ஆலவட்டமிட்டுக் கொண்டிருந்த கழுகுகள்
அததற்கு வசதியான மரக்கிளைகளில்
அமர்ந்து கொண்டன.
கவ்விவரும் இரையைக்
காலின்கீழ் வைத்துக் கொத்துவதற்கு
வசதியாக கிளைகள் இருக்க வேண்டும்.
அப்படி இல்லையெனில்
கழுகு வேறுகிளைக்குத் தாவிவிடும்.
புதர்நடுவே பதுங்கியிருக்கும்
பெருவிலங்குகள் கூரியகண்களோடு
வேட்டைக்குத் தயாராகிவிட்டன.
அய்ந்தாண்டுகளாய்
இலவசப் புல்மேய்ந்த கால்நடைகள்
தாகத்திற்காக
வாக்குச்சாவடி ஓடைகளைத்
தேடி வருகின்றன.
வீட்டுவரி குழாய்வரி
சொத்துவரி வருமானவரி போன்ற
வரிகளைத் தவறாமல் செலுத்தும்
“வரிக்” குதிரைகள்தான்
ஒவ்வொரு வேட்டையின்போதும்
தவறாமல் இரையாகின்றன.
வரி ஏய்க்கும் நரிகளுக்கோ
பதவிகளும் விருதுகளும் கிடைக்கும்
இருநூற்று முப்பத்துநான்கு துண்டங்களாய்
நறுக்கப்படும் இறைச்சியில்
யார்யாருக்கு எத்தனைத் துண்டங்கள்
கிடைக்குமென்னும் கணக்கே
கழுகுகளின் மூளையைக் கசக்கிப் பிழிகிறது.
அதிகமான துண்டங்களை அள்ளும்
விலங்குகளின் கூட்டணி
வெற்றிக் கூட்டணி.
வேட்டையானது...
சூரியன் சுட்டெரிக்கும்
பொட்டலில் நடந்தாலும் சரி...
இலை அடர்ந்த
மரத்தின் நிழலில் நடந்தாலும் சரி...
சாகப்போவது
ஆடும் மாடும்
குதிரையும் கழுதைகளுமே.
என்ன ஒரே மகிழ்ச்சி!
நெற்றிக்குப் பதிலாக
உள்ளங்கையில் காசு வைப்பார்கள்.

Pin It