எவரும் அறியாத உண்மைகள் பல : எல்லாப் பார்ப்பனரும் வஞ்சப்புகழ்ச்சிக்காரரே!

இந்திய அரசமைப்புச் சட்டம் 26.11.1949இல் நிறைவேற்றப்பட்டது. அது 26.1.1950இல் நடப்புக்கு வந்தது.

எப்போது முதற்கொண்டு அரசமைப்பு அவையின் கூட்டம் நடந்தது? 9.12.1946 முதல் அவையின் கூட்டம் நடந்தது.

அப்போது வெள்ளையன் வெளியேறவில்லை.

வெள்ளையன் 15.8.1947இல் தான் வெளியேறினான்.

அதன்பிறகு அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிட 13 குழுக்கள் அமைக்கப்பட்டன. அவற்றுள் ஒரு குழுவே அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு.

அரசமைப்புச் சட்ட வரைவுக்குழுவின் தலைவராக, டாக்டர் அம்பேத்கர், 29.8.1947இல் அமர்த்தப்பட்டார். இதில் காந்தியாருக்கும் பங்கு உண்டு.

அரசமைப்புக் குழுவின் முதலாவது கூட்டம் 30.8.1947இல் நடைபெற்றது.

இந்தக்குழு கூடிச் சட்டம் எழுதுவது பற்றிச் சிந்திக்கும் முன்னரே, பிரதமர் பண்டித நேருவின் தூண்டுதலின்பேரில், வேறு ஒரு குழுவினர் பி.என். ராவ் என்பவரை வைத்து - இந்திய அரசமைப்புச் சட்ட முதலாவது வரைவை (First Draft of the Indian Constitution) எழுதி முடித்தது. அதனை, அம்பேத்கரிடம் 17.10.1947இல் அளித்துவிட்டனர்.

அதில் இருந்த, மக்களுக்கு எதிரான பல கூறுகளைப் பற்றி டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் மிகவும் கவலைப்பட்டார்.

அவரோடு உறுப்பினர்களாக அமர்த்தப்பட்டவர்களுள் அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், கே.எம். முன்ஷி போன்றவர்களைத் தவிர மற்றவர்களால் பெரிய ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை.

அரசமைப்புச் சட்டம் எழுதப்படுவதற்கு அதிக நாள்கள் ஆனதற்கு இதுவே முதலாவது காரணம்.

பி.என். ராவ் ஏற்கெனவே எழுதி வைத்த அரசமைப்பு முதலாவது வரைவில் -

(1) அரசு வேலையில் இடஒதுக்கீடு செய்வது பற்றி, ஒரு பெருங்கேடான கூறு இருந்தது.

(2) அத்துடன், காலங்காலமாக இந்துக்களிடையே நடப்பில் உள்ள வருணபேதம், வழக்கம், பழக்கம் இவை எப்போதும் செல்லும் என்றும் அதில் எழுதப்பட்டிருந்தது.

இந்த நிலைமையை மாற்றி, “நேற்று வரையில் இருந்த பழைய பழக்க வழக்கச் சட்டம் செல்லாது” என ஒரு திருத்தத்தை முன்வைத்து, இந்து சட்டத் திருத்த மசோதாவை, 1947இலேயே அரசமைப்பு அவையின் ஆய்வுக்கு வைத்தார், அம்பேத்கர். இவற்றை இந்து சனாதனியான இராசேந்திர பிரசாத் முதலில் எதிர்த்தார். காலத்தாழ்வு ஏற்பட இது இரண்டாவது காரணம்.

ஆனாலும் 8000 திருத்தங்களை ஆய்வு செய்து, தள்ள வேண்டியவற்றைத் தள்ளி, ஏற்க வேண்டிய வற்றை ஏற்று, 2 ஆண்டுகள் 2 மாதங்கள் (30.08.1947 முதல் 26.11.1949) காலத்தில் - 790 நாள்களில், இந்திய அரசமைப்பின் இறுதி வரைவை எழுதி முன் மொழிந்து, 26.11.1949இல் நிறைவேற்றினார்.

அவர் தலைமையேற்ற குழுவின் முதலாவதான ஒரு வரைவை, 1948 பிப்பிரவரியிலேயே அரசமைப்பு அவையின் முன்வைத்துவிட்டார்.

பி.என். ராவ் எழுதிய முதலாவது (17.10.1947) வரைவில், இடஒதுக்கீடு பற்றிச் சூதாக - ‘‘reservation to any Class of Citizens’’ என்று அவர் எழுதியிருந்ததைக் கண்டுபிடித்து - அதை மாற்றி, ‘reservation to any backward class of citizens’எனத் திருத்திய அரிய சாதனையை அம்பேத்கர் செய்தார்.

 

அவர், 1949இல் நிறைவேற்றிய சட்டம் மிகமிக மெதுப்போக்கில் உருவாக்கப்பட்டதாகச் சித்தரித்து, 1949இல் “Shankar’s Weekly”என்ற கேலிச் சித்திர ஆங்கில வார ஏடு ஒரு படத்தை வெளியிட்டிருந்தது. அந்தக் கேலிச் சித்திரம் என்ன?

அரசமைப்பு அவை என்கிற நத்தையின் மேல் அம்பேத்கர் அமர்ந்திருக்கிறார். நத்தையை வேகமாக நகரச் செய்ய வேண்டி, தன் வலக்கையில் ஒரு சாட்டையை அவர் வைத்திருக்கிற மாதிரி படம்.

நத்தையைச் சாட்டையால் அடித்தாலும் அது வேகமாக நகராது; சாட்டைக் குச்சியால் குத்தினாலும் வேகமாக நகராது. நத்தைக்கும் வேகத்துக்கும் வெகு தொலைவு. அது நத்தையின் இயற்கை அமைப்பு.

அதை வேகப்படுத்திட வேண்டி, அதை அடித்திட அம்பேத்கர் சாட்டை வைத்திருப்பதே பொருத்தமற்ற கற்பிதம்.

அந்த நத்தை என்கிற அரசமைப்பு அவையே வேக மாகச் செயல்படத் தகுதியற்றது - திறமையற்றது - உரிமையற்றது என்பதே உண்மை.

அத்தகைய தன்மையில் அரசமைப்பு அவையை அமைத்ததே காங்கிரசுக் கேடர்களான- எதேச்சாதிகார வாதிகளான பார்ப்பனர்களும், நேரு கூட்டத்தாரும் தான்.

அந்தக் கேடான அமைப்பை உருவாக்கி - தன் போக்கில் ஏற்கெனவே முழுமையான ஓர் அரச மைப்பை எழுதி, அதை அம்பேத்கர் பேரில் திணித்த பண்டித நேரு என்கிற பார்ப்பனர் - அம்பேத்கரை விரட்டி வேலை வாங்குகிற தன்மையில் சித்திரித்து, அம்பேத்கரை, நேரு சாட்டையால் அடித்து வேலை வாங்குவதைப் போலவும் சித்திரித்துக் அந்தக் கேலிப் படத்தில் வெளியிட்டது அம்பேத்கரை அவமதிப்புச் செய்வதுதான். அதில் அட்டியே இல்லை; அதில் அய்யமே இல்லை.

1949இல் வெளியிடப்பட்ட அந்தக் கேலிப்படம் அம்பேத்கரை அவமதிப்பதேயாகும்..

இப்போது 63 ஆண்டுகள் கழித்து அது பற்றிய கொந்தளிப்பு ஏன் வந்தது? எதனால் வந்தது?

மய்ய அரசு, மாநில அரசுகளுக்குப் பொதுவான அதிகாரப் பட்டியலுக்கு (Concurrent List) பொதுக்கல்வி - கல்வி என்பது 1977இல் மாற்றப்பட்டது.

அந்த அதிகாரத்தை வைத்து, சமூக அறிவியல்(Social Science) பாட நூலை உருவாக்கிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக்குழு என்கிற  (NCERT) அமைப்பு, 2005-2006 கல்வி ஆண்டில் நடுவண் அரசின் கல்விப் பாடத்தில் 11 ஆம் வகுப்புக் கான நூலில் முதன்முதலாக வெளியிட்டது.

இவ்வாறு 18 கேலிச் சித்திரப் படங்கள் இந்நூல் களில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த 18இல் அம்பேத்கர் பற்றிய இந்தப்படம் இப்போது ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் - கல்வியாளர்கள் - அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலதரப்பட்டவர்களாலும் கண்டனத்துக்கு உள்ளாகி எல்லோருடைய நெஞ்சங் களிலும் கொதிப்பை ஏற்படுத்திவிட்டது.

இந்த அம்பேத்கர் அவமதிப்புப் படத்தைப் பாடநூலில் வெளியிட்டிருப்பதை - 6 ஆண்டுகள் கழித்து, இப்போது முதன்முதலாகக் கண்டு கண்டனம் தெரிவித்தவர் மும்பையைச் சார்ந்த இந்தியக் குடியரசுக் கட்சித் (RPI) தலைவர் ராமதாஸ் அத்வாலே ஆவார். அந்தக் கேலிச் சித்திரப்படம் கொண்ட பக்கத்தை - நூலிலிருந்து கிழித்துச் செய்தியாளர் கூட்டத்தில், 2.4.2012 அன்று அவர் எரித்தார். அதனை அடுத்துப் பட்டியல் வகுப்புக் குழுவின் தலைவரும், காங்கிரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எல். புனியா என்பவர் இதைக் கண்டனம் செய்து, நடுவண் அரசுக் கல்வி அமைச்சர் கபில் சிபலுக்கு 27.4.2012 அன்று ஒரு மடல் எழுதினார்; சட்டப்படிக் கண்டன அறிக்கையும் (Notice) விடுத்தார்.

அதனை, 12.5.2012 அன்று, கல்வி அமைச்சர், நாடாளுமன்றத்தில் ஒப்புக் கொண்டார். அதுபற்றி ஆய்வு செய்ய ஒரு புதிய குழுவை அமைப்பதாகவும் அறிவித்தார். பாடநூல்கள் வழங்கப்படுவதை நிறுத்தி விட்டதாகவும் அமைச்சர் அறிவித்தார்.

அமைச்சரின் இந்த அறிவிப்பை எதிர்த்து, ஏற்கெனவே NCERT பாட நூல் தேர்வுக்குழுவில் உறுப்பினர்களாக இருந்த இருவர் பொறுப்பிலிருந்து விலகிவிட்டார்கள்.

பாடநூலில் அம்பேத்கரை அவமதிக்கும் கேலிச் சித்திரப் படம் வெளியிட்டிருப்பதைக் கண்டித்தும், அதை நீக்கக்கோரியும் மக்கள் அவையிலும், மாநிலங்கள் அவையிலும் தொல். திருமாவளவன், மாயாவதி, ராம்விலாஸ் பஸ்வான், து. இராசா ஆகிய நாடாளு மன்ற உறுப்பினர்கள் கருத்தறிவித்துள்ளனர்.

இந்தக் கொந்தளிப்புகளை எல்லாம் துச்சமாக எண்ணி, “The Hindu”, “The New Indian Express” மற்றுமுள்ள பார்ப்பன, பனியா நாளேடுகள் - “கருத்து வெளியிடும் உரிமை” பறிக்கப்பட்டுவிட்டதாகக் கட்டு ரைகளையும், நேர்காணல் கருத்துரைகளையும், வாசகர்களின் கண்டனக் கடிதங்களையும் வெளியிட்டுத் தங்களின் வகுப்பு வெறியை அப்பட்டமாக வெளிப் படுத்துகின்றன.

14.5.2012 நாளிட்ட “The Hindu” நாளேட்டில், ““The Comic Republic” - “கேலிக்குரிய குடிஅரசு” என்னும் தலைப்பிட்டுத் தலையங்கக் கட்டுரையை அவ்ஏடு வெளியிட்டுள்ளது.

காஷ்மீரப் பண்டிதப் பார்ப்பனர் நேருவின் மக்கள் நாயகக் கபட நாடகம்-அரசமைப்புச் சட்ட வரைவுக் கயமைத்தனம் இவற்றைத் தோலுரிப்பதற்கு மாறாக-மாபெரும் அரசியல் மேதையான அம்பேத்கரை நேரு சாட்டையால் அடித்து வேலை வாங்கியது போல் உள்ளதை-உண்மையைச் சித்தரிக்கும் கருத்துப்படம் தான் என்பதை நிலைக்க வைத்திட “கருத்து வெளி யிடும் உரிமை” என்கிற முகமூடியைக் கவசமாகக் கொண்டு தலையங்கமே எழுதிவிட்டது. -“தி இந்து”.

பி.ஆர். அம்பேத்கர் அவர்கள், “மதத்தில் பக்தி கொள்ளுவது ஆத்மா விடுதலை அடைய ஒருவழியாகும். ஆனால், அரசியலில் பக்தி கொள்ளுவதோ, தனிமனிதப் புகழ் பாடுவதோ சீரழிவை நோக்கிய பாதையிலேயே கொண்டு போய்விடும்; அத்துடன் இறுதியில் சர்வாதி காரத்திலேயே முடியும்” என, 25.11.1949இல் அரசமைப்பு அவையில் பேசினார் என்பதை எடுத்துக்காட்டி, அப்படிப் பட்ட மேதையைப் பற்றிய கேலிச் சித்திரத்தின் பேரில் சினங்கொண்டு கண்டிப்பவர்களைக், “கருத்து வெளி யிடும் உரிமைக்கு எதிரிகள்” எனக் குத்திக் காட்டுகிறது.

இது, நயவஞ்சகமான அம்பேத்கர் புகழ்ச்சி!

இது, பார்ப்பன நேருவுக்கு, பார்ப்பன ஏடு செலுத்துகிற, மனமார்ந்த பாராட்டுப் புகழ்ச்சி!

“சிறுத்தைப்புலி தன் புள்ளியை மாற்றிக் கொண் டாலும் மாற்றிக் கொள்ளும்; பார்ப்பான் தன் புத்தியை மாற்றிக் கொள்ளமாட்டான்” என்பது, திராவிடப் பேரறிஞர் டாக்டர் டி.எம். நாயர் சொன்ன ஒரு சொல்!

பார்ப்பனர் அம்பேத்கருக்கு எதிரானவர்கள். இதுவே உண்மை.

Pin It