல் கிடையாது.

1955-இல் பிற்படுத்தப்பட்டோருக்காகக் காகா கலேல்கர் தலைமையில் குழு அமைக்கப்பட்ட பிறகு தான், அந்தப் பட்டியல் தயாரானது. இந்தத் தாமதம் தான் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடைக்காமல் போனதற்குக் காரணம்.

இடஒதுக்கீடுக்கான போராட்டங்களில் உங்கள் பங்களிப்பு குறித்து...?

1975-இல் இந்திராகாந்தி பிரதமராக இருந்த போது, பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் அவசியத்தை வலியுறுத்திக் கடிதம் எழுதினேன்.அவர் அக்கறை காட்டவில்லை.

1976-இல் பெரியார் சமஉரிமை கழகம் என்ற அமைப்பை உருவாக்கினேன். முதன்முதலில், பிற் படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசுப் பணிகளில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு எங்கள் கட்சியில் செயல்திட்டம் தயாரிக்கப்பட்டது.

1978 ஏப்ரல் 29-ஆம் தேதி தில்லியில் பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்களைச் சந்தித்து ஆதரவு திரட்டினோம்.

அந்த ஆண்டு மே மாதம்,உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டைத் தொடங்கி வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.இடஒதுக்கீடு ஏன் தேவை என்பதை ஹிந்தியில் பிரசுரித்து மாநாட் டில் விநியோகித்தோம்.

அதே ஆண்டு ஜூன் மாதம் சென்னையில் அகில இந்தியப் பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டை நடத்தினோம்.பெரியார் மறைந்த பிறகு நடைபெற்ற முதலாவது வகுப்புரிமை மாநாடு அதுதான்.

1978-இல் ஆகஸ்ட் 19-ஆம் தேதி என்னுடைய தலைமையில் அகில இந்தியப் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடிகள், மதச்சிறுபான்மையினர் பேரவை என்ற அமைப்பை உருவாக்கினோம். அதைத் தொடர்ந்து பீகாரில் 31 மாவட்டங்களில் இடஒதுக்கீடு குறித்த கூட்டம் நடத்தினோம்.

பிரதமராக இருந்த மொரார்ஜி தேசாயிடம் உங்கள் கோரிக்கை குறித்துப் பேசிய அனுபவம்...?

பீகார் தலைநகர் பாட்னாவில் 1978-ஆம் ஆண்டு அக்டோபரில் சிறைநிரப்பும் போராட்டத்தில் நாங்கள் கலந்து கொண்டோம்.

அப்போது பீகார் வந்த மொரார்ஜி தேசாய்க்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.அவர் தில்லி திரும்பிய வுடன் எங்களை அழைத்து பேசினார்.

என்னிடம் “நீங்கள் தமிழ்நாட்டுக்காரர்.எங்களுக்கு வாக்களிக்கவில்லை. பிறகு ஏன் என்னிடம் கோரிக்கை வைக்கிறீர்கள்” என்று கேட்டார்.

அதற்கு,“நாங்கள் உங்களுக்கு வாக்களிக்கவில்லை தான்.ஆனால், தமிழ்நாட்டுக்காரர்களுக்கும் சேர்த்து தான் நீங்கள் பிரதமர். அதனால் உங்களிடம் கோரிக்கை வைக்கும் உரிமை எங்களுக்கு இருக்கிறது” என்று பதிலளித்தேன்.

அதன் பிறகு, 1978 டிசம்பர் 20-ஆம் தேதி, இரண் டாவது பிற்படுத்தப்பட்டோர் குழுவின் அறிவிப்பை மக்களவையில் அவர் வெளியிட்டார்.

1979 ஜனவரி 1-ஆம் தேதி பிந்தோஷ்வரி பிரசாத் மண்டல் (பி.பி. மண்டல்) தலைமையில் பிற்படுத்தப் பட்டோர் குழு அமைக்கப்பட்டது. அதற்கு முன்னரே மண்டலை சந்தித்து எங்கள் கோரிக்கையை விளக்கி யிருந்தோம்.

1980 டிசம்பர் 31-ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திராவிடம் மண்டல் குழு அறிக்கை வழங்கப்பட்டது.

1981 டிசம்பர் 31-ம் தேதிக்குள் மண்டல் குழு அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாவிட் டால் குடியரசு தினத்தைத் துக்க நாளாக அனுசரித்துக் கறுப்புக்கொடி ஏற்றுவோம் என்று அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி,மத்திய உள்துறை அமைச்சர் கியானி ஜெயில்சிங் ஆகியோருக்கு கடிதம் எழுதினோம்.

அதைத்தொடர்ந்து, 1982 ஜனவரி 25-ம் தேதி ஜெயில்சிங் எங்களை அழைத்துப் பேசினார். அறிக் கையை வெளியிடுவேன் என உறுதியளித்தார்.ஆனால் எங்கள் கோரிக்கை நிறைவேறவில்லை.

நீண்ட பேராட்டத்துக்குப் பிறகு வி.பி.சிங் ஆட்சி யில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைத்தது.

மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைக்காததற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?

மொத்த இடஒதுக்கீடு 49.5 விழுக்காட்டுக்கு அதிக மாக இருக்கக்கூடாது என்று 1963 மற்றும் 1992-ஆம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனால் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காட்டுக்கு மேல் இடஒதுக்கீட்டை பெறமுடியவில்லை.

எனவே,மக்கள் தொகை விகிதாச்சார அடிப்படை யில் இடஒதுக்கீடு வழங்கும் வகையில் அரசியல மைப்புச் சட்டத்தைத் திருத்த வேண்டும் என்று வலியுறுத்தி, தில்லியில் நடைபெற உள்ள மாநாட்டில் வலியுறுத்த இருக்கிறோம்.

நன்றி : தினமணி, புதுதில்லி, 14.4.2013

Pin It